குழந்தை வளர்ப்பைப் பற்றி பேசும்போது, எல்லோருமே மதிப்பெண் முக்கியமில்லை என்று திகட்டத் திகட்ட சொன்னாலும்கூட, யதார்த்தத்தில் யாராலும் மதிப்பெண்களைப் பற்றி லட்சியம் செய்யாமல் இருந்துவிட முடிவதில்லை. நம் குழந்தைகள் நன்கு படிக்க, நாம் என்னென்னவெல்லாம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

இரண்டு குழந்தைகள், மலையேறும் பயிற்சிக்காக, கற்கள் பதிக்கப்பட்ட சுவற்றில் ஏறிக்கொண்டிருந்தனர். இருவரின் பெற்றோரும், கீழே நின்று அதைப் பார்த்துக்கொண்டிருந்தனர். முதல் குழந்தையின் பெற்றோர், ‘கீழ விழுந்துடாதே, கை வழுக்கிடப்போகுது, கால் சறுக்கிடப்போகுது, பாத்து ஏறு’ என்றெல்லாம் கத்திக்கொண்டிருக்க; இரண்டாவது குழந்தையின் பெற்றோரோ, ‘காலை நல்ல உறுதியான இடத்தில் வச்சுக்கோ, கீழ குனிஞ்சு பாத்தா பயமா இருக்கும், மேல ஏற வேண்டிய இடத்தையே பார்த்து குறி வச்சு ஏறு, உறுதியா பிடிச்சுக்கோ’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தனர். முதல் குழந்தை, சற்று நேரத்திலேயே கீழே விழுந்துவிட, இரண்டாவது குழந்தையோ வெற்றிகரமாக ஏறி இலக்கை அடைந்தது.

நம் குழந்தைகள் மேலே ஏற வேண்டுமென நாம் நினைப்பதில் தவறேதும் இல்லை. ஆனால், நமது அதீத அக்கறையினாலேயே அவர்களின் மேல் அழுத்தத்தை ஏற்றிவிடக் கூடாது என்பதும் முக்கியம். அவர்களுக்குப் பதற்றத்தைத் தொற்றவைக்காமல், அதே நேரம் தீவிரமாக உழைத்துப் படிக்கும்படி செய்வதற்கான சில ஆலோசனைகளை இக்கட்டுரையில் பார்க்கலாம்.

ஒப்பிடாதீர்கள்

உங்கள் குழந்தை எந்தெந்த பாடங்களில் இன்னும் முன்னேற வேண்டும் என திட்டமிடுவது உங்கள் உரிமை. இந்தப் பாடத்தைப் படித்தால், இன்ன விஷயத்தில் அறிவு வளரும் என்பது போன்ற ஆரோக்கியமான திட்டமிடல்கள் தேவைதான். ஆனால், ஒருபோதும் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு, அவர்களை பந்தயக் குதிரைபோல உணரவைக்காதீர்கள். நமது குறிக்கோள் என்பது எப்போதும் மனிதர்கள் சார்ந்ததாக இல்லாமல், இலக்குகள் சார்ந்ததாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, இன்ன படிப்புக்கு, இன்ன கல்லூரியில் இடம் வாங்கும் அளவு மதிப்பெண் வாங்க வேண்டும். சென்ற வருடம் அக்கல்லூரியின் கட் ஆஃப் என்னவோ அதைக் குறியாக வைத்துக்கொண்டு படிப்போம் என்பது போன்ற பொதுப்படையான குறிக்கோள்களே, குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தயார் செய்ய வல்லவை. மாறாக, ‘மாமா பையன் பிரகாஷைவிட அதிக மார்க் எடுக்க வேண்டும்’, ‘பக்கத்து வீட்டு மாலாவை முந்தியே ஆகணும்’, ‘மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுத்தாக வேண்டும்’ என்பது போன்ற குறிக்கோள்கள், குழந்தைகளின் மனத்தில் எதிர்மறையான சிந்தனைகளைப் பதியவைக்கக்கூடும்.

சரியாகத் திட்டமிடுங்கள்

கற்றலுக்கு முதன்மை இடமும், மதிப்பெண்களுக்கு இரண்டாம் இடமும் கொடுத்துப் பேசுங்கள். உதாரணத்துக்கு, உங்கள் குழந்தை 100-க்கு 80 மதிப்பெண் மட்டுமே எடுத்திருந்தால், அவர்களிடம் திரும்பத் திரும்ப மார்க் போச்சே என்று புலம்புவதற்குப் பதில், அந்த 20 மதிப்பெண் எந்தெந்தக் கேள்விகளால் போனது என்பதை குழந்தையோடு உட்கார்ந்து பேசிக் கண்டுபிடியுங்கள். ‘ஓ, அந்தக் கடைசி யூனிட் சரியா படிக்கலயா, அதுலேர்ந்து வந்த கேள்விகள்தான் உன் மார்க்கை குறைச்சிடுச்சா.. சரி, இனி அப்படி எந்தப் பாடத்தையும் ஸ்கிப் பண்ணாத. நான் வேணும்னா உனக்கு இதை சொல்லித் தரட்டுமா’ என்பது போன்ற அணுகுமுறை இருந்தால், மதிப்பெண்ணைப் பற்றிக் குழந்தை கவலைப்படுவதை விடுத்து, பாடத்தில் எந்தப் பகுதியையும் விட்டுவிடாமல் படிக்க முயற்சி செய்யும். அதனால், தானாகவே மதிப்பெண்களும் கூடும்.

உரையாடுங்கள்

குழந்தைகளின் ஆசிரியரோடும், அவர்களின் நண்பர்களோடும் தொடர்ச்சியான உரையாடலில் இருங்கள். நம் பிள்ளைகளின் பலங்களையும், பலவீனங்களையும் முன்னேற்ற அட்டையைப் (Progress Card) பார்த்து மட்டும் முடிவு செய்துவிட முடியாது. வகுப்பில், அவர்களின் செயல்பாடுகள், சக மாணவர்களுடனான அவர்களின் உறவுகளும்கூட, மதிப்பெண் பெறுவதில் முக்கியப் பங்காற்றக்கூடும். எனவே, பள்ளியில் உங்கள் குழந்தையின் செயல்பாடுகளின் இன்னொரு பக்கத்தைப் புரிந்துகொள்ள, இந்த உரையாடல்கள் மிகவும் உதவும். குறிப்பாக, தோழமையான உரையாடலையே உங்கள் பிள்ளைகளின் நண்பர்களிடம் கடைப்பிடியுங்கள். ஷெர்லாக் ஹோம்ஸ் மாதிரி, துப்பறிந்து, துருவித்துருவி கேள்விகளால் துளைக்காதீர்.

திட்டமிடுதல்

ஆம்! நம் பிள்ளைகளுக்குச் சரியான திட்டமிடுதலைக் கற்றுக்கொடுங்கள். நல்ல மதிப்பெண்கள் வாங்குவதற்கு, வகுப்பில் பாடம் நடக்கும்போது அதைக் கவனித்துப் புரிந்துகொள்வது முதல் படி என்றால், தேர்வுக்குத் தயார் ஆவது இரண்டாவது படி. தேர்வுக்குத் தயார் ஆவது என்றால், பாடங்களை கேள்வித்தாளுக்கு ஏற்றபடி படிப்பது. வினாக்களின் மதிப்பெண்களுக்குத் தக்க அளவில் பாடத்தைப் பல்வேறு கோணங்களில் படிக்கவேண்டி இருக்கலாம். முந்தைய கேள்வித்தாள்களைப் பார்த்து, அதிகமான கேள்விகள் எந்தப் பகுதியிலிருந்து வருகின்றன என்று கவனித்து, அப்பகுதிகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துப் படிக்கவேண்டி இருக்கலாம். பாடங்களைப் படிப்பதற்கும், தேர்வுக்கு முன்னால் மறுபார்வை பார்த்துக்கொள்வதற்கும் தேவையான கால அட்டவணையைத் தயார் செய்துகொள்வது வரை, எல்லாவற்றுக்கும் திட்டமிட்டே ஆக வேண்டும். சிறு வயதிலிருந்தே இதுபோன்ற திட்டமிடலைப் பழக்கிவிட்டால், பொதுத் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் என எதற்கும் பதறாமல், குழந்தைகள் வெற்றிகளைக் குவிப்பார்கள்.

பிள்ளைகளை நம்புங்கள்

குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பு போன்ற முக்கிய விஷயங்களில், எப்போதும் அவர்களின் விருப்பத்துக்கே அதிக முக்கியத்துவம் கொடுங்கள். அவனுக்கு / அவளுக்கு ஒன்னும் தெரியாது, நாம்தான் நாலு இடத்தில் விசாரித்து நல்ல குரூப்பில் / கோர்ஸில் / கல்லூரியில் சேர்க்கணும் என்று நினைத்து, முடிவுகளைக் குழந்தைகளின் மேல் திணிக்காதீர்கள். விருப்பமில்லாத துறையில் நீண்ட காலம் ஜொலிக்க முடியாது. எனவே, குழந்தைகளின் குரலுக்கு எப்போதும் செவி கொடுங்கள். அவர்களை நம்புங்கள்.

துணையாக இருங்கள்

குழந்தைகளின் படிப்பு நேரத்தில், நீங்களும் கதைப் புத்தகங்களையோ, உங்கள் துறை சார்ந்த புத்தகங்களையோ வாசிப்பது என்பது, அவர்களை மறைமுகமாக ஊக்குவிக்கும் செயல். அந்த நேரத்தில், பெற்றோர் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பது, கைபேசியை நோண்டுவது போன்ற செயல்கள் செய்துகொண்டிருப்பது, குழந்தைகளின் ஆர்வத்தை ஈர்க்கும். இதன்விளைவாக, அவர்களின் கவனம் சிதறும். எனவே, குழந்தைகளின் படிப்பு நேரத்தை ஒட்டுமொத்தக் குடும்பத்துக்குமான வாசிப்பு நேரமாக மாற்றிக்கொள்வது, அனைவருக்குமே பயனுள்ளதாக இருக்கும்.

அப்புறம் என்ன.. திட்டமிட்டு, செயல்பட்டுப் பாருங்கள். சில மாதங்களிலேயே நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்!