கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு

சில நாட்களுக்கு முன் என் தோழி ஒருத்தியைப் பார்க்க அவர் இல்லம் போய் இருந்தோம். ‘உன் பையனுக்கு ஸ்கூல் லீவு விட்டுட்டாங்களா? ஊருக்கு எங்கேயும் போகலையா?’ என்று கேட்டார்.
”இல்லை. வருட இடையில்தான் சொந்த ஊருக்கு போய் வந்தோம். இந்த ஆண்டு போகமுடியுமான்னு தெரியலை. அலுவலகத்தில் வேலை கொஞ்சம் அதிகமாக இருக்கு!” என்றேன்.
‘பேசாம எதாவது சம்மர் கேம்ப்ல போட்டு விட்டுங்க’ என்றார்.
அப்போதுதான் அவரின் மகன் நினைவுக்கு வந்தான். ”எங்கே உன் பையனைக் காணாம்” என்று கேட்டேன்.
’அவனை பக்கத்து தெருவுல நடக்குற சம்மர் கிளாஸுல போட்டிருக்கேன்’ என்றார் தோழி.
”என்னது சம்மர் கிளாஸா?”
’ஆமாப்பா.. லீவு விட்டாச்சுன்னா.. வீட்டுக்குள்ளேயே கிடக்குறான். சேட்டை அதிகமாகிடுது. பக்கதுலயே சம்மர் கேம்ப் நடக்குது. அதனால.. லீவுல எதாவது கத்துக்கிடட்டுமேன்னு சேர்த்திருக்கேன். சாயங்காலம் ஹிந்தி வகுப்பும் போறான்” என்றார்.
எனக்கு அவரின் பதில் அதிர்ச்சியாக இருந்தது. பள்ளியில் வருடம் முழுவதும் படித்துக்கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு விடுமுறை விடுவதென்பதே, தினமும் பாடப்புத்தகங்களோடு உறவாடும் சிறார் கொஞ்சம் சுதந்திரக் காற்றை அனுபவிக்கட்டும் என்பதற்காகத்தான். இந்த சுதந்திரமும் இடைவெளியும் பிள்ளைகளின் புத்துணர்வுக்கு வழி செய்யும். புதிய கல்வியாண்டில் உற்சாகத்துடன் பள்ளி செல்லத்தயார் ஆவார்கள்.
அதைவிடுத்து, விடுமுறையிலும் இதைப் படி, அதைப்படி என்று அனுப்பவது தவறு. வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை விஷயங்கள் எதுவோ அதைக் கற்றுக்கொள்ள வழி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு வந்தேன்.
இது ஏதோ என் தோழி மட்டும் செய்யும் தவறு என்று நினைத்துவிட வேண்டாம். அநேகப் பெற்றோரும் இதே தவற்றைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். குழந்தைகளின் வண்ணச்சிறகுகளை அப்படியே விடுங்கள். அவற்றிற்கு உங்களுக்குப் பிடித்த வண்ணங்களைப் பூச முனையவேண்டாம்.
திட்டமிடுங்கள்
* தெருவில்/ அடுக்ககத்தில் இருக்கும் குழந்தைகளை ஒருங்கிணையுங்கள்.
* ஒரு குழந்தைக்கு ரூ.100/- செலவு செய்தால் போதும்.
* மற்ற குழந்தைகளின் பெற்றோரையும் இணைத்துக்கொள்ளுங்கள்.
* ஒருநாளைக்கு ஒருவர் வீடு என்று திட்டமிட்டு, ஒவ்வொரு குழந்தை வீட்டிலும் உங்களின் ஒர்க் ஷாப்பை வைத்துக்கொள்ளலாம்.
* பாடல், ஆடல், கதை சொல்லுதல் படம், வரைதல், காய்கறி வெட்டுதல், ஒரிகாமி என ஒவ்வொரு மணி நேரத்தையும் திட்டமிட்டு அட்டவணை தயார் செய்துகொண்டால், பகல் பொழுது முழுவதும் சுகமானதாகப் போகும்.
அப்படியெனில் சம்மர் கேம்ப் அனுப்பவே கூடாது என்கிறீர்களா என்ற கேள்வி உங்களிடமிருந்து வருமாயின், என் பதில் ஆம் என்பதாகவே இருக்கும். அதே சமயம் கோடை விடுமுறை மாதிரி தொடர் விடுமுறை நாட்கள் கிடைக்கும்போது குழந்தைகளின் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை விஷயங்களை கற்றுக்கொடுக்கலாம் என்பது எனது எண்ணம்.
அது என்ன என்று கேள்வி வருகிறதா? பெரிய பட்டியலே இருக்குங்க. நீங்களும் நானும் சின்ன வயதில் கோடைவிடுமுறை மாதிரியான சமயங்களில் எந்த கேம்ப் போனோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன். சுற்றுலா போய் இருப்போம். உறவினர்களின் வீட்டிற்கு சென்று ’டேரா’ போட்டிருப்போம்.
ஒரு கோடை விடுமுறை சமயத்தில்தான் நான் சைக்கிள் ஓட்டக்கற்றுக்கொண்டேன். இரவு வாடகைக்கு சைக்கிள் கிடைக்கும். மாலையில் போய் எடுத்து வரவேண்டும். அக்காவோ, அண்ணனோ அல்லது அப்பாவோ பின்னால் ஓடிவர இரவு நெடுநேரம் கண்விழித்து சைக்கிள் ஓட்டுவோம். ஒருவாரம் இரவு கொஞ்சம் பழகியபின், பகலில்! இப்போது யாரும் பின்னால் ஓடிவர மாட்டார்கள். சைக்கிளைப் பிடித்து ஏற்றிவிடுவதுடன் சரி. அங்கே நின்றுவிடுவார்கள். நான்கு வீடுவரை சைக்கிள் ஓட்டுவேன். பின்னர் அது ஐந்து வீடானது. எட்டு வீடானது. கடைசியில், தெருவின் கடைசி வீடுவரைக்கும் யார் துணையுமின்றி சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டேன். அப்புறமென்ன.. எப்போது கடைக்கு போகவேண்டும் என்றாலும் சைக்கிள் தான். கிடைக்கும் நாலணா, ஐம்பது சைசாக்களை சேமித்து வைத்துகொண்டு, வாடகைக்கு சைக்கிளுக்கு ரெக்கை முளைக்க விடுவேன்.
சைக்கிள்
சைக்கிள் ஓட்டுவது என்பது சிறுவயதில் கொஞ்சம் தன்னம்பிக்கையை கொடுக்கக்கூடியது. ”மல்ட்டி-டாஸ்கிங்”(multi-tasking) என்ற சொல்லை கேட்டிருப்பீர்கள். அது அநாயாசமாக சைக்கிள் ஓட்டம்போது கிடைத்துவிடும்.
கொஞ்சம் சைக்கிள் எப்படி ஓடுகிறது என்பதை சிந்தித்துப்பாருங்கள். முதலில் பெடல் செய்யவேண்டும். அப்போதுதான் சைக்கிள் முன்னோக்கி நகரும். வெறும் பெடல் செய்தால் போதுமா? நிச்சயமாக இல்லை. பெடல் செய்துகொண்டே, சைக்கிளில் நேராக உட்கார்ந்து, பேலன்ஸும் செய்யவேண்டும். இல்லையெனில் சைக்கிள் ஒரு பக்கம் சாய்ந்துவிடும் அபாயம் இருக்கிறது.
சரி, நேராகவும் உட்கார்ந்து, பெடலும் மிதித்தால் போதுமா? என்றால் அதுவும் இல்லை. நேராக உட்கார்ந்து பெடலும் மிதிக்கும் போதே, பிரேக்கில் ஒரு கையும், சாலையில் கண்ணும் இருக்கவேண்டும், கூடவே பெடல் மிதிப்பதும் மிதமான வேகத்திலும் இருக்கவேண்டும். அப்போதுதான் சைக்கிள் இலகுவாக முன்னோக்கி போகும். எவர் குறுக்கே வரிணும். அவர்களின் மீது மோதாமல் சைக்கிள் நிறுத்தவும் முடியும்.
ஆக, சைக்கிள் ஓட்டுவது என்பதே ”மல்டி-டாஸ்கிங்” வேலைதான். அவசரத்திற்கு எங்காவது சென்று வரவேண்டும் என்றால் மட்டும் சைக்கிள் அல்ல. உடல் ஆரோக்கியத்திற்கும் சைக்கிள் அவசியமானது. சீனா, லண்டன் மாதிரி மேலை நாடுகளில் சைக்கிள் ஓட்டுவதை அரசே ஊக்குவிக்கிறது. சின்னவயதில் மட்டுமல்லாது, குறிப்பிட்ட வயதிற்கு அப்புறமும் சாலையில் சைக்கிள் ஓட்டலாம். தப்பில்லை. அப்படி செய்ய மறுப்பவர்களில் பலர் இன்று வீட்டுக்குள் ஸ்டாண்டு போட்ட சைக்கிளை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
இக்கோடையில் உங்கள் பிள்ளைக்கு, சைக்கிள் அவசியம் கற்றுக்கொள்ள ஊக்குவியுங்கள். நீங்களே சொல்லியும் கொடுக்கலாம்.
அடுத்து, நீச்சல்!
ஏற்பட்டுக்கொண்டிருக்கும் பருவ மாற்றத்தினால் எப்போது எந்த ஊரில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதை சொல்லுவதற்கில்லை.
🙂
எங்குவேண்டுமானாலும் வெள்ள அபாயம் தோன்றலாம். நீச்சல் தெரிந்திருந்தால் நீந்தி தப்பிக்க முடியும் அல்லவா. இதற்காக மட்டுமல்ல.. மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி என எல்லாமும் ஒருசேர நீச்சலில் கிடைக்கும். அதனால் உங்கள் பிள்ளைக்கு நீச்சல் படிக்க ஊக்குவியுங்கள்.
உங்களுக்கும் தெரியாதா… நீங்களும் கோடை வகுப்பில் பிள்ளையுடன் சேர்ந்து நீச்சல் பழகுங்கள். உடலுக்கும், உள்ளத்திற்கும் உற்சாகமளிக்கவல்லது நீச்சல் என்பதை அனுபவப்பூர்வமாக உணரமுடியும்.
கதை சொல்லு!
கதை சொல்லும் பட்டறைகள் நடக்கும் அங்கே அனுப்புங்கள். அல்லது நீங்கள் வசிக்கும் தெருவிலோ, குடியிருப்பிலோ உள்ள குழந்தைகளை வைத்துக்கொண்டு, நீங்களே கூட கதை சொல்லும் பட்டறையை தொடங்கலாம்.
”ரமேஷும், சுரேஷும் நல்ல நண்பர்கள். இருவரும் ஒருநாள் காட்டு வழியாக வந்துகொண்டிருக்காங்க. அப்போது, யாரோ இவர்களின் பெயரைச்சொல்லி கூப்பிடுவது மாதிரி இருந்துச்சு. திரும்பிப் பார்த்தாங்க. யாருமே கண்ணுக்கு தெரியல. சரின்னு மீண்டும் நடக்க ஆரம்பிச்சப்ப, திரும்பவும் கூப்பிடும் சத்தம் கேட்டுச்சு. திரும்பினால், இப்பவும் யாரையும் காணோம். என்னடா இதுன்னு நினைச்சுக்கிட்டே, திரும்பவும் நடக்கலாம்னு நினைக்கிறப்போ.. அங்கே ஒரு சின்ன அணில் நின்னுகிட்டு இருந்துச்சு..”
இப்படி ஏதாவது கற்பனையாக ஒரு சம்பவத்தைக்கூறி, இதன் தொடர்ச்சியை குழந்தைகளைச் சொல்லச்சொல்லி பாருங்க. நீங்கள் வியந்துபோகும் அளவுக்கு அவர்களின் கற்பனையை அள்ளிவிடுவார்கள். சிறுவயதில் விளையாட்டும் கற்பனையும் கைகூடும் போது, மன அழுத்தங்கள் குறைகிறது. இதன் காரணமாக எதிர்காலத்தில் பள்ளிப்பாடங்கள் சுமையாக இல்லாமல் சுகமானதாக மாறுகிறது.
வரையலாம்
கதை சொல்லுதலின் தொடர்ச்சியாக இந்த வரைதலையும் பார்க்கலாம். கற்பனையை அவிழ்த்துவிடச்சொல்லுங்கள். கொம்பு முளைத்த குதிரை, தாடி வளர்த்த தவளை இப்படி ஏதையாவது அவர்களின் இஷ்டப்படி வரையட்டும். உற்சாகப்படுத்த நீங்கள் தயாராக இருக்கவேண்டும். அவ்வளவே!
சுற்றுலா போகலாம்!
ரொம்ப தூரம் இல்லாவிட்டாலும், உங்களுக்கு பக்கத்தில் இருக்கும் இன்னொரு ஊருக்கு ரெண்டுநாள் சுற்றுலா சென்று வாருங்கள். உள்ளூரிலோ, அருகிலோ இருக்கும் இடங்களுக்கு பிக்னிக் சென்று வாருங்கள்.
எதுவுமே இயலவில்லையா, லோக்கல் ட்ரைனில் துவங்கும் இடத்தில் இருந்து, அந்த ரயில் செல்லும் கடைசி நிறுத்தம் வரை சும்மா ஒரு ட்ராவல் செய்யுங்கள். விடுமுறையில் குறைந்தது வாரம் ஒருநாள் லோக்கல் ட்ரைனில் சென்றுவாருங்கள்.
எப்போதுமே குழந்தைகளை பயண அனுபவங்கள் உற்சாகப்படுத்தும். (சமையல் கிடையாது, ஓய்வுதான் என்றால் தாய்மார்கள் அடையும் மகிழ்ச்சியும் அளாதியானது)
பள்ளி திறந்தபின், இடையிடையே இந்த கோடை விடுமுறையின் மகிழ்ச்சியான தருணங்களை நீங்கள் அவர்களுக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருந்தால், அடுத்த தொடர் விடுமுறைநாட்களுக்கு பிள்ளைகள் ஏங்குவார்கள். பள்ளிப்படிப்பை சீக்கிரம் முடித்துவிட்டால் விடுமுறையை ஜாலியாக கொண்டாடலாம் என்று நினைப்பார்கள். நான்கு சுவற்றுக்குள் அடைக்காமல் சுதந்திரமாக அவர்களை விடுங்கள். ஆனாலும் உங்கள் கண்பார்வையிலேயே இருக்கட்டும். அதுதான் நல்லது.
சிறுவயதில் நமது கோடை விடுமுறைநாட்கள் நினைத்துப்பார்க்க இப்பவும் பரவசம் ஏற்படுகிறதல்லவா.. அந்த பரவசம் நம் குழந்தைகளுக்கும் கிடைக்கவேண்டாமா?
(செல்லமே இதழில் எழுதியது)
#கோடை_விடுமுறை, #குழந்தை_வளர்ப்பு, #ஆலோசனை

This entry was posted in Uncategorized and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.