கட்டுரையின் தலைப்பை வார்த்தைகளாக அடிக்கடி (அல்லது எப்போதாவது) உபயோகிப்பவரா நீங்கள்? அல்லது எப்பவுமே சொல்வதில்லை என்பவரா? எந்தப் பிரிவினராக இருந்தாலும் இக்கட்டுரை நிச்சயம் உங்களுக்கு உதவலாம் அல்லது உங்களின் நண்பர்களுக்கு உதவலாம்.

இன்றைய பொருள் தேடும் அவசர உலகில், நம்மில் பலரும் இல்லத்தில் நேரம் செலவழிப்பதில்லை. அதிலும் இரு பாலருமே ஓடிக் கொண்டிருக்கிறோம். நமது நேரத்தை அலுவகத்தில்தான் அதிகமாகச் செலவழிக்கிறோம். இல்லாவிட்டால், வீட்டிலேயே அலுவலக வேலைக்காக அதிக நேரம் செலவழிக்கிறோம். நமது இப்பழக்கம், நமது அடுத்த தலைமுறையைப் பெரிதும் பாதிக்கிறது என்கிறது மருத்துவ உலகம்.

ஐ.டி.துறை தொடங்கி, அநேக துறையில் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை நேரம் என்பது ஒன்பது மணி நேரமாகிவிட்டது. சனிக்கிழமை விடுமுறை என்பதால், அந்நாளுக்கான வேலை நேரத்தினையும் சேர்த்தே வாங்கி விடுகின்றன நிறுவனங்கள்.

அதிலும் உயர்பதவியில் இருப்பவர் எனில், வீட்டுக்குப் போனபின்னும்கூட வேலை செய்யவேண்டிய கட்டாயம். இப்படி தொடர்ந்து வேலை வேலை என்று இருப்பதோடு எப்போதும் அலுவலகம் சார்ந்தே சிந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாகி, மனநோயாளியாகி விடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக உளவியலாளர்கள் சொல்கிறார்கள் (காண்க – கடைசிச் செய்தி).

அதோடு பிரச்சனை முடிந்ததா என்றால், அதுவும் இல்லை. வீட்டில் இருக்கும் குழந்தைகளையும் இந்தப் பிரச்சனை பாதிக்கிறது என்று இன்னொரு குண்டைத் தூக்கிப் போடுகிறார்கள்.

என்னென்ன பாதிப்புகள்?

பொதுவாகவே குழந்தைகளின் ரோல் மாடல் பெற்றோர்தான். அவர்களைத்தான் குழந்தைகள் பார்த்து வளர்கிறார்கள். அப்பாவோ, அம்மாவோ –தனக்கு மிகவும் பிடித்தமானவர்களின் செயல்களை பிள்ளைகள் அப்படியே இமிட்டேட் செய்கிறார்கள். வீட்டில் பெற்றோர் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று அவர்களைத் தொடர்ந்து கண்காணித்துவரும் பணியை குழந்தைகள் செய்கிறார்கள்.

உதாரணமாக, அப்பா போன் பேசுவது போலவே (கையில் பிடித்தோ, தோளில் வைத்து தலை சாய்த்தபடியோ) பிள்ளையும் பேசி நடித்துக் காட்டுவது, அம்மாவின் மேனரிசத்தை அப்படியே பிரதிபலிப்பது போன்ற செயல்களை, குழந்தைகளும் செய்வதை நாம் பார்க்க முடியும்.

சில வீடுகளில் குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்கு சம்பளத்துக்கு ஆள் போட்டிருப்பார்கள். என்னதான் இருந்தாலும் அப்பா, அம்மா மாதிரி குழந்தையின் மனதிற்கு நெருக்கமானவர்களாக, கண்காணிப்பாளர்களால் முடியாது. தேவைகள் மிகுந்த இன்றைய சூழலில், குழந்தைகளோடு நேரம் செலவழிக்க முடியாமல், இருவரும் வேலைக்குப் போகும் குடும்பங்களில் குழந்தைகள் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாவதாக மேலைநாடுகளில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிலும் இரவு பகல் என மாறி மாறி ஷிப்ட் அடிப்படையில் வேலைக்குச் செல்பவர்களுக்கு ஏற்கெனவே இருக்கும் அழுத்தம், வீட்டில்தான் விடிவதாகச் சொல்லப்படுகிறது. எனவே, இப்படி ஷிப்ட் அடிப்படையில் பணிக்குச் செல்லும் பெற்றோர், கட்டாயம் குழந்தைகளுடன் அமைதியாக நேரம் செலவழிக்க வேண்டும். இது அவர்களுக்கு மட்டுமல்ல! குழந்தைகளுக்கும்கூட நல்லது.

இன்று அனேக இல்லங்களில் பிள்ளைகளுக்கு தாமதமாகப் பேச்சு வருவதற்குக் காரணமே பெற்றோர்தான் என்று, மேலும் ஒரு குண்டைப் போட்டு உடைக்கிறார் பேச்சுப்பயிற்சி நிபுணர் திருமதி. பைரவி, “பல வீடுகளில் உணவு ஊட்டும்போது தொலைக்காட்சியோ, நர்சரி ரைம்ஸ் பாடல்களையோ ஓட விட்டுத்தான் உணவு கொடுக்கிறார்கள். அதோடு எப்போதும் ஸ்மார்ட்போன் போன்ற சாதனங்களையும் குழந்தைகளிடம் கொடுத்து விடுகின்றனர். இது நல்ல பழக்கமல்ல. பிள்ளைகளின் வளர்ச்சியை இது தடுக்கிறது. குழந்தைகளுக்கு பேச்சு தாமதமாக வருவதற்கு இவற்றின் பங்கு பெரிது” என்கிறார்.

பேச்சுப்பயிற்சி நிபுணர் திருமதி. பைரவி
பேச்சுப்பயிற்சி நிபுணர் திருமதி. பைரவி

பொதுவாகவே டிவி, மொபைல், டேப் டாப் போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்கள் ஒருவழிப் பாதைதான். அதாவது, அவை படம் காட்டும் பேசும். நான் வாயைப் பிளந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்போம். நாம் பேசினால் பதில் சொல்லாது. அது பேசுவதை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும். இதைத்தான் நிபுணர்கள் ஆபத்து என்கிறார்கள். பிள்ளைகளின் வளர்ச்சியை இது மாதிரியான விஞ்ஞான சாதனங்களின் அதிகப் பயன்பாடு அடைத்து விடுகின்றன என்ற உண்மையை நாம் உணர்ந்து கொள்வதில்லை.

இந்தச் சாதனங்களின் வழி தனக்கு வேண்டியதை வேண்டிய சமயத்தில் இயக்க, குழந்தை கற்றுக்கொண்டு விடுகிறது. அது போலவே நிஜத்திலும் இருந்தால் போதும் என்ற எண்ணம் குழந்தைகளுக்கு வந்துவிடுவதால்தான், பேசுவதைவிட சைகையினால் உணர்த்தினால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர்.

பொதுவாக ஒரு குழந்தை பத்தாவது மாதத்தில் பேசத் தொடங்கவேண்டும். அதுவும் நாம் தண்ணீரை அறிமுகப்படுத்தி இருந்தால், அடுத்தமுறை தனக்கு தண்ணீர் தேவை இருந்தாலும் சரி அல்லது அதனைப் பார்க்கும்போதும் சரி.. ‘ண்ணீ..’ என்று மழலையில் அக்குழந்தை சொல்லவேண்டும். தண்ணீர் என்றுதான் சொல்லவேண்டும் என்பதில்லை. அதற்கு அறிமுகமான ஒவ்வொன்றையுமே அது சொல்ல முயலும். அதுதான் சரியான வளர்ச்சி. ஆனால் இன்றைய சூழலில் குழந்தையோடு நெருக்கமாக இருப்பவை மின்னணு சாதனங்கள்தாம் என்பதால், பேச்சுமொழி தாமதப்படுகிறது என்பதை பெற்றோர் உணரவேண்டும்.

பெற்றோரான நமது மன அழுத்தமும், குழந்தைக்கு ஏற்படும் மன அழுத்தமும் குறைய, குழந்தையோடு தினம் ஒரு மணி நேரமாவது நேரத்தைச் செலவிடுங்கள். அப்புறம் பாருங்கள்.. சில மாதங்களிலேயே மாற்றத்தைக் காணலாம்.

வல்லுநர் வார்த்தை:

பணமா, பாசமா – முடிவெடுங்கள்!

– மருத்துவர் தேவகி சாத்தப்பன்

மருத்துவர் தேவகி

 

“அந்தக் காலத்தில் கல்யாணம் செய்யும்போது பலருக்கும் பெரிய சேமிப்போ, சொந்த வீடோ கூட இருந்ததில்லை. மணம் முடித்து பின்தான் பொருள் சேர்க்கத் தொடங்குவார்கள். ஆனால் இன்று 24ஆம் வயசிலேயே வீடு வாங்கி விடுகின்றவர்கள் அதிகமாகிவிட்டனர். அந்தக் கடனை அடைக்க, அவர்கள் ஓடவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. அதனால் ஓடிக்கிட்டே இருக்காங்க. குழந்தைகள்கூட நேரம் செலவழிக்க முடியாமல் போகுது. அலுவலக வேலைகள் வீட்டிலும் தொடருது. எப்போதுமே வேலை பற்றிய ஏதொவொரு சிந்தனையிலேயே இருக்காங்க. இது அவர்களோட வாழ்க்கையை மட்டுமல்லாது பிள்ளைகளின் வாழ்க்கையையும் பாதிக்குது.

முன்பெல்லாம் உறவினர் வீட்டுக்கோ திருமணத்திற்கோ போனால்கூட, பரஸ்பர நல விசாரிப்புகளும் குழந்தைகள் சேர்ந்து விளையாடுவதும் நடக்கும். ஆனால் இன்று அப்படியான சந்திப்பு அருகி வருகிறது. சந்திச்சாலும்கூட, ‘உன்னிடம் என்ன போன் இருக்கு? என்னிடம் இது இருக்கு!’; ‘நீ என்ன கேம்ஸ் போட்டிருக்க..?, நான் இது வச்சிருக்கேன்’ங்கிற அளவுல கேட்ஜெட்டைச் சுற்றித்தான் உறவுகள் இருக்காங்க.

மன அமைதியும் மகிழ்ச்சியும் அடையணும்னா, தினமும் குழந்தைகளுடன் பேசிச் சிரித்து விளையாடுவது ரொம்பவும் அவசியமானது. குழந்தை வளர்ப்பு அம்மாவுக்குத்தான் முக்கியம்னு நினைக்காம, அப்பாக்களும் உறுதுணையாக இருக்கணும். ரெண்டு பேரில் ஒருவர், கண்டிப்பாக குழந்தையின் மூன்று, மூன்றரை வயது வரை உடன் இருப்பது ரொம்ப நல்லது. அப்போதுதான் ஒரு நல்ல குடிமக்களை நம்மால் உருவாக்க முடியும். இல்லையெனில் தான், தனக்கு என்ற சுயநலம் மிக்கவர்களாகவே குழந்தைகள் வளர்வார்கள்.”

—-

நன்றி: செல்லமே ஏப்ரல் 2015


Comments

2 responses to “நேரம் எங்கே இருக்கு?”

  1. அருமையான கட்டுரை தோழா..
    வாழ்த்துகளும் நன்றிகளும்
    தொடந்து எழுதுங்கள்..
    அன்புடன் தேனி.சுந்தர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

  2. நன்றி தோழர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *