உங்களில் பலருக்கும் கென் தெரிந்தவராக இருக்கலாம். அனேக குழுமங்களில் சண்டைக்கோழி சேவலாக வலம் வரும் கோபக்காரன். ஆனால்.. மெல்லிய மனதுக்கு சொந்தகாரன். எதையும் வெளிக்காட்டிக்கொள்வதில் அவனுக்கு தகராறு உண்டு. அது அன்பாக இருக்கட்டும், கோபமாக இருக்கட்டும். கவிதைகள் மட்டுமே தன் வலைப்புக்களில் எழுதிக்கொண்டிருக்கும் கென், அவ்வப்போது உரைநடைபக்கமும் எட்டிப் பார்ப்பதுண்டு. கவிதைகளை விட அவனது உரைநடைக்கு நான் வாசகன்.

இந்த வாரத்தில் பண்புடன் குழுமத்தில் அவன் எழுதி இருந்ததை பதிவர்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

-OoO-

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை செளரிராசன் தொடக்கப்பள்ளியில் படித்தேன்,

செளரிராசன் தந்தைப்பெரியாரின் சீடர் , தீவிரமான நாத்திகவாதி தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்று ஒரு தொடக்கப்பள்ளியும் ஒரு உயர்நிலைப்பள்ளியும் நிறுவியவர்.

தம் தோட்டம் முழுவதையும் அழித்து ஆதிதிராவிட மக்களுக்கான காலனி வீடுகளை கட்டித்தந்தவர். இன்றும் செளரிராசன் காலனி என்ற பெயரில் வெகு சிறப்பாக இருக்கிறது.

அவர் வாழ்கின்ற காலத்தில் எவரெல்லாம் அவரை எதிர்த்தார்களோ கொலைச்செய்ய முயற்சித்தார்களோ அவர்களின் பிள்ளைகள் இன்று அதே பள்ளிகளில் ஆசிரியர்களாக, தலைமை ஆசிரியர்களாக இருப்பது காலத்தின் கட்டாயம்.

ஐந்தாம் வகுப்பு முடிந்து ஆறாம் வகுப்பில் சேர நுழைவுத்தேர்வை அறிமுகப்படுத்திய ஆண்டில் நானிருந்தேன்.

ஆறாம் வகுப்பில் எனக்கு வகுப்பாசிரியர் திரு . வைத்திலிங்கம் எனக்கான இலக்கிய ஆர்வத்தை வெகுவாக ஊட்டியவர், சிறப்பான முற்போக்காளர், சாதி மறுப்பாளர். தமிழ் ஆர்வமிக்கவர். எல்லா அடிப்படை தண்டனைகளிலும் நான் எப்போதும் சிக்கிக்கொள்வதுண்டு.

பெண்களுக்கான வழியாய் பள்ளிக்குள் வருவது, ரேங்க் சீட்டில் அப்பாவின் கையெழுத்துப்போடுவது, திடீர் சண்டைக்குள் குதிப்பது, பெண்களை கெட்டவார்த்தையால் திட்டுவது.

கடைசியாய் சொன்ன குற்றச்சாட்டுக்கு அதிக தண்டனை கிடைக்கும். பள்ளியில் உள்ள எல்லா மரங்களுக்கும் செடிகளுக்கும் தண்ணீர் ஊற்றவேண்டும் , பிரேயர் ஹாலில் முட்டிப்போடுதல் போன்றவை.

முட்டிப்போட்டுருக்கையில் நாம் திட்டிய பெண் அவள் தோழிகளுடன் வந்து சிரித்தபடி போகையில் உள்ளுக்குள் இன்னும் வண்டையாக திரளும் கோபம்.

எட்டாம் வகுப்பில் பள்ளி ஆரம்பமாகி ஒரு மாதத்திற்குப்பின் வந்து சேர்ந்தாள் ஒரு பட்டாம்பூச்சி பெண் , செங்கல்பட்டிலிருந்து வந்திருக்கிறாளென்றும் எவரும் எந்த கேலியும் செய்திடகூடாதென்றும் அறிமுகப்படித்தி வைத்தார் ஆசிரியர்.

அந்த பெண் ஆசிரியர்க்கு உறவுக்காரியாக வேறு இருந்தபடியால் எச்சரிக்கைப்பலமாக இருந்தது.

பச்சைக்கலர் பாவாடையும் வெள்ளைச்சட்டையும் பெண்களுக்கான சீருடை..,

வெள்ளைக்கலர் சட்டையும் காக்கி நிற பேண்ட்டும் ஆண்களுக்கானது.

வெகு திருத்தமாக இருப்பாள் , எதைக்கேட்டாலும் உங்கையில கொடுத்தேன், தாழ உட்கார்ந்தேன் என்பதான பேச்சு வழக்கில் நாங்கள் சிரிக்கையில் அவள் முறைத்தப்படி போய்விடுவாள்.

சிறிது நாட்கள் கழித்துப்பள்ளிக்கு வந்ததினால் எழுதப்பட்ட நோட்ஸ்களுக்கான தேவையில் என் நோட்ஸ் அவளிடம் யாராலோ தரப்பட்டிருந்தது.

( குறிப்பு : என் தமிழ்க்கையெழுத்து கொஞ்சம் அழகாக இருக்கும் , வகுப்பில் ஒழுங்காக குறிப்பெடுத்துக்கொண்டிருப்பேன்)

வந்து சேர்ந்த ஒரு மாதத்திற்குப்பின் நேரடியாக என்னிடம் நோட்ஸ் கேட்டாள் , அங்கு பெண்களிடம் பேசுவது பெரிய குற்றம் அதுவும் இல்லாமல் என்னைப்போன்ற வன்முறையாளர்களிடம் பெண் பேசுவது மிகப்பெரிய குற்றம்.

மிகத்தெளிவாக தரமுடியாது போடி என்றேன், உடனே அழுது விட்டாள் அவள் என்னை ஏன் போடின்னு சொல்றன்னு கேட்டப்படி தேம்பி தேம்பி அழத்துவங்கினாள்.

இன்னைக்கு உனக்கு இருக்குடா என்றபடி என் நண்பர்கள் மிரட்டியபடி இருந்தார்கள், மதிய உணவு இடைவேளைக்கும் அவள் சாப்பிட போகாமல் அழுதபடி இருந்தாள் ,

மதிய கணக்கு வகுப்பிலும் அவள் கண்கள் கசிந்தபடி இருக்க கணக்கு வாத்தியார் ஒரு உறுமலுடன் என்னம்மா ஏன் அழற

டேய் யாருடா அந்த பொண்ணுக்கிட்ட தகராறு பண்ணீங்க என்றார்,

மொத்த வகுப்பறையும் அமைதியாய் என்னை நோக்கியது , நான் மெனமாக எழுந்து நின்றேன், உனக்கு இதே வேலையாய் போச்சுடா, டிசி கொடுத்தாதான் நீ சரிப்பட்டு வருவ என மிரட்டத்துவங்க

நித்யா எழுந்து இல்லை சார் எனக்கு உடம்பு சரியில்லை அதான் அழுதேன் என்றாள், கணக்கு வாத்தியோ நீ பயப்படாத நான் இவனை பாத்துக்கிறேன் என்றபடி சொல்டா என்னப்பண்ணிட என மிரட்டலைத்தொடர்ந்தார்.

அவளோ விடாமல் இல்லை சார் , நான் உடம்பு சரியில்லாமல்தான் அழுதேன் என சாதித்துவிட்டாள். என்னை முறைத்த வாத்தி இந்த முறை தப்பிச்சிட்டடா உனக்கு இருக்கு என்றார்.

அதற்கடுத்த நாட்களில் வெகு நட்பாகிப்போனோம் டியுசன்களில் பக்கத்து இருக்கைப்பிடித்து வைத்திருப்பாள், பள்ளிக்கு வரும் நாட்களில் டிபன்பாக்ஸ் பிடுங்கி தின்கையில் சிரித்தப்படி இருப்பாள் , தினமும் இரு இட்லிகளும் சீனியும் மட்டுமே இருக்கும்.

எப்போதும் ஜாமெண்டிரி பாக்ஸில் பணம் வைத்திருப்பாள் , அப்போதெல்லாம் ஐந்து ரூபாய் இருந்தாள் போதுமாயிருக்கும் எனக்கு .

வாரக்கடைசியில் வெள்ளிக்கிழமையில் பணம் எடுத்துக்கொள்வேன் எதுக்கு சொல்லிட்டு எடுத்துக்க என்பாள் , போடி காரணம் மயிரெல்லாம் சொல்லனும்னா நீ தேவையேயில்லை என்கையில் ,

மயிறு என்ற வார்த்தையில் காது பொத்திக்கொள்வாள் , முகம் எல்லாம் சிவந்து போய்விடும் , பணம் தந்து விட்டு அழுதபடி போய்விடுவாள், திங்கள் பள்ளிக்கு வந்தாலும் என் முகம் பார்க்காமல் இருப்பாள் .

என் வீட்டில் ஜெனியா பூக்கள் பூத்திருந்த காலம் அது . ஜெனியா பூக்கள் பிளாஸ்டிக் பூக்களைப்போன்றவை , வாடாமல் இரு நாட்களுக்கு மேல் இருக்கும் அவை பல நிறத்தில் பூக்கும்.

சண்டைப்போட்ட நாட்களில் ஒரு பூவை எடுத்துச்சென்று என் டெஸ்க்கின் மேல் வைப்பேன். ஓரக்கண்ணால் பார்த்தபடி இருப்பாள், சில நிமிட மாயஜாலங்களில் அவள் தலையில் சிரித்தபடி இருக்கும் அந்த பூ.

வெகு ஆண்டுகளுக்குப்பிறகு வீட்டிற்கு அருகில் பேரூந்து நிலையத்தில் ஒரு பெண் அடம்பிடிக்கும் மகளோடும் கைக்குழந்தை ஒன்றோடும் இருந்தாள்.

ஏதோ ஞாபகத்தில் அவளையே பார்த்தப்படி இருக்க திடிரென அந்த பெண் தன் கணவனிடம் என்னைக்கைக்காட்டி ஏதோ சொல்லியபடி தன் கைக்குழந்தையை அவனிடம் கொடுத்தாள்.

சாலையை ஒரு சிறுமியின் குதூகலத்துடன் கடந்து வந்து என்னைத்தெரியுதா என்றாள். சில ஆண்டுகளில் அவள் வெகுவாய் மாறிப்போயிருந்தாள் , அந்த குழந்தை முகம் அப்படியே இருந்தது. உங்கையில சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டேன், நீ எங்க இருக்க உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா என்று ஏதேதோ கேட்டபடி இருந்தாள்.

என் வீட்டுப்பக்கம் திரும்பி பார்த்தேன் , வீடு கட்டுவதற்காய் இடித்துப்போடப்பட்டிருந்த செங்கற்கள் எல்லாம் ஜெனியா பூக்களாய் மாறிப்போயிருந்தது.

அதே பள்ளியில் படித்த என் தம்பி பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்து விட்டானாம் , காலையில் தொலைப்பேசினான்.

-OoO-

கென், உங்கள் வலைப்பதிவிலேயே இப்படி எழுதுங்கள். அல்லது உரைநடைக்கு என்று தனி வலைப்பதிவாவது தொடங்குங்கள்!


Comments

7 responses to “நித்யாவும் நானும்..”

  1. அந்த காலத்து கிருஷ்ணா டாவின்ஸியின் எழுத்தை வாசிப்பதை போன்ற பிரமை எனக்கு ஏற்பட்டது. கொஞ்சம் நகாசு செய்து பத்திரிகை எதற்காவது சிறுகதையாக கென் அனுப்பலாம்.

  2. அருமையான பதிவு!
    என் பள்ளி நாட்களை மீண்டும் ஒரு முறை திரும்பி பார்த்தது போல் இருந்தது.
    லக்கி சொன்னதை நானும் வழிமொழிகிறேன்

    வால்பையன்

  3. அருமையான பதிவு இது

    கென்னிடமிருந்து இதுபோன்ற உரைநடைகள் நிறையவே எதிர்பார்க்கின்றோம்.

  4. மிக மிக அருமையான எழுத்து நடை!!
    மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

  5. this story is very beauty full. i am thinking to going on my school life. very very beauty full and super story.

  6. இதை மட்டும் நீங்க சொல்லி இருக்காட்டி நான் உரைநடை பக்கமா வந்தே இருக்க மாட்டேன் மாம்ஸ்.

    சுந்தர் கூட அடிக்கடி சொல்வார் பாலா தான் உங்களை கண்டுபிடிச்சார் கென் அப்படின்னு.

    எவ்ளோ வருசம் கழிச்சு பின்னூட்டம் போடறேன் பாருங்க. எப்பவுமே அன்பை வெளிப்படுத்த எனக்குத் தெரியலை .
    நன்றிகள் பாலா மாம்ஸ்

  7. நன்றின்னு சொல்றது கூட ஒரு சடங்காகிடுச்சு இருந்தாலும் நானும் சடங்கை செஞ்சிடுறேன்

    நீங்க சொல்லியிருக்காட்டி இந்த உரைநடைப்பக்கம் கண்டிப்பா வந்திருக்க மாட்டேன் 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *