kakam

கிச்சா பச்சா என்று இரண்டு காகங்கள், தாங்கள் ஏன் கருப்பாக இருக்கிறோம்..? என்ற கேள்விக்கு விடை தேடி பயணப்படுகின்றன. இதுதான் விழியனின் கிச்சா பச்சா நூலின் ஒன் லைனர்.

மொத்தம் 9 அத்தியாயங்கள் கொண்ட கதை. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு விலங்குகளைச் சந்தித்து, தாங்கள் ஏன் கருப்பாக இருக்கிறோம் என்ற கேள்விக்கு விடை தேட முயல்கின்றன.
விலங்குகள் சொல்லும் எந்தப் பதிலும் இவற்றைச் சமாதானப்படுத்தவில்லை என்பதால் இவற்றின் பயணம் தொடர்கிறது. நமக்கும் சுவாரஸ்யமான கதை கிடைக்கிறது.
தொடர் பயணத்தில், ஒரு காக்கை துறவியைச் சந்தித்து, காலத்தில் பின்னோக்கிச்செல்லும் மந்திரத்தைக் கற்றுக்கொண்டு, பயணிக்கின்றன. அங்கே நாம் இதுவரை படித்தறிந்த காகங்களின் கதைகளில் வரும் பாத்திரங்களைச் சந்திக்கின்றன. அவற்றுடன் நடைபெறும் உரையாடல் வழியே, நாமறிந்த பழைய கதைகளை, நமக்கு நினைவுபடுத்துகிறார் நூலாசிரியர், இடையில் ஒரு நாடோடிக்கதையையும் வாசிக்க முடிகிறது.
பின்னோக்கிப் பறந்து பறந்து… அப்படியே, டைனோசர் வாழ்ந்த காலத்திற்குள் சென்றுவிடுகின்றன. அதனிடமும் அதே கேள்வியைக் கேட்டு, அது சொல்லும் பதிலையும் அறிந்துகொள்கின்றன கிச்சாவும் பச்சாவும். காகங்கள் கருப்பானதற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு, டைனோடர் சொன்ன பதில் என்ன? அப்பதில் இவற்றிற்குத் திருப்தியாக இருந்ததா இல்லையா என்பதை எல்லாம் நீங்கள் நூலை வாங்கி அறிந்துகொள்ளலாம்.
தமிழில் வாசித்துப் புரிந்துகொள்ளக்கூடிய குழந்தை முதல் எல்லோரும் வாசிக்கலாம். ஓவியர் T.N.ராஜனின் ஓவியங்கள் இக்கதையின் பெரிய பலம். ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் குறைந்தது நான்கு முதல் ஆறு படங்கள் வரை வரைந்திருக்கிறார். நூல் வடிவமைப்பும் சிறப்பாக இருக்கிறது.
நூல்: கிச்சா பச்சா
ஆசிரியர்: விழியன்
விலை: ரூபாய். 40/-
வெளியீடு: வானம் பதிப்பகம் (9176549991)
https://goo.gl/hQoXE4
#thamizhbooks #thamizhbookscbf
#வாசிப்பு #வாசகப்பரிந்துரை #சிறுவர்_நூல்