ஆட்டிசம் தொடர்பான முந்தைய கட்டுரைகளில் ஒன்றில் இக்குழந்தைகளுக்கான பத்தியமும் ஒவ்வாமையும் பற்றி எழுதியிருந்தேன். இவர்களுக்கு முக்கியமான பலன் அளிக்கக் கூடிய சில உணவு வகைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

இக்குழந்தைகளின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று அதீத துறுதுறுப்பு (Hyper Activity). ஆட்டிசக் குழந்தைகள் மட்டுமல்ல இன்றைய குழந்தைகளில் பெரும்பாலானோர் இப்பிரச்சனை உடையவர்களாகவே இருக்கிறார்கள். ஹைப்பரைக் குறைப்பதில் சிவப்பு அரிசி முக்கியப் பங்கு வகிப்பதாக நிபுணர்கள் சொல்கிறார்கள். முழுமுற்றாக சிவப்பரிசி உணவுக்கு மாறிய பின் ஹைப்பர் குறைவதை கண் கூடாகப் பார்ப்பதாக நான் சந்தித்த ஒரு சிறப்புப் பள்ளி பொறுப்பாளர் கூறினார். ஆனால் சமைப்பவர்களுக்கு இது கொஞ்சம் சவாலான வேலைதான். வேக அதிக நேரம் எடுக்கக் கூடியது என்பதில் துவங்கி, வெள்ளை அரிசி ருசிக்குப் பழகிய குழந்தைகளின் நாக்கு இதை அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ளாது என்பது வரை நிறைய சிக்கல்கள் உண்டு. 🙂

மேலும் இதில் இன்றைய குழந்தைகளின் தலையாய எதிர்பார்ப்பான வகைகள்(varieties) குறைவாகவே நமக்குத் தெரியும் என்பதும் ஒரு சிக்கல். அதிக பட்சம் புட்டு அல்லது சோறு. அதற்கு மேல் இவ்வரிசியில் பதார்த்தங்கள் செய்ய முடியுமா என்ற கேள்வி எல்லோருக்குமே உண்டு. கிடைத்த சில சமையற் குறிப்புகளைப் பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

சமையற்குறிப்புகளுக்குள் போவதற்கு முன் ஹைப்பர் சம்பந்தமாக தவிர்க்க வேண்டிய வேறு சில விஷயங்களையும் பட்டியலிட்டு விடுகிறேன்.

1. சர்க்கரை: இது மிக முக்கியமாக தவிர்க்க வேண்டிய ஒன்று. மாற்றாக கருப்பட்டியோ வெல்லமோ உபயோகிக்கலாம். என்ன அவையெல்லாம் சிறிது மண் கலந்திருக்கும் என்பதால் நீரில் இட்டு கரை விட்டு பின் வடிகட்டி உபயோகிக்க வேண்டியிருக்கும் அவ்வளவே. ஆனால் சர்க்கரையில் உள்ள குளுக்கோஸ் அளவு உடனடியாக ரத்தத்தில் கலந்து இக்குழந்தைகளை இன்னும் கொஞ்சம் புத்துணர்ச்சி ஊட்டி ஹைப்பரை அதிகரிக்க வைக்கும்.

2. திராட்சை, வாழைப் பழங்கள் : இவை இரண்டும் கூட உடனடியாக உடலுக்கு சக்தியூட்டுபவை என்பதால் தவிர்ப்பது நலம்.

3. இனிப்பு பலகாரங்கள்: இதிலும் சர்க்கரை சேர்த்துச் செய்யப்படும் பதார்த்தங்களை தவிர்க்கவும். வெல்லமோ கருப்பட்டியோ சேர்த்துச் செய்யப் படுபவை பரவாயில்லை.

4. குளிர்பானங்கள்:  வெயிலில் அலைந்திருக்கிறானே குழந்தை என்று பாவம் பார்த்து பாட்டில் குளிர்பானங்கள் எதையும் வாங்கிக் கொடுத்து விடாதீர்கள். அடுத்த மூன்று மணி நேரத்திற்கு அவனை யாராலும் கட்டுப் படுத்த முடியாது.

கறுப்பு -சிவப்பு அரிசி 30 ரெஸிபிகள் என்று சமையல் கலை நிபுணர் கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் அவர்கள் எழுதிய இவை, அவள் விகடனின் இலவச இணைப்பாக கொடுக்கப்பட்டது, ஆட்டிச நிலைக்குழந்தைகளுக்கும் இவை நல்லது என்பதால் அந்த சமையற்குறிப்புகளை அப்படியே கீழே கொடுத்துள்ளேன். (நன்றி:- அவள் விகடன்)

சிவப்பு அரிசி சர்க்கரைப் பொங்கல்

தேவையானவை: சிவப்பு அரிசி – ஒரு கப், பாசிப்பருப்பு – கால் கப், துருவிய வெல்லம் – இரண்டரை கப், தேங்காய் துருவல் – 4 டேபிள்ஸ்பூன், நெய் – 2 டேபிள்ஸ்பூன், முந்திரி, திராட்சை – சிறிதளவு, ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்.

செய்முறை: சிவப்பு அரிசியை 2 மணி நேரம் ஊறவிடவும். பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்துக் கொள்ளவும். குக்கரில் சிவப்பு அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் சேர்த்து குழைய வேகவிடவும் (தண்ணீர் அளவு: ஒரு பங்கு அரிசிக்கு 3 பங்கு). வெந்ததும் இறக்கி நன்கு மசித்து, அதனுடன் வெல்லம், தேங்காய் துருவல், முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்து, மீண்டும் அடுப்பில் வைத்து நன்கு கிளறவும்… நெய் ஊற்றி கலந்து இறக்கவும்.


சிவப்பு அரிசி பகளாபாத்

தேவையானவை: சிவப்பு அரிசி – ஒரு கப், தயிர் – அரை கப், பால் – 2 கப், இஞ்சி – சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 2, மாதுளை முத்துக்கள் – 2 டேபிள்ஸ்பூன், ஆப்பிள் துண்டுகள் – சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சிவப்பு அரிசியை 2 மணி நேரம் ஊறவிட்டு, பின்னர் 2 கப் தண்ணீர், ஒரு கப் பால் சேர்த்து வேகவிடவும். வெந்த சாதத்தை மசித்துக் கொள்ளவும். அதை சிறிது ஆறவிட்டு, அதனுடன் தேவையான உப்பு, அரை கப் தயிர், ஒரு கப் பால் சேர்த்துக் கிளறவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாயை தாளித்து சேர்க்கவும். பிறகு, மாதுளை முத்துக்கள், ஆப்பிள் துண்டுகள் சேர்த்துப் பரிமாறவும்.


சிவப்பு அரிசி இனிப்புப் புட்டு

தேவையானவை: சிவப்பு புட்டரிசி மாவு – ஒரு கப், சர்க்கரை – தேவையான அளவு, தேங்காய் துருவல் – கால் கப், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை: சிவப்பு புட்டரிசி மாவில் தண்ணீர் தெளித்து, ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பிசிறி, 10-15 நிமிடம் ஊறவிடவும். பின்னர் அதில் நெய் சேர்த்துப் பிசிறவும். புட்டுக் குழாயில் மாவு, சர்க்கரை, தேங்காய் துருவல் என்ற வரிசையில் நிரப்பவும். பிறகு ஆவியில் வேக வைத்து எடுத்தால், சுவையான குழாய்ப்புட்டு தயார்.


சிவப்பு அரிசி காரப் புட்டு

தேவையானவை: சிவப்பு புட்டரிசி மாவு – ஒரு கப்,  பச்சை மிளகாய் – 2, வெங்காயம், கேரட் – தலா ஒன்று, எலுமிச்சம் பழம் – அரை மூடி, கறிவேப்பிலை, இஞ்சி – சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா கால் டீஸ்பூன், வேர்க்கடலை, தேங்காய் துருவல் – தலா 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு,

செய்முறை: சிவப்பு புட்டரிசி மாவில் தண்ணீர் தெளித்துப் பிசிறி, 10-15 நிமிடம் ஊறவிடவும். பின்னர் ஆவியில் வேக வைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், உப்பு சேர்த்துக் கிளறவும். ஆவியில் வெந்த புட்டு சேர்த்துக் கிளறவும். பிறகு, கீழே இறக்கி எலுமிச்சம் பழம் பிழிந்து, தேங்காய் துருவல் தூவி, கிளறிப் பரிமாறவும்.


சிவப்பு அரிசி தோசை

தேவையானவை: சிவப்பு அரிசி – ஒரு கப், உளுந்து – கால் கப்,  வெந்தயம் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சிவப்பு அரிசியை தனியாகவும், உளுந்து – வெந்தயத்தை தனியாகவும் 4 மணி நேரம் ஊறவிடவும். பிறகு அவற்றை சேர்த்து மாவாக அரைத்து, உப்பு போட்டுக் கலக்கவும். பிறகு இந்த மாவை 4 மணி நேரம் புளிக்கவிடவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை தோசைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். இதை சட்னியுடன் பரிமாறவும்.


சிவப்பு அரிசி காரப் பணியாரம்

தேவையானவை: சிவப்பு அரிசி – ஒரு கப், உளுந்து – அரை கப், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 2, இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, தேங்காய் துருவல் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சிவப்பு அரிசியை தனியாகவும், உளுந்து – வெந்தயத்தை தனியாகவும் ஊறவிடவும். 3 மணி நேரம் கழித்து அரைக்கவும். தேவையான உப்பு சேர்த்துக் கலக்கி, 4 மணி நேரம் புளிக்கவிடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, இஞ்சித் துருவல், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி, மாவில் சேர்க்கவும். குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி, எண்ணெய் விட்டு, மாவை குழிகளில் ஊற்றி வேகவிடவும். இருபுறமும் வேகவிட்டு எடுத்து, காரச் சட்னியுடன் பரிமாறவும்.


சிவப்பு அவல் உப்புமா

தேவையானவை: சிவப்பு அவல் – ஒரு கப், வேக வைத்த முளைகட்டிய பயறு – கால் கப், பச்சை மிளகாய் – 2, வெங்காயம் – ஒன்று, இஞ்சி – சிறிய துண்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

செய்முறை: சிவப்பு அவலை கால் மணி நேரம் ஊறவிடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் வேக வைத்த முளைகட்டிய பயறு, உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு ஊற வைத்த அவல் சேர்க்கவும். இதை நன்கு கிளறி, தேங்காய் துருவல் சேர்த்து, கொத்தமல்லி தூவி இறக்கிப் பரிமாறவும் (விருப்பப்பட்டால், அரை மூடி எலுமிச்சம் பழம் பிழிந்து கொள்ளலாம்).


சிவப்பு அவல் வெஜ் கிச்சடி

தேவையானவை: சிவப்பு அவல் – ஒரு கப், கேரட், வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, பீன்ஸ் – 2, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, கொத்தமல்லி, புதினா – சிறிதளவு, வேக வைத்த பச்சைப் பட்டாணி – கால் கப், காலிஃப்ளவர் – 10 பூக்கள் (நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்), பட்டை – சிறிய துண்டு, சோம்பு – கால் டீஸ்பூன், பிரிஞ்சி இலை – ஒன்று, எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

செய்முறை: சிவப்பு அவலை கால் மணி நேரம் ஊறவிடவும். கேரட், பீன்ஸ், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி பட்டை, சோம்பு, பிரிஞ்சி இலை தாளித்து… வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது, தக்காளி, கேரட், பீன்ஸ் சேர்த்து வதக்கவும். காய்கறிகள் வெந்ததும், வேக வைத்த பச்சைப் பட்டாணி, காலிஃப்ளவர், நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். இதனுடன் ஊற வைத்த அவல், கொத்தமல்லி, புதினா சேர்த்துக் கிளறி பரிமாறவும்.


சிவப்பு அவல் ஸ்வீட்

தேவையானவை: சிவப்பு அவல் – ஒரு கப், தேங்காய் துருவல் – கால் கப், முந்திரி, திராட்சை, பாதாம் – தேவையான அளவு, துருவிய வெல்லம் அல்லது நாட்டுச் சக்கரை – அரை கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: சிவப்பு அவலை 10 நிமிடம் ஊறவிடவும். பிறகு அவலுடன் முந்திரி, பாதாம், திராட்சை, துருவிய வெல்லம் அல்லது நாட்டுச் சக்கரை, தேங்காய் துருவல் சேர்த்துப் பிசிறவும். இதனுடன் நெய் சேர்த்துக் கலந்து பரிமாறவும் (விருப்பப்பட்டால், வாழைப் பழம் அல்லது ஆப்பிள் துண்டுகள் சேர்க்கலாம்).

மாலை நேரத்துக்கு ஏற்ற எளிய சிற்றுண்டி இது.


சிவப்பு அவல் தோசை

தேவையானவை: சிவப்பு அவல், தோசை மாவு – தலா ஒரு கப்,  வெங்காயம், பச்சை மிளகாய் – தலா ஒன்று, கறிவேப்பிலை – சிறிதளவு, இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சிவப்பு அவலை 15 நிமிடம் ஊற வைத்து, தோசை மாவுடன் கலக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சித் துருவல், உப்பு சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை தோசைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். சட்னியுடன் பரிமாறவும்.


சிவப்பு அவல் வடை

தேவையானவை: சிவப்பு அவல், உளுந்து – தலா ஒரு கப், இஞ்சி – சிறிய துண்டு, மிளகு – கால் டீஸ்பூன், வெங்காயம் – ஒன்று, கறிவேப்பிலை – சிறிதளவு,  எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உளுந்தை அரை மணி நேரம் ஊறவிடவும். பிறகு, உளுந்துடன் உப்பு, தோல் சீவிய இஞ்சி, மிளகு சேர்த்து வடை மாவு பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும். அவலை 15 நிமிடம் ஊற வைத்து, மாவில் கலக்கவும். இந்த மாவுடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து, வடைகளாக தட்டி,  சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.


சிவப்பு அரிசி பாயசம்

தேவையானவை: சிவப்பு அரிசி – 5 டேபிள்ஸ்பூன், பால் – ஒரு லிட்டர், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், பாதாம் – 10 (துருவிக் கொள்ளவும்), சர்க்கரை – தேவையான அளவு.

செய்முறை: சிவப்பு அரிசியை மிக்ஸியில் ரவை போல் உடைத்துக் கொள்ளவும். பாலுடன் உடைத்த அரிசியை சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்து வரும்போது, அடுப்பை ‘சிம்’மில் வைத்து 10 நிமிடம் வேகவிடவும். பின்னர் சர்க்கரை சேர்க்கவும். எல்லாம்  நன்கு சேர்ந்து வரும்போது ஏலக்காய்த்தூள், துருவிய பாதாம் சேர்த்து இறக்கவும்.

இதை சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறலாம்.


சிவப்பு அவல் லட்டு

தேவையானவை: சிவப்பு அவல் – ஒரு கப், பொடித்த சர்க்கரை – முக்கால் கப், முந்திரி – 20, நெய் – தேவையான அளவு, ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்.

செய்முறை: சிவப்பு அவலை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ளவும். இதை ஆறவிட்டு, மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். முந்திரியை சிறியதாக உடைத்து நெய்யில் வறுத்துக் கொள்ளவும். பொடித்த அவல், பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்து நன்கு பிசிறிக் கொள்ளவும். நெய்யைச் சூடாக்கி, தேவைக்கேற்ப ஊற்றி, உருண்டைகளாகப் பிடித்தால்… சிவப்பு அவல் லட்டு ரெடி.

குறிப்பு: உடனடியாக பயன்படுத்துவதானால், நெய்க்குப் பதில் பால் விட்டு லட்டு பிடிக்கலாம்.


சிவப்பு அரிசி ஆப்பம்

தேவையானவை: சிவப்பு அரிசி, பச்சரிசி – தலா ஒரு கப், உளுந்து – 4 டேபிள்ஸ்பூன், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், சாதம் – அரை கப், ஆப்பசோடா – ஒரு சிட்டிகை, -  தேங்காய்ப் பால், சர்க்கரை, உப்பு  – தேவையான அளவு.

செய்முறை: சிவப்பு அரிசி, பச்சரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து 4 மணி நேரம் ஊறவிடவும். பிறகு, நன்கு மையாக அரைக்கவும். சாதத்தையும் சேர்த்து அரைக்கவும். இதனுடன் தேவையான உப்பு சேர்த்துக் கலக்கி, 10 மணி நேரம் புளிக்கவிடவும். ஆப்பம் ஊற்றுவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக ஆப்பசோடா சேர்த்துக் கலக்கவும். பிறகு ஆப்பச் சட்டியை சூடாக்கி, மாவை ஊற்றி மூடி, ஆப்பம் சுட்டெடுக்கவும். தேங்காய்ப்பாலுடன் சர்க்கரை சேர்த்துக் கலக்கி ஆப்பத்துடன் பரிமாறவும்.


சிவப்பு அரிசி பொங்கல்

தேவையானவை: சிவப்பு அரிசி – ஒரு கப், பாசிப்பருப்பு – கால் கப், மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், முந்திரி – சிறிதளவு, இஞ்சி – சிறிய துண்டு, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், நெய் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். சிவப்பு அரிசியை 2 மணி நேரம் ஊறவிடவும். குக்கரில் அரிசி, பாசிப்பருப்பு, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து குழைய வேகவிடவும். பிரஷர் அடங்கியதும்… வாணலியில் எண்ணெய், நெய் விட்டு சூடாக்கி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இஞ்சி, முந்திரி தாளித்து, அரிசி – பருப்பு கலவையில் சேர்த்துக் கிளறினால், சிவப்பு அரிசி பொங்கல் தயார்.


சிவப்பு அரிசி அடை

தேவையானவை: சிவப்பு அரிசி – ஒன்றரை கப், கடலைப்பருப்பு – கால் கப், பாசிப்பருப்பு, துவரம்பருப்பு சேர்த்து – கால் கப், மிளகு, சீரகம், சோம்பு – தலா கால் டீஸ்பூன், மிகவும் சிறியதாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 10, வெங்காயம் – ஒன்று, இஞ்சி – சிறிய துண்டு,  எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசி மற்றும் பருப்பு வகைகளை தனித்தனியே 4 மணி நேரம் ஊற விடவும். பின்னர் அவற்றை ஒன்று சேர்த்து மிளகு, சீரகம், சோம்பு, தோல் சீவிய இஞ்சி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். மாவுடன் நறுக்கிய வெங்காயம், தேங்காய் துண்டுகள் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை அடைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். தேங்காய் சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.


சிவப்பு அரிசி ஊத்தப்பம்

தேவையானவை: சிவப்பு அரிசி – ஒரு கப், உளுந்து – கால் கப், வெங்காயம் – ஒன்று, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சிவப்பு அரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து 4 மணி நேரம் ஊறவிட்டு, தேவையான உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு… மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லியை சேர்க்கவும். தோசைக்கல்லைச் சூடாக்கி, மாவை கனமாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, ஊத்தப்பமாக சுட்டு எடுக்கவும். சட்னியுடன் பரிமாறவும்.


சிவப்பரிசி தேங்காய்ப் பால் கஞ்சி

தேவையானவை: சிவப்பு அரிசி – ஒரு கப், முதல் தேங்காய்ப் பால் – அரை கப், இரண்டாம், மூன்றாம் தேங்காய்ப் பால் – தலா ஒரு கப், பூண்டு – 15 பல், சீரகம், வெந்தயம் – தலா அரை டீஸ்பூன், சுக்கு – சிறிய துண்டு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சிவப்பரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, குக்கரில் சிவப்பு அரிசியுடன் இரண்டாம், மூன்றாம் தேங்காய்ப் பால், ஒரு டம்ளர் தண்ணீர், பூண்டு, சீரகம், வெந்தயம், சுக்கு, உப்பு சேர்த்து நன்கு வேகவிட்டு இறக்கவும். பிறகு அதில் முதல் தேங்காய்ப்பால் சேர்த்துப் பரிமாறவும்.

வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆற்றும் சத்தான கஞ்சி இது.


சிவப்பு அரிசி கொழுக்கட்டை (யாழ்ப்பாண கொழுக்கட்டை)

தேவையானவை: சிவப்பு அரிசி மாவு – ஒரு கப், வேக வைத்த பாசிப்பருப்பு, தேங்காய் துருவல் – தலா கால் கப்,  சர்க்கரை, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சிவப்பு அரிசி மாவுடன் உப்பு, தேவையான சுடுநீர் சேர்த்து கொழுக்கட்டை மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். வேக வைத்த பாசிப்பருப்புடன் சர்க்கரை, தேங்காய் துருவல் சேர்த்து பூரணம் தயார் செய்யவும். மாவை சொப்பு போல் செய்து, பூரணத்தை உள்ளே வைத்து, கொழுக்கட்டைகளாக செய்து ஆவியில் வேகவிட்டு எடுத்தால், யாழ்ப்பாண கொழுக்கட்டை ரெடி.


சிவப்பு அரிசி பால் கொழுக்கட்டை

தேவையானவை: சிவப்பு அரிசி மாவு – ஒரு கப், தேங்காய் துருவல் – கால் கப்,  பால் – 2 கப், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, சர்க்கரை – தேவையான அளவு, உப்பு – சிறிதளவு.

செய்முறை: சிவப்பு அரிசி மாவுடன் உப்பு, சுடுநீர், தேங்காய் துருவல் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். அதை சிறுசிறு உருண்டைகளாக (கோலி அளவு) உருட்டி வைக்கவும். ஒரு கப் பால், ஒரு கப் தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும். அதில் உருண்டைகளைப் போட்டு வேகவிடவும். மீதமுள்ள ஒரு கப் பாலில் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து வெந்த உருண்டைகளுடன் சேர்க்கவும். நன்கு சேர்ந்து வரும்போது இறக்கிப் பரிமாறவும்.


சிவப்பு அரிசி – தேங்காய்ப் பால் அல்வா (தொதல்)

தேவையானவை: சிவப்பு அரிசி மாவு – ஒரு கப், தேங்காய்ப் பால் – 4 கப், சர்க்கரை – இரண்டரை கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரி – சிறிதளவு.

செய்முறை: தேங்காய்ப் பாலில் சிவப்பு அரிசி மாவை கட்டியில்லாமல் கலந்து, கடாயில் சேர்த்து, அடுப்பில் வைத்துக் கிளறவும். பிறகு அதனுடன் தேவையான சர்க்கரை சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, கை விடாமல் கிளறவும். ஒட்டாத பதம் வரும்போது ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்துக் கிளறி இறக்கி, ஆறியவுடன் துண்டுகள் போடவும்.


சிவப்பு அரிசி வடகம்

தேவையானவை: சிவப்பு அரிசி – ஒரு கப், வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – இஞ்சி விழுது – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சிவப்பு அரிசியை 2 மணி நேரம் உற வைக்கவும். பிறகு மூன்றரை டம்ளர்  தண்ணீர் விட்டு வேகவிடவும். வெந்த சாதத்துடன் உப்பு, இஞ்சி – பச்சை மிளகாய் விழுது, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும். ஆறியதும் சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும். தேவைப்படும்போது எண்ணெயில் பொரித்து எடுத்தால்… வடகம் ரெடி.

++++++++++++++++++

தொடர்புடைய சுட்டி:-

ஆட்டிசம்- பத்தியமும், ஒவ்வாமையும்

மேலும் ஆட்டிசம் பற்றி அறிய:-

http://216.185.103.157/~balabhar/blog/?page_id=25


Comments

One response to “19. ஆட்டிசம்- சில பத்திய உணவுகள்”

  1. சேமித்துக் கொண்டேன்… செய்முறை விளக்கங்களுக்கு நன்றிகள் பல…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *