புதிய அனுபவம் கொடுக்கும் சிறார் நாவல்: இருட்டு எனக்குப் பிடிக்கும்

iruttu

பயணம் பிடிக்காதவர்கள் இருக்கமுடியுமா? அல்லது பயணம் பிடிக்காத குழந்தைகள் இருக்கமுடியுமா? நானறிந்த வரை குதுகுலமாக குழந்தைகள் பயணங்களுக்குத் தயாராகிவிடுவார்கள். இன்னும் சொல்லப்போனால்.. ஊட்டிக்குப் போய் மலர்கண்காட்சி பார்ப்பதும், ஆக்ரா போய் தாஜ்மகால் பார்ப்பதும் வயதுவந்தவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு புது இடத்திற்குப் போகிறோம் என்பதே மகிழ்வளிக்கக்கூடியதுதான்.

தமிழைச் சிரமமின்றி வாசிக்கத்தெரிந்த 10 வயதுக் குழந்தை தொடங்கி, எவரும் வாசித்துவிடக்கூடிய அளவில் எழுதப்பட்டுள்ள கதைதான் ’இருட்டு எனக்குப் பிடிக்கும்’  இச்சிறுவர் நாவலின் ஆசிரியர் ரமேஷ் வைத்யாவுக்கு தனி அறிமுகம் தேவை இல்லை. பல ஆண்டுகளாக பத்திரிக்கைத்துறையிலும் குறிப்பாகச் சிறுவர்களுக்கான இதழ்களில் தனக்கான முத்திரையைப் பதித்துவரும் மூத்தவர்.

000

ஓர் இரவு, ஒரு பகலில் நடக்கும் சம்பவங்கள் தான் மொத்த கதை.

ஆறு குழந்தைகள், ஓர் ஓட்டுநருடன் மேகமலைக்கு ஒரு ஜாலி ட்ரிப் போகிறார்கள். போகின்ற வழியில் அவர்களுக்கு நேருகின்ற விபத்தில் ஜோவும், அவன் தங்கை ஷிலுவும் கூட்டத்தில் இருந்து விலகிப்போய் விடுகின்றனர்.

ஒருபக்கம் இவர்கள் இருவரும், மறுபக்கம் ஓட்டுநருடன் இவர்களைத்தேடி வரும் மற்ற பிள்ளைகள் என்று கதை இரண்டு கிளைகளாகப் பிரிந்து பயணிக்கிறது.

காட்டு விலங்குகள், இரவில் பெய்யும் மழை, துரத்தும் யானை, பாய்ந்துவரும் கரடி என்று ஓர் அட்வென்ச்சர் த்ரில்லர் -போன்று கதை சரியான வேகத்தில் போகிறது.

நகரத்தில் விடியலைப் பார்த்திருப்போம்… காட்டுக்குள்..? இதில் ஒரு இடத்தில் காட்டுக்குள் விடியலை விவரிக்கும் காட்சிகள் அப்படியே அந்த இடத்திற்கே நம்மை அழைத்துச்செல்கிறது. மலைச்சரிவில் தவறி விழும் தங்கையைத்தேடி அண்ணன் போகும் போது நமக்கு பதைபதைப்பு கூடுகிறது. இப்படி கதை முழுக்க ரசித்த இடங்கள் நிறைய உண்டு. ஒரு காடு என்றால் மரமும் மலையும் மட்டுமா, அங்கே விலங்குகள் அங்கே வசிக்கும் பழங்குடியினர் என நுட்பமுடன் பதிவு செய்யப்பட்ட செய்திகள் ஏராளம்.

இச்சிறார் நாவலை வாசிப்பவர் கொஞ்சம் தனிமையில் இருந்து, வாய்விட்டு வாசித்தால், காட்டுக்குள் மாட்டிக்கொண்ட அக்குழந்தைகளுடனே நாமும் பயணிப்பதுபோன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும்படியான மந்திர எழுத்து. உண்மையில் சமீபகாலங்களில் இப்படியான கதை தமிழில் ஏதும் வந்ததில்லை என்றே உறுதியாகச் சொல்லமுடியும். இடையிடையே படங்கள் வரையப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும். படங்கள் இல்லாததால் பதின் பருவத்தின் மத்தியில் இருக்கும் குழந்தைகள் விரும்பிப்படிப்பர். அவர்களுக்குப் பிடிக்காத அட்வென்ச்சர் உண்டா என்ன?

கதைக்குள் வரும் ஆறு பாத்திரங்களும் நல்ல செட்டு. ஒருவருக்கொருவர் கலாய்த்துக்கொண்டும், சண்டையிட்டுக்கொண்டும், உதவிக்கொண்டுமாக இருக்கிறார்கள். இக்கதையை வாசிக்கும் வயதுவந்தோருக்கு நிச்சயம் தங்களின் பால்ய நண்பர்கள் எவரையேனும் இப்பாத்திரங்கள் நினைவுபடுத்தும். இக்குழுவைக்கொண்டு, இரண்டாம் பாகம் கூட எழுதலாம்.

நான் பள்ளியில் படித்த காலத்தில், ஒருவர் தோள்மீது ஒருவர்க் கை வைத்து பள்ளிப் பசங்களை எல்லாம் வரிசையாக அழைத்துக்கொண்டு, ஆண்டுகொருமுறை ஏதாவது ஒரு சினிமாவுக்கு அழைத்துப்போவார்கள். அப்படியான குழந்தைகளுக்கான திரைப்படங்கள் தமிழில் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்றே நினைக்கிறேன். தற்போது யாரேனும் குழந்தைகளுக்கான திரைப்படம் எடுக்க நினைத்திருந்தால், இக்கதையைத் தாராளமாக தேர்வு செய்யலாம். வாசிக்கும் போதே சினிமா மாதிரி காட்சிகளை மனதிற்குள் ஓட்டும் கதை. நிஜத்திலேயே சினிமாவாக வந்தால்.. கொண்டாட்டம் தான்.

00

(இதே தலைப்பில் ச .தமிழ்ச்செல்வன் எழுதிய குழந்தைகளுக்கான கட்டுரை நூல் ஒன்று உள்ளது)
00

நூல்: இருட்டு எனக்குப் பிடிக்கும்
ஆசிரியர்: ரமேஷ் வைத்யா
விலை: ரூ.70/-
வெளியீடு: நீலவால் குருவி பதிப்பகம் (புலம் பதிப்பகம்)
தொடர்புக்கு: 94428-90626

#வாசிப்பு #வாசகப்பரிந்துரை #சிறுவர்_நூல்