விடுபட்டவை 23 August 09

மிகுந்த மகிழ்சியாக உணர்கிறேன். இன்று வெற்றிகரமாக இலங்கை தமிழ்வலைப்பதிவர்களின் சந்திப்பு மிகச்சிறப்பாக நடந்தேறி இருக்கிறது. சந்திப்புக்கு என உழைத்த அத்தனை உள்ளங்களுக்கும், சந்திப்பில் கலந்துகொண்டு, மற்றவர்களின் அறிமுகமும் பெற்று, கருத்துக்களையும் பகிர்ந்து கொண்ட பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள். பதிவர்களின் சந்திப்புகள் தொடந்து நடைபெறட்டும். எழுதுவதோடு மட்டுமல்லாமல்.. பல்வேறு வளர்ச்சிக்கும், நமது ஒற்றுமைக்கும் வழி வகுக்கட்டும் சந்திப்புகள். மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்கிறேன்.

சந்திப்பின் ஒலிவடிவம் கேட்க.. மதுவதனன் பதிவுக்கு போகலாம்.

படங்களைக்காண.. வந்தியத்தேவன் மற்றும் ஆதிரை பதிவுக்கு போகலாம்.

—-

”வழிபாட்டுத் தளங்களின் ஒலிபெருக்கிகளுக்கு எதிராக” என்ற பெயரில் சீக்கிரமே ஒரு சங்கத்தை தொடங்க வைத்து விடுவார்கள் போலிருக்கிறது. வீட்டுக்கு அருகில் இருக்கும் கோவிலில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. மினிமம் 200, அல்லது 300 டெசிபல் சத்தத்தில் பாட்டும், பஜனையுமாக ரணகளப்படுத்தி விட்டார்கள். புதியதாக பிறந்த வாரிசோ, நெட்டி,நெட்டி அழுகிறான். என்ன செய்யமுடியும். தெருவில் இருக்கிற அநேகருக்கும் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது என்றாலும், பூனைக்கு மணிகட்டுவது யார் என்ற கேள்வியுடனே காத்திருக்கிறார்கள். சந்து விட்டு மெயின் ரோட்டுப்பக்கம் வந்தால் அங்கே ஒரு சிவன் கோவில், கோவில் வாசலில் நிறைய கூட்டம். மெதுவாக நடந்து அருகில் சென்றால்.. பிள்ளையாருக்கு லட்சார்ச்சனை நடந்துகொண்டிருந்தது. அடப்பாவிகளா… ஒரே விழா தான் இரண்டு இடங்களிலும் கொண்டாடப்படுகிறது. வீட்டுக்கு அருகில் பாட்டு ஸ்பீக்கர் என்று எல்லம் போட்டு உசிரை எடுக்கிறார்கள். இன்னொரு கோவிலில் அமைதியாக அதுவும் கோவில் வாசலை எட்டிப்பார்த்தால் மட்டுமே கேட்கும்படியான அளவில் ஸ்பீக்கரில் மந்திரங்கள் ஓதப்பட்டுக்கொண்டிருந்தது. இவர்கள் தங்களின் செல்வாக்கை காட்ட, இப்படி ஸ்பீக்கர் எல்லாம் வைத்து அதிக சத்தத்தை உண்டு பண்ணி, நம்மை ஏன் இம்சிக்கிறார்களோ தெரியவில்லை. சங்கத்தை தொடங்கிட வேண்டியது தான் போல!

———

நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்.. நாங்கள் வைத்திருந்த தமிழ்ப்பெயரை குடும்ப பெரிசுகள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியை சொல்லி விடுகிறேன். குட்டிப்பையனுக்கு கனிவமுதன் (கனிவு+ அமுதன்) என்று பெயர் சூட்டி இருக்கிறோம். குழந்தைக்கு பெயர் வைப்பதில் உள்ள சிக்கல் குறித்து மறைந்த நண்பர் சாகரன் (தேன்கூடு)எழுதியதை இங்கே நினைவு படுத்த விரும்புகிறேன். இதனை விட யாரும் சிறப்பாக சொல்லிவிட முடியாது என்றும் நம்புகிறேன். இதோ சாகரனின் பேர் பட்ட பாடு!

————-

எப்படித்தான் தெரிகிறதோ.. இந்த குழந்தைகளுக்கு.. அம்மா சாப்பிட உட்காரும் போது சரியாக ‘கக்கா’ போவதும், இரவு பத்துமணி வரை தூங்கிவிட்டு, இரவு முழுவதும் விழித்திருக்கும் படியும் யார் தான் சொல்லிக்கொடுக்கிறார்களோ தெரியவில்லை. சரியாக விடிகின்ற பொழுதில் கண்ணயர்ந்து தூங்கி விடுகிறான். அந்த சமயத்தில் நமக்கு கண்கள் சொருகினாலும்.. அலுவலகம் போக வேண்டுமே.. கொஞ்ச நாட்களாக பிரஸ் மீட் எதிலுமே நான் உட்காருவதில்லை. அசதியில் தூங்கி விடுவேனோ என்ற பயம் தான் காரணம். கொஞ்ச நாட்களுக்கு ஏ.சி அறைகளை தவிர்த்து விட்டு, பொட்டல் வெளியில் எல்லோரும் பிரஸ் மீட் நடத்தினால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. 🙁

This entry was posted in அப்பா, குழந்தை வளர்ப்பு, வாசிப்பனுபவம், புத்தகங்கள், வாழ்த்து and tagged , , , . Bookmark the permalink.

22 Responses to விடுபட்டவை 23 August 09

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.