விடுபட்டவை 30.மே.2008

சென்னைக்கு வரும் பதிவர்கள் பலரை சந்திக்கும் விருப்பத்தை தெரிவித்தாலும், அதனை பதிவு நாம் போட்டு அறிவித்தாலும்.. எல்லோரின் கண்ணிலும் அப்பதிவு படுவதில்லை. விளைவு சந்திப்புக்கு முன்பாக எஸ்.எம்.எஸ் வழியாகவோ, தொலைபேசியோ சென்னையில் இருப்பவர்களுக்கு மீண்டும் நினைவு படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.

பதிவு போட்டால் தானே பார்க்க முடியாமல் போகிறது.. மெயிலாக அனுப்பிவிட்டால்.. என்ற ரோசனையை செயல்படுத்த உடனடியாக(!) ஒரு குழுமம் தொடங்கப்பட்டிருக்கிறது.

Homepage: http://groups.google.com/group/chennaibloggersmeet
Group email: chennaibloggersmeet@googlegroups.com

இதில் யார் வேண்டுமானாலும் சேரலாம். ஆனால் நிர்வாகி மட்டுமே போஸ்ட் போட முடியும். அதனால் தேவையில்லாத கும்மிகள் தவிர்க்கப்பட்டு, உங்கள் இன்பாக்ஸ் காப்பாற்றவே இம்முடிவு.

சந்திப்பு குறித்த அறிவிப்புக்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரியில் வந்து சேர குழுமத்தில் இணைந்திடுங்கள். கொஞ்ச காலத்திற்கு பின் (இந்த குழுமம் பிரபலமான பின்) சந்திப்பு குறித்த அறிவிப்புக்களை நிறுத்திவிடலாம் என்ற எண்ணம் இருக்கிறது.

-OoO-

இன்று பத்தாவது தேர்வு முடிவுகள் வெளி வந்துவிட்டது. முன்பு எல்லாம் பத்திரிக்கைகளின் தேர்வு முடிவுகள் ‘ஸ்பெசல் எடிசன்’ போட்டு காலை பத்துமணிக்கோ பன்னிரெண்டு மணிக்கோ மார்கெட்டுக்கு விற்பனைக்கு வந்துவிடும். வருடம் நினைவில் இல்லை. அப்போது நான் டவுசர் போட்ட பையன். அப்படி தினமணி ஸ்பெசல் எடிசன் போட்டு முடிவுகளை வெளியிட.. ஏகப்பட்ட தவறுகள். இப்போது மாதிரி அப்போது அச்சுமுறை இல்லை. எழுத்து கோர்ப்பு முறை தான். மதுரையில் இருந்து வந்த அந்த ஸ்பெசல் எடிசனில் தேர்வானவர்களை தோல்வி என்றும், தோல்வியடைந்தவர்களை வெற்றி பெற்றதாகவும் தவறுகள் நிறைந்து அச்சாகி மார்கெட்டுக்கு வந்து விட்டது. அதை பார்த்து நன்கு படித்த பலர் தற்கொலை செய்துகொண்டனர். மாலைமலர் பேப்பரின் சிறப்பு எடிசன் மதியம் சரியான முடிவுகளுடன் வெளியாகி இருந்தது. ஆத்திரமடைந்த மாணவர்களும் மக்களும் தினமணியை எரித்தும் ஏஜெண்டை அடித்தும் தங்களின் எதிர்ப்பை காட்டிக்கொண்டதாக நினைவு. ஊர்வலம் எல்லாம் போனார்கள். அதன் பின் தேர்வு முடிவு சிறப்பு எடிசன் வெளியிடுவதை தினமணி நிறுத்திக்கொண்டது. இது பற்றி அறிந்தவர்கள் விபரமாக எழுதினால் தேவலாம்.

-oOo-

எனக்கு ஒரு வியாதி உண்டு. பிச்சைகேட்டு யார் வந்தாலும் காசு போட மாட்டேன். அவர்களுக்கு ஒரு வேளைக்கான சாப்பாடு வாங்கி கொடுத்து விடுவேன். என்னிடமே காசு குறைவாக இருந்த சமயங்களில் டீயும் பன்னும் வாங்கி கொடுத்திடுவேன். அதே சமயம் பார்வையற்றவர் ஏதேனும் பொருள் விற்கிறார் என்றால்.. எனக்கு அது பயன்படாவிட்டாலும் சின்னதாக அவரிடம் இருந்து ஒரு பொருளை வாங்கி வந்துவிடுவேன். ஓட்டல்களில் சாப்பிடப்போகும் போது சர்வருக்கு எல்லோரும் டிப்ஸ் கொடுப்பது வழக்கம். நான் கையில் காசு இருந்தால் சர்வரையும் டேபிள் தொடைக்கும் பையனையும் அழைத்து அவனுக்கும், நல்ல மூட் இருந்தால் சமையல் கட்டுக்கு சென்று மாஸ்டருக்கும் கூட டிப்ஸ் கொடுத்திட்டு வருவேன். (இது எல்லாம் நான் ஓட்டலில் டேபிள் துடைத்த காலத்தில் எனக்கு நடந்திருப்பதை/பார்த்ததையும் இப்போது நான் செய்கிறேன் அவ்வளவே!) அது போலவே முடிதிருத்தகங்களில் வேலைப்பார்ப்பவர்கள் 10க்கு 4 என்ற அளவில் கமிசன் அடிப்படையில் வேலை பார்க்கிறார்கள். அதாவது.. மொத்தமாக 100 ரூபாய்க்கு ஒருவர் வேலை பார்த்தார் எனில் நாற்பது ரூபாய் அவருக்கும், அறுபது கடை முதலாளிக்கும் போகும். அதனால்.. அங்கு போனாலும் டிப்ஸ் கொடுப்பது என் வியாதி. ஆனால்.. அக்குள் முடியை அகற்றுவதற்காகத் தான் நான் கூடுதலாக பணம் கொடுத்ததாக வால்பையன் சொன்னதை கேட்டு எனக்குள்ளேயே சிரித்துக்கொண்டேன். என்னமா யோசிக்கிறாங்கப்பா.. வேறு என்ன செய்ய!

-OoO-

என் தோழி ஒருத்தி கொஞ்ச நாளாகவே பேசவேண்டும் என்று நேரம் கேட்டுக்கொண்டிருந்தார். இன்று மாலை சந்திப்பதாக கூறி இருந்தேன். மெரினாவுக்கு அருகில் அவரது அலுவலகம் என்பதால்.. அங்கேயே சந்திப்பதாக முடிவு செய்து கொண்டோம். தனியார் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். அவரின் அலுவலக பிரச்சனைகளைப் பற்றி சொல்லி புலம்பினார். கேட்டுக்கொண்டேன். நீண்டநேரமாக பேசிக்கொண்டிருந்ததில்.. அவர் கொண்டு வந்திருந்த தண்ணீர் பாட்டிலை நானே எழுபது சதம் காலி செய்து விட்டேன். அதனால் இயற்கை உபாதை உள்ளுக்குள் உதைத்தது. ஆத்திரத்தைக்கூட அடக்கி விடலாம் என்ற சொலவடை நினைவில் வந்தது. தோழியிடம் சொல்லி விட்டு இதோ வருகிறேன் என்று ஓடினேன். கண்ணகி சிலையருகில் இருந்ததால்.. அப்படியே கொஞ்சம் நடந்ததும்  கட்டணக் கழிப்பறை! உபாதையை உதைத்து தள்ளி விட்டு, தோழி இருந்த இடம் நோக்கி நடந்து வந்துகொண்டிருந்த போது, அவரிடம் யாரோ ஒருவர் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தேன். நான் கிட்டப் போய் சேரும் முன் அந்த நபர் விலகிப் போய்விட்டார்.

யாரது.. என்ன கேட்டார் என்றேன். தோழியோ.. ஏதோ சொல்லி சமாளிக்க முயன்றார். நான் கொஞ்சம் கோபமாக கேட்கவும். ‘இங்க ஏன் தனியா ஒக்காந்திருக்க.. யார் நீ.. என்ன பண்ற..?’ என்று கேள்விகளால் அந்த நபர் அடுக்கி இருக்கிறார். அவர் பெயரைக் கேட்க, தோழி கொஞ்சம் தைரியமானவர் என்பதால்.. இவரும் அவரிடம் பெயரைக் கேட்க.. என்று வாகு வாதம் நடந்திருக்கிறது. அதற்கு  ‘நான் போலீஸ்காரன் அப்படித்தான் கேட்பேன்’என்று சொல்லி இருக்கிறார் அந்தநபர். ‘எந்த ஸ்டேசன்’ என்று தோழி கேட்க, ஸ்டேசன் பெயரையும் சொல்லி இருக்கிறார். தோழியும் ‘என்னோடு வந்தவரும் ப்ரஸ்தான். அவர் வந்ததும் நீங்களே கேளுங்க!’ என்று சொல்ல.. அதோடு அந்த நபர் எஸ்கேப்.

என்னால் சும்ம இருக்க முடியவில்லை. நடைபயிலும் இடத்திற்கு வேகமாக வந்தேன். பின்னாலேயே தோழியும் வந்து சேர்ந்தார்.  இதற்கிடையில், நான் அந்த ஸ்டேசனுக்கு போன் செய்து கேட்டால், அந்த நபர் சொன்ன பெயரில் ஆளே இல்லை என்று தெரியவந்தது. என் கோபம் இன்னும் அதிகமானது. கண்ணகி சிலை பேருந்து நிறுத்தத்தில் அவரிப் பார்த்து விட்டோம். அவரும் எங்களைப் பார்த்ததும் வேகமாக நடக்க ஆரம்பித்தார். பின்னடியே நான் ஓடி அவரை மடக்கினேன்.

‘சார்.. நான் பாலா..—— ரிப்போர்ட்டர், நீங்க டிப்பார்ட்மெண்டா’ என்ற படியே கையை நீட்டினேன்.குடித்திருப்பார் போல நாற்றமடித்தது.  தயங்கியபடியே கையைக் குலுக்கியவர். ‘ஆமா சார்! என்ன வேணும் சார்’என்றார். ‘பெரிசா.. ஒண்ணுமில்ல.. தனியா ஒக்காந்திருந்த பொண்ணுகிட்ட ஏதோ சத்தம் போட்டு பேசினிங்கலாமே.. அது தான் என்ன வெவரம்னு கேட்க வந்தேன்’என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும் போதே தோழி வந்து சேர்ந்தார். ‘சார்.. நான் ஒண்ணும் தப்பா பேசலை சார்.. இவங்க என்னோட சிஸ்டர் மாதிரி’ என்று மழுப்பத்தொடங்கினார். அவரின் பெயரைக்கேட்டேன். சொன்னார். தோழியிடம் சொல்லி இருந்த பெயர் வேறு. அவரின் அடையாள அட்டையைக் காட்டச் சொன்னேன். முரண்டு பிடித்தார். உயரதிகாரிகளிடம் பேசட்டுமா.. என்று அவரின் ஸ்டேசன் பகுதி உயரதிகாரிகளின் பெயரைச் சொன்னதும், அவருக்கு குரல் தழுதழுத்தது. ‘சார்.. தப்பா ஒண்ணும் சொல்லலைசார்.. மன்னிச்சுடுங்க சார்.. சிஸ்டர் மாதிரி சார்.. ‘என்று என் காலில் விழப்போனார். இன்னும் கோபம் அதிகமானது எனக்கு. ‘ஏன் தனியா ஒக்கந்திருக்கன்னு கேட்டீங்களாமே.. ஏன் கடற்கரைக்கு சோடியாகத்தான் வரணும்னு சட்டம் போட்டிருக்காங்களா? இப்ப நீங்க ஒங்க நம்பரைச் சொல்லுங்க, அடையாள அட்டையைக் காட்டுங்க.. இல்லாட்டி நான் மேல பேச வேண்டியதிருக்கும்’ என்று சொன்னதும்.. மீண்டும் காலில் விழப்போனார். இதற்குள் கூட்டம் கூடி விட்டது. தோழியோ ஏகத்துக்கும் ஒருமையில் அவரை திட்டத்தொடங்கி இருந்தார். என்னால் அவரையும் கட்டுப் படுத்த முடியவில்லை. ‘கால் த போலீஸ்’ என்று அவ்வப்போது ஆங்கில கத்தல் வேறு. வேறு வழியின்று அந்த நபர் தன் அடையாள அட்டையைக் காட்டினார். பெயரைக்குறித்துக்கொண்டேன். நீங்க போங்க இன்னொரு நாள் ஸ்டேசனில் மீட்  பண்ணுவோம் என்று அனுப்பி வைத்தேன். தோழியை சமாதானப்படுத்தி.. அழைத்து வந்துவிட்டேன்.

கடற்கரைக்கு செல்வதில் இப்படி எல்லாம் தொல்லைகள் இருக்கிறது என்பது இன்று தான் தெரியவந்தது. மக்களே.. உங்களை இப்படி யாராவது யூனிபார்ம் இல்லாமல் மிரட்டினால்.. தயங்காமல் 100க்கு போன் போட்டு விடுங்க!

This entry was posted in அனுபவம், சமூகம்/ சலிப்பு, விடுபட்டவை and tagged , , , , . Bookmark the permalink.

8 Responses to விடுபட்டவை 30.மே.2008

  1. குழுமத்தில் சேர்ந்துடறோம்

  2. சேர விண்ணப்பித்துள்ளேன்

  3. சென்னைக் கடற்கரையைக் காமிக்கலாமுன்னு மகளோடு ஒரு சமயம் அங்கே அதே கண்ணகி சிலை(இல்லாத சமயம்) அருகே ஆட்டோவில் வந்து இறங்கினோம். சுற்றும் முற்றும் பார்த்தால் என்னவோ அந்த இடம் பாதுகாப்பா இல்லாத மாதிரி ஒரு தோணல். ஒரு ரெண்டு நிமிசம் நின்னு கடலைப் பார்த்துட்டு இன்னொரு ஆட்டோ புடிச்சுக் கிளம்பிட்டோம்.

    மகளுக்கு எரிச்சல். என்ன செய்ய?

    இப்போ நீங்க எழுதுனது இதை உறுதிப்படுத்துது.

  4. பெத்தராயுடு says:

    சமீபத்தில் 2002ல் மயாமி சென்றிருந்தபோது நள்ளிரவுக்குப் பின் உறக்கம் வராமல் ஹோட்டல் அருகே இருந்த கடற்கரையில் நடந்தது நினைவுக்கு வருகிறது. அந்த நேரத்திலும் பல மக்கள் கடற்கரை மணாலில் உலாவியதை எண்ணும்போது ஹூம்ம்ம்.. பெருமூச்சுதான் விடமுடிகிறது.

  5. குழுமத்தில் கருத்து சுதந்திரம் இல்லை 🙁

    உறுப்பினர்கள் பதில் மடல் அனுப்ப மட்டுமாவது ஆப்ஷன் கொடுங்கள். யார் யார் வருகிறோம் என்று உறுதிப்படுத்த மட்டுமாவது அது அவசியம்!

  6. Krishnakumar K B says:

    முதலில் மன்னிக்கவும், நேரமின்மை காரணமாக உங்களின் சில இடுகைகளை இன்று தான் படிக்க நேர்ந்தது. படித்து மறுபடி உங்களின் எழுத்தால் வசீகரிக்கப்பட்டு, மறுபடி என் profile- ல் முன்னம் எழுதியிருந்ததையே எழுதிவிட்டேன்! (அன்பின் வழியது உயிர்நிலை..)

  7. தூயா says:

    யானைக்கு ஓலை குடுப்பதை மறந்திட்டிங்களாண்ணா?

  8. பாலாண்ணா,

    விடுபட்டவைகள் அனைத்தையும் படித்தேன். நிறைய நல்ல விசயங்களை தொகுத்து இருக்கிறீர்கள். மிக்க‌ ந‌ன்றி

    //கடற்கரைக்கு செல்வதில் இப்படி எல்லாம் தொல்லைகள் இருக்கிறது என்பது இன்று தான் தெரியவந்தது. மக்களே.. உங்களை இப்படி யாராவது யூனிபார்ம் இல்லாமல் மிரட்டினால்.. தயங்காமல் 100க்கு போன் போட்டு விடுங்க!//

    மக்களிடம் கட்டாயம் இதுப்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நீங்கள் இருந்ததாலும் கொஞ்சம் தைரியசாலியாக இருந்ததாலும் உங்கள் தோழி தப்பித்தார். இல்லாவிட்டால்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.