book-748904_640

இன்றைய குழந்தைகள், நூல் வாசிப்பு என்றாலே காத தூரம் ஓடுகின்றவர்களாகவே இருக்கிறார்கள். உள்ளங்கைக்குள் உலகையே கொண்டு வந்துவிட்டது ஸ்மார்ட்போன். ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், ஜி ப்ளஸ் என்று இணைய மேய்ச்சலுக்குத் தயாராக இருப்பவர்களிடம் நூலைக் கையில் எடுக்கச் சொன்னால், ஓடாமல் என்ன செய்வார்கள்?

வாசிப்பின் மகத்துவத்தை அவர்களிடம் பேசுவதற்கோ எடுத்துச் சொல்லுவதற்கோ நமக்கும்கூட நேரம் இருப்பதில்லை என்பதுதான் நிதர்சனம்.

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’, எழுதி ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பின்னும் இன்றும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், இதை ஏன் திரைப்படமாக எவராலும் எடுக்க முடியவில்லை என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? கரெக்ட்! நீங்கள் நினைப்பதுதான் சரி! கதையாகப் படித்த விஷயங்களை அப்படியே காட்சிப்படுத்துவதென்பது மிகுந்த சிரமம் கொடுப்பதாகவும், பொருட்செலவு பிடிப்பதாகவும் இருப்பதால்தான் எளிதில் சினிமாவாக்க முடியவில்லை.

சினிமாவாகவோ, தொலைக்காட்சித் தொடராகவோ அல்லது இதர விஷயங்களாகவோ நாம் பார்க்கும் ஒரு கதை, நமக்குள் அப்படியே பதிவாகிறது. ஆனால் எழுத்தின் வழி ஒரு கதையைப் படிக்கும்போது, கதையில் சொல்லப்பட்டிருக்கும் காட்சிகளை நம் மனக்கண்ணால் காண்கிறோம்; கதையில் வரும் கதாபாத்திரங்களையும் அப்படியே நம் வசதிக்கேற்ப உருவகப்படுத்திக் கொள்கிறோம்.

கல்கியின் பொன்னியின் செல்வனையே எடுத்துக் கொள்வோம், அதில் வரும் வந்தியத்தேவனைப் படிக்கும்போது, உங்களுக்கு ஒருவர் தோன்றி இருக்கலாம். என் அம்மா காலத்தில் அந்த வேடத்திற்கு, அந்தக் கால நடிகர் ஒருவரைச் சொல்லுவார். அப்போது எனக்கு அது சரியெனப் பட்டது. என் காலத்தில் இன்று எனக்கு அந்தக் கதாபாத்திரத்துக்கு இன்றைய நடிகர் ஒருவரின் முகம் முன்னால் வருகிறது. நாளை என் பிள்ளை படிக்கும்போது, அவர்களுக்கு இன்னொருவரின் முகம் நினைவுக்கு வரலாம். இதுதான் எழுத்தில் இருக்கும் வெற்றி! இதே கதையை நாம் சினிமாவாகப் பார்த்திருந்தால், வந்தியத்தேவன் பாத்திரத்தில் நடித்த நடிகரைத் தவிர, வேறு எவரையுமே பொருத்திப்பார்க்க முடியாமல் போய்விடும். ஆனால், எழுத்து என்பது உங்கள் கற்பனை குதிரைக்குக் கடிவாளம் போடுவதில்லை. அது தன் இஷ்டம்போல பறந்து திரிகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நடிகர்கள், வந்தியத்தேவன் பாத்திரத்துக்குப் பொருத்தமானவர்களாகத் தோன்றலாம்.

ஒவ்வொரு மனிதனுக்கும் கற்பனை என்பது அவசியமானது. அதைக் கொடுக்கக் கூடியது, எழுத்தாக நாம் படிக்கும் புனைவுகள்தாம்; துணுக்குகள் அல்ல! படிப்பு என்றாலே, பல பெற்றோர் பாடம் மட்டுமே என்று நினைக்கின்றனர். பாடம் தவிர்த்த பிற நூல்கள் என்றால், அதுவும்கூட பாடத்துக்குத் துணை போகக்கூடிய துணைப்பாட நூலாகவே இருந்துவிடுவது இன்னும் சோகம்.

பாடம் தவிர்த்த பிற நூல்களையும், பிள்ளைகளுக்கு வாசிக்கக் கற்றுக்கொடுங்கள்.  வாசிப்பது என்றாலே பாடம் தொடர்புடையதுதான் என்பது போன்ற எண்ணமே இன்றைய இளம் சமூகத்திடம் பரவலாக இருக்கிறது. அதை உடைத்தெறிவது பெற்றோரின் கடமை. ’கண்டதையும் கற்க பண்டிதனாவான்’ என்பது தமிழில் காலங்காலமாக இருந்துவரும் முதுமொழி. கவிதைகள், கதைகள், புதினங்கள், ஆய்வு நூல்கள் என்று தமிழில் அறிவுச் சுரங்கள் பரந்து விரிந்து கிடக்கிறது. அவற்றை அறிமுகம் செய்து வையுங்கள்.

Nagaraj
க.நாகராஜன்

“இந்த மாதம் (ஏப்ரல்) உலக புத்தக நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 500 இடங்களில் சிறப்பு புத்தகக் கண்காட்சி நடத்துகிறோம். அதோடு புக் ஃபார் சில்ட்ரன்ஸ் வெளியீடாக 25 சிறப்பு நூல்களையும் வெளியிடுகிறோம். இது தவிர, ஏப்ரல் 23ம் தேதி நூல் வாசிப்பு பற்றிய அவசியத்தை வலியுறுத்தி, ஒரு நாள் கருத்தரங்கமும் நடத்துகிறோம். முன்பைவிட இன்றைக்கு வாசிக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிக்கொண்டு வருவதை நாங்கள் கண்கூடாகக் கவனிக்கிறோம். குறிப்பாக, அரசியல் புனைவுகளோடு சேர்த்து குழந்தைகளுக்கான நூல்களும் நன்றாகப் போய்க்கொண்டு இருக்கிறது. ஊர் ஊராகப் போய் வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் நிகழ்ச்சிகளை நடத்தி, வாசிப்பை ஓர் இயக்கமாக மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதில் பாரதி புத்தகாலயம் தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறது. அக்காலம் மாதிரி இப்பவும் குழந்தைகள் தாங்களாகவே தங்களுக்குப் பிடித்த நூல்களை வாங்கும் காலம் வரும்போது, இன்னும் வாசிப்புத்தளம் பரவலானதாக மாறும்” என்கிறார், பாரதி புத்தகாலயத்தின் பதிப்பாளர் க.நாகராஜன்.

அந்தக் காலகட்டத்தில் தங்களுக்கு வேண்டிய நூல்களையும், சிறுவர் பத்திரிகைகளையும் பிள்ளைகளே நேரடியாகச் சென்று வாங்கி வந்தனர். இன்று அவர்கள் கையில் எலக்ட்ரானிக்ஸ் கேட்ஜெட்ஸ்களை நாம் கொடுத்து, வாசிப்பை அந்நியப்படுத்தி வைத்திருக்கிறோம்.

பெற்றோரான நாம் பிள்ளைகளின் முன்னால் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வோம். அப்படியே குழந்தைகளின் கைகளிலும் புத்தகங்களைக் கொடுப்போம். அவர்களின் வாசிப்புக்கு வித்திடுவோம்.

வாசிப்பைத் தொடர சில யோசனைகள்…

  1. தினமும் ஒரு நூலில் இருந்து தினம் ஒரு பக்கம் அல்லது ஒரு சின்னக் கதை என்ற ரீதியில் வாசித்துக் காட்டலாம். பிள்ளைகளையும் வாசித்துக்காட்டச் சொல்லலாம்.
  2. இப்பயிற்சி தொடங்கிய சில நாட்களுக்குப் பின், ஒரு கதையைப் படித்து நூலை மூடிவைத்துவிட்டு பிள்ளைகள் உள்வாங்கிய விதத்தில் அக்கதையை திரும்பவும் சொல்லச் சொல்லலாம்.
  3. இன்னும் கொஞ்ச நாட்களுக்குப் பின், படித்த கதையை எழுதிக்காட்டச் சொல்லலாம்.
  4. தினப்படியான வாழ்க்கையின் சொந்த அனுபவத்தை, கதை மாதிரி எழுதச் சொல்லலாம்.

இப்படியான பயிற்சிகள், பிள்ளைகளின் கற்பனாசக்தியை வளர்த்தெடுக்கும். கற்பனைத்திறன் மிக்க குழந்தைகள், எதிர்காலத்தை இப்படி அப்படி என சுயமாகச் சிந்தித்து நடக்கக்கூடியவர்களாக வளர்வார்கள்.

 

(ஏப்ரல் ஏப்ரல் 23ம் தேதி உலக புத்தக நாளை ஒட்டி செல்லமே இதழில் எழுதிய கட்டுரை)

———————————-

 

படங்களுக்கு நன்றி:- http://pixabay.com/


Comments

One response to “புத்தக வாசிப்பு என்னும் பெருங்கடல்!”

  1. வாசிப்பு பற்றிய இந்தக் கட்டுரை மிக அருமை. வாசிப்பு பழக்கம் சிறு வயதில் ஏற்படுத்து, கடந்த வருடம் என் நண்பர்களுடன் இணைந்து விதை அமைப்பை தொடங்கி பள்ளிக் குழந்தைகளுக்கு நூல்கள் வழங்கிவருகின்றோம். தங்களது மேலான கருத்துகளை தெரிவிக்க கேட்டுக்கொள்கிறோம்.

    நன்றி பாரதி

    விதை http://www.vidhai.in
    செந்தில்குமார் நாமக்கல் 92455 45899

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *