9. மாட்டிக்கொண்ட ஈ.வெ.ரா.

சில நாட்களாக இல்லை. சில மாதங்களாக.. ராமசாமியைக் காணாமல் மிகவும் வருந்தினார் வெங்கட்டர். மனைவி சின்னதாய்யம்மையாரோ.. பித்து பிடித்த நிலைக்கு ஆளானவர் போல.. புலம்பியபடியே இருந்தார். மறுபக்கம் நாகம்மையின் கண்ணீர். என்ன செய்வதென்று தெரிய வில்லை. வியாபாரத்தையும் சரியாக கவனிக்க முடியவில்லை.

ஈ.வெ.ரா.வின் அன்றைய நெருங்கிய நண்பரான ப.வெ.மாணிக்க நாயக்கருக்கு கடிதம்
எழுதினார் வெங்கட்டர். இவர் எதிர் பார்த்தபடி பதில் சாதகமாக வரவில்லை. அந்த காலகட்டத்தில் வீட்டை விட்டு ஓடிப் போகும் செல்வந்தர் பலருக்கும் போக்கிடமாக இருந்தது இரண்டு இடங்கள். ஒன்று டிராமாகக் கம்பெனி, இன்னொருன்று தாசிகள் வீடு. அதையும் விட்டு வைக்க வில்லை வெங்கட்டர். ஒவ்வொரு டிராமாக் கம்பெனியாக அலைந்தார். தெரிந்தவர்களிடம் எல்லாம் சொல்லி தாசி வீடுகளில் சோதனை போனச்சொன்னார். எங்கும் ராமசாமி சிக்கவில்லை.

ராமசாமி அங்கு வந்திருக்கிறானா.. எனக்கு அவன் மீது கோபம் இல்லையென கூறுங்கள் என்று ஈரோட்டுக்கு வெளியே இருக்கும் பல மைனர்களுக்கு கடிதம் எழுதினார். ஆனால் எங்கிருந்தும் இவர் எதிர் பார்த்த பதில் இல்லை.

அனா கணக்கில் காசு புழங்கிய அக்காலத்தியேயே ராமசாமியைத் தேடி சுமார் இரண்டாயிரம் ரூபாய் வரையும் செலவளித்தார் வெங்கட்டர். ஆனால் அனைத்தும் பட்ட மரத்திற்கு விட்ட நீராகி விட்டது. இனி பையன் எங்கும் கிடைக்க மாட்டான். ஒரு பையனை இழந்தோம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள் குடும்பத்தினர்.

பெயருக்கு அப்படியான முடிவுக்கு வந்துவிட்ட போதிலும், ஈ.வெ.ரா.வைப் பற்றி பேசாத நாளே இல்லை எனலாம். கடைக்கு வந்து போகும் அனைத்து வியாபாரிகளிடமும் பையனைப் பற்றிய தகவல்களை சொல்லிக்கொண்டே இருந்தார் வெங்கட்டர்.

****

பெரியார் சில சம்பவங்கள்…

பெரியாரை வடலூரில் இருக்கும் வள்ளலாரின் வாழ்விடத்தைச் சுற்றிக் காண்பிப்பதற்காக அழைத்துச் செல்கிறார்கள். நடக்கவே சிரமப்பட்டு தட்டுத் தடுமாறி ஒவ்வொரு இடமாகப் பார்த்தபடி வந்தார் பெரியார். அம்மண்டபத்தின் ஒவ்வொரு பகுதியையும் விளக்கியபடி ஊரன் அடிகளும் மற்றவர்களும் உடன் வருகிறார்கள். ஒரு பிரதான அறைக்குள் மற்றவர்கள் நுழைய, வாசலிலேயே நின்று விடுகிறார் ஈ.வெ.ரா.

உடன் நடந்து கொண்டிருந்தவர்களுக்கு குழப்பம். ஏன் நின்றுவிட்டார்.. காரணத்தை ஈ.வெ.ராவிடமே கேட்க, அந்த அறையின் முகப்பில் மாட்டப்பட்டிருந்த அறிவிப்பினைக் காட்டுகிறார் பெரியார்.

அதில் கொலை,புலை, தவிர்த்தவர்கள் உள்ளே வரலாம் என்று எழுதி இருக்கிறது.

பெரியாரோ சுத்த அசைவம். அறிவிப்பை மீறி எப்படி உள்ளே போக முடியும்?! ஊரன் அடிகளோ கட்டாயப்படுத்தி, ”பரவாயில்லை. நீங்கள் வாருங்கள். உங்கள் மீது எங்களுக்கு
மிகுந்த மரியாதை உண்டு” என்கிறார்.

”உண்மைதான் .. அதைப் போலவே நீங்கள் வைத்திருக்கும் அடிப்படைக் கொள்கைகளையும், நான் மதித்தால் அல்லவா, நீங்கள் எனது கருத்துக்கள் மீதும் மரியாதை வைப்பீர்கள்? மற்றவர்கள் உங்களிடம் எப்படி எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர் பார்க்கிறீர்களோ… அப்படி நீங்களும் மற்றவர்களிடம் நடந்து கொள்வதற்குப் பெயர்தான் ஒழுக்கம். வாங்கய்யா.. மற்ற பகுதிகளைப் பார்ப்போம்..” என்று அவரின் அழைப்பையும் மீறி திரும்பி நடக்கலானார் ஈ.வே.ரா.

எல்லூரில் ராமசாமி இறங்கிய போது இரவு நேரமாகி விட்டது. சுப்பிரமணிய பிள்ளையின் சரியான விலாசமும் கையில் இல்லை. ஈரோட்டில் மராமத்து இலாக்காவில் பணியாற்றியவர் என்ற தகவலும், அவரது அடையாளமும் தவிர வேறு ஏதும் தெரியாது. ரயில் நிலையத்தில் சிலரிடம் இதை கூறி விசாரித்தார். உருப்படியான பதில் கிடைக்க வில்லை.

கால் போன போக்கில் அப்படியே நகரத்துக்குள் வந்தார். எதிர் பட்ட தமிழர்கள் சிலரிடம் விசாரித்த போது அவரது வீட்டு விலாசம் தெரிந்தது, சுப்பிரமனியம் வீட்டை நோக்கி நடக்கலானார் ஈ.வே. ராமசாமி.

நேரம் நள்ளிரவை தொட்டுக்கொண்டிருந்தது. வீட்டை அடையாளம் கண்டு, கதவைத் தட்டினார். ‘எவரூ..’ என்று சத்தம் வந்ததே ஒழிய கதவு திறக்கப்படவில்லை. ‘ஈரோட்டு ராமசாமி வந்திருக்கேன்’ என்று இவரும் தெலுங்கில் சொன்னபிறகு கதவு திறக்கப்பட்டது. கதவைத் திறந்த சுப்பிரமணியத்துக்கு, உடல் மெலிந்து, மொட்டைத் தலையுடன் இருக்கும் ராமசாமியை அடையாளம் தெரியவில்லை. ‘நீங்க..’ என்று வார்த்தையை அவர் இழுத்தார். தன்னை அடையாளம் தெரியாமல் தான் சுப்பிரமணியம்
குழம்புகிறார் என்றுணர்ந்த ஈ.வெ.ரா, தன்னை விபரமாக அறிமுகம் செய்து கொண்டார்.

நம்பவே முடியாமல் அவரை கூர்ந்து நோக்கியதும், முகம் பிடிபட்டது. மகிழ்ந்து போன சுப்பிரமணியம் ராமசாமியை வீட்டுக்குள் அழைத்து உபசரித்தார். மாற்று உடைகளை கொடுத்து ஆண்டிக் கோலத்தில் இருந்து விடுதலையாக்கினார். நடுநிசியிலும் ராமசாமிக்காக அவசர அவசரமாக உணவு தயாரித்து வழங்கப்பட்டது.

தந்தையோடு கோபம் கொண்டு தான் வீட்டை விட்டு ஓடிப் போனது தொடங்கி, மோதிரத்தை விற்று எல்லூர் வந்து சேர்ந்தது வரை எல்லா கதைகளையும் சுப்பிரமணியத்திடம் கூறினார்.

வியந்து போன அவர், ‘அப்பாவுக்கு தகவல் கொடுத்திடலாமா’ என்று கேட்க, ‘அப்படி
செய்வதாக இருந்தால் தான் மீண்டும் ஓடிவிடுவேன். உங்களுக்கு தொல்லையில்லை எனில் என்னை தங்க வைத்திருங்கள்’ என்று கேட்டுக்கொண்டார் ஈ.வே.ரா. தான் யாருக்கும் தகவல் கொடுக்க மாட்டேன் என்று சுப்பிரமணியமும் உறுதியளித்தார். அவர் வீட்டிலேயே விருந்தினராக தங்கிக்கொண்டார் ராமசாமி.

எத்தனை நாட்களுக்குத்தான் சும்மா உண்டு, உறங்கி, கதை பேசியே நாட்களை கழிக்க முடியும். ஒரு மாதம் தங்கியாகிவிட்டது. ஊரைச் சுற்றிப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் காலாற நடக்கலானார் ராமசாமி. மார்க்கெட் பக்கம் வந்ததும், பழைய வியாபர உற்சாகம் தொற்றிக்கொண்டது. ஒவ்வொரு கடையாகப் போய் பொருட்களின் விலை கேட்டு, அதன் தரம் பார்த்தபடியே நடக்கலானார்.

ஒரு விடுமுறை நாளில் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்க, வேலையாள் ஒருவரையும் அழைத்துக்கொண்டு சுப்பிரமணியமும், ஈ.வெ.ரா.வும் மார்க்கெட் பக்கம் போனார்கள். தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தார். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ராமசாமி அடுத்த கடைக்கு போனார். அது ஒரு எள் கடை. அங்கே ஒருவர் எள்ளை அளந்து கொண்டிருந்தார். ஒரு கைப்பிடி எள்ளை எடுத்து இரண்டு கையாளும் கசக்கி நுகர்ந்து பார்த்தார் ராமசாமி. அளந்து கொண்டிருந்தவரிடம் எள்ளின் விலையை விசாரித்தார். அவர் விலை சொன்னதும் கையில் எடுத்த எள்ளை அப்படியே போட்டு விட்டு சென்றுவிட்டார். அது எள் வியாபாரியான ஸ்ரீராமுலு என்பவருடையது. அவருக்கு எள்ளின் தரம் பார்த்து, விலை கேட்டுச் சென்ற நபர் பெரிய வியாபரியாகத்தான் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்துகொண்டார். கடையை விட்டு வெளியே வந்தௌ ராமசாமி எங்கே போகிறார் என்பதை நோட்டம் விட்டார். ராமசாமி அடுத்த கடைக்குள் போன சிறிது நேரத்தில் சுப்பிரமணியமுடன் வெளியே வந்தார். பின்னடியே பொருட்களை சுமந்தபடி வேலையாள்.

ஸ்ரீராமுலு, அவர்களின் பின்னால் போய்க் கொண்டிருந்த வேலையாளை நிறுத்தி ராமசாமியைப் பற்றி விசாரிக்க, ஈரோட்டு வெங்கட்ட நாயக்கர் மகன் இவர் என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

ஸ்ரீராமுலுவால் பொறுக்க முடியவில்லை. எத்தனை முறை நான் ஈரோட்டுக்கு சென்று வெங்கட்டரிடம் வியாபரம் செய்திருப்பேன். ஆனால் அவரின் மகன் என் கடையில் பொருள் வாங்காமல் வேறு எங்கெல்லாமோ வாங்கிப் போகிறார். அன்றைய தினமே, ”உங்கள் மகன் என் கடைக்கு வந்து எள்ளை எடுத்துப் பார்த்து, விலை கேட்டு, வேறு எங்கேயே வாங்கிவிட்டுப் போகிறார். விலை படியவிஒல்லை என்றால் சொல்ல வேண்டியது தானே.. நான் குறைத்திருக்க மாட்டேனா… எத்தனை முறை உங்களிடம் வணிகம் செய்திருப்பேன். நாணயம் குறைவாக நடந்துகொண்டதுண்டா..நான்! தங்கள் மகனுக்கு கடிதம் எழுதுங்கள்.. என்னிடமும் வந்து வணிகம் செய்யுமாறு எழுதுங்கள்” என்று ஒரு கடிதத்தை எழுதி வெங்கட்டருக்கு அனுப்பி வைத்தார் ஸ்ரீராமுலு.

கடிதம் பார்த்த வெங்கட்டர் நம்முடியாமல் கடிதத்தை மீண்டும் மீண்டும் பல முறை
வாசித்தார். வீட்டில் எல்லோருக்கும் தகவலைச் சொன்னார். குடுப்பத்தினர் அடைந்த மகிழ்ச்சி அளவில்லாதது. இனி கிடைக்கவே கிடைக்காது என்று முடிவு செய்து விட்ட ஒரு அவசியமான பொருள் திரும்பக் கிடைத்தால் எவ்வளவு பெரிய மகிழ்ச்சி ஏற்படுமோ, அது போல பலமடங்கு அதிகமான சந்தோசத்தில் துள்ளிக்குதித்தனர் குடும்பத்தினர். வெங்கட்டருக்கு இருப்பு கொள்ள வில்லை. உடனடியாக இருவரை உடன் அழைத்துக்கொண்டு ஸ்ரீராமுலுவைத் தேடி புறப்பட்டார்.

ராமசாமி வரமாட்டேன் என்று முரண்டு பிடித்தால் என்ன செய்வது, அதனாலேயே இருவரை அழைத்துக்கொண்டார். மாலை வேளையில் ஸ்ரீராமுலுவின் கடைக்குப் போய் சேர்ந்தார். அவரிடம் விபரம் பெற்றுக்கொண்டு, சுப்பிரமணிய பிள்ளையின் முகவரியையும் பெற்றுக்கொண்டு, அவர் வீடு நோக்கி புறப்பட்டனர்.

(தொடரும்)

This entry was posted in பெரியார் வரலாறு. Bookmark the permalink.

3 Responses to 9. மாட்டிக்கொண்ட ஈ.வெ.ரா.

 1. இளா says:

  நல்ல வேகம். துணுக்கும் அருமை..

 2. கவிதா says:

  நடை மிகவும் அருமை. புதிய செய்திகளை நிறைய தெரிந்துக்கொண்டேன். ஆர்வமுடன் உள்ளேன் மேலும் தெரிந்துக் கொள்ள…

 3. சிவஞானம் ஜி says:

  தட்டச்சுப் பிழைகள் தவிர்க்கப்பட்டால்
  இன்னும் மெருகேறும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.