நம்பிக்கை (சிறுகதை)

ஞ்சுப் பொதிகள் போல மேகங்கள் பாண்டியின் முகத்தில் அறைந்தன. வலிக்கப்போகிறது என்று கண்களை இறுக்கிக்கொண்டான்.. வலிக்கவில்லை. மேகங்களைக் கடந்து வந்து பறந்து கொண்டிருந்தான். வரிசையாய் பறக்கும் கொக்கு கூட்டம் ஒன்று இவனைக் கடந்து சென்றது. இவனும் அவைகளை முந்த வேண்டும் என்று நினைத்து கைகளை வேகமாக அசைத்தான். ஆனாலும் அவைகளின் வேகத்திற்கு ஈடு கொடுத்துப் பறக்க முடியவில்லை.


‘ட்டண்டனக்..ட்டண்டனக்.. ட்டண்டனக்கட.. ட்டண்டனக்..’

‘ட்டண்டனக்..ட்டண்டனக்.. ட்டண்டனக்கட.. ட்டண்டனக்..’

கொக்குகளின் வரிசையில் கடைசியாகப் பறந்துகொண்டிருந்த ஒரு கொக்கு இவனைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பது போலிருந்தது. இன்னும் வேகமாக விரித்திருந்த கைகளை மேலும் கீழுமாய் அசைத்தான். கொஞ்சம் வேகம் வந்ததுபோலிருந்தது. கைகளை இன்னும் வேகமாக அசைத்தால் கொக்குகளை முந்திவிடலாம் என்று தோன்றியது.

‘ட்டண்டனக்..ட்டண்டனக்.. ட்டண்டனக்கட.. ட்டண்டனக்..’

‘ட்டண்டனக்..ட்டண்டனக்.. ட்டண்டனக்கட.. ட்டண்டனக்..’

இது என்ன கொட்டடிக்கும் சத்தம் வானில் பறக்கும்போதும் கேட்கிறதே… என்று எண்ணியவன் கைகளை ஆட்ட மறந்ததால்.. வேகமாகக் கீழ்நோக்கி விழத்தொடங்கினான்.

‘ட்டண்டனக்..ட்டண்டனக்.. ட்டண்டனக்கட.. ட்டண்டனக்..’

‘ட்டண்டனக்..ட்டண்டனக்.. ட்டண்டனக்கட.. ட்டண்டனக்..’

பதற்றமாய் படுக்கையிலிருந்து எழுந்தான் பாண்டி. செத்த கொட்டின் சத்தம் காதைப் பிளந்தது. கண்களைக் கசக்கி விட்டுப் பார்த்தான். விடிந்திருந்தது. வழக்கம் போல வரும் பறக்கும் கனவை இந்த கொட்டின் சத்தம் கெடுத்து விட்டது. உட்கார்ந்த நிலையிலயே கட்டிலைப் பார்த்தான்.

மோட்டுவளையை வெறித்தபடி படுத்திருந்தாள் அம்மா. ‘அம்மா’ என்றான் மெதுவாக.. ‘‘ம்..சொல்லுப்பா”. என்று குரல்கொடுத்தாள் அவள்.

‘‘என்னம்மா சத்தம் அது..? .”

“பக்கத்து வீட்டு பாலு மாமா இல்லா.. அவங்க இறந்து போய்ட்டாங்க.. அதனால கொட்டு அடிக்குறாங்க.. .”

“இறந்து போனா..கொட்டு ஏம்மா அடிக்குறாங்க..? .”

“அம்மானால ரொம்ப பேசமுடியலப்பா.. வாசல்ல அப்பா இருக்காங்க அவங்கட்ட கேட்டுக்கப்பா.. .”

‘‘சரிம்மா.” என்று எழுந்தவன் அம்மாவைப் பார்த்தான். புதியதாக வேறு நைட்டி போட்டிருந்தாள். போர்வையும் கூட மாறியிருந்தது. கட்டிலுக்கு கீழே குனிந்து பார்த்தான்.

“என்ன பாண்டி தேடுற..? .”

“இல்லமா… இங்கன இருக்குமே.. அந்த வாளியைத்தேடுறேன்.. காணோமே..?”

“காலையிலேயே அப்பா வந்து எல்லாத்தையும் மாத்தீட்டுப் போயிட்டாகடா… வாளி.. பின்னாடி வெயிலுல காயுதோ என்னவோ..? .”

“சரிம்மா.. என்றபடியே அந்த அறையைவிட்டு வெளியே வந்தவன்.. டவுசரின் மேல் அரைஞாண் கயிற்றை எடுத்து விட்டுக்கொண்டு, வாசல் பக்கம் வந்தான்.

பாண்டியின் அம்மா ஆறுமாதங்களுக்கு முன்பு வரை நன்றாகத்தான் இருந்தாள். திடீரென ஒரு நாள் காலையில் அவளால் எழுந்திருக்க முடியாமல் போனது. வாய் ஒருபக்கம் கோணிக்கொண்டது. அள்ளிப் போட்டுக்கொண்டு டாக்டரிடம் காட்டியதில் வாதம் தாக்கி இருப்பதாகவும், இனி அவளால் நடக்கமுடியாது என்றும் சொல்லிவிட்டார்கள்.

ஆனாலும் அவள் சில நாட்களுக்கு ஒரு கையையும் காலையும் இழுத்து, இழுத்து நடந்தாள். அப்புறம் படுக்கையில் விழுந்தவள்தான் எழுந்திருக்கவே இல்லை. ‘எல்லாமே’படுக்கையில்தான் என்ற நிலையாகிப்போனது.

பக்கத்துவீட்டு பாலு மாமாவின் மனைவி சாந்தி அத்தைதான் தினம் காலையில் வந்து சமைத்துக் கொடுத்துவிட்டு, அம்மாவின் ஆடைகளையும் மாற்றிக்கொடுத்துட்டுப் போவாள். இன்னிக்கு பாலுமாமா இறந்துபோனதால் சாந்தி அத்தை வந்திருக்க வாய்ப்பில்லை. அதனால்தான் அப்பா அந்த வேலைகளையெல்லாம் செய்திருக்கார்.

**

வீட்டுத்திண்ணையில் தோளில் துண்டு போட்டு அமர்ந்திருந்தார் அப்பா. அவரருகில் போய் உட்கார்ந்தான். பாலு மாமாவின் வீட்டு வாசலில் சின்னதாகப் பந்தல் போட்டிருந்தார்கள். சற்று தள்ளி நாலைந்து பேர் தப்படித்து ஆடிக்கொண்டிருந்தார்கள்.

இடது பக்க ஓரமாக பாலு மாமாவின் இறுதியாத்திரைக்கு பாடை அலங்காரங்கள் நடந்துகொண்டிருந்தது. ‘இன்னும் கொஞ்சம் தூக்கி சாய்வா வச்சு கட்டுங்கப்பா..’ என்று யாரோ குரல் கொடுத்தார்கள்.

இரண்டு நீளமான மரப்பெஞ்சுகள் போடப்பட்டிருந்தது. எல்லாவற்றிலும் ஆட்கள் நிரம்பி வழிந்தார்கள். உட்கார இடம் கிடைக்காதவர்கள் ஓரமாக நின்று கதை பேசிக்கொண்டிருந்தார்கள்.

பாலு மாமாவின் வீட்டுக்குள்ளிருந்து அழுகையின் குரல்கள் வந்தது. புதிதாக எவரேனும் வீட்டுக்குள் போனால்.. உடனேயே அழுகுரல் பெரும் சத்தமாகக் கேட்கும். கொஞ்ச நேரத்தில் அடங்கி விடும். அடுத்தவர் வரும்போது மீண்டும் ஓங்கும். இப்படி மாறி மாறி அழுகை விடாமல் ஒலித்துக்கொண்டே இருந்தது.

ராசு அண்ணன் ஒரு சாக்கு மூட்டையைத் தூக்கிக்கொண்டு வந்து திண்ணையில் வைத்தார். கூடவே ஒரு மஞ்சள் பை நிறைய சில்லரை காசுகளை கொண்டு வந்து அப்பாவிடம் கொடுத்தார்.

“என்னப்பா ராசு… பொரி வாங்கியாந்துட்டீயா..? .”

“ஆச்சுண்ணே.. இந்த சில்லரை காசுகளை வச்சு இருங்க.. பாடி கெளம்பும்போது வாங்கிக்கிறேன்.”

என்று சொல்லி விட்டு பாலுமாமாவின் வீட்டுக்குள் போய் விட்டார்.

“அப்பா…”

“என்னப்பா..”

“நம்ம வீட்டுத் திண்ணையில பொரியும் காசும் கொண்டுவந்து வச்சுட்டுப் போறாங்களே எதுக்குப்பா..? .”

“சுடுகாட்டுக்கு போகும் போது.. பின்னாடியே இதையெல்லாம் வீசிகிட்டே போகனும்.”

“எதுக்குப்பா.. அப்படி செய்யணும்..? .”

“அதா.. அது ரொம்ப காலமா செய்யுறதுதாண்டா. .”

“அதான் ஏப்பா அப்படி செய்யுறாங்க.. சொல்லேன்.”

“டேய்.. இது கத சொல்லுற நேரமாடா.. போய் அம்மா கிட்ட கேளு.. போ.. .”

“அம்மா.. தான் ஒங்க கிட்ட கேக்க சொல்லிச்சு.. .”

“சரி..சுருக்கா சொல்லுறேன் கேட்டுக்க… யாராவது செத்துப்போனா.. அவங்களோட உடம்பை சுடுகாட்டுக்கு ஊர்வலம் கொண்டு போகும்போது..

இந்தக் காசு, பொரி எல்லாத்தையும்.. பின்னாடியே வீசிக்கிட்டு வருவாங்க..

செத்துப் போனவங்களை நாம எரிச்சுட்டு வந்துடுவோம். ஆனா.. அவங்க ஆவி.. அங்கேயே ஒரு நா முழுக்க சுத்திக்கிட்டு இருக்குமாம். வீட்டுக்காரங்க மேல உள்ள பாசத்துல அது திரும்பவும் சாமத்துல வீட்டுக்கு வருமாம். நடுராத்திரி அப்படி வீட்டுக்கு வரும்போது.. அதுக்கு கொள்ளகொள்ளயா பசிக்குமாம். வர்ற வழியில போட்டு வச்சிருக்குற பொரியை ஒவ்வொண்ணா.. பொறுக்கித் திண்ணுகிட்டே.. வருமாம். ஒவ்வொரு பொரியா பொறிக்கிகக்கிட்டு.. வீட்டுக்கு வர்றதுக்குள்ள விடிஞ்சு போயிடும். விடிஞ்சா அதனால வரமுடியாது. அதனாலதான் பொரி வீசுறாங்க.’

“அப்ப.. காசு..? .”

“அதுவும் அதே மாதிரிதான். அய்யோ.. கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசை எல்லாம் இப்படி வீசி எறிஞ்சுருக்காங்களேன்னு ஒவ்வொரு சில்லறைக் காசா ஆவி பொறுக்கி முடியறதுக்குள்ள விடிஞ்சுடும்ல.. அப்புறம் அந்த ஆவி வீட்டுக்கு வராது.

அப்படி செய்யாட்டி வீட்டுக்கு வந்து யாரையாவது புடிச்சுடும்னு நம்பிக்கை. அதனால.. தான்.. ரொம்ப காலமா இப்படி செஞ்சுக்கிட்டு வர்றோம்.’

கொஞ்ச நேரத்தில் பாலு மாமாவை வீட்டு வாசலில் கொண்டுவந்து டேபிள் மீது கிடத்தினார்கள். சுற்றிலும் வேட்டியால் மறைத்துக்கொள்ள.. குடம் குடமாய் தண்ணீர் ஊற்றினார்கள். திருநீறு பட்டையடித்து, சட்டையையும், வேட்டியையும் மாற்றினார்கள். அப்பா எல்லாவற்றிற்கும் உதவி செய்தார்.

தயார் நிலையில் வைக்கப்பட்டதும், பாலு மாமாவின் உடலைச்சுற்றிலும் பெண்கள் அழைத்து வரப்பட்டார்கள். ஆளுக்குக் கொஞ்சம் அரிசி கையில் கொடுக்கப்பட்டது. அரிசி வாங்கியவர்கள் வரிசையாய் வந்து கிடத்தப்பட்டிருந்த பாலு மாமாவின் வாயில் சிறிது அரிசியை போட்டு விட்டுப் போனார்கள்.

அப்பா ஒரு ஓரமாய் ஒதுங்கினார். பாண்டி அவரது இடுப்பைப் பிடித்துக்கொண்டான். “என்னப்பா.. பயமா இருக்குதா? .” என்றபடியே அவனது தலையைத் தடவினார் அப்பா. ஆமென்பது போல பாண்டி தலையை ஆட்டினான். “பயப்படக்கூடாது. பாலு மாமா சாமியாகிட்டார். அவ்வளவுதான்.” என்றார் அப்பா. பாண்டிக்கு புரிந்தமாதிரி தலையை ஆட்டினான்.

பாலுமாமாவின் உடல் பாடையில் சாய்வாகக் கிடத்தப்பட்டு.. ஊர்வலம் தொடங்கியது. “சரி.. நீ வீட்டுக்குப் போ.. நான் போய்ட்டு வந்துடுறேன்.” என்று பாண்டியை விட்டு விட்டு அப்பா அந்த ஊர்வலத்தினரோடு கலந்துகொண்டார்.

பொரியும், காசும் வீசுவதைப் பார்த்துக்கொண்டே சிறிது நேரம் நின்றான் பாண்டி.

**

செத்த கொட்டின் சத்தம் காதைப் பிளந்தது. மெதுவாய் கண்களைக் கசக்கி விட்டு எழுந்தான் பாண்டி. சத்தம் தன் வீட்டின் வாசலில் கேட்பது போல தோன்றவே, அறையிலிருந்து வெளியே வந்தான். கூடத்தில் சிவப்பு சேலை கட்டிப் படுக்கவைக்கப்பட்டிருந்த அம்மாவைப் பார்த்தான். தலைமாட்டில் சின்னதாக ஒரு குத்துவிளக்கு எரிந்துகொண்டிருந்தது. அதன் அருகில் எண்ணெய் பாட்டிலும் தீப்பெட்டியும் இருந்தன. சித்தி, பெரியம்மா, அத்தை என எல்லோரும் வந்திருந்தார்கள்.

இவனைப் பார்த்ததும் சித்தி ஓடிவந்து அணைத்துக்கொண்டு அழுதாள். அவளின் அழுத்தமான பிடி என்னவோ செய்ய.. அவளின் பிடியிலிருந்து நழுவப் பார்த்தான். ஆனால் அவள் விடுவதா தெரியவில்லை. சரி.. கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தால் சித்தியின் பிடி தளர்ந்துபோகும் என்று எண்ணியவன் அமைதியானான்.

பக்கத்து ஊரில் தங்கிப் படித்துக்கொண்டிருந்த அண்ணனும் வந்திருந்தான். அவன் பெரியம்மாவின் பிடிக்குள் இருந்தான். அழுதிருப்பான் போல.. முகம் வீங்கிப் போய் வித்தியாசமாய் இருந்தது.

அப்பாவைத் தேடினான் பாண்டி. அவர் கூடத்தின் ஒரு மூலையில் அமர்ந்திருந்தார். கையிலிருந்த துண்டால் வாயைப் பொத்தி இருந்தார். அவரின் கண்களும் கூட வீங்கிப் போய் இருந்தது. அவரருகில் கொஞ்ச நாட்களுக்கு முன் அப்பாவுடன் சண்டை போட்டுப்போன மாமாவும் தாத்தாவும் உட்கார்ந்திருந்தார்கள். மாமா அப்பாவைத் தன் தோளில் வைத்து அழுத்தி இருந்தார்.

’சரி.. இப்படியே ஒக்காந்துகிட்டுக் இருந்தா மத்த வேலைகளைப் பார்க்க வேணாமா..?’ வந்திருந்தவர்களில் யாரோ சொல்ல.. அப்பா மெல்லமாய் தலை நிமிர்ந்து பார்த்தார்.

வீடே அழுகையிலும் ஒப்பாரியிலும் மூழ்கி இருந்தது. பாண்டி, அம்மாவைப் பார்த்தான். கால் பெருவிரல்களில் கட்டு போட்டிருந்தார்கள். தலை ஒழுங்காக வாரப்பட்டு, பூச்சரம் வைக்கப்பட்டிருந்தது. முகத்தில் வழக்கத்தை விட அதிகமாகவே மஞ்சள் பூசப்பட்டிருந்தது. அதுபோலவே பெரிய அளவில் குங்குமத்தை நெற்றியில் வைத்திருந்தார்கள்.

பாண்டிக்கு அம்மாவைப் பார்க்க பார்க்க அழுகை வந்ததது. இனி இவளை வாழ்நாள் முழுவதும் பார்க்க முடியாது. இவளும் சாமியிடம் போய் சேர்ந்துவிட்டாள். அதனால் தான் எல்லோரும் இப்படி அழுதுகொண்டிருக்கிறார்கள். சித்தியின் மடியில் படுத்து, விசும்ப ஆரம்பித்தான். அவனது விசும்பலை உணர்ந்தவள்.. மேலும் அவனை இறுக்கினாள். அவளின் கதகதப்பான பிடிக்குள்ளேயே தூங்கிப் போனான்.

“யாய்யா..ராசா… பாண்டி எழுந்திருய்யா.. .” என்று அவனை அப்பத்தா உலுப்பியபோது தான் கண்விழித்தான். ஓரமாகத் தலையணையில் படுத்துக்கிடப்பது பிடிபட்டது. எழுந்து உட்கார்ந்தவனைக் கைகொடுத்து தூக்க முடியாமல் தூக்கி விட்டாள் அப்பத்தா.

“வா.. ராசா.. ஆத்தாளுக்கு வாய்க்கரிசி போடனணும்.. வாய்யா..” அவனை அணைத்தபடியே வாசலுக்கு அழைத்துச்சென்றாள். மாலை எல்லாம் போட்டு அம்மா புறப்பட தயார் நிலையில் கிடத்தப்பட்டிருந்தாள். பாண்டியின் கையில் கொஞ்சம் அரிசியை கொடுத்து, கை பிடித்து அம்மாவின் வாயில் போடச்செய்தாள் அப்பத்தா.

‘ட்டண்டனக்..ட்டண்டனக்.. ட்டண்டனக்கட.. ட்டண்டனக்..’

‘டனக்டண்… ட்டண்டனக்.. ட்டண்டனக்கட.. டனக்டண்..’

கொட்டு சத்தம் சற்று அதிகமாகியது. மெதுவாய் சேர்ந்து அம்மாவைத் தூக்கி பாடையில் வைத்தார்கள். அண்ணனுக்குச் சட்டையை கழட்டிவிட்டு, கையில் முக்கோணமாய் கட்டப்பட்ட விறகு குச்சிகளுக்குள் இருக்கும் நெருப்புச் சட்டியைக் கொடுத்திருந்தார்கள். அதிலிருந்து புகை மெல்லமாய் கசிந்துகொண்டிருந்தது. அப்பாவும் வெற்றுடம்பில் துண்டைப் போர்த்தியிருந்தார். அண்ணனுக்கு அருகில் அப்பா நிற்க, ஊர்வலம் துவங்கியது.

நம்பபிராசன் மாமா பொரியையும், முனியாண்டி மாமா சில்லறைக் காசுகளையும் வீசியபடி நடக்கத்தொடங்கினார்கள். இதைப் பார்த்தவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆத்தா திரும்பவும் வீட்டுக்கு வந்துடக்கூடாதுன்னு தானே இதைச் செய்யுறாங்க.. விடக்கூடாது.

வெறிகொண்டவன் போல நகர்ந்துகொண்டிருந்த சவ ஊர்வலத்தின் கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஓடினான். நம்பிராசனிடம் வந்து “மாமா பொரி வீசாதீங்க மாமா.. ஆத்தா எனக்கு வேணும்.. வீசாதீங்க மாமா.. என்று அவரின் தோளில் இருந்த பொரி மூட்டையை எட்டிப் பிடிக்கப் போனான். “டேய் போடா அந்தப் பக்கம்.”

என்று அவனைத் தள்ளி விட்டார். முனியாண்டியிடம் ஓடி வந்தான் மாமா காசு வீசாதீங்க “மாமா.. காசு வீசினா.. ஆத்தா வீட்டுக்கு வராமலேயே போயிடும்.. மாமா.. காசு வீசாதீங்க மாமா.. என்று அவரிடமும் மல்லுக்கு நின்றான். அதற்குள் பாண்டியை யாரோ தூக்கி அந்தப் பக்கம் விட்டனர். இனி இவர்களிடம் பேசிப் பயனில்லை. அப்பாவிடம் பேசிவிடுவதுதான் சரியென தோன்ற.. இன்னும் கூட்டத்தை விலக்கிவிட்டு முன்னுக்கு ஓடினான். தலை குனிந்து நடந்துகொண்டிருந்த அப்பாவின் கையைப் பற்றி நிறுத்தினான்.

அவர் இவனைக் கேள்விக்குறியோடு பார்த்தார். “அப்பா.. ஒனக்கு ஆத்தா மேல பாசமே இல்லையாப்பா.. பொரியும், காசும் வீசிக்கிட்டு வாறாங்கப்பா… வேண்டாம்னு சொல்லுப்பா.. அதை எல்லாம் அள்ள முடியாம போயிட்டா… ஆத்தா வீட்டுக்கு வராமலேயே போயிடும்பா.. எனக்கு ஆத்தா வேண்டும். அவங்ககிட்ட வீசவேணாம்னு சொல்லுப்பா..” கண்களில் இருந்து தாரை தாரையாகத் தண்ணீர் வழிந்தது. அவனது கேள்விக்குப் பதில் சொல்லமுடியாமல் தோளில் தூக்கி அவனை அணைத்துக்கொண்டார் அப்பா. பாண்டி மட்டும் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தான்

—-

நன்றி- உயிரோசை 27.09.10 http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=3441

This entry was posted in சிறுகதை, புனைவு and tagged . Bookmark the permalink.

2 Responses to நம்பிக்கை (சிறுகதை)

  1. தல, கத நல்லாருக்கு…!

  2. குழந்தைகளின் உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் பயணிக்க எத்தனிக்கிற எழுத்துகள் புனிதமானவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.