சாமியாட்டம்- சிறுகதை

ஆடி மாதம் முழுவதும் சென்னையில் இருக்கும் எல்லா அம்மனுக்கும் பாலாபிஷேகம் நடக்கிறதோ இல்லையோ நிச்சயம் கூழாபிஷேகம் நடந்துவிடுகிறது. தெருவுக்கு தெரு இருக்கும் சின்னஞ்சிறு அம்மன் கோவிலிலும் கூழ் ஊற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மொட்டை போடுவதாக நேர்த்தி செய்வது போல, கூழ் ஊற்றுவதை நேர்த்தி செய்து ஆடிமாதத்தில் நிறைவேற்றுகிறார்கள். தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் ராமேஸ்வரம் ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதம் தொடங்கி புரட்டாசி மாத இறுதி வரை பல்வேறு திருவிழாக்களால் களைகட்டும்.

அதில் மிகவும் விசேஷமானது ராமநாதசாமியின் திருக்கல்யாணமும், தபசுத்திருவிழாவும். இதைப் பார்ப்பதற்கென்று வட இந்தியாவிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். அதுபோல, உள்ளூர் வீதிகளில் இருக்கும் சின்னஞ்சிறு அம்மன் கோவில்களில் முளைப்பாரி திருவிழா நடக்கும். கோவில் அருகிலேயே ஓலைக்குடிசை போட்டு, அதில் பாரி வளர்ப்பார்கள். தினம் இரவினில் கோவில் அருகில் ஒயில் ஆட்டமும் நடைபெறும். பாரி கரைப்பதற்கு முதல் நாள் விடியவிடிய ஓயிலாட்டம் போட்டி மாதிரி எல்லாம் நடக்கும்.

புரட்டாசி நடுவில் எல்லை காக்கும் சாமிகளுக்கும் திருவிழா நடக்கும். பத்துநாள் திருவிழாவில் கடைசி நாளில் பூக்குழி திருவிழா நடக்கும். இது மற்ற திருவிழாக்களைப் போல ஒரு குறிப்பிட்ட ஏரியாவுக்குள் அடங்காது. எல்லை காக்கும் சாமியின் திருவிழா என்பதால்.. சாமி ஊர்வலம், சாதி வித்தியாசம் பார்க்காமல் எல்லா ஏரியாவுக்குள்ளும் புகுந்து போகும்.

கடற்கரையை ஒட்டி இருக்கும் சன்னதித்தெருவில் உள்ளது உஜ்ஜைனி மகாகாளி கோவில். இதன் வாசலில் தீமிதிப்பதற்காக விறகுகளை அடுக்கி, மாலையிலேயே எரியூட்டத் தொடங்கி விடுவார்கள். அதனால் அந்த தெருவுக்குள் போக்குவரத்தையும் நிறுத்தி விடுவார்கள். விறகு கட்டைகள் எரியூட்டப்படும் இடத்தில் தெருவின் இருபக்கமும் கொஞ்சம் இடம் இருக்கும். இந்தப்பக்கம், அந்தப்பக்கம் போகிறவர்களுக்கு அது தான் வழி. அப்படி கடந்து போகும் போதே.. தீயின் அனல் உடம்பைச்சுடும்.
ஊரில் இருக்கும் அத்தனை காவல் தெய்வங்களும் ஊர்வலமாக சென்று தீ மிதிப்பதை பூக்குழி இறங்குவது என்று சொல்லுவோம். பெரிய கோவிலுக்கு அருகிலேயே இது நடப்பதால் ராமேஸ்வரத்திற்கு வந்திருக்கும் வட இந்திய,வெளிநாட்டு பயணிகளின் கூட்டமும் அலைமோதும். விதவிதமான கேமராக்களில் சாமியாடிகள் பூக்குழியில் இறங்குவதை அவர்கள் படம்பிடித்துக் கொள்ளுவார்கள்.

உஜ்ஜைனி கோவிலில் இருந்து தான் ஊர்வலம் தொடங்கும். மதிய நேரத்தில் பூசாரி சங்கரன் பிள்ளை முதலில் கிளம்புவார். தலையில் வைக்கப்பட்டிருக்கும் சாமி கரகத்துக்கு அழகாக அலங்காரம் செய்திருப்பார்கள். அவரோடு உஜ்ஜைனி அம்மனை வணங்குபவர்களும் அவரைப் பின் தொடர்வார்கள். தெற்குத்தெரு கரையோரம் இருக்கும் கருப்பண்ணசாமி கோவிலுக்கு போய், அங்கே ஒரு ஆட்டம் ஆடிவிட்டு, அக்கோவில் பூசாரி சதாசிவ பிள்ளையின் மேல் கருப்பண்ணசாமி வந்தவுடன் அங்கிருந்து அப்படியே கிளம்பும் ஊர்வலம். அடுத்ததாக பெரிய ஆஸ்பத்திரிக்கு எதிரில் இருக்கும் முனியப்பசாமி கோவிலுக்கு ஊர்வலம் செல்லும், அங்கே தயாராக ஆடிக்கொண்டிருக்கும் சங்கரலிங்கம் பூசாரி ஊர்வலத்துடன் சேர்ந்துகொள்வார். தலையில் கரகம், கதாயுதம், வேல்கம்பு போன்ற ஏதாவதொன்றை சாமியாடிகள் தூக்கி வருவார்கள்.

இப்படியாக ஒவ்வொரு காவல்தெய்வக்கோவிலையும் அடைந்து, அங்கிருக்கும் சாமியாடியுடன் இன்னொரு கோவில் நோக்கி ஊர்வலம் போகத்தொடங்கும். சாமியாடிகளும் அவர்களைத்தொடரும் மக்களும் என ஊர்வலம் உற்சாகத்துடன் இருக்கும். சாமியாடிகளுக்கு முன்னால் உறுமி மேளமும், பறையும் அடித்துக்கொண்டு போவார்கள். மெதுவாக தாளகதிக்கு ஏற்றபடி போய்க்கொண்டிருக்கும் சாமியாடிகள். சில இடங்களில் ஓடத்தொடங்குவார்கள். ஒரு சாமியாடி ஓடினால் இன்னொரு சாமியாடியும் அவரைத் தொடர்ந்து ஓடுவார். அவர்களைத் துரத்தியபடியே மக்களும் ஓடுவார்கள்.

டின்..டின்.. டண்டக்கும்.. டண்டக்கும்.. டின்..டின்.. டண்டக்கும்.. டண்டக்கும்..டின்..டின்.. என்று கொட்டுச் சத்தத்துடன் இவர்கள் ஒவ்வொரு தெருவாக கடக்கும் போதும் வீதியில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் வீறிட்டு அழத்தொடங்கும். தெருநாய்கள் வாலை பின்னாங்காலுக்குள் மடக்கிக்கொண்டு, குரைத்தபடியே ஓடும்.

ஆண்களும் பெண்களுமாய் குடம் குடமாய் தண்ணீர் எடுத்துவந்து சாமியாடிகளின் கால்களில் ஊற்றி, திருநீறு வாங்கிக்கொள்வார்கள். சில இடங்களில் சாமி குறிசொல்லுவதும் நடக்கும்.

சாமி ஊர்வலம் வடக்குத் தெருவில் மூலையில் இருக்கும் வீரபத்திரன் கோவிலில் அடையும் போது அங்கே ஏற்கனவே பூசாரி நடராஜன் சேர்வை ஆடிக்கொண்டிருப்பார். அடுத்து பேச்சியம்மன் கோவில் பூசாரி சிகாமணி நாடார் என எல்லா சாமியாடிகளையும் அழைத்துக்கொண்டு காமராஜர் நகரின் அருகில் இருக்கும் காலனி பகுதிக்கும் வரும். அங்கே இருக்கும் சொடலைச்சாமி கோவிலின் சாமியாடியையும் அழைத்துக்கொண்டு, ஊர்வலம் கிளம்பி உஜ்ஜைனி கோவில் வாசலை அடையும். பின்னர் ஒவ்வொரு சாமியாக குறி சொல்லி, தீக்குள் இறங்கி, மறுபக்கத்தை அடைவார்கள்.

எல்லாச் சாமியும் இறங்கிய பின் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் ஒன்றை தொடுவார் தலைமை சாமியாடியான உஜ்ஜைனி கோவில் பூசாரி. அந்த பெட்டிக்குள் இருக்கும் வண்ண பட்டாடையைப் பொறுத்து, எதிர்வரும் ஆண்டு எப்படி இருக்கும் என்ற ஆரூடம் சொல்லப்படுவது தான் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வு.

மற்ற கோவில்கள் போல, காலனி கோவிலுக்கு கரகம் தூக்கி ஆடும், நிரந்தர சாமியாடி யாரும் கிடையாது. பூசாரி என ஒருவர் இருந்தாலும், சாமியாடும் பொறுப்பு மட்டும் வருடத்திற்கு ஒரு குடும்பம் என்று சுழல் வடிவில் சுற்றி வரும். இம்முறை திருவிழாவுக்கு சாமியாடியாக இருக்கும் வாய்ப்பு வீராச்சாமி குடும்பத்திற்கு வாய்த்திருந்தது. அதனாலேயே வீராச்சாமியின் மனைவி மாரிக்கு தலைகால் புரியவில்லை. வெளியூரில் கட்டிக்கொடுத்த இளைய மகளையும் திருவிழாவுக்கு அழைத்திருந்தாள். இருக்காதா பின்னே.. பல வருடங்களுக்கு பிறகு அந்த குடும்பத்திற்கு இந்த வாய்ப்பு வந்திருக்கிறது. சென்னையில் வேலைப்பார்த்துக்கொண்டிருந்த சரவணனையும் கண்டிப்பாக வந்தே ஆகணும் என்று பிடிவாதமாக சொன்னதால்.. மூன்று நாட்கள் விடுப்பு எடுத்து, திருவிழா காலையில் தான் ஊர் போய் இறங்கினான்.

பெட்டியோடு வீட்டு வாசலை அடைந்த போது, அங்கு விளையாடிக்கொண்டிருந்த விஜி ஓடி வந்து காலைக் கட்டிக்கொண்டது. தங்கையின் நான்கு வயது பெண். அவளைத் தூக்கி கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தான். ‘பாட்டீ.. மாமா வந்திச்சு..’ என்று அவன் தோளில் இருந்தபடியே வீட்டுக்குள் பார்த்து குரல் கொடுத்தது.

“ராசா.. வந்துட்டியாப்பே.., வா..வா.. இன்னும் காணலியேன்னு சித்த முன்னாடிதான் நெனைச்சேன். நல்லவேள சரியா வந்துட்ட.. இல்லாட்டி சொந்தக்காரங்களுக்கு பதில் சொல்லி இருக்க முடியாது. ம்ஹூம்..’

“யம்மா.. அதான் வந்துட்டேன்ல.. விடும்மா..சும்மா சும்மா சொந்தாக்காரங்களை.. நெனைச்சுகிட்டு இப்படி அடிக்கடி பொலம்புற நாளதான் ஒடம்புக்கு கூடக்கூட வருது. மறந்துட்டு ஆவுற சோலியைப் பாருமா..” குரலி சற்றே கடுமையாக சொன்னான் சரவணன்.

அவளும் மூக்கை உறிந்து கொண்டு ‘அதும் சரிதான். நீ போய் சீக்கரம் குளிச்சுட்டு, வா.. இன்னிக்கு வீட்டுல பலகாரம் இருக்கு, சாப்பிடலாம்..” என்றபடியே அவன் கையில் இருந்த விஜியை கீழே இறக்கி விட்டாள். குழந்தை வாசலை நோக்கி ஓடியது.

‘அப்பா எங்கம்மா..’

“அவரு பெரியகோவில் பூசாரிய பாக்கப்போறேன்னு போய் இருக்கார்.. நீ போய் மொதல்ல குளிச்சுட்டு வாப்பா.. சூடா இருக்கிறப்பவே சாப்பிட்டுடலாம்”

சுடச்சுட இட்லி, சாம்பார் சாப்பிட்டு முடித்ததும். அப்படியே நண்பர்களைப் பார்த்து வருவதாகச்சொல்லி தெருவிற்குள் இறங்கினான். மொத்த காலனியும் களைகட்டத்தொடங்கி இருந்தது. மின்சாரக்கம்பங்களில்.. வேப்பிலையும் தென்னை ஓலையில் தோரணமும் கட்டி, தெரு முழுக்க குறுக்கும் நெடுக்குமாக கட்டி இருந்தார்கள்.

எல்லாக் குடிசை வாசலிலும் கோலங்கள் போடப்பட்டிருந்தது. அப்படியே நடந்து முனியசாமியின் டீக்கடையை அடைந்தான். செருப்பு தைக்கும் கடை வைக்க லோனுக்கு அலைந்து பார்த்துவிட்டு, கடைசியில் காலணிக்குள் தேனீர் கடை வைத்துவிட்டான் இவன்.

‘டேய்.. இங்க பார்றா.. யார் வந்திருக்கான்னு.. வாடா மாப்ள.. ஒங்க அப்பா கரகம் தூக்குறார்ன்னு தெரிஞ்ச ஒடனேயே கிளம்பி வந்துட்டியாக்கும். இந்த நாலு வருசத்துல வேற எதுக்காச்சு வந்திருக்கியாடா..’ பால் சட்டியில் கரண்டியை போட்டு கிண்டியபடியே கேட்டான் முனியசாமி.

‘சும்மா சலிச்சுக்காதடா.. எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரவேண்டாமா..? அடிக்கடி லீவுல வர்றதுக்கு நான் என்ன பெர்மெனண்ட் ஸ்டாஃப்பா.. டெம்பர்வெரியா இருக்கும் போது அதிக லீவு போட முடியாதுடா..’

‘சரி..சரி.. பொலம்ப ஆரம்பிச்சுடாத.. கொஞ்சம் கடைய பார்த்துக்க.. நான் போய் சக்கரை வாங்கியாந்திர்றேன்.. பசங்க வர்ற நேரம் தான்’ என்ற படியே.. இறங்கிப் போனான் முனியசாமி. சொல்லிவைத்தது போல அவன் நகர்ந்ததும் ஐந்து பேர் கடைக்குள் வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் சரவணன் முகத்தில் மகிழ்ச்சி படர்ந்தது.

‘டேய் இங்க பாருங்கடா.. நம்ம சென்ட்ரல் கவர்மெண்ட் மாப்ள வந்திருக்காரு..’ என்றபடியே ராமன் இவனருகில் காலியாய் கிடந்த பெஞ்சில் இடம்பிடித்துக்கொண்டான்.

‘என்னங்கடா.. இப்படி பேசுறீங்க..?’

‘சரி வுடுடா.. சும்மா தமாசுக்கு சொல்லி இருப்பான். வேலை எல்லாம் எப்படி போகுது?’ என்று ஆதரவாக தோளில் கை போட்டபடி கேட்டான் முருகன். சரவணனைவிட இரண்டொரு வயது மூத்தவன். பள்ளிப்படிப்பை தாண்டாவிட்டாலும், அதையும் தாண்டி நிறைய படிப்பவன். காலனிக்குள் அம்பேத்கார் படிப்பறை என்று தென்னை ஓலைகளால் குடிசைபோட்டு பல செய்தித்தாள்களை ஒரே இடத்தில் இலவசமாக படிக்க ஏற்பாடு செய்துகொடுப்பவன். இவன் பேசும் அரசியல் விசயங்களை வியப்புடன் பார்ப்பது பகுதிமக்களின் வழக்கம்.

மற்றவர்கள் சரவணனோடு ஒன்றாக படித்தவர்கள். குடும்ப சூழ்நிலை காரணமாக எல்லோரும் பத்தாவதோடு படிப்பை நிறுத்திவிட, இவன் மட்டும் பன்னிரெண்டாவது பாஸ் செய்தான். கூடவே டைப்ரைட்டிங் படித்ததால்.. மத்திய அரசின் டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் வேலை கிடைத்து தற்போது சென்னையில் இருக்கிறான்.

‘மெட்ராஸ் எல்லாம் எப்படி இருக்கு மாப்ள..?’ ஆர்வமாய்க் கேட்ட ராமனின் தந்தை முனிசிபாலிட்டியில் வேலை பார்த்தவர். அவர் பணி நேரத்தில் மரித்துப்போனதால் இப்போது இவனுக்கு அந்த வேலை கிடைத்துவிட்டது.

‘மெட்ராஸுக்கு என்னடா கொறச்சல்.. அது எப்பவுமே நல்லாத்தான் இருக்கு. என்ன.. எல்லாருமே அங்க பரபரன்னு ஓடிகிட்டே இருக்காய்ங்க..’ கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு கிளம்பத் தயாரானான். இப்ப கிளம்பாவிட்டால் அப்புறம் நேரம் போவதே தெரியாம உட்கார்ந்திருக்க வேண்டியதிருக்கும். மெல்ல எழுந்தான் சரவணன்.

‘சரீங்கடா.. நான் கௌம்புறேன்.’

‘ஏண்டா.. அதுக்குள்ள..’

‘இல்லடா.. நான் வந்தப்ப அப்பா வெளியில போய் இருந்தாரு.. இப்ப வந்திருப்பாரு.. அப்புறம் லேட்டாச்சுன்னு வைய்யி.. அவரு ஆடுறாரோ இல்லையே ஆத்தா சாமியாடிடும்.. நாம நாளைக்கு பாக்கலாம்டா’

தேனீர்க்கடையில் இருந்து வீடு நோக்கி நடக்கத்தொடங்கினான். இவனையே எதிர் பார்த்தபடி வாசலில் காத்திருந்தாள் அம்மா.

“எம்மா நேரமா இங்கனயே நிக்குறது.. போனா.. போனயெடம்.. வந்தா வந்தயெடம் இருந்தா எப்படிடா.. போ.. போய் இன்னொரு குளியல் போட்டுட்டு சாமி முன்னாடி புது உடுப்பு எடுத்து வச்சிருக்கேன், அதை போட்டுட்டு ரெடியாகு, ஒங்க அப்பா இப்ப வந்திடும்..” பார்ப்பவர்களையும் தொற்றிக்கொள்ளும் அம்மாவின் பரபரப்பு.

அவன் பின் கட்டுப்பக்கம் போய் குளித்து முடித்துவிட்டு வீட்டினுள் வருவதற்கும், அப்பா வரவும் சரியாக இருந்தது. வழக்கத்துக்கு மாறாக மெலிந்து போய் இருந்தார். சாமியாடி என்பதால், தீமிதிக்க நாற்பது நாள் விரதம் இருந்திருப்பார் போல. கண்ணாடியைப் பார்த்து தலை வாரிக்கொண்டிருக்கும் போதே.. குளித்துமுடித்து, மஞ்சள் வண்ணத்தில் வேட்டியுடன் உள்ளே வந்தார்.

“அடியே.. நான் கோவிலுக்கு போறேன். நீங்க எல்லாம் பின்னாடியே வந்திருங்க” என்றபடியே ஓட்டம் பிடித்தார்.

அம்மா, தங்கை, மாப்பிள்ளை, குழந்தை சகிதமாக அவர்கள் கோவிலை அடைந்த போது, காலனியின் பெருவாரியான மக்கள் குழுமி இருந்தார்கள். சாமியாடியின் குடும்பமே தாமதமாக வந்ததை வினோதமாகப் பார்த்தார்கள்.

தோளில் குறுக்கு வெட்டாக இரண்டு பக்கமாக மாலை போட்டிருந்தார் அப்பா.. கையில் வெள்ளிப் பூண் போட்ட பிரம்பு ஒன்று இருந்தது. பறை சத்தம் பலமாக இருந்தது. சிகப்பு துண்டு ஒன்றை முறுக்கி இடுப்பைச்சுற்றிக்கட்டி பின்னால் பிடித்திருந்தார் மாமா.

டண்டக்கும்.. டண்டக்கும்.. டின்.. டின்.. டண்டக்கும்.. டண்டக்கும்.. டின்..டின்..டண்டக்கும்..
கொட்டுசத்தத்துக்கு ஏற்றவாறு அவர் ஆடிக்கொண்டிருந்தார். அவரின் ஆட்டத்துக்கு ஈடுகொடுத்து சமாளித்துக்கொண்டிருந்தார் மாமா. பெண்கள் வரிசையாக வந்து நின்று குடம் குடமாக நீரை ஆடிக்கொண்டிருந்த அவரின் காலில் ஊற்றினார்கள். இடுப்பில் இருந்த சுருக்கு பையிலிருந்து திருநீறு எடுத்து அப்பா பூசும் போது, குனிந்து, மூக்கின் மேல் கைவைத்து பவ்வியமாக பூசிக்கொண்டார்கள். ஆட்டமும் நிற்காமல் தொடர்ந்து கொண்டிருந்தது. சாந்தியக்கா அவளின் மகளையும் தோளுக்கு உயர்த்தி, திருநீறு பூச வேண்டி நீட்டினாள். அது அப்பாவின் உருவத்தை அருகில் பார்த்து பயந்து அலறியது. திருநீறு கையில் எடுத்து, நெற்றிக்கு மேல் வைத்து, ஏதோ வேண்டிக்கொண்டு குழந்தைக்கு பூசவும், குழந்தையுடன் பின் நகர்ந்தாள் சாந்தியக்கா.

டின்..டின்.. டண்டக்கும்..டண்டக்கும்..டின்..டின்.. டண்டக்கும்..டண்டக்கும்.
காலனிக்குள் மற்ற சாமியாடிகள் கொட்டுச் சத்தத்துடன் பிரவேசிக்கத் தொடங்கியபோது, பறையின் வேகம் கூடியது. எங்கும் பறையொலி எதிரொலித்தது.

முகம் நிறைய இளஞ்சிவப்பு வண்ணத்தில் செந்தூரம் பூசி இருந்த உஜ்ஜைனி சாமியாடி முதலில் வந்து நின்றார். ஒர் அடி இடைவெளியில் எட்டுக்கும் மேற்பட்ட சாமியாடிகள் ஆடிக்கொண்டிருந்தார்கள். சொடலைச்சாமி சிலையைப் பார்த்தபடியே.. நின்ற உஜ்ஜைனி சாமியாடி.. மெதுவாக முன்னும் பின்னும் அசந்தபடி இருந்தார்.

மெதுவாக குனிந்து கோவிலின் கருவறைக்குள் புகுந்துகொண்டார். பின்னாடியே வாசலில் ஆடிக்கொண்டிருந்த அப்பாவும் உள்ளே போனார். கோவில் பூசாரி கதவைச்சாத்தினார். மற்ற சாமியாடிகள் வெளியே ஆடிக்கொண்டிருந்தார்கள். கொட்டுச்சத்தம் இன்னும் உக்கிரமாய் வேகமெடுத்தது.

டின்..டின்.. டண்டக்கும்.. டண்டக்கும்.. டின்.. டின்.. டண்டக்கும்.. டண்டக்கும்.
டண்டக்கும்..டண்டக்கும்..டின்..டின்.. டண்டக்கும்..டண்டக்கும்..டின்..டின்..டண்டக்கும்..டின்.. டண்டக்கும்..டின்.. டண்டக்கும்..டின்.. டண்டக்கும்.. டண்டக்கும்.. டின்..டின்.. டண்டக்கும்..டின்.. டண்டக்கும்.. டின்.. டண்டக்கும்..

பறையொலியின் வேகம் கூடக்கூட.. படீரென கதவு திறந்து உஜ்ஜைனி சாமியாடியும்.. அப்பாவும்.. வேகமாக வெளியே வந்தனர். சில வினாடிகள் வாசலில் நின்று ஆடத்தொடங்கினர். அவர்கள் ஆட்டம் அதிகமானதும் அத்தனை சாமியாடிகளும் வேகமாக ஆடத்தொடங்கினார்கள்.

“ம்..ர்ர்ர்ம்ம்ம்ம்.. சூ..ம்ர்ம்ர்ம்ர்ம்ர்ம்ர்” என்று வினேதமாக ஓசை எழுப்பியபடி நாக்கை வெளி நீட்டி உள்ளுக்கும் மடித்து, செந்தூரம் பூசப்பட்ட முகத்திலிருந்து விழிகளை பிதுக்கி உடலை அப்படியும் இப்படியுமாக முறுக்கி குதித்தார் உஜ்ஜைனி சாமியாடி.

கோவிலை ஒரு சுற்று சுற்றி வந்து, வேகமாக நடக்கத்தொடங்கியது சாமி. தலையில் கரகத்துடன் பின்னாடியே எல்லா சாமிகளும்.. ஸ்.. ஸ்.. என்று பெருங்குரலில் சபதமெழுப்பியபடி பின் தொடர.. மக்களும் கூட்டமாக தொடர்ந்தார்கள்.

காலனிக்கு வெளியே வரும் வரை இருந்த வேகம், வெளியே வந்ததும், குறைந்தது. கடற்கரை நோக்கிப் போகவேண்டுமென்றால்.. பழைய போலீஸ் லைன் தெருவை அடைந்து, கள்ளர் தெரு வழியாக போய், இட்டிப்பிள்ளையார் சந்துவழியாக கிழக்குத்தெருவையும் கடந்து விட்டால்.. அடுத்து கோவில் இருக்கும் சன்னதி தெரு வந்து விடும்.

ஒவ்வொரு தெரு வழியாகப் போகும் போதும், பெண்கள் குடம் குடமாகத் தண்ணீர் ஊற்றி, ஒவ்வொரு சாமியாடியிடமும், திருநீறு பூசிக்கொண்டார்கள். சில இடங்களில் பெண்களும் அருள் வந்து ஆடினார்கள். அவர்களையெல்லாம் ‘ஏய்’ என்று ஒற்றை அதட்டலில் அமைதியாக்கி, திருநீறு பூசிவிட்டு.. சாமி ஊர்வலம் தொடர்ந்தது. காலில் தண்ணீர் ஊற்றும் போது மட்டும் சாமியாடிகள் ஆடாமல், ஒரே இடத்தில் நின்று, முன்னும் பின்னுமாக அசைவார்கள். திருநீறு பூசிக்கொள்ளும் சமயங்களில் சிலருக்கு குறி சொல்லுவதும் நடந்தது.

நான்கு தெருக்களையும் கடந்து, கடைசியாக சன்னதி தெருக்குள் நுழையும் போது மாமா சரவணனை பிடித்துக்கொள்ளும் படி சொல்லி, கொஞ்சம் பின் தங்கினார். பாவம் சாமியாடிகளின் வேகத்துக்கு ஈடுகொடுத்து ஓடிவருவதென்பது லேசுபட்ட காரியமல்ல.

துண்டை இறுக பிடித்துக்கொள்ளும் போது தான் கவனித்தான். எல்லா சாமியாடிகளின் கால்களிலும் ஈரமிருந்தது. தூசி படிந்த அப்பாவின் காலில் மட்டும் சொட்டுக் கூட ஈரமில்லை. இடுப்பில் இருந்த சுருக்குப் பை கூட பிரிக்கப்படாமலேயே இருந்தது.

(அக்டோபர் 2010)

நன்றி:- குமுதம் வார இதழ் 27.10.2010

இங்கே க்ளிகினால் பிடிஎப் வடிவில் படிக்கலாம்!


Comments

4 responses to “சாமியாட்டம்- சிறுகதை”

  1. வாழ்த்துக்க‌ள்..

  2. இது உரையாடல் போட்டிக்கு எழுதுனதாண்ணே..!

  3. zubair Avatar
    zubair

    தல…

    இந்த புத்தகத்தோட துபாய் பதிப்பும் ஸ்கேன் பண்ணிட்டேன் 🙂

    ஆனா இதுல 270ம் பக்கம் போட்டிருக்கானுக.. யூ வான்ட்???

  4. பொன்ஸ் Avatar
    பொன்ஸ்

    i dint get it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *