முகமொழி – கவிஞர் பாலபாரதி

முகமொழி – கவிஞர் பாலபாரதி


கவிஞர் பாலபாரதி

சமத்துவபுரம்
கழிவுநீர் சுத்தம் செய்ய
அதே கருப்பன்

விறகு விற்க
பேரம் நடந்தது
மர நிழலில்

சாம்பலான குடிசைகள்
அடுக்கப் பட்ட சடலங்கள்
தின்று திமிறும் சா…தீ

புதிய ஊர்
புரியாத மொழி
ஆறுதலாய் அதே நிலா

கழுத்தில் கனத்தது
ஓடிப்போன கணவனின்
தாலி

அன்பை போதிக்கும் மதம்
ஆயுதமேந்தி
ஆண்டவன்

பசிக்கும் வயிறு
சாப்பாட்டுக் கூடை சுமந்தபடி
அவள்

பாஸ்போர்ட் இல்லாமல்
இந்திய எல்லைக்குள்
வெளிநாட்டுப் பறவைகள்

வேகமான காற்றுக்கு
யார் சொல்வது
உதிரும் பூவின் வலி

இதயத்தில் இன்னும்…ஹைக்கூ கவிதைத் தொகுப்பில் இருந்து…

கவிஞர் பாலபாரதி – தமிழ் வலைப்பதிவு வாசகர்களுக்கு இவரைப் பற்றி அறிமுகமே தேவையில்லை. எவரையும் எளிதில் நட்பாக்கிக் கொள்ளும் இனிய மனம் கொண்டவர். கொள்கையில் விட்டுக் கொடுக்காதவர். வலைப்பதிய வந்த குறுகிய காலத்துக்குள் நட்புக்கு நிறைய நண்பர்களையும் அதுபோலவே கொள்கையால் எதிரிகளையும் சம்பாதித்துக் கொண்டவர்.

வலைப்பதிவு வட்டம் தாண்டி பாலபாரதி ஒரு முக்கியமான கவிஞர். சிறந்த சிந்தனையாளர். குறிப்பிடத்தக்க கவிதைகளையும் எழுதியவர். அவரது கவிதை நூல்தான் 2000 ஆவது ஆண்டில் வெளியான முதல் நூல் என்ற வியப்பான செய்தியுடன் அவரது செவ்வி இங்கே…

-oOo-

# கவிஞர் பால பாரதி பிறந்த இடம் எது?

ராமேசுரம் அரசு மருத்துவமணை.

# இளமை நினைவுகள் சில சொல்லுங்கள்.

படிக்கின்ற காலங்களிலேயே மக்கு மாணவன் நான். அதனால் பாடங்களை விட மற்ற விஷயங்களில் அதிக கேள்விகள் எழும். அதனால் அடைந்த தொல்லைகள் ஏராளம். ஒன்பதாவது படிக்கும் போது என் ஆங்கில வாத்தியார்.. ஆங்கில சொற்களுக்கு தமிழ் பெயர் கூறிக் கொண்டிருந்தார். மாணவர்கள் ஆளாளுக்கு.. பேனா, பக்கெட், சைக்கிள் என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் எழுந்து ‘பிளாஸ்டிக்’க்கு தமிழில் என்னவென்று கேட்டேன். அவர் தன்னை கேலி செய்யத்தான் கேட்கிறேன் என்று நினைத்து.. நாலு அடி கொடுத்து பத்துரவுண்டு மைதானத்தை சுற்றி வா..ன்னு கூட ஒருத்தனையும் வேவு பார்க்க அனுப்பிட்டார். ஆனால் உண்மையான ஆர்வத்தில் கேட்கப்போய் வாங்கி கட்டிக்கொண்டது தான் மிச்சம்.

# வாழ்வின் இடப்பெயர்ச்சிகள்?

வீட்டைவிட்டு தனியே இருந்த 96ன் இறுதியில் சொந்த மண்ணை விட்டு, திருச்சியில் போய் சேர்ந்தேன். அங்குமிங்குமென இரண்டொரு இடங்களில் வேலைபார்த்த பின், மும்பைக்கு வண்டியேறினேன். மும்பையில் அதிக காலமும் டெல்லியில் கொஞ்ச காலமும் இருந்தேன். சென்னைக்கு கடந்த 2005 இறுதிகளில் வந்து சேர்ந்தேன்.

# நீங்கள் கவிதை எழுத ஆரம்பித்தது எப்போது?

எழுதியது நினைவில் இல்லை. பிரசுரமானது என்றால் அது 2004ல் தான்.

# உங்களுக்கு எழுத்தின் மீது ஆர்வம் எப்போது எப்படி ஏற்பட்டது?

சரியாக சொல்லத் தெரியவில்லை. ஆனால் மனதில் இருக்கும் பாரம் குறைவது போல தோன்றுவதால் இன்றும் ஏதோ கிறுக்கி வருகிறேன்.

# உங்கள் இலக்கிய குருக்கள் யார்? யார்?

மக்களுக்காக எழுதுகின்ற அனைவரையும் சொல்லலாம். எழுத்தின் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணமானவர்களாக இருந்தவர்கள் என்றால்.. காலமாகிப்போன கவிஞர். கந்தர்வனும், சிறுகதை எழுத்தாளர் வேலா.ராமமூர்த்தியும் தான்.

# உங்களை மிகவும் கவர்ந்த தமிழ் புத்தகங்கள் எவை? ஏன்?

நிறைய இருக்கே! ராகுல்ஜியின் அனைத்து நூல்களும் பிடிக்கும். தவிர படைப்பிலக்கியத்தில் முற்போக்கானவர்களின் படைப்புகள்.

# உங்கள் வாழ்க்கையின் திருப்பம் என்று எதைச் சொல்வீர்கள்?

எழுத்தை தெரிவு செய்தது.

# உங்கள் முதல் பணி அல்லது வாழ்க்கைத் தொழில் எது?

தகப்பனார் செய்து வந்த உணவகத்தொழில் தான் நான் செய்த முதல் பணி. மேசை துடைப்பதிலிருந்து, எச்சில் தட்டுகள் கழுவுவது வரை அனைத்தும் செய்துயிருக்கிறேன். அதன் காரணமாகவே சமையலில் ஆர்வம் ஏற்பட்டது.

# வாழ்வில் நீங்கள் விரும்பிய எவற்றை அடைந்திருக்கிறீர்கள்? எவற்றை அடைய முடிய வில்லை?

எதையுமே பெரியதாக விரும்பியதில்லை. எழுத்தை விரும்பினேன். அது என்னுடனே இருக்கிறது. இது வரை அடைய முடியாதது என்று சொல்வதானால்… உண்மையான அன்பு கொண்ட இதயம். (அது நண்பர்களாகட்டும், காதலாகட்டும்..அல்லது என்னுடன் பிறந்த குடும்ப உறவுகளாகட்டும்.. இன்று வரை நான் தனித்தே இருக்கிறேன்)

# நீங்கள் செய்த ஏதாவது ஒரு செயலுக்கு பின்னாளில் வருந்தியதுண்டா?

இன்று வரை அப்படி ஏதும் நினைவில் இல்லை.

# முன்பு செய்த எந்த செயலுக்காக இப்போதும் பெருமைப் படுகிறீர்கள்?

என்னை அறிந்து கொள்ள முயன்று.. இன்று தேவையற்ற மூட நம்பிக்கைகளில் இருந்து விடுதலை பெற்றது.

medium_bala.jpg

# உங்கள் வாழ்வின் எதிர்கால இலட்சியம் என்ன?

எம்மக்களுக்காக வாழ்வது. உரிமைகள் மறுக்கப்படும் போது.. எழுத மட்டுமல்ல.. போராடவும் தயாராக இருக்கும் இன்றைய மன நிலையை கடைசி வரை விடாமலிருக்க வேண்டுவது தான் இலட்சியம்.

# நீங்கள் எழுதிய படைப்புக்களில் எந்தப் படைப்பு உங்களுக்கு மிகவும் பிடித்தமானது?

அப்படியான படைப்பு இன்றுவரை படைக்கவில்லை. எழுதி பிரசுரமாகும் போது இருக்கும் மகிழ்ச்சி.. நாளடைவில்.. காணாமல் போகிறது. இன்னும் கூட சிறபாக செய்திருக்கலாமோ என்று தோன்றுவதும் வழமையாக இருக்கிறது.

# மற்றவர்களால் மிகவும் பாராட்டப் பட்ட படைப்பு எது?

என் குறுங்கவிதைகள் பல..!

# தமிழ்க் கவிஞர்களில் யாருடைய கவிதை உங்களுக்கு மிகவும் பிடிக்கும்? ஏன்?

வள்ளுவன் தொடங்கி.. இன்று எழுதிக் கொண்டிருக்கும் கு.உமாதேவி வரை பலர் இருக்கிறார்கள்.

# நீங்கள் எப்போதும் நினைக்கும் ஒரு கவிதை அல்லது பொன்மொழி எது?

வெறுங்கை என்பது மூடத்தனம்
விரல்கள் பத்தும் மூலதனம்.
-தாராமதி

# மறக்க முடியாத நினைவுகள். மறக்க முடியாத மனிதர்கள் யார்?

நானும் கூட காதலித்த நாட்கள், அச்சில் முதல் படைப்பை பார்த்த நாள், மறக்க முடியாத மனுசி என் அம்மாவும், அப்பாவும்!

# மறக்க நினைப்பவை?

ஏமாற்றப்பட்ட தருணங்களை.

# உங்களுக்கு கவிதை எப்போது வரும்? எந்த மாதிரியான சூழல் அல்லது பின்னணி உங்களுக்கு கவிதை தரும்?

அதற்கென தனி சமயங்கள் அவசியமில்லை என்று நம்புகிறவன் நான். ஆனால்.. ஏதாவது ஒரு விசயம் மனதை பாதிக்கவேண்டும். அந்த நிகழ்வு பற்றி யாரிடமும் பேசி.. ஆறுதல் அடைய முடியாத போது.. அது படைப்பாக மலரவேண்டும். அப்படியான படைப்புகள் தான் மனதில் தங்கும்.

# நாட்டார் தெய்வங்கள் குறித்து நீங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறீர்கள். நாட்டார் தெய்வங்கள் குறித்த உங்கள் பார்வை என்ன?

இவை நம்ம சாமிகள். நம் முன்னோர்களின் நினைவாக கொண்டாடப்படுபவைகள். அதனால்.. இதில் ஆர்வன் செலுத்துகிறேன். மேலும்.. இன்று மதம் மாற்றுகிறார்கள் என்று ஏகத்துக்கு குதிக்கும்.. இந்துத்துவா சக்திகளும் ஒரு காலத்தில் அந்த வேலையை செய்து வந்தவைதான்.

திராவிடர்கள் எவருமே இந்து கிடையாது. அவர்களை.. அவர்களறியாமல், மதமற்றி இருக்கிறார்கள் என்று பேரா.தொ.பா, பேரா.ஆ.சி; போன்றவர்கள் சொல்லியும் எழுதியும் வருகிறார்கள். உண்மை அப்படி இருக்க.. இன்றும் அதே திணிப்பை வலிந்து செய்துவரும் இந்த ஆதிக்க சக்திகளுக்கு எதிராக.. போராட.. குலதெய்வ வழிபாடு மற்ரும் கிராம தெய்வ வழிபாடுகளை முன்னிருத்த வேண்டியது அவசியமாக இருக்கிறது.

# உங்கள் கவிதைத் தொகுப்பு(கள்) எப்போது வெளி வந்தது? வெளியிட உந்துதல் தந்தது எது?

பொதுவாகவே எனக்கு என் படைப்புகளின் மீது.. பெரிய அளவில் திருப்தி இல்லை என்பதால்.. தனி நூலாக கொண்டு வருவதில் தயக்கம் இருந்தது. கோவையில் இருக்கும் நண்பர்களான ஜெ.பாலகிருஷ்ணன், நா.முத்து போன்றோரின் தொடர் வற்புறுத்தலின் பேரில் தான் முதல் நூலான ஹைக்கூ நூல் வந்தது. (1999 நடுநிசியில் 00:01 அந்த நூலை வெளிட்டார்கள். அதாவது 2000ம் ஆண்டின் முதல் நூல் அது. கோவையில் சில பத்திரிக்கையில் அந்த செய்திகூட வந்தது) அதன் பின்னும் தனி நூல் குறித்து ஆர்வமற்றே இருந்து வந்திருக்கிறேன். என் வாழ்தலுக்கான அடையாளமாக தனி நூல்கள் பயன்படும் என்ற எண்ணம் வந்ததால்..இந்த ஆண்டு தான் சில நூலுக்கு திட்டம் இருக்கிறது.

# உங்களைத் தட்டிக் கொடுத்தவர் யார்? தளர வைத்தவர் யார் (படைப்புலகில்)

எல்லாமே என் நண்பர்கள் தான்.

# இன்றைய இளைஞர்கள் யாரை முன்மாதிரியாகக் கொள்ளலாம் என்று கருதுகிறீர்கள்?

இன்றைய இளைஞர்கள்= நற..நற… நானும் கூட இன்றைய இளைஞர்களின் வரிசையில் தான் வருவேன் என்று நம்புகிறேன். பொதுவாகவே.. எனக்கு வாழ்வின் முன்மாதிரி என்றால் அது தோல்வி அடைந்தவர்களே! அவர்களின் தோல்விக்கான காரணங்களை ஆராயும் போது.. எங்கே சறுக்கி இருக்கிறார்கள் என்பதை உணர முடியும். அந்த ரகசியம் தெரிந்தால்.. நாம் சரியாக பயணிக்க முடியுமென நம்புகிறேன்.

# இணைய அறிமுகம் எப்படி ஏற்பட்டது?

மும்பையில் இருந்த சமயங்களில்.. நண்பர் மதியழகன் சுப்பையாவால் இணையத்தின் அறிமுகம் மட்டுமல்ல கணினி அறிமுகமும் ஏற்பட்டது அப்போது தான். சென்னை வந்த பின் தான் ப்ளாக் அறிமுகம் ஏற்பட்டது.

# சமூகத்தில் கவிஞர்கள் முதலான படைப்பாளிகளுக்கு ஏதாவது கடமை இருக்கிறதா? ஏன்?

இச்சமூகத்தில் கடைநிலைத் தொழிலாளியான சாக்கடைக் கழிவுகளை சுத்தம் செய்யும் மனிதருக்கே சமூக கடமை என்பது இருப்பதாக சொல்லப்படும் போது.. எழுதி.. அதை வரலாற்றில் பதிவு செய்யும் படைப்பாளிக்கு இல்லாமல் போகுமா? தான் வாழ்ந்த சமகாலத்தைப் பற்றிய பதிவுகளை விமர்சனத்தோடோ, அல்லது விமர்சனமற்றியோ அவன் பதிவு செய்தால்.. காலங்கள் கடந்து அவன் இறப்புக்குப் பின்.. அவன் வாழ்ந்த சமூக மக்களின் வாழ்வைப்பற்றி அடுத்த தலைமுறையினர் அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். அவ்வளவே!

-oOo-

சேமிப்புக்காக: நன்றி அமரர் சிந்தாநதி: – http://valaimozhi.blogspirit.com/archive/2007/03/21/bala.html

This entry was posted in அனுபவம், சந்திப்பு, விளம்பரம். Bookmark the permalink.

3 Responses to முகமொழி – கவிஞர் பாலபாரதி

  1. வாழ்த்துகள் தல! இப்படியான கட்டுரைகள் காலச்சுவடில் தொடங்கி ஆனந்த விகடன் வரை வெளியாக வேண்டும். ப்ளஸ் தாடி நன்றாக தான் இருக்கிறது.

  2. Vignesh says:

    Sir இதயத்தில் இன்னும் புத்தகம் வேண்டும் எங்கு வாங்குவது. 1 வருடமாக தேடி இப்போ தான் இந்த wepsite keadachathu. தயவு செய்து உதவி பண்ணுங்க எங்க கிடைக்கும் ….
    7845040973
    7904486334

  3. சார், தற்போது அந்த நூல் அச்சில் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.