நமக்கேன் வம்பு

ப்ராடிஜி- (PRODIGY)

”என்னோட பையன் ஃபஸ்ட்க்ளாஸுல பாஸ் பண்ணிட்டான்’

‘..ஓ… அப்படியா.. வெரிகுட் அடுத்து என்ன படிக்கப்போறேன்..’
‘எல்லோரையும் போல செக்கெண்ட் கிளாஸ்தான்’

-மேலே நீங்கள் படித்தது, நான் எப்போதோ, ஏதோவொரு பத்திரிக்கையில் படித்த சிரிப்புத்துணுக்கு. நகைச்சுவைக்காக சிரித்தாலும், உண்மையில் குழந்தைகளில் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று யோசித்தோமானால்.. அந்த பிஞ்சுகளின் மேல் நாம் ஏற்றி வைத்திருக்கும் சுமையை உணர்ந்துகொள்ள முடியும்.

சிறுவயதிலேயே வயதுக்கு மீறிய அறிவுடன் இருந்ததாக சொல்லப்படும் திருஞான சம்பந்தர் பற்றி படித்து வளர்ந்த நமக்கு, இக்கட்டுரை ஏதோ குழந்தைகளின் நலனுக்கு எதிராக எழுதப்பட்டுவிட்டதான தோற்றத்தை ஏற்படுத்திவிடும் அபாயமும் இருக்கிறது. ஆனால் குழந்தைகளை குழந்தைகளாகவே இருக்க விடுவதில் நமக்குள் இருக்கும் சிக்கல் குறித்தே பேச விழைகிறேன்.

பத்து வயதில் படிப்பது தவிர, நீங்கள் என்னவெல்லாம் செய்தீர்கள் என்பதையாவது நினைவுபடுத்திப் பாருங்கள். அது விளையாட்டாக இருக்கலாம், வேறு துறைகளில் கவனம் செலுத்தியதாகவும் இருக்கலாம்.

விசயத்திற்குள் போகும் முன் உங்களிடம் கேட்க எனக்கு சில கேள்விகள் உண்டு.

1. ஒரு பத்துவயது சிறுவன் என்னவெல்லாம் செய்வான் என்பதை உங்களால் பட்டியல் போட முடியுமா?

2. ஒரு பத்து வயது சிறுமி என்னவெல்லாம் செய்வாள் என்பதை உங்களால் வரிசைப் படுத்த முடியுமா?

3. அதே வயதுடைய சிறுவனோ, சிறுமியோ என்னென்ன விளையாட்டுக்கள் விளையாடுவார்கள் என்று நினைவுபடுத்தி சொல்லுங்கள்?

4. பள்ளிப் படிப்பு, ஹோம் ஒர்க் தவிர, ஓவியம், பாடல், ஆடல் இப்படி.. வேறு என்னென்ன பணிகளில் அவர்கள் மிக ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்?

இப்படி எதுவுமில்லாமல்.. எப்போதும் புத்தகமும், கையுமாக ஒரு பத்து வயது சிறுமி இருக்கிறாள் என்றால் என்ன நினைப்பீர்கள்? நன்றாக படிக்கும் மாணவி என்றா? சரி.. அதே சமயம்.. பத்து வயதில் அவள் படிக்கும் புத்தகம்.. பத்தாம் வகுப்புக்குறியது என்றால்? அடுத்த ஆண்டோ, அதற்கு அடுத்த ஆண்டோ அவள் பொறியியல் பாடங்களைப் படிக்கப் போகிறாள் என்றால்?  -ஆச்சரியப்பட்டுப் போகாதீர்கள். நான் சொல்லுவதனைத்தும் உண்மை.

சமீபத்தில் ஒரு வார இதழில் ஒரு கட்டுரையை படிக்க நேர்ந்தது. பத்து வயது சிறுமியைப் பற்றி ஒரு செய்தி வந்திருந்தது. அச்சிறுமிக்கு ஐ.க்யூ 220 இருப்பதால்.. அச்சிறுமியால் எல்லா பாடங்களையும் விரைந்து படித்து முடித்துவிடுவதாகவும், அதனால்.. அச்சிறுமிக்கு டபுள் புரமோசன் கொடுக்கவேண்டும் என்று பள்ளி நிர்வாகத்திடம் கேட்டதாகவும், அவர்கள் மறுத்துவிட்டதால்.. இரண்டு மூன்று பள்ளிகளை மாற்றி, அப்படி ஒத்துக்கொள்ளக்கூடிய பள்ளியை தேடிக் கண்டு பிடித்து, சேர்த்திருக்கிறோம் என்று தங்களின் அலைச்சல் பற்றிய ஆதங்கம் பொங்க பேட்டி, கொடுத்திருக்கின்றனர் பெற்றோர்.

அச்சிறுமி மெட்ரிக்குலேசன் பள்ளியில் படிப்பதால் தாங்கள் எதிர் பார்த்த  டபுள் புரமோசன் கிடையாது என்று பள்ளி,கல்வித்துறை கை விரித்துவிட்டதிலும் ஏக வருத்தம் இவர்களுக்கு.

அதோடு தன் குழந்தை குறைந்த வயதில் பெரிய படிப்பு படிக்க அனுமதி அளிக்கவேண்டும் என்பதோடு, அதற்கும் தமிழக முதல்வர் ஆவண செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இதுமட்டுமல்ல.. அக்குழந்தைக்கு மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்காது என்பதால்.. பொறியியல் படிப்பில் சேர்த்துவிட, துடியாய் துடிக்கின்றனர் பெற்றோர். அதோடு மேலைநாட்டு உதாரணம் வேறு. (இதில் கவனிக்க வேண்டியது-பாகிஸ்தானில் சிறுவன் ஒருவன் இதுபோல பட்டம் பெற்றானாம். அதை அங்கே ’பாகிஸ்தானின் பெருமை’ என்று கொண்டாடினார்கள் என்று, நம்மவர்களை உடனே உணர்ச்சி வசப்படச் செய்யும் உதாரணம்)

சில ஆண்டுகளுக்கு முன் குட்டிசாமியார் பரணீதரன்  என்றொரு சிறுவன் அருளாசி வழங்கிய போதும், மணப்பாறை டாக்டர் தம்பதியினரின் 16 வயது மகன் திலீபன்ராஜ் என்ற சிறுவன் ஒருவன் செய்த ஆபரேசன் பற்றி செய்தி வெளியானபோதும் குதிகுதியென குதித்தவர்கள் இப்படியான செய்திகளை கண்டுகொள்வதில்லை. காரணம் அக்குழந்தைகளால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால்.. இப்படி நிர்பந்திக்கப்படும் குழந்தைகள் மற்றவர்களால்.. அதுவும் அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லது என்ற காரணம் காட்டி நிர்பந்திக்கப்படுவதை நாம் கண்டுகொள்வதில்லை.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.. இக்குழந்தையின் ஒத்தவயதுடைய குழந்தைகள் கூட்டத்தோடு இவளால் இணைந்து இருக்க முடிகிறதா? அதற்கு இப்படியான பெற்றோர் அனுமதிக்கின்றனரா? தெளிவில்லை.

சரி.. இவள் பொறியியல் படிப்பை முடித்துவிட்டாள் என்று வைத்துக்கொள்ளுவோம். அடுத்து, அதற்கும் மேலே உள்ள படிப்பு படிக்கலாம். அதன் பின், ஏதாவதொரு நிறுவனம் சி.இ.ஒ பதவி தருகிறேன் என்று வந்து நிற்கலாம். அதன் பின்.. என்னாவது?!

பதின்பருவத்தினரே தங்களுக்கு பிடித்த கல்வியை சரியாக அடையாளம் காணமுடியாமல் இருப்பதாக படிக்கிறோம். இச்சிறுமி தான் என்னவாகவேண்டும் என்பதை இப்போதே முடிவு செய்யும் அளவுக்கு முதிர்ச்சியுடையவராகத்தான் இருப்பரா?

இவர் வளர்ந்த பின் சிறுவயது நினைவு என்று எது நினைவுக்கு வரும். அப்படி வரும்படியான நிகழ்ச்சியில் இவர் வாழ்க்கையில் நடந்திருந்தால் தானே.. எப்போதும் படிப்பு, வெற்றி பெறவேண்டியது, அடுத்த தேர்வு எழுதவேண்டியது என.. போட்டிக்கு தயாராகும் மனநிலையைத்தானே இவளது பெற்றோர் வழங்கி வருகின்றனர்.

இன்னும் மழலை கூட மாறாத அக்குழந்தையின் வயது ஒத்தவர்களும், உடன் படிக்கும்/படித்த மாணவ,மாணவிகளும் இன்னும் பாண்டி விளையாடிக் கொண்டும், கல்கோணாவை காக்க கடி கடித்து இன்னொருவருக்கு கொடுத்துக் கொண்டும், கிருஷ்ணா பூப்போடு என்று பருந்தை பார்த்து கைகள் ஆட்டியும், உடைந்த பல்லை வானம் பார்த்துவிடாமல் மண்ணுக்குள் புதைத்துக்கொண்டும் இருக்கையில்.. இவள் மட்டும் மேலும், மேலும் என படித்துக்கொண்டே இருக்கிறாள்.

இவளாக படிக்கிறாளா.. அல்லது படிக்க வைக்கப்படுகிறாளா தெரியாது. ஆனால்.. அந்த இரண்டு பக்க செய்தியில் இக்குழந்தையின் எக்ஸ்ட்ரா ஆக்டிவிட்டீஸ் (படிப்பு தவிர்த்த மற்றவைகள்) செல்லப்படவில்லை என்பதும் உறுத்துகிறது.

ஐ.க்யூ அதிகமிருப்பதால் அவள் படிக்க வைக்கபடுகிறாள் என்று சொல்லப்படலாம். ஆனால்.. ஐ.க்யூ அதிகமிருப்பது என்பது முளை சம்பந்தப்பட்ட விசயம். சில ஆண்டுகள் கழித்து, தனது பால்யத்தின் நினைவுகளை அசைபோடும் படியான சூழல் அமைந்தால்.. அப்போது அக்குழந்தை நினைத்துப் பார்க்க என்ன மிஞ்சும். இது மனது சம்பந்தப்பட்ட விசயம். அப்போது இழந்தவைகளை திரும்ப பெறமுடியுமா?

பள்ளித் தோழன் அல்லது பள்ளித் தோழி ஒருவரின் நினைவு என்பது கடவாயில் அதக்கி வைத்துக் கொண்ட கல்கண்டுபோல மெலிதான இனிப்பை என்றென்றைக்கும் கசிய விடுகிற விஷயமில்லையா?

இன்று போகும் இதே பள்ளிக்குநாளைக்கும் வருவோம் என்கிற உறுதியில்லாத இந்தப் பிஞ்சு அப்படி ஒரு தோழனை/ தோழியை தேடிக்கொள்ளமுடியுமா?

தகுதிக்கு மீறிய ஏதேனும் ஒரு தேர்வில் தோற்றுப்போனால் அதைத் தாங்கும் வலு அந்தக் குழந்தைக்கு இருக்கிறதா?

இன்று வரை எழுதிய தேர்வில் எல்லாம் வெற்றி என்று இருந்து விட்டு என்றேனும் ஒரு நாள் சிறு தோல்வியைக்கண்டால் ஒடிந்து விழுந்துவிடுமளவு பூஞ்சையாய் அந்தக் குழந்தையின் உள்ளம் இருந்து விட்டால்?

ரியாலிட்டிஷோக்களில் ஒரு சுற்றிலிருந்து வெளியேற்றப்படும் குழந்தைகளின் ரியாக்ஷனெ பரிதாபகரமாக இருக்கையில் குருவிதலைப் பனங்காயாக 10 வயதில் பொறியியல் படிப்புக்கான தேர்வுகளை எதிர்கொள்ளப் போகும் அந்தப் பெண்ணுக்குதோல்வியை சகஜமாக எடுத்துக் கொள்ளும் மன உறுதியை யார் அளிப்பது?

வேரோடும், வேரடி மண்ணோடும் இதுமாதிரியான மழலைகளைப் பிடுங்கி வேறோர் இடத்தில் நட்டுவிட ஏன் துடிக்கிறார்கள் இந்த பெற்றோர்கள் என்பது தான் புரியாத புதிர்.

படங்கள் உதவி: கூகிள்( படங்களின் சுட்டி அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளது)

This entry was posted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு, நமக்கேன் வம்பு and tagged . Bookmark the permalink.

3 Responses to நமக்கேன் வம்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.