பொதுவாகவே ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு சில பத்திய முறைகளை பலரும் சொல்லி வருகிறார்கள். அதே போல, ஒவ்வாமை என்பதும் இக்குழந்தைகள் சந்திக்கும் பெரிய சவால்களில் ஒன்று. அவற்றைப் பற்றி சிறு அறிமுகத்தை எளிமையாக கொடுக்க முயன்றிருக்கிறேன்.

GFCF டயட்


சில ஆய்வாளர்கள் ஆட்டிசத்திற்கும் ஜீரணக்கோளாறுகளுக்குமான தொடர்புகளை ஆய்ந்து வருகிறார்கள். க்ளூட்டின் (gluten) மற்றும் கேசின் (casein) எனப்படும் இரு வகைப் புரோட்டீன்களை ஜீரணிக்க சிரமப்படும் இவர்களின் குடல் அப்புரோட்டீன்களை சரியாக ஜீரணமாகாத நிலையில் ரத்தத்தில் கலக்க விடுவதால்  அது மூளையை பாதிக்கிறது என்பது ஒரு சாராரின் வாதம். இது எல்லாத் தரப்பு ஆராய்ச்சியாளர்களாலும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப் படவில்லை. ஆனால் நிறைய் பெற்றோர்கள் இவ்வகை டயட்டின் பின் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் இருப்பதாகக் கூறுகின்றனர்.

க்ளூட்டின் என்பது கோதுமை, பார்லி போன்ற தானியங்களில் காணப்படும் ஒரு வகை புரோட்டீன். கோதுமையை வாயில் வைத்து மென்று இருக்கிறீர்களா? சவ்வு மிட்டாய் மாதிரி ஒரு பதம் வருமே, அப்படி ஆன நிலையில் வெளிப்படுவது தான் க்ளூட்டின் என்று சொல்லப்படுகிறது.

கேசின் என்பது பால் மற்றும் அது சார்ந்த பொருட்களில் இருக்கும் புரோட்டீன் வகையாகும்.  பால் தன் நிலையில் இருந்து மாறும் நிலையில் கேசின் உற்பத்தி ஆகிறது. இந்த புரோட்டீன்கள்முதலில் பெரிய உருவிலான பெப்ரைட்டுகளாகவும் பின்னர் சிறிய உருவிலான அமினோ அமிலங்களாகவும்   உடைக்கப்பட்டு ஜீரணிக்கப்படுவது வழக்கம்.

ஆனால் சில ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இக்குறைபாடு உடைய குழந்தைகளின் சிறுநீரைப் பரிசோதித்துப் பார்த்ததில் பெப்ரைட் உருவிலேயே புரதங்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்த பெப்ரைட்டுகள் ஒரு வகையில் அபினின் தன்மையைக் கொண்டவை. எனவே ஒரு போதைப்பொருள் போல இவை ரத்தத்தில் கலந்து குழந்தைகளின் மூளையை பாதிப்பதன் விளைவே ஆட்டிசக் குழந்தைகளில் காணப்படும் விரும்பத்தகாத நடவடிக்கைகள் என்பது இவ்வாய்வாளர்களின் கூற்று. ஆட்டிசம் மட்டுமல்லா ஸ்கீசோபிரினியா (schizophrenia) போன்ற வியாதிகளுக்கும் இந்த முழுமையாக ஜீரணிக்கப்படாத புரோட்டீன்களே காரணமாக இருக்கக்கூடும் என்றும் சொல்கிறார்கள்.

ஆனால் எல்லாக் ஆட்டிசக் குழந்தைகளுக்கும் இந்த தீர்வு ஒத்து வருவதில்லை. நாம் முன்பே பார்த்தது  போல எந்த ஒரு குழந்தைக்கும் ஆட்டிசம் ஏற்படுவதின் காரணம் இன்னதென்பதை திட்டவட்டமாகக் கண்டுபிடித்துவிட முடிவதில்லை. அக்குழந்தையின் ஆட்டிசத்திற்கான அடிப்படைக் காரணி இவ்வகை ஜீரணக் குறைபாடாக இருக்கும் பட்சத்தில், இந்த டயட் அவர்களிடம் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும். அப்படியில்லாது வேறெதேனும் காரணங்களால் அக்குறைபாடு ஏற்பட்டிருப்பின் இந்த டயட்டினால் எந்த முன்னேற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது.

எது எப்படியிருந்தாலும் ஆட்டிசக் குழந்தைகளில் பெரும்பாலானோருக்கு ஜீரணக்குறைபாடுகள் அதிகமாகக் காணப்படுவதும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதும் உண்மையே. உதாரணமாக ஆட்டிசக் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட சாத்தியக்கூறுகள் சாதாரணக் குழந்தையை விட அதிகம் என்று  ஆய்வொன்று நிறுவுகிறது.   இந்த GFCF டயட் நிச்சயமாக அந்த ஜீரணப்பிரச்சனைகளைக் குறைக்கிறது.

ஒரு சில குழந்தைகளுக்கு இது நம்பமுடியாத அளவுக்கு நல்ல பலன்களைத் தருகிறது – நடவடிக்கைகளில் விரும்பத்தக்க மாற்றம் நிகழ்ந்துள்ளதாகவும், பேசாத சில குழந்தைகள் பேசத்தொடங்கியதாகவும் அக்குழந்தைகளின் பெற்றோர் கூறிய கருத்துக்கள் காணக்கிடைக்கின்றன. ஆனால் இந்த முன்னேற்றங்கள் உடனடியாக வெளித்தெரிவதில்லை. மனித உடலிலிருந்து மறைய பால் சம்பந்தப்பட்ட கேசினுக்கு சில வாரங்களும், கோதுமை சம்பந்தப்பட்ட க்ளூட்டினுக்கு சில மாதங்களும் தேவைப்படும். எனவே குறைந்தபட்சம் 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை இதை முயற்சித்துப் பார்த்தால் மட்டுமே நாம் ஒரு திட்டவட்டமான முடிவுக்கு வர முடியும் என்றும் சொல்லப்படுகிறது.

நம்பிக்கை தேவை

நம் சமூகத்தில் பால் என்பது குழந்தைக்கான முழு முதல் உணவாக கருத்தப்படுகிறது. குழந்தை சாப்பிட படுத்துகிறான்(ள்) என்றாலும் மல்லுகட்டி ஒரு டம்ப்ளர் பாலையாவது உள்ளே அனுப்புவது நம் குடும்பங்களில் வழக்கம். அதே போல் பிஸ்கெட்டுக்கு நிகரான சத்தான நொறுவைத் தீனி வேறெதும் இல்லையென்பதும் நம் ஆழ்ந்த நம்பிக்கை. எனவே இவ்விரண்டும் தவிர்த்த உணவுகள் மட்டுமே குழந்தைக்கு என்பது முதலில் கொஞ்சம் மருட்டவே செய்யும்.

ஆனால் யோசித்துப் பார்த்தால் மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினமும் தன் இனமல்லாத உயிரின் பாலை உண்டு ஜீவிப்பதில்லை. எனவே மாட்டின் பாலை அருந்த முடியாமல் போவதாலேயே குழந்தை பெரிதாக எதையோ இழந்து விட்டதைப் போல் நினைத்து பயப்படத் தேவையில்லை.  அமெரிக்காவின் வீகன்ஸ்(vegan) குழுவினர் பால், முட்டை கூட கலக்காத அதி தீவிர சைவ பட்சிணிகளாக வாழ்கிறார்கள். அவர்களது குழந்தைகள் எல்லாம் பால் இல்லாமலே கூட தேவையான கால்சியத்தோடு நல்ல உடல்நலத்தோடு வளரவே செய்கிறார்கள். ராகி போன்ற தானியங்கள், பீன்ஸ், ப்ரோக்கோலி போன்ற பச்சைக் காய்கறிகள் என மற்ற கால்சியம் மிக்க உணவு வகைகளைக் கொண்டே குழந்தைகளை நல்ல வலுவோடும், ஆரோக்கியத்தோடும் வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை கொள்ள வேண்டும்.

நம் பாரம்பரிய உணவு

இணையத்தில் மேலோட்டமாகத் தேடினாலே கூட பாலும், கோதுமையையும் தவிர்த்த நிறைய சமையற்குறிப்புகள் கிடைக்கின்றன. மேலும் நம்முடைய பாரம்பரிய நொறுவைகளான முறுக்கு, தட்டை, சீடை என அரிசி மாவையும், கடலை மாவையும் அடிப்படையாகக் கொண்ட எத்தனையோ பலகாரங்கள் உண்டு.

பாலுக்கு மாற்றாக , சோயா பால் , முளை கட்டிய தானியங்கள் கொண்டு செய்யும் சுண்டல், சர்க்கரையில் இருக்கும் க்ளுக்கோஸின் அளவு இக்குழந்தைகளை மேலும் தூண்டி விடும் என்பதால், கருப்பட்டி சேர்த்த சத்துமாவுக் கஞ்சி என மாற்று ஏற்பாடுகளின் மூலம் குழந்தைகளின் சுவையையும் அதே நேரம் ஆரோக்கியத்தையும் காத்துக் கொள்ள முடியும்.

ஆலோசனை அவசியம்

எனினும் இந்த டயட்டை தொடங்குவதற்கு முன்னர் தங்கள் குழந்தையின் மருத்துவர்(pediatrician),  தங்களது தெரபிஸ்ட் ஆகியோரை ஒரு முறை கலந்து பேசி விட்டு இதை செயல்படுத்துதல் நலம். மேலும் செயற்கை நிறமூட்டும் பதார்த்தங்கள், சுவையூட்டும் பதார்த்தங்கள், சர்க்கரை,பிரிசர்வேட்டிவ்ஸ்(நீண்ட நாள் கெட்டுப்போகாமலிருக்க உபயோகிக்கப்படும் வேதிப்பொருட்கள்) மற்றும் இனிப்பூட்டும் பதார்த்தங்கள் போன்றவற்றையும் இக்குழந்தைகளுக்கு தவிர்த்தல் நலம்.

SCD – Diet

இதே போல எஸ்.சி.டி(SCD – Specific Carbohydrate Diet) என்றொரு டயட் முறையும் உள்ளது. க்ளூட்டின், கேசின் போன்ற புரதங்களைப் போலவே ஒரு சில கார்போஹைட்ரேட்களையும் ஜீரணிப்பதில் சிரமங்கள் ஏற்படலாம் என்றும், அவற்றைத் தவிர்ப்பது நல்லது என்பதுமே இந்த டயட்டின் கொள்கையாகும். உண்மையில் முதன்மையாக இது ஜீரணக் கோளாறுகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு டயட் முறைதான். சிலர் இது ஆட்டிசத்திற்கும் பலனளிப்பதாகச் சொன்னாலும் பரவலாக அறியப்படாத ஒரு முறையாகவே இது உள்ளது.

வேதிப்பொருட்கள் – ஒவ்வாமை

உணவுப் பொருட்களைப் போலவே சுற்றுச்சூழலில் காணப்படும் வேதிப்பொருட்களும் ஆட்டிசக் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி அவர்களின் நடவடிக்கைகளை பாதிக்கலாம். எனவே சூழலில் கையாளப்படும் வேதிப்பொருட்கள்(chemicals) குறித்தும் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

வீட்டிற்கு வண்ணமடிக்கப் பயன்படும் பெயிண்ட்கள், துப்புரவுக்குப் பயன்படுத்தும் திரவங்கள் (பாத்திரம் தேய்க்க, வீடு துடைக்க பயன்படுத்துபவை), அலுமினியம் போன்ற சில வகை கன உலோகங்கள், நொதித்தலுக்குப் பயன்படுத்தப்படும் ஈஸ்ட்  போன்ற பொருட்கள் இக்குழந்தைகள் புழங்குமிடத்தில் இருந்தாலே அவை இக்குழந்தைகளுக்கு ஒவ்வாமையை உருவாக்க முடியும் என்று ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். எனவே இத்தகைய பொருட்களையும் நமது இல்லங்களில் குழந்தைகள் புழங்கும் இடங்களில் வைக்காமலிருப்பது நல்லது.

தொடர்புடைய சுட்டி:-

மேலும் ஆட்டிசம் பற்றி அறிந்துகொள்ள-  http://216.185.103.157/~balabhar/blog/?page_id=25 சுட்டிக்கு போகவும்.


Comments

4 responses to “ஆட்டிசம் – பத்தியமும், ஒவ்வாமையும்”

  1. Balaji Avatar
    Balaji

    I dunno how to appreciate your efforts Bala. great going. keep it up. It is shaping up nicely, covering every aspect. Thank you.

  2. பாலாஜி அண்ணே,

    இத்துறையில் செயலாற்றும் பலரையும் பார்க்கும் போது, நான் ஒண்ணுமே இல்லை. 🙂

    நன்றி

  3. chithra suresh Avatar
    chithra suresh

    very useful informations. thanks for your link

  4. […] ஆட்டிசம்- பத்தியமும், ஒவ்வாமையும் […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *