ஈரோடு சங்கமம் – எவ்வளவு முடியுமோ அவ்வளவு லேட்டா..

ஈரோடு சங்கமம் நிகழ்ச்சியில் விருது வழங்க என் பெயரை தேர்வு செய்திருப்பாதாகவும், விழாவில் கலந்துகொள்ள ஒப்புதல் கேட்டும் மின்னஞ்சல் வந்த்தும் கொஞ்சம் மிரண்டு தான் போனேன். சும்மாவே மெல்லுவாய்ங்க.. ஈரோடு ஆட்கள் பக்கோடா கொடுக்கப்பாக்குறாய்ங்களேன்னு தான் முதலில் தோணிச்சு.

நான் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டேன், எதுக்கும் கொஞ்சம் யோசிக்க அவகாசம் வேணும்னு கேட்டு கதிருக்கு பதில் அனுப்பினேன். அவரோ 24மணி நேரம் கெடு கொடுத்தார். வலை உலகின் மூலம் அறிமுகமாகி, உடன் பிறந்த அண்ணன் போலாகிவிட்ட, மா.சிவக்குமாரிடம் தொலைபேசி விசயத்தைச்சொல்லி, என்ன செய்யலாம்னு கேட்டேன். அதற்கு அவரோ, ’நிச்சயம் கலந்துக்குங்க பாலா, சோர்ந்து கிடக்குற பதிவுலகத்திற்கு இப்படியான நிகழ்ச்சிகள் புத்துணர்ச்சியைக்கொடுக்கும். போயிட்டு வாங்க’ன்னு சொன்னார். அதன் பிறகு ஈரோடு வருவதாக ஒப்புக்கொண்டு மறுமடலிட்டேன்.

குடும்பத்துடன் போவது என முடிவு எடுத்தோம். அதன் படி, சனிக்கிழமை காலை கோவை இண்டர்சிட்டியில் கிளம்பினோம். படுக்கை வசதி இல்லாத, உட்கார்ந்துகொண்டே போகும் படியான தொடர்வண்டி பெட்டி என்பதால், அதிக நேரம் கனிவமுதனை ஒரே இடத்தில் வைத்திருக்க முடியவில்லை. இறக்கிவிடு என்று ஒரே அடம். இறக்கி விட்டால், அவ்வளவு கூட்டத்திலும், நிற்பவர்களின் கால்களுக்கிடையில் புகுந்து இந்தப்பக்கமும் அந்தப்பக்கமுமாய் ஓடிக்கொண்டிருந்தான். கொஞ்சம் களைச்சுப் போய் இரண்டு மணிநேரம் தூக்கிய போது தான் எங்களுக்கும் கொஞ்சம் ஓய்வு கிடைத்தது.

வழியில் பார்த்த சில ஊரின் பெயர்கள் விசித்திரமாக இருந்தன. அல்லது, விசித்திரமாக சிந்திக்கத்தோன்றின .

உதாரணத்திற்கு ஒர் ஊரோட பெயர் மொரப்பூர் – அந்த ஊருக்கு இந்த பெயர் ஏன் வந்திருக்கும்?! ஒருவேள அந்த ஊர்ல இருக்குற அத்தனை பேரும் மொரைப்பாகவே இருப்பாங்க போலிருக்கு.

இன்னொரு ஊரோட பெயர்- டேனிஷ்பேட்டை. – ஏதாவது வெள்ளைக்கார ரவுடி மாதிரியான் ஆளு இந்த ஊரை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கனும். அதனால அவரோட பெயருடன் சேர்ந்த்து நம்ம ஆளுங்க பேட்டையை போட்டு இருக்கனும்.

அதே மாதிரி, இன்னொரு ஊரோட பேரு தாசம்பட்டி. – இந்த ஊர் தலைவரோ, ஜமீந்தாரோ எவர் கட்டுப்பாட்டில் இருந்ததோ அவர், எங்கயாவது தாசனா இருந்திருப்பாரா இருக்கும்.

– இப்படி இந்த ஊர்களின் பெயர்களைப் பார்த்ததும் குண்டக்க, மண்டக்க யோசனை ஓடியது. பொதுவாக பத்திரிக்கை, வாராந்திரிகளில் வரும் வாசகர்கடிதங்களை படிக்கிற ஆளு நான். ஆனா.. இந்த பெயர்களை இதற்கு முன், எந்த பத்திரிக்கையிலும் படித்ததுகூட இல்லை என்பதால் நினைவில் மறக்காமல் இருக்கிறது. (ஊர்களின் காரணப்பெயர் பற்றி எவரேனும் ஆய்வுகள் மேற்கொண்டால் பல சுவாரஸ்சியங்கள் கிடைக்கலாம்)

மதியம் 12மணிக்கெல்லாம் ஈரோடு போய் சேர்ந்து விட்டோம். போகும் போதே ஜபாருக்கு தொலைபேசியபடி போய்ச்சேர்ந்தோம். ரயிலடி நிலையத்தை விட்டு வெளியே வந்ததும், மீண்டும் தொலைபேசியபோது, நண்பர்கள் ஜபாரும், ஆரூரானும் வந்து வரவேற்றார்கள்.

ஆருரானின் காரில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விடுதிக்குப் போகும் போதே கனிக்கு ஏக குஷி. பின்னிருக்கையில் இருந்து முன்னோக்கி பாய்ந்தான். சில நிமிட பயணத்திற்குள்ளாகவே ஆருரானிடமும், ஜபாரிடமும் ஒட்டிக்கொண்டான்.

அங்கே இருந்த உறவினரின் வீட்டுக்கு ஒரு ரவுண்ட் போய் விட்டு, திருச்செங்கோடும் சென்று திரும்பி, கூட்டில் அடைந்தோம்.

மறுநாள் விழா நடைபெறும் அரங்கத்திற்கு அழைத்துச்செல்ல வாகன ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். நாங்கள் தாமதமானதால், ஓர் ஆட்டோவில் ஏறி, அண்ணன் உண்மைத்தமிழனிடம் வழி கேட்டுப் போய்ச் சேர்ந்தோம். அடையாளம் காட்டுவதற்காக, மண்டபம் இருந்த தெருவின் முனைக்கே வந்து காத்துக்கொண்டிருந்தார் அண்ணன் ஊனா தானா!

கல்யாண வீட்டுக்கான களையுடன் மண்டபம் காணப்பட்டது. நாங்கள் போகும் போது கிட்டத்தட்ட எல்லோருமே காலை சிற்றுண்டியை முடித்துவிட்டிருந்தனர். நாங்களும் அவசர அவசரமாக உணவுண்டு, அரங்கத்தினுள் சென்றோம்.

குளிருட்டப்பட்ட அறை என்றாலும் உள்ளே நிறைந்திருந்த கூட்டத்தினால் வெக்கையை உணர முடிந்தது. போடப்பட்டிருந்த சுமார் 150க்கும் மேற்பட்ட நாற்காலிகளையும் தாண்டி உட்கார இடமில்லாமல் பலர் நின்றுகொண்டிருந்தார்கள்.

நாதஸ்வரம் தவில் என்று பாரம்பரிய இசையுடன் விழாவை ஏற்பாடு செய்திருந்தது சற்றே வித்தியாசமாகப்பட்டது. இதற்கு முன் தையெல்லாம் பார்த்திராத கனி தவில் காரரிடம் போக வேண்டும் என்று அடம்பிடிக்க, ஆரூரான் அவனை அள்ளிக்கொண்டு போய் விட, டப், டப், என்று அதில் தட்டிப் பார்த்து சந்தோசமடைந்து கொண்டான் கனி.

கவுரவிக்கப்பட்ட 15 பேரைப் பற்றியும், அவர்களின் செயல்பாடுகள் பற்றியும், குறிப்புகளாக திரையில் ஓடவிட்டு, அறிமுகம் செய்தனர். ஒரு நினைவுப் பரிசும், வழக்கமான பொன்னாடைக்குப் பதில் அப்பகுதியில் பிரபலமான போர்வையை வழங்கினார்கள்.

அதன் பின், பதிவர்கள், ட்விட்டர்கள், ஃபேஸ்புக்காளர்களின் கலந்துரையாடலும் நடந்தது. ஆனால், எந்த கட்டுக்குள்ளும் அடங்காத நம்மவர்கள் சிதறி, தனித்தனிக்குழுக்களாக பேசத்தொடங்கி விட்டனர். மிக அருமையான மதிய உணவுக்குப் பின், பலரும் பறக்கத்தொடங்கிவிட்டனர். (சாப்பாட்டுக்கு முன், சாப்பிடவேண்டியதை சாப்பிட்டு வர ஒரு பெரிய டீம் கிளம்பிப் போனது)

மதிய உணவுக்குப் பின் கொஞ்சம் ஆசுவாசமாக பலருடனும் பேச முடிந்தது. குறிப்பாக சந்துரு அண்ணன் (கோவை பட்டறையில் அறிமுகமாகி, சென்னை பட்டறை வரை வந்து கலந்துகொண்டவர்), கதிர், நந்து, ஜீவ்ஸ், டாக்டர்.ரோகிணி சிவா இவங்க கூட எல்லாம் கொஞ்சம் பேசிக்கொண்டிருந்தோம். இன்னொரு விசயத்தை சொல்ல மறந்துட்டேன். விஜியை எனக்கு அறிமுகபடுத்திய போது, ’ஓ.. இவங்க தானா மயில் விஜின்னு நான் கேட்க’, அதற்கு அவங்க, ’நீங்க சொல்லுற ஓ..வைப் பார்த்தா.. எனக்கு கெதக்னு இருக்குன்னு’ அவங்க சொல்ல.. கொஞ்ச நேரம் சிரிப்பலைகள்..

நிகழ்ச்சிக்கான ஏற்பாடாகட்டும், வந்திருந்தவர்களை வரவேற்ற விதமாகட்டும், ஈரோடு சங்கமம் குழுவினரின் ஒற்றுமையும் உழைப்பும் தனியாகத் தெரிந்தது. ஒவ்வொரு மனிதர்களுக்கும் தனித்தனி எண்ணங்கள் இருந்தாலும், ஒன்றிணைந்து இது போன்ற ஒரு நிகழ்வை நடத்துவதென்பது சாதாரண காரியமல்ல. உண்மையில் இவர்களின் ஒற்றுமைக்கும் உழைப்புக்கும் ஒரு ராயல் சல்யூட்! எதுவந்த போதும் இதே ஒற்றுமை நீடித்திருக்க வேண்டும் என்பதும் என் தனிப்பட்ட ஆசை!

குறிப்புகளாக.. சில!

  •  இரவு பகலாக உழைத்த சங்கமத்தோழர்களை மேடையில் அறிமுகப்பட்டபோது தான் கவனிக்க முடிந்தது. ஆளுக்கொரு திசையில் வந்திருந்தவர்களை ‘நன்கு’ கவனித்துக் கொள்வதிலேயே அவர்களின் கவனம் இருந்தது.
  •  மதுரை, சென்னை என்று அனேக பகுதிகளில் இருந்தும் பலர் வந்திருந்தனர்.
  • அதிலும் குறிப்பாக வாத்தியாரைய்யா தருமி, மிடுக்காக கேமராவுடன் வலம் வந்துகொண்டிருந்தார்.
  • ஜீவ்ஸ்யும், தருமியும் கொஞ்சம் புகைப்படங்களை எடுத்து அனுப்பி இருந்தார்கள்.
  •  என்னை அறிமுகப்படுத்திய போது, ஸ்க்ரீனில் காட்டப்பட்ட என் வலைப்பக்கத்தின் அப்போதைய கடைசி பதிவான ஆட்டிசம் குறித்து எழுதியதைப் பார்த்து விட்டு, கேவையில் இருந்து வந்திருந்த ஒரு அம்மணி மிகுந்த ஆர்வத்துடன் வந்து பேசினார். தொடர்ந்து ஆட்டிசம் குறித்து எழுதவேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தினார்.
  •  திரட்டிகளில் இல்லாததால் பல பதிவர்களை அடையாளம் காண்பதில் எனக்கு சிக்கல் இருந்தது. அதே சமயம் ஃபேஸ்புக்கில் இருந்து வந்திருந்தவர்களை எளிமையாக கண்டுகொள்ள முடிந்தது.
  •  ஈரோட்டு சங்கமத்திற்கு அழைக்கும் போதே கதிர் சொன்னார், இணைய தமிழ் மக்களிடம் ஒருவித செயல்பாட்டு மனநிலையை இச்சந்திப்பு நிகழ்த்தினால் மகிழ்ச்சியாக இருக்கும் என்றார். அவர் சொன்னது போலவே, சென்னை பதிவர்கள் இங்கே ஒர் ஒன்றுகூடலுக்கான ஆயத்தபணிகளில் இறங்கிவிட்டார்கள்.
  •  இனி தொடரும் அடுத்தடுத்த ஆண்டுகளின் ஈரோடு சங்கமத்திற்கு போவது என்று முடிவு செய்திருக்கிறேன்.

உண்மையில் மிக நெருங்கிய உறவின் திருமண விழாவில் கலந்துகொண்டு திரும்பிய திருப்தி இருந்தது.

இவ்விழா சிறக்க உழைத்த அத்துனை தோழர்களுக்கும் வணக்கங்கள்!

இன்னுமொரு குறிப்பு:-

பாதி எழுதி முடிக்காமல் ட்ராப்டில் பதிவு இருந்ததால்.. உடனடியாக பதிவிட முடியவில்லை. (ஒடனே போட்டுட்டாலும்..னு சொல்றது கேக்குது) புத்தகக்கண்காட்சி சிறுகதை தொகுப்பிற்கான பணிகள் என்று வேலை இழுத்துவிட்டதால்.. இன்று தான் சமயம் கிடைத்தது.

பலரும் படங்களுடன் பட்டியல் போட்டு விட்டதால்.. நான் ஏது படம் போடலை. :))


Comments

5 responses to “ஈரோடு சங்கமம் – எவ்வளவு முடியுமோ அவ்வளவு லேட்டா..”

  1. அடுத்த சங்கமம் வருவதற்குள் போட்டுட்டீங்க. அதனால் சந்தோசமே… 🙂

  2. நான் ரெகுலரா அந்த ரயில் ரூட்டில் சென்று அந்த ஊரு பேரல்லாம் மனப்பாடமாயிடுச்சு. ஆனா இப்ப அதயும் ஆராய்ச்சி செய்யலாம்னு ஆர்வம் வந்திடுச்சி 🙂

    NICE தல.

  3. ada! oorladhan irukkiingala?…

  4. மஞ்சூர் அண்ணே, ரவி நன்றி!

    சிஜி- இருக்கேன். :)) காலையில போன் செய்யுறேன்.. 🙂

  5. ஆயில்யன் Avatar
    ஆயில்யன்

    //ஒருவேள அந்த ஊர்ல இருக்குற அத்தனை பேரும் மொரைப்பாகவே இருப்பாங்க போலிருக்கு.//

    தல டச் ! 🙂 #மொரப்பூர்காரங்க பார்த்தா மொறைச்சுக்கிட்டே வந்து கும்மிடுவாங்க தல எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *