விடுபட்டவை 31 மே 2008

சின்ன வயதிலிருந்து என்னையும் மீறி, இந்த பாடத்திட்ட முறைகளை வெறுத்து வந்திருக்கிறேன். பாடம் தவிர்த்த என்னுடைய எல்லா ஆர்வங்களையும் குடும்பத்தாரும், ஆசிரியர்களும் சேர்ந்து தடை போட்டிருக்கிறார்கள். அல்லது அந்த ஆர்வங்களை ஒரு வடிவத்துக்குள் கொண்டுவர என்னை கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். எட்டாவது படிக்கும் போது அரைப் பரிட்சையில் 90 மார்க் அறிவியலில் வாங்கியது நினைவு இருக்கிறது. என் வீட்டில் எட்டாவது பையனாகிப் போனதால்.. நான் செய்யும் எதுவுமே அவர்களுக்கு புதியதாக படவில்லை. (முன்னோர்களால்.. ஏற்கனவே செய்யப்பட்டவைகளாக அவை இருந்திருக்கும் என்பது பின்னாலின் அறிவு) என்னை ஒரு போதும் அழைத்து தோள் தட்டி பாரட்டிய நினைவும் இல்லை. அதனாலயே இப்போதும்.. நான் ஏதாவது செய்தால்.. அதை நல்லா இருக்குன்னு சொல்லுகின்றவரின் முன் குனிந்து ‘தட்டிக்கொடுங்க!’ என்று கேட்கும் வழக்கம் தொடர்கிறது. சில நேரங்களில் அழுதுவிடுவதும் நிகழும். ஒரு தந்தையாக தான் அனுபவங்களை ஜெயமோகன் எழுதி இருக்கிறார். தேர்வு என்று தலைப்பிட்டு அவர் எழுதி இருப்பதை பார்க்கும் போது, இவர் மாதிரி எனக்கும் யாராவது இருந்திருந்தால்.. வாழ்க்கையில் உருப்பட்டிருப்பேனே.. என்ற எண்ணம் எழுகிறது. 🙁

இதை படிக்கச்சொன்ன நண்பர். வெங்கட்டராமனுக்கு நன்றிகள்! (ஜெமோ தன் தளத்தின் எழுத்துருக்களை பெரிது படுத்தினால் என் போன்று கண்ணாடி போட்டு வாசிப்பவர்களுக்கு சிரமம் குறையும்)

-OoO-

இப்போது நான் எழுதிக்கொண்டிருக்கும் ‘விடுபட்டவை’ பத்தி முயற்சி (மும்பையில் இருந்த சமயத்தில் மும்பை தமிழ்டைம்ஸ் பத்திரிக்கையில் ஞாயிற்றுக்கிழமைகளில் எழுதிய முறை தான் இது) நன்றாக வந்திருப்பதாக பாஸ்டன்பாலா முதல் பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். பாபா கூடுதலாக ஒரு வார்த்தையும் சொன்னார். இம்முயற்சி பிடித்துப் போன பலரும் இதனைப் போலவே எழுத முனைவார்கள் என்று! கேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது. கவிதைகள் அதிகமாக எழுதி வந்த நண்பர் ப்ரியன் உரைநடைக்கு என்று தனியாக வலைப்பதிவு தொடங்கி விட்டார். இதனை திரட்டியில் இணைக்கப் போவதில்லை என்றும் சொல்லி இருக்கிறார்.

-OoO-

மாநகரப் பேருந்துகளில் பயணிப்பது, மும்பையின் தொடர்வண்டியின் பயணிப்பதை விட சவாலானதாகவே இருந்தது சென்னை வந்த புதிதில்! ஊர்பக்கம் மாதிரி இல்லாமல் நடத்துனர், உட்கார்ந்தபடியே டிக்கெட் கொடுப்பது அனேகமாக சென்னையில் மட்டும் தான் இருக்கும் என நினைக்கிறேன். 600 ரூபாய் பஸ்பாஸ் எடுத்த பின் தான் என்னால் நிம்மதியாக பயணிக்க முடிந்திருக்கிறது.

இன்று பயணித்த பேருந்தில் நடத்துனர் பெண். புதியவராக தெரிந்தார். ஒவ்வொருவருக்கும் டிக்கெட் கொடுக்க தாமதமானது. எழுதி வைத்திருந்த அட்டையைப் பார்த்து பார்த்து விலையை முடிவு செய்து கொடுத்தார். அது எல்லாவற்றையும் விட ஆச்சரியம்.. ஒரே இடத்தில் ஆனி அடித்தது போல உட்காராமல்.. முன்னும் பின்னும் நடந்து வந்து எல்லோருக்கும் டிக்கெட் கொடுத்தார். கொஞ்சமாய் பேச்சுக் கொடுத்ததில் பி.எஸ்.சி படித்து விட்டு நடத்துனராக சேர்ந்திருக்கிறாராம். தகப்பனார் இல்லாத குடும்ப பின்னனியைச் சேர்ந்த இவரு வேலை பார்த்து தான் குடும்பத்தை காப்பாற்ற வேண்டுமாம். இதற்கு முன் தனியார் பள்ளி ஒன்றில் 1200 ரூபாய் சம்பளத்துக்கு ஆசிரியையாக வேலை பார்த்து வந்தாராம். ‘தாத்தா(கருணாநிதி) கவர்மெண்டுல இந்த வேலையை கொடுத்து எங்க குடும்பத்துல வெளக்கேத்தி வச்சிருக்காங்க.. தங்கச்சிங்களை படிக்கவச்சு.. கல்யாணம் கட்டிக்கொடுக்கனும் சார்’என்று சொன்ன அவருக்கே இன்னும் கல்யாணம் ஆகவில்லை. இது போல நாட்டில் எத்தனை பெண்களோ! 🙁

-oOo-

”அண்ணே ஒன்னு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே?” என்றேன் சற்று தயக்கத்துடன்.

‘மாட்டேன். கேளு’

”பெண்ணியம் பெண்ணியம்னு பேசுறோமே.. அப்படீன்னா.. என்ன அண்ணே.. அவங்க சுதந்திரமாகத் தானே இருக்காங்க”

‘ம்’

“அப்புறம் எதுக்கு இப்படி பேசிக்கிட்டே இருக்கோம். இன்னும் சொல்லப்போனா.. நம்மளை விட அவங்க நல்லாத் தானே இருக்காங்க”

என் கேள்விகளை கேட்ட அவர் சிரித்துக்கொண்டே, ‘பெண்ணியம்னா.. என்ன சொல்லு?’என்றார்.

”அது..வந்து.. சமத்துவம்.. சம அந்தஸ்த்து.. சமூகத்துல..”

‘நிறுத்துடா… நான் சொல்லட்டுமா?’

”சொல்லுங்கண்ணே..”

‘நான் நானாக இருப்பது. ஒரு ஆணால் அவனாக இருக்க முடியுது. ஆனா.. ஒரு பெண்ணால்.. அவள் அவளாக இருக்க முடியறதில்லை. அதற்கு நம்ம சமூக அமைப்பு விடுறதுமில்லை. அதானால தான் அவங்க போறாடுறாங்க! இப்ப புரியுதா?’

தொன்னூறுகளின் தொடக்கத்தில் நடந்த இந்த உரையாடல் எனக்கு புரிய சில வருடங்கள் ஆனது. சொல்லிக்கொடுத்தவர் இப்போது உயிருடன் இல்லை என்றாலும் அவரின் எளிமையான விளக்கம் இப்போதும் வியக்க வைக்கிறதாகவே இருக்கிறது.

-OoO-

This entry was posted in அனுபவம், சமூகம்/ சலிப்பு, விடுபட்டவை and tagged , , , . Bookmark the permalink.

8 Responses to விடுபட்டவை 31 மே 2008

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.