கண் விழித்தபோது, படுக்கையில் இருந்தாள் பவித்ரா. கை, கால் எல்லாம் நடுங்கிக்கொண்டிருந்தது. எட்டு வயதான பவித்ரா மயங்கி விழுந்துவிட்டாள். அந்தச் சம்பவத்தை நினைத்துப் பார்த்தாள். இத்தனை பேர் முன்னிலையில் இப்படி ஆகிவிட்டதே என்பதைவிட, அம்மா அப்பா என்ன சொல்வார்களோ என்று நினைக்கையிலேயே பயம் அதிகரித்தது. அதே சமயம், அம்மாவும் அப்பாவும் டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். கண்டிப்பாக பவித்ராவுக்கு நல்ல ஓய்வு தேவை என்று மருத்துவர் சொல்லிக்கொண்டிருந்தார். “இவ்வளவு சின்னக் குழந்தைக்கு மன அழுத்தம் வந்திருக்கிறது. அதனால்தான் மயங்கி இருக்கிறாள். பயமாகக்கூட இருக்கலாம்” என்றார் மருத்துவர்.
சிறு வயதிலேயே தடகள விளையாட்டில் ஆர்வமிக்கவள் பவித்ரா. ஓட்டத்திற்கும் நீளம் தாண்டுதலுக்கும் நெடுநெடுவென்றிருக்கும் அவளுடைய உயரமும் உறுதுணையாக இருந்தது. ஆனால் அவளை, நடன வகுப்பில் சேர்த்துவிட்டனர் பெற்றோர். பவிக்கு நாட்டியம் பிடிக்கவில்லை. ஆனால், எதிர்த்துப்பேச முடியாது. பேசினால், அடி விழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அமைதியாக, வகுப்புக்குச் சென்றுவரத் தொடங்கினாள். தொடர்ந்து பல மாத வகுப்புகளுக்குப்பின் இன்று சலங்கை பூசை. பெரிய அரங்கை வாடகைக்கு எடுத்திருந்தார் நடன ஆசிரியை. முதலில் எல்லாக் குழந்தைகளும் குழுக் குழுவாக ஆடினர். உயரமானவள் என்பதால், பின்னால் நின்று சமாளித்துவிட்டாள் பவி. அடுத்து, இருவராக வந்து ஆடவேண்டும். உள்ளுக்குள் உதறலுடன் மேடையேறினாள். எதிரே கேமராவுடன் அம்மாவும் அப்பாவும் நிற்பதைப் பார்த்ததும், கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. ஜதி பாட்டு, கிணற்றுக்குள் இருந்து கேட்பதுபோல தேய்ந்து போனது. கண்கள் செருக.. அப்படியே மயங்கிச் சரிந்தாள் பவித்ரா. அப்புறம் என்ன நடந்தது என்பதைத்தான் நீங்கள் முதல் பாராவில் படித்தீர்கள்.
இது, ஏதோ ஒரு பவித்ராவின் கதை என்று நினைக்க வேண்டாம். பல பிள்ளைகளின் நிலையும் இப்படித்தான் இருக்கிறது. முன்பெல்லாம் படிப்பு விஷயத்தில்தான் பெற்றோர் கடுமையாக நடந்துகொண்டிருந்தனர். ஆனால் சமீப நாட்களில், படிப்பு சாராத பிற விஷயங்களிலும் தாங்கள் நினைப்பதைத்தான் பிள்ளைகள் செய்யவேண்டும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். இது, நிச்சயம் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கும் என்பதைப் பலரும் அறிவதில்லை.
பி.காம் படித்துவிட்டு மருந்து விற்பனைப் பிரதிநிதியாக பணியாற்றுபவரையும், மருத்துவம் படித்துவிட்டு ஊடகத்துறையில் இருப்பவர்கள் பலரையும் இன்று நாம் பார்க்க முடியும். அதன் பின்னணி என்னவென்று ஆராய்ந்தால், பெற்றோரின் விருப்பத்தின் பெயரிலேயே அவர்களும் படித்திருப்பது தெரியவரும். ஒரு கட்டத்துக்குப் பின், தனக்குப் பிடித்தமான பணிக்குத் திரும்பி இருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.
இப்படிப்பட்ட நெருக்கடிகளுக்கு ஆட்படுவது, பதின்ம வயதின் இறுதியில் இருக்கும் பிள்ளைகள்தாம் என்றில்லை. சிறு வயதிலேயே பல குழந்தைகள் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். விளைவு, படிப்பு என்பதை கடுமையான தண்டனைபோல அணுகுகிறார்கள். அதனாலேயே, கற்றுக்கொள்ளக்கூடிய எல்லாவற்றையுமே வெறுப்பவர்களாக மாறிப் போகிறார்கள்.
பாடமோ கலையோ – எதுவானாலும், பிள்ளைகளிடம் பெற்றோர் முதலில் பேசிப் பார்க்கவேண்டும். அதன்பின் அவர்களின் விருப்பமறிந்து முடிவெடுத்தல் என்பது நன்றாக இருக்கும். இது பிள்ளைகளின் பொருளாதார வாழ்வுக்கு மட்டுமல்ல; ஆரோக்கியமான வாழ்வுக்கும் வழி வகுக்கும்.
உளவியலாளர்களின் ஆய்வு
அமெரிக்காவில் உள்ள ஒஹையோ பல்கலைக்கழகத்தின் உளவியல் பிரிவு ஓர் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் 8 முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோர் குழு ஒன்று தேர்வு செய்யப்பட்டது. சில அடுக்குகளாக ஆய்வுகள் நடத்தப்பட்டன. முதலில் பெற்றோர் எந்த அளவுக்குத் தங்கள் குழந்தைகளை தங்களின் நீட்சியாகவே காண்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டது.
பெற்றோர்களை இரு குழுக்களாகப் பிரித்தனர். ஒரு குழுவிடம், அவர்களது நிறைவேறாத ஆசைகளை எழுதுமாறு கேட்டார்கள். பின் மற்றொரு குழுவினரிடம், அவர்களுக்குத் தெரிந்த யாரேனும் ஒருவரது நிறைவேறாத ஆசைகளை எழுதச் சொன்னார்கள். பிறகு அனைவரையும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றிய ஆசைகளை எழுதச் சொன்னார்கள்.
முந்தைய சோதனையில் குழந்தைகளை தங்களின் நீட்சியாகக் காண்பதாகச் சொன்ன பெற்றோர்கள் அனைவருமே, தங்களது இழந்த கனவுகளையே குழந்தைகளின் எதிர்காலத் திட்டமாகவும் சொன்னார்கள். எனவே, தன்னுடைய நீட்சியாகவே தன் குழந்தையைக் காணும் பெற்றோர், அவர்களின் நிறைவேறாத கனவுகளை குழந்தைகளின் மூலம் வாழ்ந்து பார்க்க நினைக்கின்றனர் என்பது ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டது.
குழந்தைகளுக்கான வேலைகளை பெற்றோர் ஏன் முடிவு செய்கிறார்கள்?
- குழந்தைகளை தங்கள் தொடர்ச்சியாகப் பார்ப்பதால், தங்கள் நிறைவேறாத ஆசைகளை குழந்தைகளின் மூலம் நிறைவேற்றிக்கொள்ள நினைக்கின்றனர்.
- படிக்கும் பிள்ளைகளைவிட, அவர்களுக்கு எது நல்லது, சிறந்த எதிர்காலம் கொடுக்கக்கூடியது என்று பெற்றோராகிய தங்களுக்கு அதிகமாகத் தெரியும் என்று நம்புகிறார்கள்.
- பள்ளிப்பாடம் தவிர்த்து பிற கலைகளிலும்கூட, தாங்கள் விரும்பும் கலையை பிள்ளைகள் கற்றால் அது அவர்களுக்கு நல்லது என்று நினைக்கிறார்கள்.
- தாங்கள் சொல்லும் துறை வளமானது, முன்னேறும் வாய்ப்புகள் அதிகம் என்று நம்புகின்றனர்.
- அக்கம் பக்கத்தவர், நண்பர்கள் போன்ற தெரிந்தவர்களின் பிள்ளைகள் இந்தப் படிப்பை / வேலையை மேற்கொள்வதால், நம் குழந்தையும் அதையே செய்தால் நல்லது என்று நம்புவது.
- குடும்பத் தொழில் என்று எண்ணுவது. குடும்பத்தில் எல்லோரும் வழிவழியாக ஒரு தொழில் சார்ந்தவர்கள் எனும்போது, தங்கள் வாரிசும் அதே தொழிலில் ஈடுபட வேண்டும் என்று எதிர்பார்ப்பது. இதில், குடும்ப முதலீடுகளைத் தொடர்வதும் ஒரு முக்கியக் காரணி.
————-
நன்றி : செல்லமே ஏப்ரல் 2015 மாத இதழ்
நன்றி:- கட்டுரையில் இடம்பெற்ற படம் : http:// pixabay . com தளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.
உண்மைதான். ஆனாலும் குழந்தைகள் சில சமயம் தவறான முடிவுகள் எடுத்துவிடுவதும் உண்டு, அப்போது பெற்றோர்கள் அதற்கான மாற்று வழிகளை சொல்வதில் தவறில்லை. எதுவாக இருந்தாலும் குழந்தைகள் விருப்பத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். என் இரண்டு மகள்களையும் அவர்கள் விருப்பப்படிதான் படிக்கவைக்கிறேன்.