ஒரு முன்கதைச் சுருக்கம்

பாடப் புத்தகங்கள், புராண இதிகாசக் கதைகள் தவிர்த்து வேறு ஏதும் படிக்கத் தக்கவையே அல்ல என்று தீவிரமாக நம்பும் பின்புலத்தில் வளர்ந்தாலும் நான் மட்டும் மந்தையிலிருந்து பிரிந்த ஆடாக கதை, கவிதைப்புத்தகங்களில் பொழுதை வீணடிப்பது என் குடும்பத்தினரை ரொம்பவே வருத்தியது. இதனால் நிறைய மனஸ்தாபங்கள். ஒரு கட்டத்தில் மும்பைக்குச் செல்ல வேண்டிய சூழல்.

சொந்தமண்ணைப் பிரிந்து, மும்பைக்கு போய்ச் சேர்ந்த பிறகுதான் வாழ்க்கையை நேரடியாக உணரத்தொடங்கினேன். அதுநாள் வரையில் நூல்களின் வழியே கற்றுத்தேறிய வாழ்க்கையை நிஜ அனுபவ உரைகல் கொண்டு உரசிப்பார்க்க மும்பை வாழ்க்கை உதவியது. ஆற்றில் மிதக்கும் துரும்பு போல வாழ்கை இழுத்த பக்கமெல்லாம் சென்று கொண்டிருந்தேன். எங்கெங்கோ சுற்றி, ஏதேதோ வேலைகளை பிழைப்புக்காக செய்து கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் இருந்த இலக்கிய காதலை மட்டும் அணைந்து விடாது காப்பாற்றி வந்தேன்.

வெளி ஊரில், வேற்று மொழியினரிடையே வாழும் போதுதான் உண்மையிலேயே செந்தமிழ் எப்படி நம் காதில் தேன் பாய்ச்சும் என்பதை உணர முடியும். எப்போதும் சுற்றி ஒலிக்கும் மராட்டி/இந்தி குரல்களுக்கு நடுவில் தமிழ்க் குரல் கேட்டாலே உருகிவிடும் நிலையில்தான் நானும் இருந்தேன். அப்படித்தான் மலாடு, ஒர்லம் பகுதியில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த ஒரு தமிழ் இலக்கியக் கூட்டத்தை கண்டடைந்தேன். அங்கே அறிமுகமான நண்பர் மதியழகன் சுப்பையா தமிழ் போஸ்ட் பத்திரிக்கையில் கரைசேர உதவினார். எனக்கான அடையாளம் எழுத்து தான் என்பதை மீண்டும் நான் கண்டடைந்த தருணம் அது. இப்படியாக செய்தியாளனாக உருவெடுத்தேன். எழுதினால் உருப்படமாட்டேன் என்ற பெரியவர்களின் சாபத்தையே வரமாக்கி, எழுத்தையே வாழ்வாக்கிக்கொண்டேன்.

பல்வேறு வேலைகளைப் பார்த்தாலும், செய்தியாளனாக பத்திரிக்கையில் பணியமர்ந்த பின் தான் மனிதர்களை நெருக்கமாக படிக்கத் தொடங்கினேன். தின,வார, மாத இதழ்களின் பக்கங்களை நிரப்புவதற்கு பயன்பட்ட செய்திகளின் வழியே சில அனுபவங்கள் பதிவு செய்யப்படாமல் தொக்கி நின்றன.  இப்போதைய செய்தி.. சிலமணி நேரங்களில் பழையதாகிவிடும், பரபரப்புச் சூழலில், படைப்பிலக்கிய ரீதியில் எழுதினால் தான் அதை காலத்துக்கும் பதிவு செய்துவைக்க முடியும் என்று தோன்றியதால், புனைவின் பக்கம் கவனம் திரும்பியது.

சிறுகதைகளை எழுதத்தொடங்கினேன். அங்கொன்றும் இங்கொன்றுமாக அவை பிரசுரமும் ஆகின. செய்தியாளனாக சென்று சேகரிக்கும் செய்தி ஒன்று மறுநாளோ, மறுவாரமோ பொட்டலம் கட்டப் பயன்படும் தாளுக்குப் போய்விடக் கூடாது என்று தோன்றினால் அதை ஒரு சிறுகதையாக்கி விடுவதை வழக்கமாகக் கொண்டேன். ஏன், என் முதல் நாவலும் கூட அப்படியான நிமிடத்தில்  தோன்றியது தான்.

எப்போதும் எழுத்துக்கள்  சாதரண மக்களின் வாழ்வைச் சுற்றியே இருப்பதைக் காணமுடியும். என் எழுத்து என் மக்களுக்கானது என  உறுதியாக இருக்கக் காரணம். கலை மக்களுக்காக என்று திடமாக நம்புவதும் தான். யதார்த்த எழுத்துகளில் கந்தர்வன், வேல.ராமமூர்த்தி, ச. தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சன்யா மற்றும் பாட்டாளி, கவித்துவன் போன்ற தோழர்களின் எழுத்தே எனக்கு முன்னோடி.  எழுத்தார்வம் முளைவிட்ட காலத்திலேயே கிடைத்த இவர்களின் அறிமுகமும், தொடர்ந்து படிக்கக் கிடைத்த அவர்களின் படைப்புகளும் என் களம் எது என்பதை எனக்கு உணர்த்தியது.

வடமாநில வாழ்க்கை முடிந்து, சென்னைக்கு வந்தபின் வாழ்கையின் வேகத்தில் எழுத்திலிருந்து சற்றே விலகியிருந்த என்னை மீண்டும் எழுதத் தூண்டியவர் நினைவில் வாழும் அண்ணன் திரு. கனகசபை அவர்கள். என்னிடமிருந்து, அநேகமாய் பிடுங்கிப் போய் ஒரு சிறுகதையை புதிய பார்வை இதழில் பிரசுரித்து, அச்சில் எழுத்தைக் காணும் போதையை மீள் அறிமுகம் செய்து வைத்தவர் அவரே. இத்தொகுப்பை படிக்கத் தந்து, அவர் கருத்தை கேட்க முடியாது என்பது மிகுந்த மன வருத்தத்தைத் தருகிறது.

இந்தக் கதைகளைப் படித்துப் பார்த்து செதுக்கித் தந்த நண்பர்கள் கென், கிணத்துக் கடவு பாலாவையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன். எப்போதும் விமர்சனம் செய்து என் துணை நிற்கும் நண்பன் கார்டூனிஸ்ட் பாலா மற்றும் வலையுலக நண்பர்களுக்கும் என் அன்பை இங்கே பதிவு செய்கிறேன்.

இக்கதைகள் தொகுப்பு நூலாக உங்கள் கரங்களில் தவழக்காரணமான நண்பர் கவிஞர் பா.உதயக்கண்ணனுக்கும் என் நன்றிகள். இனி இத்தொகுப்பில் உள்ள (காலவரிசைப்படி தொகுக்கப்பட்ட) கதைகள் உங்களோடு உறவாடும். உங்களின் விமர்சனங்கள் என்னை மேலும் செதுக்க உதவும். காத்திருக்கிறேன்.

அன்புடன்

யெஸ். பாலபாரதி

(சாமியாட்டம் சிறுகதைத் தொகுப்பிற்கு எழுதிய என்னுரை)


Comments

7 responses to “ஒரு முன்கதைச் சுருக்கம்”

  1. புத்தகம் கையில் தவழ காத்திருக்கோம் அண்ணே. வாழ்த்துக்கள்.

  2. welcome!
    pls notify the publisher and the price

  3. CONGRATS………
    pls inform the name of the publisher and price

  4. ரொம்ப நல்லாயிருக்கு.

  5. நன்றி விழியன், சிஜி, ஜோதியண்ணே..!

    சிஜி, நூல் வெளியிட்டவர்- அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாண சுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-11,

    அது போல, புத்தகக்கண்காட்சியில் கீழ்கண்ட இடங்களில் கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறார் பதிப்பக நண்பர்.

    நிவேதிதா புத்தகப் பூங்கா- 326.(கண்ணதாசன் பாதை- 4வது நுழைவாயில் அருகில்) பிரேமா பிரசுரம்- 344.(ராபர்ட் விண்ட் பாதை) புக் ஷாபர்ஸ்- 370. (புதுமைப் பித்தன் பாதை), புதுப் புனல்- 442.(நாமக்கல் கவிஞர் பாதை)

    +DISCOVERY BOOK PALACE DISCOVERY BOOK PALACE- 334.(ராபர்ட் விண்ட் பாதை)

    (நண்பர்களின் ஆதரவை எதிர் நோக்கி..)

  6. அருமையான பதிவு.
    நீங்கள் எழுத்தாளர், உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. மும்பை வாழ்க்கை பற்றி (உங்களுக்கு நேரம் இருக்கும் போது) திரு நாஞ்சில் நாடன் அவர்களின் எழுத்துக்களை படித்து பாருங்கள்.
    வாழ்த்துகள்.

  7. மீனா Avatar
    மீனா

    விழியன் வழி அறிந்து வந்தேன்! வாழ்த்துகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *