valai

மீன் பிடிக்க கடலுக்குப் போன பிள்ளை திரும்புவான் எனப் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் தாய்.

பிறக்கும் பிள்ளைக்கு அப்பாவைப் புகைப்படத்தில் மட்டுமே இனி காட்டமுடியும் என்று உள்ளுக்குள் உடைந்து அழுதுகொண்டிருக்கும் பிள்ளைத்தாச்சி.

குடும்ப பாரத்தை சுமக்கப் பள்ளி இறுதியைக்கூடத் தொடாமல் வேலைக்குப்போன பிள்ளைகள்

-இப்படி நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்களை பாம்பன் தீவுக்குள் பார்க்க முடியும். இன்னும் சொல்லப்போனால், ராமேஸ்வரத்தில் 500க்கும் குறைவான வீடுகள் கொண்ட, ஒரு சிறுகிராமத்தில் கணவனை இலங்கை ராணுவத்திற்குக் காவுகொடுத்த பெண்கள் வீட்டுக்கு ஒருவரையாவதுப் பார்க்கமுடியும்.
முதல் நாள் இரவு அமர்ந்து கதை பேசிவிட்டு, விடியக்காலை கடலுக்குப் போய், பிணமாகத்திரும்பி வந்த நண்பனை நானறிவேன். இருக்கின்ற ஒரே பிள்ளையை பறிகொடுத்து, பித்துப்பிடித்துப்போன தாயையும் நானறிவேன்.

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக மீன் பிடிக்கச்செல்லும் மீனவனின் படகுகளையும், வலைகளையும் சேதப்படுத்துவது, தொடங்கி, அடித்து முடமாக்குவது, சுட்டுக்கொல்லுவது என்று இலங்கை ராணுவம் செய்துவரும் கொடுமைகளை எளிதில் சொல்லிவிடமுடியாது.

மீனவ மக்களின் துயரங்களை வலை எனும் தனது குறுநாவல் மூலம் அழுத்தமாகப் பதிவு செய்ய முயன்றிருக்கிறார் நூலாசிரியர் ஜான்பாபு.

அந்தோணி வாங்கிய கடனுக்காக உயிர் பிரியும் வரைக்கும் உழைத்துக்கொண்டிருக்கிறார். அவரது மரணத்திற்குப்பின், பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு கடலுக்குப் போகிறான் சூசை. தன் அப்பா விட்டுச்சென்ற சுமையை அதன் பின் அவன் சுமக்கிறான். இதற்கிடையில், சூசை, மலர் ஆகியோரின் பதின்பருவக்காதல் எளிமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சூசை சிலோன் நோவியிடம் அடிவாங்கி வாங்கித் திரும்பி வரும் காட்சிகள் வாசிக்கும் நமக்குள்ளும் ஒருவித பதைபதைப்பை ஏற்படுத்துகிறது. கதையின் முடிவு யதார்த்தம் என்றாலும் அந்தப் பாத்திரங்களின் வலி, கதையை வாசிக்கும் நமக்குள்ளும் ஏற்படுகிறது.

300 பக்கங்களுக்கு மேல் நீளக்கூடிய கதையை வெறும் 111 பக்க நூலாகச் சுருக்கி இருப்பது மட்டுமே பெருத்த ஏமாற்றம்.

இக்குறுநாவல் குறுகிய காலத்திலேயே இரண்டாம் பதிப்பு கண்டிருக்கிறது என்பதையும் நூலாசிரியரின் உரையில் காணமுடிகிறது. இது நாவலாசிரியரின் முதல் நூல் என நம்புகிறேன். அதனால் சில/பல இடங்களில் தென்படும் இடர்களையும் தாண்டி ஒரு நம்பிக்கை கொடுக்கக்கூடிய எழுத்தாகத் தெரிகிறது.

நாளும் கிழமையும் நலிந்தோருக்கு இல்லை என்பார்கள். அது அப்படியே மீனவ மக்களுக்கும் பொருந்தும்.

நூலாசிரியர் தனது அடுத்தடுத்த படைப்புகளில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி, அதற்காக உழைத்து, காலத்தால் அழியாத படைப்புக்களை தருவார் என நம்புகிறேன்
நூல்: வலை
ஆசிரியர்: ஜான் பிரபு
விலை. ரூ.99/-

வெளியீடு ஜீவா பதிப்பகம், சென்னை
தொடர்புக்கு: 99942-20250

#வாசிப்பு #வாசகப்பரிந்துரை