பஸ்ஸு தொல்லைகள்

வயது வந்தோர்க்கான எழுத்துக்கள்

கோவைக்கு போய் இருந்த போது நண்பரின் வீட்டில் தான் தங்கி இருந்தேன். பகல் முழுக்க வீட்டிலேயே கிடந்தாலும்,இணையம், கணினி என வசதிகள் இருந்த போதிலும் வலைப்பதிவுகளின் பக்கம் வருவதற்கு எனக்கு துணிவு இல்லை. அப்படியே ரீடர் வழி பதிவுகளை படிக்கலாம் என்றாலும் அதற்கும் ஒரு தயக்கம் இருந்துகொண்டே இருந்தது.

நண்பரின் வீட்டினர் எவராவது எனக்கு பின்னால் வந்து நின்று நான் படிக்கும் வலைப்பதிவுகளில் (புதிய நண்பர்கள் பலரின் வலைப்பதிவுகளும் இப்படி இருப்பது வேதனை) எதையாவது பார்த்துவைத்தால்.. நினைக்கவே அருவருப்பக இருக்கிறது. இதன் காரணமாகவே பஸ்ஸுலும், சாட்டிலும் மாட்டும் மொக்கை போட்டு விட்டு ஓடிப்போய் விட்டேன்.

சமீபமாக வலை உலகில் இருக்கும் பலரின் பதிவுகளை திறப்பதற்கு முன், வீட்டில் நமக்கு பின்னாடி யாரும் இல்லையே என்று உறுதி படுத்திய பின் தான் பதிவுகளை திறக்கவேண்டியதிருக்கிறது.

இப்படி தொடர்ந்து அல்லது அடிக்கடி Adult Content எழுதும்(எதையும் எழுதக்கூட்டதுன்னு யாருக்கும் யாரும் சொல்லமுடியாது/ கட்டாயப்படுத்தவும் முடியாது என்பதை நம்புகிற ஆள் நான்) பதிவர்கள் ஏன் தங்கள் தளத்தினை வயது வந்தவர்களுக்கானது  என்று முடிவு செய்யக்கூடாது?  அப்படி செய்தால்.. பதிவை திறக்கும் போது ஒரு எச்சரிக்கை வாசகம் வரும். “இத்தளம் வயது வந்தோர்க்கானது” என்று தொடர விரும்புகின்றவர்கள் தொடர்வார்கள்.. இல்லாதவர்கள் வெளியே போய் விடுவார்கள் அல்லவா.

அதோடு, பதிவின் தலைப்பிலோ, இடுகையிலோ 18+ என்று எழுதுவதால் என்ன பிரயோசனம் என்றும் தெரியவில்லை. எத்தனை பேருக்கு இதன் பொருள் புரியும்..?

அதெப்படீங்க… எப்பவாவது தானே.. Adult Content எழுதுறோம்/ போட்டோ போடுறோம்/ வீடியோ போடுறோம். அதற்காக எங்கள் வலைப்பக்கத்தையே Adult Content தளமாக எப்படி ஒத்துக்க முடியும் என்ற கேள்விகளை வைக்கக்கூடும்.

குழந்தைகளும் உலாவும் இடமாகிப்போன இணையத்தை குறித்து தனியாக சொல்லவேண்டுமா என்ன..? இது அவரவர் இதயப்பூர்வமாக யோசிக்க வேண்டியது. இன்னொருவன் சொல்லி ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. ஆனால் அதற்காக சொல்லாமலும் இருந்துவிட முடியாது என்பதால் பதிவு செய்யப் பிரியப்படுகிறேன்.

ப்ளாகரின் உள்ளே லாகின் செய்தால் வரும் செட்டிங்க் பகுதியில்.. Basic என்றொரு பகுதி இருக்கும். அதில் கீழே Adult Content? என்ற கேள்வி இருக்கும். அதில் எஸ் என்று தேர்ந்தெடுத்துக்கொள்ளூவதில் என்ன தயக்கம் இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை.

சினிமாவிலும், சின்னத்திரையிலும் காட்டப்படும் விசயங்களை விட, அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படங்களையும், எழுத்துக்களையும் பதிவிடும் இவர்கள்.. வாசக மனோநிலை என்று காரணம் காட்டி தப்பிக்க இயலாது. இதுவும் ஒரு நோய்கூற்று மனநிலையாகவே எனக்கு படுகிறது.

இன்று பிரபலமாக இருக்கும் பலரும் இதே பணியை தொடர்ந்து மேற்கொள்ளுவதால்.. இவர்களைப் பார்த்து புதியதாக வலைஉலகிற்கு வருபவர்களும் இதுதான் நல்லது.. இப்படி எழுதினால் தான் பிரபலமாக முடியும் போல என்ற எண்ணம் தோன்ற காரணமாகிறார்கள் என்பது நிதர்சனம்.

——

கணக்கு பண்றாங்க!

அவன் அந்த நிர்வாகத்தில் வேலைக்குச் சேரும் போது மேலை நாட்டில்  படித்து வந்த  முதலாளி சொன்னார்.. “ லாபம் வரும் போது உனக்கும் சம்பள உயர்வு உண்டு”

100 ரூபாய் முதல் போட்டு 110 ரூபாய் திரும்ப எடுத்தாலே அது லாபக்கணக்கில் தான் சேரும். அப்படித்தான் பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். இவனும் அந்த கணக்கை படித்தவன் என்பதால் காத்திருந்தான்.

ஆனால்.. இவன் வேலைக்குச் சேர்ந்து பல வருடங்கள் ஆகியும் ஊதிய உயர்வு குறித்த பேச்சே இல்லாமல் இருந்தது.

பொறுமை இழந்து ஒரு நாள் முதலாளியிடமே தன் ஊதிய உயர்வு பற்றி கேட்டான்.

அதற்கு அவர் சிறித்துக்கொண்டே… “ நீ வேலைக்கு சேருவதற்கு முன்னால் நல்ல ஆதாயம் கிடைத்து வந்தது. இப்போ கொஞ்ச காலமா ஆதாயம் குறைஞ்சுகிட்டு வருது.. அதனால தான் உனக்கு ஊதிய உயர்வு கொடுக்கலை. வழமைபோல ஆதாயம் வரும் போது உனக்கும் நிச்சயம் உயர்வு உண்டு” என்றார்.

இவன் பள்ளியில் படித்த கணக்கை அவரிடம் சொன்னான். அவரோ தனக்கு கல்லூரியில் போதிக்கப்பட்ட  கணக்கைச் சொன்னார்.

எது சரி..?

அனேக கார்ப்பரேட் நிறுவனங்களில் இது தான் நடக்குது.

—–

இலவசமாம்.. இலவசம்..

வெளியூருக்கு வந்திருந்த இடத்தில் பொருட்காட்சியை பார்க்க போய் இருந்தான் அவன். விடுமுறை நாள் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. நுழைவுச்சீட்டு எடுத்துவிட்டு உள்ளே போவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

கொஞ்ச நேரம் அப்படியும் இப்படியுமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு பசி எடுத்தது. எதாவது சாப்பிடலாம் என்று அங்கிருந்த உணவகம் நோக்கிப் போனான். அவர்கள் கடையை மூடிக்கொண்டிருந்தார்கள்.

கூட்டம் அதிகமென்பதால் சரக்கு விற்றுத்தீர்ந்துவிட்டதாகவும், சற்று தள்ளி ஆறாவதாக இருக்கும் கடைக்கு போகும் படியும் சொன்னார் அந்த கடைக்காரர்.

இவனும் கடைக்காரர் கூறிய உணவகம் போய்ச்சேர்ந்தான். அங்கேயும் கூட்டம் அலைமோதியது. தாமதித்தால் இங்கேயும் உணவு கிடைக்காமல் போய்விடும் என்று நினைத்தவன், கூட்டத்தினுள் புகுந்து டோக்கன் வாங்கிடத்துக்கு வந்து சேர்ந்தான். பணம் கொடுப்பதற்காக பேண்ட் பாக்கெட்டை தொட்டபோது தான் தெரிந்தது.. யாரோ பர்ஸை அடித்துவிட்டது.

கடைக்காரரிடம் பர்ஸ் களவு போனதைச் சொல்லி, பசிக்கு உணவு தரும்படி வேண்டினான். கடைக்காரரோ.. தினமும் இதே போல பர்ஸ் தொலைத்தாகக் கூறிக்கொண்டு வருபவர்களுக்கு எல்லாம் உணவு கொடுத்துக்கொண்டிருந்தால்.. தானும் யாசகம் பெற போகவேண்டியது தான் எனக்கூறி அவனுக்கு உணவு தர மறுத்துவிட்டார்.

கூட்டத்திலிருந்து வெளியே வந்தவனுக்கு பசி கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது. சில அடிகள் கூட நடக்க முடியாமல் தடுமாறினான். அங்கேயே ஓரமாக உட்கார்ந்து விட்டான். பெருங்குடல் சிறுகுடலை கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டிச் சுரண்டி சாப்பிடுவதாக தோன்றியது அவனுக்கு.

கால்களை மடக்கி, அடிவயிற்றில் அழுத்தமாக பதித்து சுருண்டு படுத்தான். சிறிது நேரம் கழித்து, ஒருவன் அவனை தட்டி எழுப்பினான். அவன் கையில் சாப்பாடு பொட்டலம் இருந்தது. அதை இவனிடம் நீட்டினான். நன்றியோடு பெற்றுக்கொண்டவன்,

’சார்.. இவ்வளவு கூட்டத்திலேயும் என்னோட பசியறிஞ்சு.. சாப்பாடு வாங்கிக் கொடுக்குறீங்களே சார்… உங்கள மாதிரி ஆட்கள் இருக்குறதால தான் நாட்டில் மழையே பெய்யுது. நல்லா இருப்பீங்க சார். உங்க அட்ரஸ் தாங்க.. நான் வீட்டுக்குப் போனதும் இதற்கான பணத்தை அனுப்பி விடுகிறேன்’ என்றான்.

’பரவாயில்லை, இதை இலவசமாக கொடுப்பதால் தனக்கு ஒரு பாதிப்பும் இல்லை’ எனக்கூறி சென்றுவிட்டான் சாப்பாடு வாங்கிக்கொடுத்தவன்.

இத்தனை கூட்டத்தின் நடுவில் இலவசமாக சாப்பாடு வாங்கிக் கொடுத்தவனை நன்றியோடு பார்த்துக்கொண்டிருந்தான் இவன்.

இவனிடமிருந்தே பர்ஸை அடித்துவிட்டு, அதிலிருந்து இருபது ரூபாய் செலவு செய்து சாப்பாடு வாங்கிக்கொடுத்தா எவ்வளவு பாராட்டு கிடைக்குது.. என்று எண்ணியவாரே நடந்துகொண்டிருந்தான் அவன்.

—-

நேர்மைன்னா.. இனி ஹமாம் சோப்பு மட்டும் தான் போல… 🙁

நேர்மையாக இருந்த ஒரு அதிகாரி அரசியலதிகாரத்தால் பந்தாடப்பட்டு வருகிறார். ஊழலுக்கு எதிரானவர்கள் இவ்வரசியல் ஆட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதிவர்கள் இந்த இலச்சினையை போடும் படி செந்தழல்ரவி கேட்டுக்கொண்டிருக்கிறார்.

தொல்லைகள் தொடரும்..

This entry was posted in அனுபவம், அரசியல், எதிர் வினை, சமூகம்/ சலிப்பு, பதிவர் சதுரம் ;-)), Google Buzz and tagged , , , , . Bookmark the permalink.

One Response to பஸ்ஸு தொல்லைகள்

  1. //குழந்தைகளும் உலாவும் இடமாகிப்போன இணையத்தை குறித்து தனியாக சொல்லவேண்டுமா என்ன..? இது அவரவர் இதயப்பூர்வமாக யோசிக்க வேண்டியது.//

    வழிமொழிகிறேன் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.