கோட்டிமுத்து (சாமியாட்டம் – யெஸ் பாலபாரதி)

பாலபாரதியின் சாமியாட்டம் சிறுகதைத் தொகுப்பில் வெளியாகியுள்ள ஒவ்வொரு சிறுகதையைப் பற்றியும் தனித்தனியாக விமர்சனம் எழுதுவதாக உத்தேசம்.

முதலில் கோட்டி முத்து.

1. கோட்டி முத்து நமக்கு அன்னியமான ஒரு கதாபாத்திரம் இல்லை. நமது கிராமத்தில் நாம் பார்த்த வேலையாள் ஒருவரை மனதில் கொண்டு வருகிறது இந்த எளிய மொழியிலான பாத்திரப் படைப்பு. டால்ஸ்டாயின் போரும் அமைதியும் அல்லது அன்னா கரனீனா அல்லது சிறுகதைகளைப் படிக்கும் போது பாத்திரங்களை உயிருள்ள மனிதர்களாக (ரத்தமும் சதையுமாக மட்டும் அல்ல!) நம் மனக்கண் முன் பார்க்கிறோம்.  அத்தகைய உயிரோட்டம் நிறைந்த பாத்திரங்களில் ஒன்று கோட்டிமுத்து.

2. கோட்டி முத்து எந்த நாட்டைச் சேர்ந்தவரும் அடையாளம் கண்டு கொள்ளும் பாத்திரம். கோட்டிமுத்துவில் நாடு, மொழி கடந்த மனிதப் பொதுமை வெளிப்படுகிறது. கோட்டிமுத்துக்கள் தமிழ்நாட்டு கிராமங்களில் மட்டுமில்லை, உலகம் முழுக்க எல்லா கிராமங்களிலும் இருக்கிறார்கள். 20ம் நூற்றாண்டின் முதல் பாதியில் வாழ்ந்த சீன எழுத்தாளர் லூஷ்யுன்(Luxun) எழுதிய ஆQவின் உண்மைக் கதையில் ஒரு கோட்டிமுத்து (ஆQ), வருகிறார். அது ஒரு ‘அழியா வரம்’ பெற்ற கதையாக இன்றும் பேசப்படுகிறது.

3. மனிதன் விலங்கிலிருந்து வளர்ந்து சமூகமாக பரிணமித்திருக்கிறான். ஒரு இலக்கியப் படைப்பு மனிதனின் விலங்குப் பக்கத்தை  குடைந்து ‘இருப்பதைத்தானே எடுத்துக் காட்டுகிறோம்’ என்று முன் வைக்கலாம். சாருநிவேதிதா மற்றும் அவரது சீடர்களின் எழுத்துக்கள் இப்படி சிரங்கைச் சொறிந்து கொடுக்கும் வகையினவை. அவற்றைப் படிக்கும் போது ஒருவர் சமூக வாழ்க்கையிலிருந்து ஒரு படி பின்னடைந்து விலங்காக பின்நோக்கி பரிணமிக்கிறார்.

மனிதனின் சமூக இயல்பை சித்திரப்படுத்தி வாசிப்பவரை மேல்நோக்கி எடுத்துச் செல்வது இன்னொரு வகை படைப்பு. டால்ஸ்டாய், லூஷ்யுன் போன்றவர்களின் படைப்புகள் இந்த வகையைச் சேர்ந்தவை.

என்னைப் பொறுத்த வரை நான் முதல் வகை படைப்புகளை ஒரு முறைக்கு மேல் படிக்க விரும்புவதில்லை, இரண்டாவது வகை படைப்புகளை பல நூறு முறைகள் படிக்கவும் சலிப்பதில்லை. பாலபாரதியின் கோட்டிமுத்து இரண்டாவது வகையைச் சேர்ந்தது, புத்தக அலமாரியில் இடம் பெற்று திரும்பத் திரும்பப் படித்து நம்மை உயர்த்திக் கொள்ள உதவுவது.

எதிர்மறை விமர்சனங்கள்.

1. ‘அண்ணே, எங்க ஊர்ல கோட்டி முத்துன்னு ஒருத்தன் இருந்தாண்ணே’ என்று பாலபாரதியின் குரலில் ஆரம்பித்து நேர்கோட்டில் போய் ஒரு சம்பவத்தில் முடிந்து விடுகிறது கதை. சிறுகதை ஒன்றில் எதிர்பார்க்கும் முடிச்சு, அதன் அவிழ்ப்பு போன்ற உத்திகள் இந்தக் கதையில் இல்லை.

2. கோட்டிமுத்துவைத் தவிர்த்த சூழலைப் பற்றிய விபரங்களும் விவரிப்புகளும் ஆழமாக, உயிரோட்டத்துடன் இல்லை. பள்ளிக்குழந்தைகளும், வாத்தியார்களும், மளிகைக்கடை சுரேஷ் அண்ணாச்சியும், அப்பாவும், உமையனன் வாத்தியாரும்,  கல்யாணி அக்காவும், கதை சொல்லியும், அவரது படையும், கோணக்குஞ்சானும், மைக் செட்டுக் காரரும் ஒரே வரியில் அறிமுகம் ஆகி கதைக்குள் நுழைந்து விடுகிறார்கள். இன்னும்  ஆழம் வேண்டும்.

3. கோட்டிமுத்துவின் மீது இன்னும் பாரத்தை ஏற்றலாம். கோட்டிமுத்துவைத் தாண்டி கோட்டி முத்துவின் மீது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் இயல்புகளை ஏற்றி சித்தரிக்கும் போது அது படிப்பவர் தன்னைத்தானே விமர்சனம் செய்து கொள்வதாகவும் அமைந்து விடும்.

4. எழுத்துப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். பாயாசத்தில் இடறும் கற்களாக அவை படுத்துகின்றன. அடுத்த பதிப்புக்கு ஒரு கறாரான தமிழாசிரியரிடம் கொடுத்து பிழை திருத்தம் செய்து வாங்கிக் கொள்ள வேண்டும்.

நன்றி:- http://bookimpact.blogspot.com/2012/01/blog-post.html