நீங்க அனுப்புங்க, நாங்க பார்த்துக்கிறோம்! (தினமலர்-வாரமலர் செய்தி)

மனவளர்ச்சி குன்றியோர், டவுன் சின்ட்ரோம், ஆட்டிசம் மற்றும் கற்றல் குறைபாடுடைய குழந்தைகள் எண்ணிக்கை, இப்போது அதிகப் படியாகி வருவது வருத்தத்திற்குரிய செய்தி என்றால், அவர்களுக்கான பயிற்சி பள்ளிகள் குறைவாக இருப்பது, மேலும் வேதனையான விஷயம்.
இந்த வகையான குழந்தைகளுக்கு, மருந்து மாத்திரையுடன், அன்பும், அரவணைப்புமே முக்கிய தேவை. இப்பிரச்னைகளுடன், பிறக்கும் குழந்தைக்கு தாயாக இருப்பவர், கருவில் மட்டுமின்றி, வாழ்க்கை முழுவதும் இந்த குழந்தையை சுமக்க வேண்டியவராகி விடு கிறார்.
பதினைந்து வயது உடல்வாகுடன், ஐந்து வயது பையனின் குணாதி சயத்துடன் காணப்பெறும் குழந்தையை, பார்த்துக் கொள்வதும், கவனித்துக் கொள்வதும், திறனை வளர்ப்பதும், பெற்ற தாயால் மட்டும் நிச்சயம் முடிகிற காரியமில்லை. தாயாரையே கடிப்பது, காயப்படுத்துவது என்ற நிலை, சிலருக்கு வரும் போது, இன்னும் சிரமம்.


“இதற்கு தீர்வே இல்லையா?’ என்றால், “இருக்கிறது’ என்கிறார் சென்னை, ஒய்.எம்.சி.ஏ., கல்லூரி சிறப்பு பள்ளி தலைமை ஆசிரியர் என்.ரவிச்சந்திரன். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., விளையாட்டு பயிற்சி கல்லூரி வளாகத் தில், பசுமை சூழ்ந்த பரந்த வெளியில் அமைந்துள்ளது இந்த சிறப்பு பள்ளி.
பள்ளியில் பெரிதும் சிறிதுமான, ஆண், பெண் குழந்தைகள் 20 பேர் உள்ளனர். இவர்களுக்கு படிப்பை விட, உடல் மற்றும் மூளைத்திறனை வளர்ப்பதே முக்கியம் என்பதால், அதற்கேற்ப இங்கே பல்வேறு பயிற்சி கள், தகுதி வாய்ந்த ஆண், பெண் ஆசிரியர்களால் வழங்கப்படுகிறது. இங்கு குழந்தைகள் சேர்க்கப் பட்ட உடனேயே, அவர்களது நுண்ணறிவுத்திறன் சோதிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் அவர் களுக்கு யோகா, ஜிம்னாஸ்டிக், நீச்சல் போன்ற உடல்திறன் கல்வி வழங்கப்படுகிறது.

கற்றல் திறனுக்கு ஏற்ப, குழந்தைகள் பிரிக்கப்பட்டு, கல்வியும் சொல்லித் தரப்படுகிறது. இங்கு வழங்கப்படும் பயிற்சியின் காரணமாக, பெற்றோராலும், சமூகத்தாலும் சுமையாக கருதப் பட்ட குழந்தைகள், ஒரு கட்டத்தில் மெழுகுதிரி, பேப்பர் பை தயாரித்தல் போன்ற பயிற்சிகளை கச்சிதமாக பெற்று, தனக்கும், வீட்டிற்கும், நாட்டிற்கும், தாங்கள் உபயோகமானவர்களே என்றும் நிரூபித்து வருகின்றனர்.

எந்த ஒரு குழந்தையும், குழுவாக இயங்கும் போதுதான் பரிணமிக்கும்; தம் திறனை அதிகப்படுத்தி, பாராட்டைப் பெற விரும்பும். அதிலும், இது போன்ற பாதிப்புள்ள குழந்தைகளுக்கு, குழுவாக இயங்குவதுதான் நல்ல பலன் தரும். “எங்கள் பள்ளி வளாகத் திலேயே, “நார்மலாக’ உள்ள குழந்தைகள் படிக்கும் பள்ளியும் இயங்குகிறது. இந்த சிறப்பு குழந்தைகளை, அந்த குழந்தை களுடன், அவர்களது பொறுப்பில் சில வகுப்புகள் படிக்க ஏற்பாடு செய்கிறோம். இது, இரு பாலாருக்குமே பெரிதும் உதவுகிறது.

“நார்மலாக உள்ள குழந்தை கள், இவர்கள் மீது பாசம் மிகக்கொண்டு கையை பிடித்து விளையாடுவது, உணவு சாப்பிடுவது என்று பாசத்துடன் நடந்து கொள்கின்றனர். இதன் மூலம், நார்மலாக உள்ள குழந்தை களின், அன்பின் மகிமையை புரிந்து மகிழ்கின்றனர், இந்த சிறப்பு குழந்தைகள். இந்த மகிழ்ச்சி பல நல்ல பலன்களை தருகிறது…’ என்கிறார் ரவிச்சந்திரன்.

சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளி, கோடை விடுமுறைக்கு பின், ஜுன் முதல் வாரம் முதல் செயல்படத் துவங்கும். இப்போது விண்ணப்ப படிவம் வழங்கப் பட்டு வருகிறது. பள்ளியில் ஹாஸ்டல் வசதி கிடையாது. காலையில் கொண்டுவந்து விட்டு விட்டு, மாலையில் அழைத்துச் சென்றுவிட வேண்டும்.

அதற்கு தயாராக உள்ள பெற்றோர், நல்ல நோக்கத்துடன், ஆரோக்கியமான சிந்தனையுடன், செயல்படும் ஒய்.எம்.சி.ஏ., சிறப்பு பள்ளியில், குழந்தைகளை சேர்த்து விடலாம். மேலும், விவரம் அறிய, தலைமை ஆசிரியருடன் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் மற்றும் தொலைபேசி எண்: 9840158373, 044-24353892.
***
(எல். முருகராஜ் எழுதி 21.04.13 தினமலர் வாரமலரில் வந்த செய்தி கட்டுரை, ஆவணப்படுத்தலுக்காக இங்கே சேமிக்கப் படுகிறது)


Comments

One response to “நீங்க அனுப்புங்க, நாங்க பார்த்துக்கிறோம்! (தினமலர்-வாரமலர் செய்தி)”

  1. நல்லதொரு தகவலுக்கு நன்றி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *