தியாகிகளை மறந்துபோன காங்கிரஸ் தலைவர்கள்

தியாகிகளை மறந்துபோன காங்கிரஸ் தலைவர்கள்
கக்கன் பிறந்த நாளில் 10 பேர் மட்டுமே கூடினார்கள்

சென்னை, ஜுன்.19-

விடுதலை போராட்ட தியாகிகளை காங்கிரஸ் தலைவர்கள் மறந்துவருகின்றனர். தியாகி கக்கன் பிறந்தநாளை கொண்டாட, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று 10 பேர் மட்டுமே கூடினார்கள்.

காங்கிரஸ் தியாகிகள்

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி தந்த பெருமை காங்கிரஸ் கட்சியையே சாரும். இதற்காக தியாகிகள் பலர் தங்கள் இன்னுயிர் நீத்தனர். ஆயிரக்கணக்கானோர் சிறைகளில் கடும் இன்னல்களை அனுபவித்தனர். ஆனால், இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, காங்கிரஸ் மற்றும் ஏனைய கட்சி தலைவர்கள் தியாகிகளை மறக்க தொடங்கிவிட்டனர்.

காங்கிரஸ் கட்சியில் உள்ள சிறு தலைவர்களின் பிறந்த நாட்களைக்கூட தடபுடலாக கொண்டாடும் தொண்டர்கள், தியாகிகள் பிறந்தநாள், நினைவு நாட்களை கொண்டாடுவதில்லை. சில தலைவர்கள் மட்டும் ஒப்புக்காக தியாகிகளின் படங்களை வைத்து மலர்தூவி மரியாதை செலுத்துவார்கள்.

மணி மண்டபம்

நேற்று, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான தியாகி பி.கக்கனின் 100-வது பிறந்த நாள். இவர், காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்தவர். எங்கு சென்றாலும் பஸ்சிலேயே சென்று வருவார். அந்த அளவுக்கு எளிமையை கடைபிடித்தார். லஞ்ச ஊழல் இல்லாத அப்பழுக்கற்ற தலைவர் என்று அனைவராலும் பாராட்டப்பட்டவர்.

ஏழ்மையில் வாடியபோதுகூட, தியாகி கக்கனுக்கு காங்கிரஸ் கட்சிக்காரர்கள் யாரும் உதவி செய்யவில்லை. அப்போது, முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். உதவி செய்தார். கக்கன் இறந்த பிறகு, அவருக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி மணி மண்டபம் கட்டினார்.

தியாகி கக்கனின் மகள்

தியாகி கக்கனின் 100-வது பிறந்த நாளை கொண்டாட, சத்தியமூர்த்தி பவனில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், அக்கட்சியின் பெரும்பாலான தலைவர்கள் வரவில்லை. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம், முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், தலைமை நிலைய செயலாளர் ஆர்.தாமோதரன் என சுமார் 10 பேர் மட்டுமே கக்கன் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு, கக்கனின் மகள் கஸ்தூரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் வருவதற்கு முன்பாகவே, தலைவர்கள் மலர்தூவி மரியாதை செய்துவிட்டு சென்றுவிட்டனர். அதனால், கக்கனின் மகள் கஸ்தூரி, தனியாக தந்தையின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

வாஞ்சிநாதன் நினைவு நாள்

மணியாச்சி ரெயில் நிலையத்தில் வெள்ளைக்கார கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட வாஞ்சிநாதனின் நினைவு நாள் நேற்று முன்தினம் வந்தது. ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் யாரும் இதை நினைவில் வைக்கவில்லை.

எதிர்கால சந்ததிகளாவது தியாகிகளை பற்றி அறியும் வகையில், தியாகிகளின் பெயர், பிறப்பு, இறப்பு தகவல்கள் அடங்கிய அறிவிப்பு பலகை ஒன்றை சென்னை சத்தியமூர்த்தி பவனில் வைக்க வேண்டும் என்று மூத்த தொண்டர் ஒருவர் வருத்தத்துடன் கூறினார்.

முன்னதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கட்சிக்கு அப்பாற்பட்டு…

உத்தரபிரதேச முதல்-மந்திரி மாயாவதி, காந்தியடிகளை பற்றி தவறாக பேசி, தனது தரக்குறைவான தன்மையை வெளிப்படுத்தி உள்ளார். இந்திய அரசியல் பற்றி அவர் தெரிந்துகொண்டு பேசவேண்டும். அவரை கண்டித்து உத்தரபிரதேசத்தில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்களும் தாக்கப்பட்டுள்ளனர். இதற்கு தமிழக காங்கிரஸ் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். காந்தியின் புகழை எப்போதும் பாடுவோம். அதற்காக எந்த சித்திரவதையையும் தாங்கிக் கொள்வோம்.

இவ்வாறு கே.வி.தங்கபாலு கூறினார்.


இது இன்று தினத்தந்தியில் வெளியான செய்தி – சுட்டி இங்கே….


Comments

4 responses to “தியாகிகளை மறந்துபோன காங்கிரஸ் தலைவர்கள்”

  1. அடைப்பலகை அபாரம். அண்ணி பார்த்தாச்சா, அடி வாங்கியாச்சா?

  2. :-)))))))))))

    //காந்தியின் புகழை எப்போதும் பாடுவோம். அதற்காக எந்த சித்திரவதையையும் தாங்கிக் கொள்வோம்.//

    நாளைக்கு நான் எந்த காந்தின்னு சொல்லலையேன்னு பாலையா ரேஞ்சுல மாறிடப்போறாரு!

  3. சோதனை பின்னூட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *