வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அண்ணன் வண்ணதாசன் வாழ்க!-கேணி-அனுபவம்!!

நாங்கள் கலந்துகொள்ளும் கேணியின் இரண்டாவது கூட்டம் இது.  இதற்கு முன்  ச.தமிழ்ச்செல்வன் கலந்து கொண்ட கூட்டத்துக்கு போனோம். அப்புறம் இன்று. கடந்த முறை போல இல்லாமல் கூட்டம் தொடங்குவதற்கு முன்பே போய்ச்சேர்ந்துவிட்டோம்.

நாங்கள் போன போதே வாசலில் நிறைய இளைஞர்களைப் பார்க்க முடிந்தது. மழையின் காரணமாக கிணற்றடியில் உட்கார முடியாத நிலை ஏற்பட்டிருந்ததால் வீட்டின் உள்ளேயே பாய் விரித்து வைத்திருந்தார்கள். சரியாக மணி 3.50க்கு எல்லாம் சிதறிக்கிடந்தவர்கள் எல்லாம் வீட்டினுள் வந்து அமர்ந்துகொண்டார்கள். கூட்டம் அதிகமாக அதிகமாக.. ’இது ஒரு நெருக்கமான கூட்டம் அதனால எல்லோரும் இன்னும் இணக்கமா உட்காருங்க’ என்று ஞாநி கேட்டுக்கொண்டார். நெருக்கித் தள்ளி உட்கார்ந்து கொண்டார்கள்.

நிகழ்வு சரியாக 4.05க்கு (ஹாலில் இருந்த கடிகாரத்தில்) தொடங்கியது. ஞாநியின் அறிமுகத்துப் பின் பேசவந்தார் வண்ணதாசன். தனக்கு பேசத்தெரியாது என்று தான் பேச்சைத்தொடங்கினார். ஆனால்.. தொடர்ந்து சில இடைவெளிகள் விட்டு 4.45 வரைக்கும் பேசினார்.

முன்னதாக வண்ணதாசனின் புதிய நூல் ஒன்று கூட்டத்திலேயே வெளியிடப்பட்டது. அழகிரிசாமி சாலையில் வண்ணதாசன் ஞாநி வீடு தெரியாமல் விசாரித்துக்கொண்டிருந்த போது, வீட்டுக்கு வழிசொன்ன குமார் என்ற இளைஞரிடம் முதல் பிரதியைக் கொடுத்தார் வண்ணதாசன்.

’எழுத்தாளன் எப்பவுமே வாசகனுக்கு வழிகாட்டுவதில்லை. வாசகர்கள் தான் எழுத்தாளனுக்கு வழிகாட்டுகிறார்கள். அது வீடு கண்டுபிடிப்பதாக இருந்தாலும்’ என்று வண்ணதாசன் சொன்னதும் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.
தனக்கு பேசத்தெரியாது என்று இடையிடையே கூறியபடியே பேசிக்கொண்டிருந்தாலும் அவரின் பேச்சு சுற்றிச்சுற்றி ஒரே இடத்திலேயே இருப்பது மாதிரி தோன்றியது. மேலும் கொஞ்சம் பதட்டமாகவே இருந்தது போலத் தோன்றியது. பேசிவிட்டு அமர்ந்த பின் வாசகர்களுடனான உரையாடல் பகுதி.

இநத உடையாடலின் போது தான் மனிதர் இயல்பாக பேசத்தொடங்கினார் என்றே சொல்லுவேன். எழுத்தைப் போலவே மனிதரின் பேச்சிலும் ஒரு மென்மை இருந்தது. சில இடங்களில் உண்மையான அக்கரையும், இழந்துவிட்டவைகள் குறித்த ஏக்கமும் இருந்தது.

அப்பாவின் விரல் பிடித்து எங்கேயும் போனதில்லை. பொருட்காட்சிக்கு கூட கூட்டிக்கொண்டு போகாத அப்பா என்னங்க அப்பா- என்று அவர் சொன்னது அப்படியே என் குரலாய் எனக்குள் ஒலித்தது. :((

துளித்துளியாய்..

* பாஸ்கர் சக்தி ஏதோவொரு முக்கிய வேளையாக இருந்ததால் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளமுடியவில்லை என்றார் ஞாநி.

* இந்த 65வயதில் எனக்கவே, என் எழுத்தை படித்த வாசகர்களுடன், என் பேச்சை கேட்க வந்த ஒரு கூட்டத்தில் பேசுவது இது தான் முதல் முறை. உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தனது உரையைத் தொடங்கினார் வண்ணதாசன்.

* வந்திருந்தவர்களில் சிலருக்கு ஆனந்த விகடனில் தொடர் எழுதியபின் தான் இவரை அறிமுகமானவர்கள் இருந்தார்கள். இது பற்றி கூறும் போது, ராமகிருஷ்ணனுக்கு அறுபதினாயிரம் புதிய வாசகர்கள் கிடைத்திருப்பார்கள் எனில் எனக்கு ஒரு ஆயிரம் வாகசகர்கள் கிடைத்திருக்கிறார்கள் என்றார். அதிலும் அத்தொடர் வந்த பின் தன்னுடைய விற்காத பழைய புத்தகங்களை தேடி அவர்கள் வாங்கியதிலிருந்து இதைச்சொல்லுவதாக அவ்ர் சொன்னதும் கூட்டம் சிரித்தது.

* எழுதுவதற்கு இலக்கணம் அவசியமா என்று ஒரு கேள்விக்கு, வாழ்க்கையிலயே இலக்கணத்தை தொலைச்சுட்டோம். எழுத்துல யார் இப்ப அதெல்லாம் பார்க்குறாங்க. தேவையில்லைங்க என்றார். (முகத்தில் ஒரு வித இயலாமை அப்போது தோன்றியது)

* இணையத்தில் சில தளங்களைப் படிப்பதாகவும், ஆனால் இணையத்தில் நேரடியாக எழுதப்போவதில்லை என்றும் சொன்னார். கூடவே இணையம் தனது நேரத்தை அதிகமாக எடுத்துக்கொள்வதாகவும், அதனாலேயே எழுதமுடியாமல் போய்விடுவதாகவும் சொன்னார். நாஞ்சில் நாடன் எழுத்துக்களைப் போல, தன்னுடைய எழுத்துக்களையும் சுல்தான் என்பவர் வலையேற்றி வருகிறார் அதுவே போதும் என்றும் சொன்னார்.

* இன்றைய இளைஞர்கள் ஒரு ஞாயிறு மதியப்பொழுதை இப்படி இலக்கியத்திற்காக செலவிடுவதைப் பார்க்கும்போது மகிச்சியாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

* எழுத்தாளன் என்ற முறையில் நான் மக்களிடமிருந்து அன்னியப்பட்டு இருப்பதை விரும்பவைல்லை. எப்போதுமே நான் சாதாரண மக்களில் ஒருவனாகத் தான் இருக்க விரும்புவதாகச் சொன்னார்.

* தன்னுடைய எழுத்து வாழ்க்கையிலிருந்தே பெறப்படுகிறது என்று அவர் கூறியதற்கு, உங்களுடைய கதைகளில் பெரும்பாலும் மென்மையான மனிதர்களே வருகிறார்கள். கடுமையான சொற்களை பயனபடுத்துபவர்கள் கூட இல்லையே என்று கேள்வி கேட்கப்பட்டது.., நான் என்னை சுற்றி இருந்த மனிதர்களின் வாழ்க்கையிலிருந்தே கதைகளை எழுதினேன். அவர்கள் அனைவருமே மென்மனதுக்காரர்களாக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம் என்றார்.

*உலகில் மார்க்ஸியம் தான் அழியாத தத்துவம். இன்னும் அது தன்னை புதுபித்துக்கொண்டே வரும் என்று கூறினார்.

* வண்ண தாசனின் பேசத்தொடங்கிய போது , தாமிரபரணி முன்பு போல இல்லை. இப்போது சுருக்கிப்போய்விட்டது, மணல் கொள்ளை போய்விட்டது என்று பேசினார். அதை நினைவில் வைத்துக்கொண்டு, வாசகர்கள் பேசும் போது பலரும் எழுத்தாளராக நீங்க என்ன செஞ்சிங்க, எழுதுனா மட்டும் போதுமா? ஏன் போராடவில்லை? – என்பது போன்ற கேள்விகள் தொடர்ச்சியாக வந்தது. (பார்க்க: கடந்த கேணி அனுபவம்)

’எல்லாவற்றையும் ஏன் எழுத்தாளன் செய்யனும்னு நினைக்கிறீங்க. அவனுக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு. அவனும் ஒங்கள்ல ஒருத்தன் தான். அவனை ஏன் தனியா என்ன அதைச்செஞ்சியா இதைச்செஞ்சியான்னு கேக்குறீங்க.? நீங்களும் ஏதாச்சும் செய்யுங்க. நீங்க ஆரம்பிங்க.. நாங்களும் சேர்ந்துக்குறோம்’ என்று சொன்னார் வ.தா.

உடனே கூட்டத்தில் இருந்த இன்னொருவர், “சார் தமிழ்நாட்டுல படைப்பாளிங்க மேல மக்களுக்கு நிறைய நம்பிக்கை இருக்கு. அதனால தான் எழுதக்கூடிய அண்ணாவை முதலமைச்சர் ஆக்கினாங்க. அதற்கு பின்னாடி அதே போல ஒரு எழுத்தாளரைத்தான் மக்கள் முதலமைச்சர் ஆக்கி இருக்காங்க. டாக்டர் போராடி பார்க்குறார் மக்கள் ஏத்துக்கலை. கலைஞன் போராடி பார்க்குறான் மக்கள் ஏத்துகலை. நாங்க எழுத்தாளரைத்தான் நம்புறோம் அதனால தான் உங்களை நோக்கி இப்படி கேள்விகள் வருதுன்னு” சொன்னார். விட்டா,  வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அண்ணன் வண்ணதாசன் வாழ்கன்னு கோஷம் போட்டுடுவாங்களோன்னு இருந்துச்சு. (அவ்வ்வ்வ்… எப்படி எல்லாம் யோசிக்கிறாய்ங்கப்பா!)

* கூட்டத்திற்கு எழுத்தாளார்கள் எஸ்.ரா, எஸ்.சங்கர நாராயணன், பாரதிமணி மற்றும் யுகமானியி சித்தன் போன்றோரும் வந்திருந்தனர். கூட்டத்திலிருந்து வெளியே வந்த சமயம் ஷோபா சக்தி, லீனா மணிமோகலையையும் பார்த்தேன். ( நான் பார்த்தவர்கள் மட்டும்)

* பதிவர்களில் அண்ணன் உண்மைத்தமிழன், அதியமான், கிருஷ்ணபிரபு, மற்றும் வெங்கட்ரமணன், பட்டர்பிளை சூர்யா, மதுமிதா, உஷாராமச்சந்திரன் போன்றோரையும் பார்க்க முடிந்தது. ( நான் பார்த்தவர்கள் மட்டும்)

* நடிகர் சார்லி, நடிகை பாத்திமாபாபு ஆகியோரும் வந்திருந்தனர்.

* வீட்டு வாசலில்,  சந்தியா பதிப்பகத்தினர் வண்ணதாசனின் சில புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்தார்கள். பலரும் நூல்களை வாங்கிச்சொன்றனர்.

— எல்லாவற்றையுமே பாஸிட்டிவாக பார்க்கும் மனிதர்களை சந்தித்து பல வருடங்கள் ஆயிற்று. எழுத்தைப் போலவே அச்சு அசலான மனிதரை சந்தித்து வந்த மாலை இனிமையாகவே இன்னும் இனிக்கிறது.

சந்திப்புக்கும், கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்திருந்த கேணி தோழர்களுக்கு நன்றிகள்!!

சுல்தான் வலையேற்றி வரும் வண்ணதாசன் வலைப்பதிவு முகவரி: http://vannathasan.wordpress.com

புகைப்படங்களுக்கு நன்றி: தமிழ்ஸ்டூடியோ காம் ஆல்பம்.

This entry was posted in அனுபவம், மனிதர்கள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அண்ணன் வண்ணதாசன் வாழ்க!-கேணி-அனுபவம்!!

  1. Pingback: வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அண்ணன் வண்ணதாசன் வாழ்க!-கேணி-அனுபவம்!! | வண்ணதாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.