சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவராக இருந்தவர் கே.சுரேஷ். இவர் தூத்துக்குடி துறைமுகம், சேது சமுத்திரத் திட்டம் ஆகியவற்றுக்காக நடக்கும் பணிகளில் முக்கியப் பொறுப்பு வகித்தவர். முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவுக்கும், திமுகவுக்கும் மிகவும் வேண்டப்பட்டவர் என்ற பேச்சும் உள்ளது. இந்த முறை காங்கிரஸ்- திமுக கூட்டணி வெற்றி பெற்று வந்தபின் சில உள்ளடிகளால் டி.ஆர். பாலுவுக்கான வாய்ப்பு பறிபோனது.

கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக காங்கிரஸைச் சேர்ந்த ஜி.கே. வாசன் பதவியேற்ற உடன், செய்த முக்கியமான காரியம் சுரேஷுக்கு ட்ரான்ஸ்ஃபர் கொடுத்தது தான். வட இந்தியாவுக்கு மாற்றப்பட்ட சுரேஷ், அங்கு போகாமல் அடம் பிடித்து நீண்டதொரு விடுப்பெடுத்து சென்னையிலேயே இருக்கிறார்.

இன்று சுரேஷ் வீட்டில் அதிரடி சோதனையில் இறங்கியது சி.பி.ஐ. புலனாய்வுத்துறையை(சி.பி.ஐ) தன் கைவசம் வைத்திருக்கும் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உத்தரவின் பேரில் சோதனை நடந்தாக சொல்லப்படுகிறது. சுமார் பத்து மணி நேரம் நடந்த சோதனைக்குப் பிறகு சி.பி.ஐ போலிசார் சுரேஷ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். வழக்கு சி.பி.ஐ கோர்ட் வசம் என்பதால் மேலதிக விவரம் எதுவும் இன்னும் வெளியே வரவில்லை.

சேது சமுத்திர திட்டத்தில் ஏற்பட்டிருக்கும் ஊழலா அல்லது தி.மு.கழகம் தொடர்பில் இருக்கக் கூடிய இவரை மடக்குவதின் மூலம் தி.மு.க விற்கு காங்கிரஸ் செக் வைக்க நினைக்கிறதா? போகப் போக உண்மைகள் வெளி வரும்.

கடந்த வாரம் புதன் கிழமை தொடங்கி நேற்று வரை தினம் சிறிது நேரம் என தவணை முறையில் டிவிடியில் Family என்ற இந்தித் திரைப்படத்தை பார்த்தேன். இப்போதெல்லாம் இரவு உணவுக்கு உட்காரும் சமயம் மட்டுமே டிவி பார்க்க வாய்க்கிறது. அந்த சமயத்தைத்தான் இப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. அமிதாப் பச்சனுக்கு வில்லன் கதாபாத்திரம். மனிதர் என்னமாக அசத்துகிறார்? ’பிளாக்’, ’சீனி கம்’ போன்ற படங்களில் வயதுக்கேற்ற ஹீரோவாக நடிக்கும் அதே நடிகர்தான் இங்கே வில்லன் பாத்திரத்தை ஏற்றிருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் பவுத்திரம் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. 🙂 பார்ப்பதற்கு நிறைவாக இருந்தது சில நெருடல்களைத் தவிர; படத்தின் ஹீரோ அக்‌ஷய் குமார் பாதி படத்திலேயே வில்லனால் குண்டடிபட்டு இறந்து விடுகிறார். வில்லனைப் பழி வாங்க ஹீரோவின் தம்பி (பேர் தெரிலீங்கோவ்) கிளம்புகிறார். உணர்ச்சிப் போராட்டங்களே படத்தை நகர்த்தியிருக்கிறது. இது போன்று வயதுக்கேற்ற வேடங்களையும், வித்தியாசமான பாத்திரங்களையும் ரஜினி, கமல் போன்ற நம்மூர் பெருசுகள் ஏற்று நடித்தால் மிகவும் நன்றாக இருக்கும். மாறாக இளமையாகக் காட்டவும், அரைக்கால் டவுசர் போட்டு ஸ்கூல் படிப்பது போல் காட்டவும் கிராபிக்ஸ், மேக்-அப் விசயங்களுக்கு கோடிக் கணக்கில் கொட்டப்படும் பணத்தை குறைக்கவாவது இது போல பாத்திரங்களை ஏற்று நடிக்கலாம்.

——

ஆக அண்ணன் பைத்தியக்காரன் ஆகஸ்ட் எட்டாம் தேதி என அறிவித்து விட்டார். உரையாடல் சிறுகதைப் போட்டியின் முடிவு குறித்து நான் காட்டும் அதீத ஆர்வத்துக்கு காரணம் நிச்சயமாக எனக்கு பரிசு கிடைத்திருக்குமா என்ற எதிர்பார்ப்பு இல்லை. ஆரம்பத்தில் கதைகள் எல்லாம் சேர்ந்ததும் மொத்தமாய் அனைத்தையும் படித்துப் பார்த்துவிடுவது என்று எண்ணியிருந்தேன். ஆனால் 219 கதைகள் என்றதும் மலைப்புத் தட்டி விட்டது. தவணை முறையில் கூட இத்தனையையும் படிக்கும் சாத்தியம் என் தற்போதைய நேர அவகாசத்துக்கு ஒத்து வராது. எனவே சொகுசாய் நடுவர்கள் தேர்ந்தெடுத்துத் தரும் 20 கதைகளையாவது படித்து விடலாமே என்ற நப்பாசையில்தான் போட்டி முடிவுக்காக இப்படி நச்சரிக்கிறேன். பைத்தியக்காரன் பொறுத்தருள்வாராக… 🙂

இது சம்பந்தமாக டாக்டர் புரூனோ போன்றவர்கள் கிளப்பி விடும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். :))))

—–

ஹைடெக் சாமியார் ரவிசங்கர்(வாழும் கலை வல்லுனர் 🙂 ) பெயரில் ஒரு செய்திக் குறிப்பு படிக்க நேர்ந்தது. அதில் அவர் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் வெளிநாடுகளில் அந்தந்த நாட்டின் குடியுரிமை பெற்று சுயதொழில் செய்து, சொந்த வீடு கட்டி, சுதந்திர மனிதர்களாக நடமாடுகிறார்கள் என்றும், இந்தியாவில் நாடிழந்து வந்த நேபாளி மற்றும் பங்களாதேஷிகள் போன்றவர்கள் கூட ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் இந்தியப் பிரஜைகளாக அங்கீகரிக்கப் பட்டு, ரேஷன் கார்டு முதலியவை பெற்று நல்ல நிலமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது இருபது ஆண்டுகளுக்கு மேலாகியும் ஈழத்திலிருந்து வந்த தமிழர்களை மட்டும் ஏன் இன்னும் அகதிகளாக முகாமுக்குள் இந்திய அரசு அடைத்து வைத்திருக்கிறது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இது குறித்து தமிழக அரசியல் கட்சிகள் பெரிதாக ஏதும் குரல் எழுப்பி, இயக்கம் நடத்தியதாகத் தெரியவில்லை என்றும் வேதனைப் பட்டிருக்கிறார். இவர்களை இந்தியப் பிரஜைகளாக அங்கீகரிக்க மக்கள் மிகப் பெரிய கையெழுத்து இயக்கம் ஒன்றைத் துவங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

(விவரம் தெரிந்த அரசியல் வித்தகர்கள் இது குறித்தான தங்களின் மேலான கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். – பாலபாரதி)

—–

அருமைத் தம்பி லக்கிலுக்கின் பதிவுகளை நான் feedbliz மூலமாக மெயிலிலேயே படித்து விடுவது வழக்கம். திடீரென அவர் யுவகிருஷ்ணாவாக அவதாரம் எடுத்த பின் பதிவுகள் மொத்தத்தையும் மறைத்து வைத்து விட்டு, இன்ஸ்டால்மெண்டில் கொஞ்சம் கொஞ்சமாய் தூசு தட்டி, மெருகேற்றி வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் இப்படி மெருகேற்றி வெளியிடும் பதிவுகள் பழைய தேதியிலேயே வராமல் புதிய தேதியில் வருவதால் என் மின்னஞ்சலுக்கு தினம் இரண்டுக்கும் மேற்பட்ட அவருடைய படித்த பதிவுகள் வந்து விடுகின்றன. (ஜனவரி 2008ல் எழுதப்பட்ட ஒரு பதிவு இன்றைய தேதியில் தூசு தட்டி பதியப்படுகிறது) இது மிகுந்த அயற்சியைக் கொடுக்கிறது. Unsubscribe செய்து விடலாமா என்று யோசித்தால் அவரின் இன்றைய புதிய பதிவுகள் படிக்க விட்டுப் போய் விடுமே என்ற தயக்கமும் இருக்கிறது. தம்பி இதற்கு எதாவது மாற்று வழி கண்டுபிடித்தால்.. மகர நெடுங்குழைக்காதனின் ஆசீர்வாதம் கிட்டும். 🙂

——


Comments

10 responses to “விடுபட்டவை – 04.08.09”

  1. குசும்பன் Avatar
    குசும்பன்

    //ரஜினி, கமல் போன்ற நம்மூர் பெருசுகள் ஏற்று நடித்தால் மிகவும் நன்றாக இருக்கும்.//

    அண்ணே என்னைக்காச்சும் இதுமாதிரி உங்களை நாங்க சொல்லி இருக்கோமா? அப்புறம் ஏன்னே இப்படி, உங்கள் சம வயது ஒத்தவர்களுக்கு நீங்களே ஆதரவு கொடுக்காவிட்டால் எப்படி?:((

  2. குசும்பன் Avatar
    குசும்பன்

    //தம்பி இதற்கு எதாவது மாற்று வழி கண்டுபிடித்தால்.. மகர நெடுங்குழைக்காதனின் ஆசீர்வாதம் கிட்டும்.//

    ஒரு சூப்பர் ஐடியா இருக்கு அண்ணாத்தே, பாலபாரதி.நெட்டை டெலிட் செஞ்சுடுங்க:) (பழிக்கு பழி)தென்னை மரத்தில் தேள் கொட்டினா பனை மரத்தில் நெறிகட்டும் என்ற பழமொழி கேள்வி பட்டு இருக்கீங்களா இல்லையா?:)))

  3. குசும்பன் Avatar
    குசும்பன்

    // 20 கதைகளையாவது படித்து விடலாமே என்ற நப்பாசையில்தான் போட்டி முடிவுக்காக இப்படி நச்சரிக்கிறேன்//

    ஆக என் கதை எல்லாம் படிக்க மாட்டீங்க! இருக்கட்டும் இருக்கட்டும் எலிபேண்ட்க்கு ஒரு டைம் வந்தா! கேட்க்கும் ஒரு டைம் கம்மும்:))

  4. gulf- tamilan Avatar
    gulf- tamilan

    அண்ணே என்னைக்காச்சும் இதுமாதிரி உங்களை நாங்க சொல்லி இருக்கோமா? அப்புறம் ஏன்னே இப்படி, உங்கள் சம வயது ஒத்தவர்களுக்கு நீங்களே ஆதரவு கொடுக்காவிட்டால் எப்படி?:(
    ரிப்பீட்டே !!!!

  5. ஈழத்தில் இருந்து தமிழகத்திற்கு அகதிகளாய் வந்தவர்களை திருப்பி அனுப்ப மத்திய அரசு தயாராகி வருகிறது. தமிழக முகாம்களில் அவர்களது நிலை இன்னும் மோசம். தமிழக முதல்வரோ இதை பற்றி பேசினால் உடனே எதாவது ‘இலவச திட்டம்’ அதில் ஒன்று அல்லது இரண்டு நூறுகளை அதிகரித்து ‘என்னையா ஈழ எதிர்ப்பாளன் என சொன்னீர்கள்,’ என ஆவேசபடுகிறார்.

  6. 🙂

    ஃபேமிலி படம் இன்னும் பார்க்கலை. ரெண்டு நாளா யுவகிருஷ்ணாவுலேர்ந்து ஏதும் புது மெயில் வரலை. 🙁

  7. // ஆனால் 219 கதைகள் என்றதும் மலைப்புத் தட்டி விட்டது. தவணை முறையில் கூட இத்தனையையும் படிக்கும் சாத்தியம் என் தற்போதைய நேர அவகாசத்துக்கு ஒத்து வராது. //

    அது தான் முடிவு தாமதமாகியதோ

  8. தொகுப்பு அருமை.

  9. வணக்கம்,
    அப்போ பதிவர் சந்திப்புல பாஸ்கர் சக்தி சாரோடு வந்து உங்களை சந்திச்சது. ப்ளாக் அட்ரஸ் கேக்காம விட்டுட்டு பாஸ்கர் சாரை கேட்டா ”நான் தமிழ்மணத்திலர்ந்து போய்தான் படிச்சேன், பாலபாரதின்னுதான் என்னவோ வரும்னு” சொல்ல கூகுள்ல தேடி உங்க போட்டொதான் கிடைச்சுது! இன்னைக்கு அகஸ்மாத்தா வலைய சுத்திட்டிருக்கைல உங்க வீட்ட கண்டுபிடிச்சுட்டேன்! எப்படி இருக்கீங்க? அன்றைய பதிவர் சந்திப்பில் உங்க அறிமுகம் ரொம்ப சந்தோஷம்! நேரமிருக்கைல நம்ம வீட்டுப் பக்கம் வந்துட்டு போங்க!

  10. குட்டித் தல வருகைக்கு வாழ்த்துக்கள் 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *