படுக்கையை நனைத்தல் குற்றமல்ல!

இன்று அனேக வீடுகளில் பெற்றோர் சந்திக்கும் சங்கடங்களில் ஒன்று, படுக்கையில் குழந்தை சிறுநீர் கழித்தல். இதைச் செய்யும் குழந்தையிடம் பல பெற்றோர் நடந்துகொள்ளும் விதம், கொஞ்சம் முரட்டுத்தனமாக இருக்கிறது. ஆனால் படுக்கையில் சிறுநீர் கழிப்பதென்பது, குழந்தைப் பருவத்தில் பல குழந்தைகள் செய்யும் காரியம்தான். இது இயல்பான ஒன்றுதான்!

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், உறங்கச் செல்லும்போதே, இன்று படுக்கையை நனைத்துவிட்டுத்தான் மறு வேலை என்று எந்தக் குழந்தையும் முடிவு கட்டிக்கொண்டு வருவதில்லை. படுக்கையை ஈரமாக்கும் குழந்தைக்கு, ஒருவித குற்ற உணர்ச்சியை நாம் ஏற்படுத்திவிடுகிறோம். இது அவசியமற்றது என்கிறது மருத்துவ உலகம். இயல்பான ஒரு காரியத்திற்கு, ஏன் குழந்தைகள் குற்ற உணர்ச்சிக்கு ஆட்பட வேண்டும்? சிறுநீர் பை நிரம்பியதை அறியாமல் உறங்குவதால் இது நிகழ்கிறது என்ற உண்மையை, முதலில் பெற்றோராகிய நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

“குழந்தை தானாக சிறுநீர் கழித்தலை என்னுரிஸ் (enuresis) என்று சொல்லுவோம். இதிலும்கூட பகலில் தானாக சிறுநீர் கழித்தல், இரவில் தானாக சிறுநீர் கழித்தல் என்று இரண்டு வகைகள் உள்ளன. இங்கு நாம் பேசுவது, இரவில் தானாக சிறுநீர் கழிப்பது பற்றித்தான். பொதுவாக, ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை, நாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

“எப்போதுமே படுக்கையில் சிறுநீர் கழிப்பது, ஆறுமாதம் சரியாக இருந்துவிட்டு திடீரென படுக்கையில் சிறுநீர் கழிப்பது என்று இரண்டு பிரிவுகள் உள்ளதாக மருத்துவ உலகம் சொல்கிறது. இவர்களின் சிறுநீர் பை சரியாக இருக்கிறதா? சிறுநீர் பாதையில் ஏதேனும் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதையெல்லாம் மருத்துவ ரீதியாக ஆராய வேண்டியிருக்கும். அதேபோல உளவியல் ரீதியாகவும் இதனை அணுக வேண்டியிருக்கும். எடுத்துக்காட்டாக, பெற்றோருக்கிடையே ஏற்படும் சண்டைகள், பள்ளியில் மற்ற குழந்தைகள் அல்லது ஆசிரியர்கள் மீதான பயம், வெளியில் சொல்லமுடியாத அல்லது சொல்லத் தெரியாத பாலியல் தொந்தரவுகள் ஆகியவற்றையும் ஆய்வுசெய்ய வேண்டியிருக்கும். மருத்துவ உதவி, உளவியல் உதவி – இரண்டில் எது தேவையோ அதனை அக்குழந்தைகளுக்குக் கொடுப்போம். ஒருவித ஹார்மோன் குறைபாட்டினால் இது நிகழ்வதாக, இன்றைக்கு மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது.

“குழந்தை படுக்கையில் சிறுநீர் போவதை கொஞ்சம் கவனமாகக் கையாள்வதற்கு, பெற்றோர் பழகிக்கொள்ள வேண்டும். படுக்கை ஈரமானால், குழந்தைகளை எழுப்பி விடுவதற்கான அலாரம் எல்லாம் இன்றைக்குச் சந்தையில் வந்துவிட்டன. பெற்றோர் இவ்விஷயத்தில் தங்கள் குழந்தைகளைத் தண்டிக்காமல், மனதளவில் காயப்படுத்தாமலும் இருக்கவேண்டும். சரிப்படுத்தக்கூடிய இந்த விஷயத்துக்காக, தேவையில்லாமல் அச்சப்பட வேண்டாம். ஏதேனும் தயக்கமோ குழப்பமோ இருந்தால், குழந்தை நல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்வது சிறந்தது” என்கிறார், குழந்தைகள் நல மருத்துவர் லதா சந்திரசேகர்.

மருத்துவரை எப்போது பார்க்கலாம்?

 

ஒரு நாள் படுக்கையை ஈரப்படுத்திய உடனேயே குழந்தை நல மருத்துவரைத் தேடி ஓடினால், நிச்சயம் அவர் சிரிப்பார். தொடர்ந்து உங்கள் குழந்தையை உற்று நோக்குங்கள். படுக்கையில் சிறுநீர் கழித்தல் பகல் வேளையில் நடந்தால் அல்லது உங்கள் குழந்தை 6 வயதோ அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராகவோ இருந்தால், மருத்துவரைச் சந்திக்க அதுவே தக்க சமயம். அதுபோல, தொடர்ந்து 6 மாதங்கள் படுக்கையில் சிறுநீர் கழிக்காமல் இருந்துவிட்டு பின்னர் திடீரென படுக்கையில் சிறுநீர் கழித்தாலும் மருத்துவரைச் சந்திக்கலாம்.

படுக்கையில் சிறுநீர் கழிக்கும் உங்கள் குழந்தைக்கு  எப்படி உதவி செய்யலாம்?

  1. குழந்தைகளை, குறை சொல்லவோ திட்டவோ செய்யாதீர்கள்! அவமானப்படுத்துதலும் தண்டனையும் ஒருபோதும் சிறுநீர் பை கட்டுப்பாட்டை வளர்க்க உதவுவதில்லை.
  2. படுக்கையில் சிறுநீர் கழிப்பது, சிறுவயது குழந்தைகளுக்கு இயல்பானதே!
  3. தூங்கச் செல்லும்முன் சிறுநீர் கழிக்கச் செய்யுங்கள்.
  4. இது ஒரு சாதாரண பிரச்னை என்று கூறி, குழந்தையின் தாழ்வு மனப்பான்மையை அகற்றுங்கள்.
  5. இரவில் கழிவறைக்குப் போகும் வழியில், காலில் இடரும்படியான பொருட்கள் இல்லாமல் இருக்க வேண்டும். கழிவறைக்குச் செல்லும் பாதையில், குழந்தைகள் பார்ப்பதற்கு வசதியாக இரவு விளக்கு எரியட்டும்.
  6. படுக்கையில் படுத்தவுடன் உறங்காமல் நீண்டநேரம் விழிந்திருந்துவிட்டு உறங்கும் பழக்கம் இருந்தால், உறக்கம் தொடும் முன் மீண்டும் ஒருமுறை கழிவறைக்குப் போகச்சொல்லி வலியுறுத்தலாம்.
  7. நீர் உறிஞ்சும் தன்மையுள்ள படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்தலாம். படுக்கை ஈரமானால் அறிவிக்கும் அலாரத்தையும் பயன்படுத்தலாம்.
  8. காலையில் படுக்கையைச் சுத்தம் செய்யும்போது, குழந்தையிடம் கடுஞ்சொற்கள் சொல்லாமல், தண்டனை கொடுக்காமல், சுத்தப்படுத்தும் பணியில் குழந்தையையும் சேர்த்துக் கொள்ளலாம்.
  9. ஒத்த வயதுடைய குழந்தைகளாக இருந்தாலும் ஒவ்வொரு குழந்தையும், வெவ்வேறு காலகட்டத்தில் சிறுநீர்ப்பை கட்டுப்படுத்துதலைப் பழகிக்கொள்கிறார்கள்.

நன்றி செல்லமே மாத இதழ் பிப்ரவரி 2015

நன்றி:- கட்டுரையில் இடம்பெற்ற படங்கள் : http:// pixabay . com தளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.