நகரம் (சிறுகதை)

’எலேய்.. எந்தி நாஷ்டா வேண்டாமா?’ சத்தம் போட்டபடி உலுப்பிய அண்ணாச்சியை கண்ணைத் திறந்து பார்த்தான். கண்கள் திறக்க முடியாமல் எரிச்சலைத் தந்தது. கண்களை கசக்கி விட்டுக் கொண்டே எழுந்து உட்கார்ந்தான்.

அண்ணாச்சி குளித்து, முடித்து பளிச்சென்று இருந்தார். கடைக்குப் போகும் முன் இங்கே வந்து எட்டிப் பார்த்துவிட்டு போவது அவரது வழக்கம். அப்படி வந்தவர், தூங்கிகொண்டிருந்தவனை எழுப்பிவிட்டார்.
‘இல்ல அண்ணாச்சி.. வேணாம். அப்பறம் நானே வந்து பார்க்கலாம்னு நெனைச்சேன். ஊர்ல இருந்து தோஸ்த்து ஒருத்தன் வந்திருக்கான். மலாடுல இருக்கான். அவன பாக்கப்போறேன். நாளைக்குத்தான் வருவேன். ஆளக்காணம் ஓடிட்டான்னு நெனைச்சுடாதீங்க..’

’அட.. கோட்டிக்காரப்பயலே.. அப்படியெல்லாம் இல்ல. ஆளக் காணாட்டி பெட்டியத்தான் ஒடச்சிருப்போம். நல்லவேள சொன்னியே. பத்தரமா போய்ட்டு வாடே.. என்ன..?’

‘அதுக்கத்தான் இப்பவே சொல்லிட்டேன் அண்ணாச்சி’

‘செரி செரி பயப்படாம போயிட்டு வா’ போய்விட்டார். சுற்றிலும் ஒரு முறை பார்த்துக் கொண்டான். அந்த நீண்ட அறையில் இவனைத்தவிர ஒருத்தருமில்லை. எல்லோரும் கிளம்பி இருந்தனர். பதினெட்டுக்கு நாற்பது என்ற அளவில் நீளமான அறை அது.

அங்கே தான் இருபத்தியேழு பையன்கள் தங்கி இருந்தார்கள். இவர்களின் உபயோகத்திற்கென நான்கு கழிவறைகளும், நான்கு குளியல் முறியும் உண்டு. எல்லோரும் அதைத்தான் பயன்படுத்தியாக வேண்டும். தண்ணீர் தட்டுப்பாடு இல்லையென்றாலும் ஒரே நேரத்தில் ஐந்தாவது ஆளுக்கு வயிற்றை கலக்கியது என்றால் பெயிண்ட் டப்பாவில் தண்ணீர் கோரிக்கொண்டு அடுத்த தெருவில் இருக்கும் பொதுகழிவறைக்குத்தான் ஓட வேண்டியதிருக்கும். அங்கும் க்யூ இருக்கும்.. அது பெரிய கதை.
கடந்த முறையும் இதே போல மும்பைக்கு பாலா வந்திருந்த போதும், இந்த கழிவறை பிரச்சனையைத் தான் பெரிதாக பேசிக்கொண்டிருந்தான். எல்லா இடங்களிலும் நிற்கும் வரிசை மட்டுமே அவனுக்கு பிடித்திருந்தது. அதோடு சிறுநீர் கழிக்க, நிறுத்திய வாகனங்களைத் தேட வேண்டிய அவசியமில்லாது, தெருவுக்குத் தெரு சிறுநீர் கழிப்பிடங்கள் இலவசமாகவே கட்டப் பட்டிருப்பதைப் பற்றி பெருமையாக சொல்லுவான்.

ஐந்து அடுக்குகள் கொண்ட ஆறு அலமாரிகள் சுவற்றிலேயே செய்யப்பட்டிருக்கும். அதில் தான் பெட்டியையோ, பேக்கையோ வைத்துக்கொள்ள வேண்டும். கதவுகள் ஏதும் கிடையாது. துணிகள் காயப்போட அறையின் நாலு பக்கமும், கொடி கட்டப்பட்டிருக்கும். ஆனால்.. அதில் அனேக நாட்களில் துவைக்காத லுங்கி தொடங்கி உள்ளாடை வரை தொங்கிக்கொண்டிருக்கும். மூன்று வேளை சாப்பாடும் போட்டு, தங்குவதற்கு இடமும் கொடுக்கும் இதுமாதிரியான விடுதிகளை பொங்கல்வீடு என்று தான் மும்பைத்தமிழர்கள் அழைத்துவந்தார்கள்.

பெயர்க்காரணம் ஒன்றும் பெரிய விசயமல்ல. வேண்டுமானால் நாம் இப்படி வைத்துக்கொள்ளலாம். ஒரு காலத்தில் இப்படி தங்கும் விடுதிகளில் காலை, மதியம், இரவு எல்லா நேரங்களிலும் பொங்கல் தான் போடப்பட்டிருக்க வேண்டும்.. காலையில் சட்டினியும், மதியமும், இரவும் சாம்பாரும் தொட்டுக்கொள்ள கொடுத்திருக்கலாம்.. அதனாலேயே இந்த பெயர் நிலைத்துவிட்டதாக கொள்வோம். இப்போது நமக்கு பெயர்க்காரணம் முக்கியமல்ல.. என்பதால் கதைக்கு திரும்புவோம்.

இப்படியான ஒரு பொங்கல் வீட்டில் தான் தங்கி இருக்கிறான். மும்பையில் எப்படியும் சுமார் இருநூறுக்கும் அதிகமான பொங்கல்வீடுகள் இருக்கும். ஆனால் எவற்றிற்கும் தனிப்பெயரோ, பெயர் பலகையோ கிடையாது. வாய்மொழியாகவே பொங்கல்வீடு என்று அழைக்கப்பட்டு வருகின்றன.

இந்த பொங்கல்வீட்டை நடந்தி வந்த அண்ணாச்சிக்கு பக்கத்திலியே சொந்தமாக வீடியோ தியேட்டர் இரண்டு உண்டு. தீபாவளி, பொங்கல் போன்ற திருவிழா நாட்களிலும், ஞாயிற்றுகிழமை மாதிரியான வார விடுமுறை நாட்களிலும் காலை எட்டுமணிக்கு காட்சி தொடங்கி விடும். சாதாரண நாட்களில் வீடியோ தியேட்டரில் காலை ஒன்பதரைக்கு முதல் காட்சி தொடங்குவார்கள். அங்கு வரும் போது, இங்கேயும் வந்து ஒரு எட்டு பார்த்துவிட்டுப் போவார். வீடியோ தியேட்டரின் முகவரியைத்தான் இங்கே தங்கி இருப்பவர்கள் அஞ்சல்வழி தொடர்புகளுக்கு கொடுப்பது வழக்கம்.

கல்லிக்குள் இருக்கும் வீடுகளுக்கு எல்லாம் தனித்தனியாக கதவு எண் கொடுக்கப்படிருந்தாலும், தபால்காரர் எந்த வீட்டையும் தேடி வந்து தபால் தர வரமாட்டார். அப்படி அவர் பிரயாசைப்பட்டாரெனில் ஒரு கடிதம் கொடுத்து முடிக்கவே அரைநாள் ஆகிவிடும் ஆபத்து இருக்கிறது. அதன் காரணமாகவே கல்லிக்கும் பொதுச்சாலைக்கும் பாலமாக இருக்கும் ஒரு கடையை தேர்வு செய்து வைத்திருப்பார். அங்கேயே ஒரு தபால் பெட்டியும் வைக்கப்பட்டிருக்கும். அப்பகுதியில் இருக்கும் இருநூறுக்கும் அதிகமான வீட்டினருக்கு வரும் எல்லாக்கடிதங்களையும் அப்பெட்டியில் போட்டுவிட்டு போய்விடுவார்.

தலையணைக்கு அடியில் கை விட்டு, கடிகாரத்தை எடுத்து மணி பார்த்தான். மணி ஒன்பது நாற்பது என்றது. இன்னும் கொஞ்ச நேரத்தில் நைட் ஷிப்ட் போனவர்கள் எல்லாம் வந்து சேர்ந்துவிடுவார்கள். சண்டாஸ் காலியாக இருக்காது என்ற நினைவு வந்ததுமே சுருட்டிக்கொண்டு எழுந்தான். நழுவிய கைலியை இழுத்துப் பிடித்து கட்டிக்கொண்டான். போர்வையை மடித்து தலையணை மேல் போட்டு விட்டு, பிரஷ்ஷில் பேஸ்டைப் பிதுக்கிக் கொண்டு சண்டாஸ் வாளி இருந்த இடம் நோக்கி போனான்.

ட்ரமில் இருந்து தண்ணீர் கோரி ஊத்திக்கொண்டு, வாளியை எடுத்துக்கொண்டு, காலியாக கிடந்த மூன்றாவது சண்டாஸுக்குள் நுழைந்தான். தாழ்ப்பாள் இருக்கும் ஒரே சண்டாஸ் இது தான். அதுவும் சில இடங்களில் பாதி கதவு தான் இருக்கும். வெளியில் நிற்பவன் உள்ளே இருப்பவனையே பார்த்துக்கொண்டிருப்பான். தலை குனிந்துகொண்டிருக்கும் அவன் நிமிர்ந்தால்.. ’ஓகயா..?’ என்று கேட்பான். ”கக்கூஸுல உட்கார்ந்து சோறா திங்க முடியும்”னு கேட்கத்தோணும், ஆனால் அமைதியாக இருந்து விடுவது புத்திசாலித் தனம். வாக்குவாதம் தொடங்கினால் வெளியில் நிற்பவன் எல்லாம் பாய்ந்துவிடுவான்.
தாழ்ப்பாள் இல்லாதவற்றில் கதவுக்கு முட்டுக்கொடுத்து வாளியை வைக்கவேண்டும். அப்படியும் அவசரத்தில் வருகின்றவன் தள்ளினான் எனில் வாளி கவிழ்ந்துவிடும் என்பதால் ஒரு கையையும் சப்போர்ட்டுக்கு கொடுத்துக்கொண்டு தான் உட்கார வேண்டும்.

காலைக்கடனை முடித்துவிட்டு, திரும்பவும் அலமாரிக்கு வந்து, ப்ரஷை வைத்துவிட்டு, குளிக்க சோப்பையும், துண்டையும் எடுத்துக்கொண்டு போனான். குளித்து முடித்து, இவன் உள்ளே வரும் போது நைட் ஷிப்ட் போனவர்களில் இருவர் வந்திருந்தார்கள். ‘என்னடே முருகா, ஊர்ல இருந்து தோஸ்து வாறான்ன.. எப்போ?’ என்றவனுக்கு எப்படியும் நாற்பது வயதிருக்கும். ‘வந்துட்டான் அண்ணாச்சி, அவன பார்க்கத்தான் மலாடுக்கு கிளம்பிக்கிட்டு இருக்கேன்.’ பதில் சொல்லியபடியே சோப்பு டப்பாவை திரும்பவும், பெட்டிக்குள் வைத்து விட்டு, பேண்ட், சட்டையை எடுத்து அணிந்துகொண்டான் முருகன். துண்டையும், லுங்கியையும் கொடியில் அப்படியே விரித்து போட்டுவிட்டு, பெட்டியை சரியாக பூட்டி இருக்கிறோமா என்று திரும்பவும் ஒருமுறை சரிபார்த்துக் கொண்டான்.

கல்லிக்குள் ஓடும் சாக்கடை நீரில் கால்வைக்காமல் அப்படியும் இப்படியுமாக பாலே நடனம் பயின்றவன் போல நடக்கலானான்.

ஊரில் இருந்து கடந்த முறை வந்த போது, அறையையும், அதற்கான வழியையும் பார்த்து பயந்து போனதால் தான் திரும்பவும் இந்த பக்கமே வராமல், இவனை கிளம்பி வரச்சொல்லி இருக்கிறான் பாலா.

சாலையை அடைந்ததும் தான் வெயில் மேலே பட்டு உறைத்து. கல்லிக்குள் சூரிய ஒளிகூட புகமுடியாத அளவுக்கு எப்படித்தான் வீடுகட்டுகிறார்களோ. எதிரில் இருந்த மார்வாடி தேனீர்க் கடையை அடைந்து ‘கட்டிங்’ என்றான். ஏற்கனவே நால்வர் நின்றுகொண்டிருந்தார்கள்.

பித்தளைப் பாத்திரத்தில் தேனீர் கொதித்துக்கொண்டிருந்தது. அது பொங்கி மேலே எழுந்து வரும் போது கரண்டியால் சர்க்கரையை அள்ளி அதில் போட்டான். அதே கரண்டியால் பாத்திரத்தின் விளிம்புகளையும் சுரண்டி, சுரண்டி உள்ளே தள்ளினான். கரண்டியால் கிண்டிக்கொண்டே இருந்தான்.

கீழே வேறு ஒரு பாத்திரத்தின் மீது விரித்து வைக்கப்படிருந்த முன்னாள் வெள்ளைத்துணியை ஒழுங்குபடுத்தி, அதில் கொதித்துக்கொண்டிருந்த தேனீரை எடுத்து கவிழ்த்தான். பாத்திரம் பிடிக்கும் இடுக்கியை இரண்டாக திருப்பி, பிடித்து துணியை பிழிந்து தேனீர் சக்கைகளை வடிகட்டினான். ஒரு கிளாஸில் ஊற்றி நின்றிருந்தவர்களுக்கு எடுத்துகொடுத்தான் கடைப் பையன்.

இவனுக்கும் தேனீர் வந்தது. அதன் இனிப்பும், இஞ்சியின் காரமும் தேனீரின் சுவையைக் கூட்டியது. கடைப்பையன் பம்பரமாய் சுழன்று வேலை பார்த்துக்கொண்டிருந்தான். இங்கே வேலை கிடைத்தால்கூட பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை விட்டுவிடலாம். இவர்களுக்கு மட்டும் எப்படி இதுமாதிரியான பையன்கள் வேலைக்கு கிடைக்கிறார்கள் என்று தெரியவில்லை. எந்த மார்வாடிக் கடையிலும் அவர்கள் ஆட்களைத்தவிர மற்ற ஆட்களை வேலைக்குப் பார்க்க முடியாது.

இவர்களின் ராஜஸ்தானில் மக்கள் தொகை அதிகமா.. அல்லது அங்கிருக்கும் ஆண்கள் எல்லோருமே இப்படி வேலைதேடி வெளியே வந்துவிடுகிறார்களா.. ஆண்கள் இல்லாமல் ஊர் பெண்களால் நிறைந்திருக்குமோ.. ஆண்களின்றி எப்படிக் கழியும் அவர்களின் பொழுதுகள்.. என நீண்டுகொண்டே போன எண்ணவோட்டத்தை தடை செய்தது பாக்கெட்டில் இருந்த கைபேசியின் அதிர்வு.

படுக்கும் போது, சைலண்டில் வைத்தது. நார்மல் மோடுக்கு மாற்ற மறந்து போனது இப்போது தான் நினைவுக்கு வந்தது. மொபைலை எடுத்துப் பார்த்தான் சீனிவாசன் என்றது.

‘ஹலோ’

‘ டேய்.. நான் பாலா பேசுறேண்டா..’

‘சொல்லுடா.. ஒன்னைய பார்க்கத்தான் கிளம்பிகிட்டு இருக்கேன்..’

’மறந்துட்டியோன்னு தான் போன் பண்ணேன்.’

’அதெல்லாம் மறக்கலை. இன்னும் ஒருமணி நேரத்துல அங்கே இருப்பேன்’

’சரி வாடா..’

பாலாவும் இவனும் ஒரே ஊர்க்காரர்கள் என்றாலும், இவன் பள்ளிப்படிப்போடு மும்பைக்கு வண்டியேறியவன். அவன் மேற்கொண்டு படித்து, பத்திரிக்கை நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வருகிறான். அவன் திருமணத்திற்கு கூட போக முடியவில்லை. போனில் வாழ்த்து சொன்னதோடு சரி. இப்போது தான் மீண்டும் சந்திக்கப்போகிறான்.

பாலாவின் மச்சினன் மலாடு ஒர்லம் பகுதியில் பிரட் வியாபாரம் செய்து வருகிறான்.

தன் வேலையின் சிரமத்தை போனில் சொன்னதிலிருந்து பாலாவும் மச்சினனைப் போய் பார்க்கச்சொல்லிக்கொண்டே இருந்தான். இவனும் அவன் சொன்னதின் பேரில் போய் ஒருமுறை பார்த்துவிட்டு வந்தான். பாலாவின் மச்சினன் இவனைவிட வயதில் சின்னவன் என்றாலும் அவனிடம் எட்டு பேர் வேலை பார்த்தார்கள். மாமாவின் நண்பன் என்ற முறையில் ஏகமரியாதை கொடுத்தான் அவன். அதனாலயே தன் வேலை விசயங்களைப் பற்றி பேசாமல் திரும்ப, வந்துவிட்டான்.

மாகிம் ரயில் நிலையத்திலிருந்து, போரிவிலி போகும் மின்தொடர்வண்டியை பிடித்து, மலாடு போய் இறங்கினான். அங்கிருந்து பெஸ்ட் பஸ் பிடித்து, ஒர்லம் பகுதியில் இறங்கினான். சர்ச்க்கு எதிரில் போகும் வழியாக போனால் ஒர்லத்தின் தமிழர்கள் வசிக்கும் பகுதிவந்துவிடும். மெதுவாக நடக்கத்தொடங்கினான்.

”முருகண்ணே, வந்துட்டீகளா.. மச்சான் உங்களுக்காகத்தான் காத்திருக்கு.” குரல் பின்னாலிருந்து கேட்க, திரும்பிப் பார்த்தான் முருகன். சிரித்தபடியே சைக்கிளை அருகில் கொண்டுவந்து நிறுத்தினான் சீனி. இவன் பின்னால் ஏறி அமர்ந்து கொள்ள, அந்த உயரமான சைக்கிளை முழு பலம் கொண்டமட்டும் சீனி அழுத்த, வண்டி முன்னால் வேகமெடுத்தது.

”வாடா, எவ்வளவு நேரம் காத்திருக்கறது… பம்பாய்க்கு வந்துட்ட பொறவு அவனவன் பரபரன்னு ஓடிகிட்டே இருக்கானுங்க, நீ என்னடா இப்படி இருக்க?”என்றபடியே சைக்கிளில் இருந்து இறங்கிய முருகனை கட்டியணைத்துக் கொண்டான் பாலா. “சாரி மாப்ள, தூங்கிட்டேன். சரி வா, கிளம்பலாம். முதல்ல எங்க போகணும்?”

“காந்திவிலி ஈஸ்ட்க்கு போகணும்.ஆட்டோல போலாமா, இல்ல பஸ்ல போலாமா?”

“பஸ்லேயே போவோம்டா. இங்கேர்ந்து டைரக்டா பஸ் இருக்கு .”

”அப்ப சரி, வா.”

ஒர்லம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார்கள். மேலே டாப்ஸும், கீழே பாவாடையுமாக நிறைய கோவா பெண்கள் நின்றுகொண்டிருந்தார்கள். சர்ச்சுக்கு வந்துவிட்டு போகிறவர்களாக இருக்கும். கோவா பெண்கள் எல்லோருமே ஏன் தண்ணீர் பிடித்துவைக்கும் டிரம் போலவே இருக்கிறார்கள் என்று தோன்றியது முருகனுக்கு.

’டேய்.. நிக்குறதெல்லாம் ஆயா வயசிருக்கும்டா.. இப்படி பாக்குற?’
கிண்டலாக கேட்டான் பாலா. இவன் பதில் சொல்லாமல் தலைகுனிந்து சிரித்துக்கொண்டான்.

“டேய் என்னடா ஊரு இது? ஒரு மனுஷனும் இன்னொருத்தன மதிக்கவே மாட்டேன்றான். நான் இங்க வந்த நாலு நாளா பாத்துகிட்டிருக்கேன், மனிதாபிமானம்னா கிலோ என்ன விலைன்னு கேப்பாங்க போல. எப்படிரா இந்தூர்ல இருந்துகிட்டிருக்கீங்க?”

“ஏண்டா இப்படி சலிச்சுக்கற, அப்படி என்ன நடந்துச்சு?”

“எலக்ட்ரிக் ட்ரெயின்ல பிச்சை கேட்டு பாடிட்டு வர குருட்டு பிச்சக்காரனுக்கு ஒரு பயலும் காசு போடமாட்டேன்றான். ரயில்வே ஸ்டேஷன் கூட்டத்துல எதிர்ல வர்றவன் மேல மோதினா சாரி கூடச் சொல்லாம ஓடிர்ரானுங்க. ஏதாவது ஒரு ப்ளாட்பார்ம்ல, ட்ரெயின்ல அடிபட்ட டெட்பாடி கிடக்கு. அதையும் எவனும் கண்டுகிட்ட மாதிரி தெரியல. ச்சீச்சீ… ரொம்ப மோசம்டா இந்த ஊரு.”

“அப்படில்லாம் இல்லடா. ஒவ்வொருத்தனுக்கு ஒவ்வொரு அவசரம் இருந்திருக்கும்.”

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே புஷ்பா பார்க்கிலிருந்து காந்திவிலி செல்லும் பேருந்து வந்தது. ஏறிக் கொண்டார்கள். காந்திவிலிக்கு இரு டிக்கெட்டுகளையும் முருகன் எடுத்துக் கொண்டான். சார்க்கோப் நாக்கா வந்ததும் இருவருக்கும் உட்கார இடம் கிடைத்தது.

“ஊர்லர்ந்து வந்தது வேற அசைன்மெண்ட்டுக்காக. ஆனா இங்க இவனுங்கள பாத்ததும், மனுஷத் தன்மை செத்துப் போச்சுன்னு இன்னொரு அசைன்மெண்ட் செய்யலாமான்னு யோசிக்கறேண்டா.”

“அந்த அளவுக்கெல்லாம் ஒன்னும் மோசம் ஆகல. எல்லா விஷயங்கள்லயும் ஒரு முன் தீர்மானத்துக்கு வந்து, எல்லாரும் அதுபடி இயங்கணும்னு எதிர்பார்க்கற நீ. ”

“அப்படில்லாம் ஒன்னுமில்ல. பாத்ததைத்தான் சொல்றேன். நேத்து சாயங்காலம் காச்பாடா ஏரியால தீ பிடிச்சிருச்சு. ஓர்லத்திலிருந்து நிறைய பேர் பதறியடிச்சு ஓடினாங்க. கூட நானும் போனேன். பக்கத்துல எரிஞ்சுகிட்டிருக்கற குடிசைய, அணைக்காம தன் குடிசைல இருக்கற பொருட்களையெல்லாம் வேக வேகமா வெளில எடுத்துகிட்டிருந்தவங்களையும், தன் வீட்டுக் கூரை மேல மட்டும் தண்ணியள்ளி ஊத்திகிட்டிருந்த ஆளுங்களையும்தான் அதிகம் பார்க்க முடிஞ்சது. அதனாலதான் சொல்றேன் இந்தூர்ல இருக்கற எல்லாரும் மனுஷத் தனமே இல்லாம மெஷினா மாறிட்டாங்கன்னு…”

”அப்படி எல்லாம் சொல்லிட முடியாதுடா.. அவனவன் தன் அளவில் மனுசத்தன்மையோடதான் இயங்கிக்கிட்டு இருக்கான். பொழைக்க வந்த ஊர்ல அவனால என்ன செய்யமுடியுமோ அதை செஞ்சுகிட்டு தான் இருக்கான்னு நான் நம்புறேன். ஏன்னா.. நானும் இதே ஊர்ல பொழைக்கறவன் தான்.”

பாலா பதிலேதும் கூறவில்லை. பேருந்து இப்போது கடைசி நிறுத்தத்தை அடைந்திருந்தது. முன்வாசல் வழியாக இறங்கிக் கொண்டிருந்த மக்களோடு வரிசையில் சேர்ந்து இருவரும் இறங்கினார்கள். அப்படியே சிறிது முன்னால் நடந்து வலது பக்கம் திரும்பி, ரயில் நிலையத்தின் அருகில் இருந்த மார்க்கெட் சாலை வழியாக லெவல் க்ராசிங்கை அடைந்தார்கள்.

நான்கு வழிப்பாதைகொண்ட லெவல் க்ராசிங் அது. முதலிரண்டும் லோக்கல் மின் தொடர்வண்டிகளுக்கானவை. மற்றவை வெளி ஊர் செல்லும் எக்ஸ்பிரஸ் வண்டிகளுக்கானவை. இடது பக்கம் தண்டவாளங்களை கடப்பதற்கான நடை மேடை போடப்பட்டிருந்தது. மூடி இருந்த க்ராசிங் தடுப்புக்கு ஓரமாக டிங்..டிங்..டிங்.. என்று மணி சத்தம் வேகமாக அடித்துக் கொண்டிருந்தது. சிவப்பு விளக்கும் விட்டு விட்டு எரிந்து எச்சரிக்கை செய்துகொண்டிருந்தது.

ஆனால் பொதுமக்களில் எவரும் இதை பொருட்படுத்தியது போல இல்லை. பெருவாரியான மக்கள் மூடியிருந்த லெவல் க்ராசிங்கின் தடுப்பின் கீழாக குனிந்து தண்டவாளங்களை நேரடியாக தாண்டிப் போய்க் கொண்டிருந்தார்கள். பழ வியாபாரிகள் கூடைகளை கீழே வைத்துவிட்டு, தடுப்புக்கு அந்தப்பக்கமாக குனிந்து போய், பின் கூடையை தன் பக்கம் இழுத்து எடுத்துக்கொண்டு தண்டவாளங்களை கடந்து போய்க்கொண்டிருந்தார். சிறுவன், வாலிபன், பெரியவர் என்று ஆண்களும், மங்கை, மடந்தை, பேதை, பேரிளம்பெண் என எல்லா வயது பெண்களும் குறுக்கே போடப்பட்டிருந்த தடுப்பைப் பற்றிய கவலையின்றி, இந்தபக்கமும், அந்தப்பக்கமுமாக போய்க்கொண்டும், வந்துகொண்டும் இருந்தார்கள்.

இவர்களும் மற்றவர்களைப் போலவே தடுப்பின் கீழ் குனிந்து தண்டவாளங்களை கடக்க ஆரம்பித்தார்கள். இவர்களுக்கு முன்னால் ஒருவர் சைக்கிளை உருட்டியபடி சென்று கொண்டிருந்தார்.

“நீ என்ன சொன்னாலும் சரி.. எனக்கு சுத்தமா இந்த ஊரே பிடிக்கலடா. முதல்ல நினைச்சேன் ஒரு ஆறு மாசமாவது இங்க இருக்கறா மாதிரி வரணும்னு. வந்த ரெண்டாவது நாளே தோணிருச்சு, இந்தூரு எனக்கு சரிபட்டு வராதுன்னு.” பாலாவின் புலம்பல்களை மௌனமாய் கேட்டுக் கொண்டே வந்தான் முருகன். இரண்டு தண்டவாளங்களை கடந்து மூன்றாவது தண்டவாளத்தை நெருங்கும் போது “ஏய் தீன் நம்பர் மே காடி ஆரஹே..” என்று முன்னால் போய்க் கொண்டிருந்த சைக்கிள்காரன் கத்தினான்.

சுதாரித்து முன்னால் கால்வைத்த பாலாவையும் முருகன் பின்னுக்கிழுத்துக் கொண்ட வினாடி படு வேகமாக ஒரு எக்ஸ்பிரஸ் வண்டி காற்றைக் கிழித்துக் கொண்டு போனது.

நன்றி :- மனிதாபிமானம் என்ற பெயரில் தினமணிக் கதிர்(05.06.2011) இணைப்பில் வெளியான கதை.

This entry was posted in சிறுகதை, புனைவு and tagged , , , , , . Bookmark the permalink.

3 Responses to நகரம் (சிறுகதை)

  1. கதை அருமையாக இருக்கிறது. பம்பாய் வாழ்க்கையை திரு நாஞ்சில் நாடன் அவர்களது கதைகளில், எழுத்தில் படித்திருக்கிறேன். உங்களது எழுத்து நடையும் நன்றாக இருக்கிறது. உங்களது கதையை நான் இப்போது தான் படிக்கிறேன்.
    வாழ்த்துக்கள்.

  2. நன்றி ரத்னவேல் சார்..

  3. தினமணி கதிர்ல வாசிச்சேன், இந்த பேர எங்கயோ கேள்விப்பட்டிருக்கமேன்னு நினைச்சேன்.. இன்னைக்குத்தான் இந்தப்பக்கம் வருகிறேன்… தலைப்பு மட்டும் வேற, மற்றும் அந்த முடிவும் இதில் இல்ல….

    நல்ல கதை… ரசித்தேன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.