எழுத்துக்கு கிடைக்கும் மரியாதை எழுதியவரின் பெயருக்கானது

கவிதையின் அறிமுகம் எனக்கு ஏற்பட்டது நண்பர்களால் தான். சிறுவயதிலேயே காமிக்ஸ், அம்புலிமாமா போன்ற கதை புத்தகங்கள் படிக்க தொடங்கி விட்டாலும்,எட்டாவது படிக்கும் போதே நூலகத்தில் உறுப்பினர் ஆனேன். அங்கும் வாண்டுமாமா, அழ.வள்ளியப்பா, போன்ற எழுத்தாளர்களின் கதைத்தான் படித்து வந்தேன். அப்புறம், மாத நாவல்களின் அறிமுகம் ஏற்பட்டது.  கவிதையின் அறிமுகம் மட்டும் கொஞ்சம் தாமதமாகத்தான் தொடங்கியது. எட்டுக்கும் மேற்பட்ட நண்பர்கள் குழாம் அரட்டையில் ஈடுபடும்போது, எங்களின் பேச்சில் அனேகமாக இலக்கியமும், அரசியலுமே மையமாக இருக்கும்.

கம்பனிடம் ஒரு கேள்வி என்ற கவிதையை ஒரு பேச்சாளரின் கூட்டத்தில் கேட்டு, வியந்து போய் நண்பர்களிடம் அதை சொல்லியபோது தான் தெரிந்தது, அது வைரமுத்து எழுதிய கவிதை என்று. பிறகு நூலகத்தில் வைரமுத்து கவிதை புத்தகங்களை தேடி எடுக்க ஆரம்பித்தேன். தொடர்ந்து அவருடைய கவிதை நூலை எடுப்பதைக்கண்ட எங்கள் ஊர் நூலகர் துரைராஜ் என்பவர், மு.மேத்தாவை அறிமுகப்படுத்தினார். அப்புறம் அப்துல்ரகுமான், மீரா, என்று என் தளம் விரிவடைந்தது. இந்தசமயத்தில் நானும் கவிதை என எழுதிப் பார்த்தேன். எழுதியதை நண்பர்களிடம் சொல்லிய போது, புறக்கணிப்பும், சிரிப்பும் எழுந்தது.

என்னுடைய தாய் மொழி தமிழ் இல்லை என்ற எண்ணத்தினால்தான் இந்த உதாசீனம் என்று எனக்கொரு ஐயம் இருந்து கொண்டே இருந்தது. அதை சோதித்துப் பார்ப்பதற்காக, ஒரு பெயர் பெற்ற கவிஞரின் கவிதையொன்றை என் கவிதையென நண்பர்கள் வட்டத்தில் முன் வைக்க, அதற்கும் வழக்கமான மறுதலிப்பே கிடைத்தது. அதன்பின் நான் அதை எழுதிய உண்மையான எழுத்தாளர் பெயரைச் சொல்ல, மற்றவர் முகத்தில் அசடு வழிந்தது. இந்த சம்பவம் தந்த துணிச்சலில் என் கவிதைகளைப் பெரிய கவிஞர்கள் எழுதியதாக அங்கே சொல்லத் தலைப்பட்டேன். நியாயமான விமர்சனங்கள் வரத் தொடங்கியபோது புரிந்தது, இங்கே எழுத்துக்கு கிடைக்கும் மரியாதையில் பெரும் பங்கு எழுதியவரின் பெயருக்கானது என்று.

அந்த சமயத்தில்தான் தினபூமி நாளிதழ் தொடங்கப்பட்டிருந்தது(1994). அதற்கு கவிதைகளை அனுப்பினேன். பிரசுரமானது. நண்பர்கள் வட்டம் என் எழுத்தை அங்கீகரிக்கத் தொடங்கியது.  முதல் கவிதை வந்த அன்று, கவிதை வெளியாகியிருந்த இலவச இணைப்பை கையில் வைத்துக் கொண்டு தெருவில் வருவோர் போவோரிடமெல்லாம் காட்டி சந்தோஷப் பட்டுக் கொண்டிருந்தேன்.

ஞாயிறு பூமியில் வந்த அக்கவிதையை திரும்பத்திரும்ப எத்தனை முறை படித்திருப்பேன் எனத்தெரியாது. அவ்வளவு சந்தோசம் என்னுள் எழுந்தது. எழுதத்தொடங்கிய காலத்தில் நான் பலமுறை நிறைய பத்திரிக்கைகளுக்கு அனுப்ப படைப்புகள் ஒரே வாரத்தில் என் வீட்டு வாசலை தட்டும். அப்படி அவை எல்லாம் எனனிடமே ஏன் திரும்ப வருகின்றன என்ற சந்தேகம் எழத்தொடங்கியது.

முதல் படைப்பு வெளியான பின், தொடர்ச்சியாக பல பத்திரிக்கைகளிலும் என் படைப்புகள் வரத் தொடங்கியது. கவிதை, சிறுகதை என்று எழுத கற்றுக்கொண்ட தருணம் அவை. அதன் பின் ஹைக்கூ கவிதைகளின் பால் கவனம் திரும்பி, அதை அதிகமாக முயற்சிக்கத் தொடங்கினேன். தோழர் மு. முருகேஷ் ஹைக்கூ என்ற வடிவத்தை புரிந்து கொள்வதில் நிறைய உதவினார். தோழர்கள் கவித்துவன், பாட்டாளி ஆகியோரின் அறிமுகம் திருப்பரங்குன்றத்தில் நடந்த த.மு.எ.ச மாநில மாநாட்டில் கிடைத்தது. அவர்கள் மூலம் சிறுபத்திரிக்கைகள் உலகில் நுழைந்தேன்.

வாழ்க்கைச்சுழல் என்னை தமிழகத்தில் இருந்து நாடுகடத்தியது. மும்பையில் தஞ்சமடைந்தேன். அங்கு போன பிறகும் என் எழுத்தார்வம் குறையவில்லை. அங்கிருந்து வெளியான தமிழ்ப் பத்திரிக்கைகளிலும், சிற்றிதழ்களிலும் தொடர்ந்து எழுதத்தொடங்கினேன். தமிழகத்தில் இருந்த படைப்பாளிகளுடன் கடிதம் வழி உறவும் தொடர்ந்துகொண்டிருந்தது. மும்பையில் வாழும் போது நட்பு கொண்ட நண்பன் மதியழகன் சுப்பையா, என் ஹைக்கூ கவிதைகளை நூலாக தொகுக்கலாம் என்று தூண்டி விட்டான்.

அதை செய்து முடிந்தவர்கள் கோவையைச் சேர்ந்த த.மு.எ.ச நண்பர்கள் ஜெ.பாலா, ந.முத்து, சோ.கிருஷ்ணகுமார், கோவிந்தராஜன் ஆகியோர் தான். மும்பையில் இருந்து தபால் வழி நான் அனுப்பிய ஹைக்கூ கவிதைகளில் தொகுப்புக்கு தேவக்யான நூறு கவிதைகளை அவர்களே தேர்வு செய்து வடிவமைத்து, அச்சிட்டிருந்தார்கள். வெளியீட்டு விழாவுக்காக கோவை வந்த போது தான் நூலை முதலில் பார்த்தேன். செக் புக் போன்ற வடிவத்தில் இருந்தது தொகுதி.

வடிவத்தில் புதுமை செய்திருந்தது போலவே வெளியிட்டு விழாவையும் புதுமையாக்கி இருந்தார்கள். அவர்களின் முயற்சியால் இரண்டாயிரமாவது வருடத்தில் (1999. டிச. 31 நடுநிசி 00:00:01) முதல் புத்தகமாக ‘இதயத்தில் இன்னும்’ ஹைக்கூ நூலை கிணத்துக்கடவு த.மு.எ.ச கிளையின் மூலம் விழா நடத்தி வெளியிடப் பட்டது.

இன்று பல்வேறு பத்திரிக்கைகளில் கவிதைகளையும், சிறுகதைகளையும் எழுதி விட்டேன். திருநங்கைகள் குறித்தான ’அவன் – அது = அவள்’ நாவல் 2008ஆம் ஆண்டு வெளியானது. இணையத்திலும்  http://216.185.103.157/~balabhar/blog என்ற முகவரியில் இயங்கி வருகிறேன். ஆனாலும்.. முதல் பிரவேசம் நிகழ்ந்த இரவை மறக்க முடியாது.

(புத்தகம் பேசுகிறது- நவம்பர்2010 இதழில் முதல்பிரவேசம் பகுதியில் வெளியானது)

கீற்று தளத்தில்- இங்கே!


Comments

10 responses to “எழுத்துக்கு கிடைக்கும் மரியாதை எழுதியவரின் பெயருக்கானது”

  1. வாழ்த்துகள் தல, கலக்குங்க 🙂

  2. வாழ்த்துகள் தல, கலக்குங்க 🙂

  3. வாழ்த்துகள் தல…!

    //தோழர் மு. முருகேஷ் ஹைக்கூ என்ற வடிவத்தை புரிந்து கொள்வதில் நிறைய உதவினார். //

    இவருடைய ஹைக்கு தொகுப்பு வாசித்திருக்கிறேன்!

  4. வாழ்த்துகள் தல!

  5. ஆமா தல, தமிழில் ஹைக்கூவில் முமுவுக்கு பெரும் பங்கு உண்டு.

  6. நன்றி சென்ஷி

  7. //என்னுடைய தாய் மொழி தமிழ் இல்லை//
    ??????

    அண்ணே …… வாழ்த்துகள்

    அன்புடன்
    பா.சரவணன்

  8. இதயத்தில் இன்னும் எனும் உங்கள் கவிதை தொகுப்பை பணம் கொடுத்து வாங்கிய உங்களின் முதல் வாசகன் நான் தான்.முதலில் பணம் கொடுத்து வாங்கியது நான் தான் என்று நீங்கள் தான் சொன்னீர்கள்.(40 ரூபாய் என்று ஞாபகம்)அந்த சமயத்தில் உங்கள் நன்பர்களுக்கு எல்லாம் இலவசமாய் தான் கொடுத்தீர்கள்.(நானும் உங்கள் நன்பர் தான்)ஜிகினாபோல் மினுமினுப்பாய் எழுதும் ஒரு பேனாவில் என்றும் அன்புடன் எஸ்.பாலபாரதி கையொப்பம் செய்து கொடுத்தீர்கள்.அப்பொழுது தான் நீங்கள் மும்பையில் இருந்து இராமேஸ்வரம் வந்து இருந்தீர்கள்.கவிதை தொகுப்பை நான் வாங்கிய இடம் மேலவாசலில் உள்ள விநாயகர் கோவிலுக்கு எதிரில்.என்னை உங்களுக்கு நினைவு இருக்கிறதா?பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *