எப்போதும் பிஸியாக இருக்கும் பெரிய தொழிலதிபர் ராமு, மிகவும் பிரபலமான அந்த மருத்துவரைப் பார்க்கக் காத்திருந்தார். இவரது முறை வந்தது. கல்லூரியில் சேர்த்துள்ள தனது மகன் எப்போதும் விளையாட்டில் கவனம் செலுத்துவதாகவும், தனக்குப் பிறகு தனது தொழிலை அவன் கவனித்துக்கொள்வான் என்ற நம்பிக்கை அற்றுப்போய் விட்டதாகவும், அவனாலேயே தன் உடல் நிலையும் மன நிலையும் தனக்கு மோசமடைந்து வருவதாகவும் பெரிய புகார் பட்டியலை வாசித்தார் ராமு.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட மருத்துவர், மகனை அழைத்துக்கொண்டு அடுத்த வாரம் வரும்படி சொல்லி அனுப்பிவிட்டார். அதேபோல அடுத்தவாரம் மகனுடன் வந்தார் ராமு. அந்தப் பையனிடம் பேசினார் மருத்துவர். அவனிடம் ராமு சொன்ன அளவுக்கு கோளாறுகள் இருப்பதாகத் தெரியவில்லை. அதை ராமுவிடம் அவர் சொல்லவில்லை. மாறாக, பதினைந்து நாட்கள் கழித்து மீண்டும் வரச் சொன்னார்.

பதினைந்து நாட்கள் கழித்து ராமுவால் செல்ல முடியவில்லை. ஒரு மாதம் கழித்து மருத்துவரைக் காணவந்த ராமுவின் முகத்தில் ஒரு தெளிவு இருந்தது. தன்னுடைய மகன் இப்போது ஒழுங்காகப் படிப்பதாகவும், விளையாட்டுக்கள் குறைந்துவிட்டதாகவும், இனி அவன் எதிர்காலம் குறித்து தனக்குப் பெரியதாக கவலைகள் ஏதும் இல்லையென்றும் சொன்னார்.  அதனால் தன்னுடைய தொழிலை சிறப்பாக கவனிக்க முடிகிறது என்றார் மகிழ்ச்சி பொங்க! மருத்துவர் அமைதியாகச் சிரித்தார். ‘என்ன மாதிரியான அறிவுரையை எனது மகனுக்குக் கொடுத்தீர்கள்?’ என்று ராமு கேட்டபோது, தான் ஒரு அறிவுரையும் அவனுக்கு வழங்கவில்லை என்றார் மருத்துவர். “புதிதாக கல்லூரிக்குச் செல்வதால் புதிய இடம், புதிய மனிதர்கள் என்று ஒருவித தயக்கம் இருப்பது சகஜம். அதைப் பார்த்து நீங்கள் தேவையில்லாமல் டென்ஷன் ஆகி இருக்கிறீர்கள். பழகியதும், பையனும் வழக்கமான வாழ்க்கை முறைக்குள் வந்துவிட்டான். அவ்வளவுதான்!” என்றார் மருத்துவர்.

நாம் எப்போதுமே இப்படித்தான் இருக்கிறோம். இதைத்தான் புத்தர் வேறுவிதமாக தம் சீடர்களுக்குச் சொன்னார்.

புத்தர் ஒரு முறை தன் சீடர்களுடன் பயணம் சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில், ஒரு சிறு நீர்நிலையைக் கண்டார். ஒரு சீடனிடம் அங்கிருந்து குடிக்க நீர் கொண்டுவருமாறு சொன்னார்.

அவன் செல்லும்முன்பே ஒரு மாட்டுவண்டி அந்த நீர் வழியாகச் சென்றது. சீடன் சென்று பார்த்தபோது நீர் கலங்கியிருந்தது. இதை எப்படி புத்தருக்குக் கொடுப்பது என்று அவன் திரும்பி வந்து, புத்தரிடம் விவரம் சொன்னான். சிறிது நேரம் கழித்து புத்தர் அந்தச் சீடனிடம் மீண்டும் சென்றுவரப் பணித்தார். அவன் சென்று பார்த்தான். நீர் சிறிது தெளிந்திருந்தாலும், இன்னும் கலங்கலாகவே இருந்தது. அவன் திரும்பி வந்து புத்தரிடம் சொன்னான். சிறிது நேரம் சென்றபின், மீண்டும் அவனைப் போய்வரச் சொன்னார்.

இம்முறை சென்று பார்த்தபோது நீர் தெளிவடைந்திருந்தது. எடுத்துவந்து புத்தரிடம் கொடுத்தான்.

புத்தர் அந்தச் சீடனைப் பார்த்துக் கேட்டார்: “அந்த நீர் தெளிவதற்காக நீ என்ன செய்தாய்? அதை அப்படியே விட்டுவிட்டாய். நேரம் சென்றதும், நீர் தானே தெளிந்து விட்டது. உன் மனமும் இது போன்றதுதான். குழப்பம் ஏற்படும்போது அதை அப்படியே விடு. சிறிது நேரம் சென்றதும், அது தானாகவே தெளியும். நீ அதற்காக எந்தப் பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை. அது, தானே நடக்கும்.”

ஆம்!

‘மன அமைதியைப் பெற, கடினமாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. அமைதியாக, நிதானமாக இருந்தாலே போதும்’ என்கிறார் புத்தர். குழந்தை வளர்ப்பில் இந்தத் தத்துவம் எந்தெந்த இடங்களில் பயன்படும் என்று சற்று யோசிக்கலாம் பெற்றோரே!

——

நன்றி: செல்லமே – ஜனவரி 2015