நீங்கள் வலைப் பதிவரா? இது உங்களுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கலாம். உங்களின் சுற்றம் மற்றும் உறவினர்களிடம் வலைப்பதிவர் என்று சொல்லிக்கொள்ளுவதில் நிறைய சிரமம் இருந்திருக்கும். அவர்களுக்கு வலைப்பதிவுகள் பற்றி புரியவைத்து, திரட்டிகள் குறித்து பேசி.. நானும் அதுல எழுதுறேன். உலகம் முழுக்க இருக்கும் பல தமிழர்கள் எனக்கு இதன் மூலம் நண்பர்களாகி இருக்காங்க.. அப்படீன்னு சொல்லுறதுக்குள்ள தாவு தீர்ந்து போய் இருக்கும்.
நீங்கள் பட்ட கஷ்டம் இனி குறையப்போகிறது. வார இதழ்கள், தினசரிகள், தொலைக்காட்சிகள் என்று செய்தி வழியாக பலருக்கு வலைப்பதிவுகளிப் பற்றிய அறிமுகம் ஏற்பட்டிருந்த போதாலும், இப்போது வலைப்பதிவுகள் அடுத்த கட்டத்தை நோக்கி மீடியாவில் பயணிக்கத் தொடங்கி இருக்கிறது.
தமிழில் ஒரு பிரபலமான சானலில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ஒன்றில் ஒரு வலைப்பதிவர் பாத்திரத்தை உருவாக்கப் போகிறார்கள். அந்த ப்ளாகர் கேரட்டர் குறைந்தது பத்து வாரங்களுக்கு மேல் அத்தொடரில் வரப்போகிறது. அதற்கான பகுதியை அனேகமாக நம் வலைப்பதிவர் ஒருவர் தான் எழுதுவார் என்று நினைக்கிறேன். அவர் யார்.. அந்த பாத்திரத்தின் தன்மை குறித்தும், அது எந்த சானல் என்பது குறித்தும் கேள்வி கேட்கக்கூடாது. இப்போது தான் பேச்சு வார்த்தையில் போய்க்கொண்டிருக்கும் விசயம் என்பதால்.. எல்லாம் நல்லபடியாக முடிந்து, வேலைகள் தொடங்கி, சூட்டிங் போய்.. அத்தொடரில் அந்த பாத்திரம் நடித்த காட்சிகள் ஒளிபரப்பாகும் நாளில் நானே விசயத்தை போட்டு உடைக்கிறேன். அது வரை பொறுமை ப்ளீஸ்!!
-oOo-
சென்னையை தூய்மையாக்கும் வேலையில் சென்னை மாநகராட்சி தீவிரமாக இறங்கி உள்ளது. சாலையில் சிறுநீர் கழித்தல், கும்பை போடுதல், எச்சில் துப்புதல் போன்ற செய்கைகளுக்கு இனி அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத்தமறுப்பவர் அசுத்தப்படுத்திய இடத்தை அவரே.. உடனடியாக அதிகாரிகள் முன் சுத்தம் செய்யவேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது சென்னை மாநகராட்சி. ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வரப்போகும் இச்சட்டத்திற்கு மே31ம் தேதி சென்னையில் இருக்கும் 155 வார்டுகளிலும் பேரணி நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தப் போகிறதாம் மாநகராட்சி.
எல்லாம் சரி சாமீ… கேட்க சந்தோசமா இருக்கு. ஆனா.. நான்கு முனை, மூன்று முனை, இரு முனை சந்திப்புகள் நிறைந்த சென்னையில் எத்தனை இடங்களில் சிறுநீர்கழிக்க இடம் கட்டப்பட்டுள்ளது? சில இடங்களில் கட்டப்பட்டிருக்கும் நாற்றமடிக்கும் இலவச சிறுநீர் கழிப்பிடங்கள் கூட ஆண்களுக்குத்தான் உள்ளது. பெண்களுக்கு? கட்டணக்கழிப்பிடம் கூட சரியா இல்லை. கோட்டையில் தொடங்கும் சாலை (அண்ணாசாலை!) சைதாப்பேட்டை வரை(அதற்கு மேலும் கூட) நீண்டு கிடக்கிறது, நான் குறிப்பிட்டா வழியில் எங்கும் கட்டண கழிப்பறை வசதி இருப்பது போல நினைவு இல்லை. அதற்கான ஏற்பாடுகளை செய்யாத பட்சத்தில் சாலையோரம் நிறுத்தி இருக்கும் வாகன மறைவைத் தேடி ஏன் ஓடப்போகிறோம். அது போலவே குப்பைத் தோட்டிகள் நிறைந்து வழிகின்ற அவலமும் எங்கும் காணக்கிடக்கிறது.
சரியான வசதிகளை செய்து கொடுக்காமல் தீட்டப்படும் திட்டமும், சட்டமும் ஊழலுக்கு வழிவகுக்கும் என்பதை இவர்கள் உணர்ந்துகொண்டால் நல்லது.
-oOo-
இன்று முடி வெட்டப் போய் இருந்தேன். கடையில் முடி திருத்துபவர் ஒருவர் தான் இருந்தார். அவர் இளம் வயதுக்காரராக இருந்தார். எப்படியும் இருபத்தி ஐந்து வயது தான் இருக்கும். எனக்கு முன்பாக இருவர் காத்திருந்தார்கள். எப்படியும் லேட் ஆகும் என்று தோன்றியது. என் வருகையை அவருக்கு உணர்த்திவிட்டு, அருகில் இருந்த தேனீர் கடையில் தேனீருக்கு சொல்லி விட்டு நண்பருக்கு போன் செய்து பேசிக்கொண்டிருந்தேன். தேனீர் குடித்து, சிகரெட்டும் புகைத்து, சலூனை எட்டிப் பார்த்தேன். அடுத்து நீங்க தான் என்பது போல கடைக்காரர் சைகை செய்தார். கடைசி பஞ்சு வரை சிகரெட்டை இழுத்து புகைத்து விட்டு, உள்ளே போய் உட்கார்ந்து கொண்டேன்.
இங்கு அக்குள் முடி அகற்றப்படமாட்டாது என்று முடிதிருத்துவோர் சங்கத்துச் சார்பில் ஸ்டிக்கர் ஒட்டி இருந்தார்கள். எத்தனையோ க்ரீம்கள் வந்த பின்னுமா இங்கு வந்து கையை தூக்கிக்கொண்டு நிற்கிறார்கள் என்ற கேள்வி உள்ளுக்குள் எழுந்தது. அப்படி தூக்காமலா இப்படி எழுதி போட்டிருப்பார்கள் என்ற எண்ணமும் உடனே தோன்றியது.
என் முறை வந்ததும் நாற்காலியில் அமர்ந்து கொண்டேன். நான் எல்லா இடங்களிலும் வேலைப் பார்ப்பவரின் பேரை கேட்பது போல அங்கேயும் அந்த இளைஞன் பேரை கேட்டேன். அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியாகி இருக்க வேண்டும். சிரித்த முகத்துடன் தன் பெயரைச் சொன்னார். அப்புறம் என்னைப் பற்றி கேட்டார் சுருக்கமாக சொன்னேன். நிதானமாக வேலை செய்தார். வேலையில் அவரின் கவனம் என்னைக் கவர்ந்தது. இடையிடையே பேசிக்கொண்டோம். எல்லாம் முடிந்ததும் அவர் கேட்ட தொகையை விட கூடுதலாக கொஞ்சம் கொடுத்து வைத்துக்கொள்ளுங்கள் என்று கொடுத்தேன். நன்றி சொன்னார். கூடவே இன்னொன்றையும் சொன்னார். எனக்கு மனம் கணத்து வெளியில் வந்தேன்.
‘நானும் நாலுவருடமா இதே வேலையைச் செய்யுறேன் சார்.. யாருமே என்கிட்ட பேரு கேட்டதில்ல. என்னமோ தெரியலை சார்.. சந்தோசமா இருந்துச்சு’ என்றார். சக மனிதனின் பேர் கேட்பதில், என்ன வந்து விடப்போகிறது. அது எதிராளிக்கு மகிழ்வளிக்கும் செயலாக இருக்கும் நிலையில் போகின்ற எல்லா இடங்களிலும் பேர் கேட்பதோடு ஒரு புன்னகையையும் உதிர்த்துவிட்டு வருவதில் நமக்கு என்ன குறைந்துவிடப் போகிறது.
-oOo-
‘ஸ்ரீசாந்தை ஏன் ஹர்பஜன்சிங் அடித்தார் தெரியுமா?’
‘தெரியாது’
‘டேய் மச்சான்.. சிடி வாங்கி வச்சிருக்கேன். மேட்ச் முடிந்ததும் குருவி படம் பார்க்கலாம் வா..’ன்னு ஸ்ரீசாந்த் கூப்பிட்டாராம்.
– வழக்கம் போல குருவி படம் மீது கொலைவெறியோடு அலையும் நண்பர் விஸ்வா அனுப்பிய குறுச்செய்தி தான் இது.
-oOo-
வரும் ஜூன் 1ம் தேதி யாழ் நூலகம் எரிக்கப்பட்டு இருபத்தியெழாவது ஆண்டு நிறைவடைகிறது(ஜூன்1.1981). அதே நினைவோடு2008. ஜூன் 1ம் தேதி சென்னையில் இருக்கும் ரஷ்யகலாச்சார மையத்தில் மாலை 5.30 மணிக்கு யாழ் நூலகம் குறித்த ஆவண/விவரணைப் படம் திரையிடல் இருக்கிறது. ஐம்பது நிமிடப் படம் என்பதால் சரியான நேரத்திற்கு வந்துவிடவும். திரையிடலுக்குப் பின் கலந்துரையாடல் இருக்குமாம். படத்தை எடுத்திருப்பது சக வலைப்பதிவர் தம்பி, சோமிதரன்.
அப்ப மறக்காம மாலை 5.30மணிக்கு, ரஷ்யன் கலாச்சார மையத்தில் சந்திக்கலாம். நீங்களும் வாங்க! உங்கள் நண்பர்களுக்கும் தகவல் கொடுத்து வரச்சொல்லுங்க!!
-oOo-
15 Responses to விடுபட்டவை 29.மே.2008