பொம்மை (சாமியாட்டம் – பாலபாரதி)

உழைக்கும் வர்க்க வாழ்க்கைப் போராட்டங்களின் சித்தரிப்பு.

‘பிரபல’ நிறுவனத்தில் வேலை பார்த்தாலும், அந்த சம்பளத்தில் அமைத்துக் கொள்ளும் வாழ்க்கைக்கு உத்தரவாதம் இல்லை.  ஆட்குறைப்பில் வேலை போன எதிர்த்து போராடும் வழிகள்  பலன் தரப் போவதில்லை.

குறைவான சம்பளத்தில் ஜவுளிக் கடையில் ‘பொம்மை’யாக நிற்கும் மாற்று வேலை. மனைவியின் தம்பிக்கு சொந்தமான வீட்டில் குடியிருப்பதால் வாடகை கொடுக்கத் தேவையில்லை. ஓரளவு சமாளிக்க முடிகிறது.

இந்த நிலையில் மனைவியின் தம்பி ஊரிலிருந்து வரும் வைபவம். ‘குறைந்த பட்சம் கறி எடுத்து சமைக்க வேண்டாமா? மச்சான் வருகைக்காக ஒரு நாள் லீவு எடுத்து வீட்டில் இருக்க வேண்டாமா?’

குடும்பச் சூழல், உரையாடல்கள், குழந்தை வளர்ப்பு, பொருளாதார நிலை, வேலை விபரங்கள் என்று பன்னீரின் உலகத்துக்குள் நுழைந்து அவனது கவலைகளிலும் திட்டமிடலிலும் நாமும் மூழ்குகிறோம்.

கடைக்கார சேட்டிடம் சம்பள முன்பணம் கேட்க வேண்டும். வேலை முடிந்து கடை முதலாளி உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு வருகிறான். கோரிக்கை சேட்டின் புத்திசாலித்தனத்தால் மழுங்கடிக்கப்பட்டு முதலாளித்துவ நிலையில் நிராகரிக்கப்படுகிறது.  சேட்டின் பணம் வேறு இடத்தில் சரணடைகிறது.

‘சாலை விளக்குகள் மஞ்சள் ஒளியை உமிர்ந்தபடி இருக்க’ வயதான பிச்சைக்காரர்கள் மூடப்பட்ட கடை வாசல் இருளில் படுக்கை விரிக்கிறார்கள். இருப்பவர்களின் உலகமும் இல்லாதவர்களின் உலகமும் அருகருகே, எந்த உறுத்தலும் ஏற்படுத்தாமல் இயங்குகின்றன.

பின் குறிப்பு :
கதைக்குள் ஒரு கதையாக ஒரு நிகழ்ச்சி. கரடி வேடம் போடும் பன்னீரின் 3 வயது குழந்தைக்கு பொம்மையை விட உள்ளே இருக்கும் அப்பாதான் வேண்டும். அது ஒரு தனிக்கதையாக இந்த சிறுகதைக்குள் ஒட்டாமல் நிற்கிறது.

கோட்டிமுத்து
பாரதியின் ஒரு பாட்டு

நன்றி- http://bookimpact.blogspot.com/2012/01/blog-post_24.html