சாமியாட்டம் – நூல் அறிமுகம்

பாலபாரதி என சிலராலும் தல என பலராலும் அழைக்கப்படும் எஸ்.பாலபாரதியின் ‘சாமியாட்டம்’ சிறுகதை தொகுப்பு வாசித்து முடித்தேன். வழக்கமாக சிறுகதை தொகுதிகள் வாசிப்பது வேகமாக சென்றுவிடும். ஆனால் இந்த தொகுப்பை அத்தனை வேகமாக வாசிக்கமுடியவில்லை. காரணம் அந்த எழுத்து ஏற்படுத்திய தாக்கமாக இருக்கலாம். ஒவ்வொரு கதையை கடக்கையிலும் ஆழ்மனதில் புதைந்திருந்த பல கதைகளையும் நினைவுகளையும் மீட்டு வந்தது என்பதே உண்மை.

பாலபாரதியை பல வருடம் முன்னர் இணையத்தில் அறிமுகம். நேரில் இதுவரை 4-5 முறை மட்டுமே சந்தித்து இருப்பேன். கடந்த வருடம் ஒரு மாலை சீமானை சந்திக்க நண்பர்கள் சில பண்புடன் சார்பாக சந்திக்க சென்றிருந்தோம். சந்திக்க தாமதமானதால் முன்னறையில் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். அந்த பேச்சு பல எண்ணங்களை கிளறியது. பத்திரிக்கையாளர் ஒருவரிடம் மிக நெருங்கி பழகியது அது தான் முதல் முறை. சுவாரஸ்யமான நினைவுகளை பகிர்ந்தபடி இருந்தார் பாலா. “நீ கண்டிப்பா சில சிறுகதைகளை படி” என்று துரைபாண்டியின் கதையினையும் கோட்டிமுத்து கதையினையும் பரிந்துரைத்தார். ஆனால் அந்த பரிந்துரையை காற்றிலேயே பறக்கவிட்டேன்.

கோட்டிமுத்து என்ற முதல் சிறுகதை வாசிக்க ஆரம்பித்ததுமே அப்பா அடிக்கடி குறிப்பிடும் கந்தர்வனின் சிறுகதை நினைவிற்கு வந்தது (இதையே தமிழ்ச்செல்வனும் முன்னுரையும் குறிப்பிட்டதை பின்னர் கண்டேன்)  ‘சாமியாட்டம்’ கதையின் கடைசி வரி முடிந்ததும் மீண்டும் ஒருமுறை கதையை வாசிக்க வைத்தது. எந்த விஷயத்தையும் நேரடியாக சாடாமல், காட்சிகளின் மூலம் வாசகனை சிந்திக்க வைக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. விடிவெள்ளி கதையும் முடிவு இதற்கு நல்ல உதாரணம். மெல்லிய அங்கதத்துடனே இவை சாடப்பட்டும் இருக்கின்றது. கதைகளின் கட்டமைப்பில் பெரும் புதிய முயற்சிகள் இல்லை, அற்புதமான கதைசொல்லிக்கு அவை தேவையுமில்லை என்றே நினைக்கிறேன்.

வாசிக்கையில் காதில் ஒருவிதமான இசை அநேகமான கதைகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. சில சமயம் அது நகரத்தில் இரைச்சலாகவும், சில சமயம் இராமேஸ்வரத்தின் ஆலய ஒலியாகவும், இரயில் சத்தமாகவும், மேள சத்தமாகவும், சாமியாட்டத்தின் தப்பு சத்தமாகவும், பெரியவரின் முனகல் சத்தமாகவும், பாரதியாரின் பாடலாகவும், பேய்வீட்டு பங்களாவின் அரவாகவும், தண்ணீர் தேசத்தின் லாரி இரைச்சலும், மனதின் உள்ளோசைகளும் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. வாசிப்பு அனுபவத்தினை இவை நிச்சயம் அதிகரித்தது.

புத்தகத்தை முழுதும் வாசித்ததும் சீக்கிரம் மும்பைக்கும் இராமேஸ்வரத்திற்கும் செல்லும் ஆர்வம் அதிகரித்துள்ளது. சிறுகதைக்கான தலைப்புகள் ஒரு வார்த்தையிலேயே அமைந்துள்ளது. மிக சாதாரண வார்த்தைகள். குழம்பமில்லாத கதைகள் போன்றே தலைப்புகளும் அமைந்துள்ளது. சில சமயம் வாசகனை உள் இழுக்காமல் போகசெய்யும் சாத்தியக்கூறுகளும் உள்ளது.

தெளிந்த ஆற்றங்கரையில் கால்களை நீரில் சிலம்பிதும் உள்மனதில் எழுப்பும் ஆனந்தத்தை இந்த சிறுகதைகள் தந்தன.

பாலபாரதிக்கு உள்ளே ஒளிந்துகொண்டிருக்கும் இன்னும் பல சிறுகதைகளை காலம் நமக்கு வெளிவர வரம் அளிக்க வேண்டும். மென்மேலும் பல படைப்புகளின் ஊடாக சாமானியனின் கதைகள் / உணர்வுகள் / மெல்லுணர்ச்சிகள் உலகறிய வேண்டும் என்பதே தம்பிகளின் ஆவா.

தல பாலபாரதியின்  வலைத்தளம்

http://216.185.103.157/~balabhar/blog/

பொன். வாசுதேவன் எழுதிய சாமியாட்டத்திற்கான  நூல் அறிமுகம் இங்கே.

http://www.aganazhigai.com/2012/01/blog-post_15.html

– விழியன்

——————-

நன்றி:- விழியன்

http://vizhiyan.wordpress.com/2012/01/18/samiyattam-book-intro/