பாரதியின் ஒரு பாட்டு (சாமியாட்டம் – பாலபாரதி)

முதல் கதை – கோட்டி முத்து

இரண்டாவது கதை – பாரதியின் ஒரு பாட்டு.

1. சிறு சிறு சம்பவங்களின் மூலம் சிறு சிறு விபரங்கள் மூலம் ஜெயாவைப் பற்றிய முழுமையான சித்திரம் கிடைக்கிறது.

  • ஜெயா படிப்பதை முற்றிலும் உள்வாங்கிக் கொண்டு நடைமுறையுடன் பொருத்திப் பார்க்கும் இயல்புடையவள் என்று தெரிகிறது.
  • ஜெயா ஒன்பதாவது படித்தாலும் வளர்ந்த பெண் என்று தெரிந்து விடுகிறது.
  • வயதுக்கு வந்த பிறகு போராடி தந்தையின் விருப்பத்துக்கு மாறாகத்தான் படிப்பைத் தொடர்கிறாள் என்று தெரிகிறது.
  • ஜெயாவின் குடும்பம் கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தது, அப்பாவும் அம்மாவும் தினமும் உழைத்து குடும்பத்தை நடத்துகிறார்கள் என்று புரிந்து விடுகிறது.
  • வெளியில் ஏதாவது பிரச்சனைகள் என்றால் பள்ளிக்குப் போவதே நிறுத்தப்படும் வாய்ப்புகள் இருப்பது புரிகிறது.
  • ஜெயா தாவணி கட்டினாலும் சராசரி தமிழ்ப் பெண் போல அடங்கி ஒடுங்கி ஒதுங்கிப் போகும் இயல்பினள் அல்ல என்று தெரிகிறது.
  • ஜெயா பாதகம் செய்பவரைக் கண்டால் பயம் கொள்வதில்லை, மோதி மிதித்து விடுபவள் என்று தெரிகிறது.
  • ஜெயா உழைத்து படிப்பவள், ஆசிரியர்களுக்கு செல்லம் என்றும் தெரிந்து கொள்கிறோம்.
  • கதையின் இறுதிக் காட்சி நடக்கும் சாலைச் சூழல் நன்கு அறிமுகமாகி விடுகிறது.
  • மற்றவர்க்கு உதவி செய்யும் ஜெயாவின் குணமும் முன்கூட்டியே தெளிவாகிறது.

2. கடைசியில் அவளுக்கு ‘மீறி வந்த அழுகை’ தான் கதையின் உச்சம். அதை வந்து சேர, கதை முழுக்க விரவிக் கிடக்கும் விவரிப்புகளை திரட்டி சரியான வரிசையில் கோர்த்துக் கொண்டே வர வேண்டும். முத்துக்களை கோர்த்து மாலை செய்யும் தனது வேலையை ஆசிரியர் வாசகரிடமே விட்டிருக்கிறார்.

3. மும்பை வாசகர்களுக்காக வெளியிடப்பட்டபோது ஹிந்தி வசனங்கள் இயல்பானதாகவும் பொருத்தமானதாகவும் இருந்திருக்கலாம். ஆனால், இந்தி தெரியாத தமிழ் வாசகர்கள் கொஞ்சம் திகைப்படைவார்கள்.

கதை மும்பையில் மட்டுமில்லை எங்கு வேண்டுமானாலும் நடக்கக் கூடியது.

  • பையாக்களும், 60 வயது பெரியவரும் இந்தி பேசாமல் தமிழ் பேசுபவர்களாகவும், ஜெயா அசாமீஸ் பேசுபவளாகவும் இருந்து கதை சென்னையில் கூட நடந்திருக்கலாம்.
  • ஜெயா புலம் பெயர்ந்த சூழலில் வாழும் பெண்ணாக இல்லாமல் சொந்த கிராமத்திலேயே வாழ்பவளாகக் கூட இருக்கலாம்.
  • அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கும் பெண் கூட இத்தகைய உலக ‘நடைமுறை’யை சந்திக்கலாம்.

எனவே மொழி சார்ந்த அடையாளம் கதையின் நோக்கத்துக்கு தேவையற்றது என்றே தோன்றுகிறது.