உழைப்பின் பயனை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள் என்று உங்களிடம் சொன்னால், சண்டைக்கு வந்தாலும் வருவீர்கள்!

படிக்கிற பிள்ளைக்கு இப்போ எதற்கு உழைப்பு பற்றி எல்லாம் என்று கேள்வி தோன்றலாம். உண்மையில் நாம் சொல்லவரும் உழைப்பு என்பது, நீங்கள் நினைக்கிற மாதிரியான உழைப்பு மட்டுமல்ல! என்னடா இது கட்டுரையின் தொடக்கத்திலேயே குழப்புகிறேன் என்று நினைக்க வேண்டாம். மேற்கொண்டு படியுங்கள்..

உழைப்பு உயர்வு தரும்!

உண்மை. இது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால், எந்த உழைப்பு உயர்வு தரும் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

“செக்கு மாடு மாதிரி உழைச்சுக்கிட்டு இருக்கேன். ஆனால், வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லை” என்று சிலர் புலம்புவதை நீங்கள் கேட்டிருக்கக்கூடும். செக்கு மாடு எப்படி வேலை செய்யும் என்பது உலகுக்கே தெரியும். ஒரே இடத்தைச் சுற்றிச்சுற்றி வரும். அதுமாதிரி நாமும் சுற்றிச்சுற்றி வந்தால், அப்புறம் எப்படி வாழ்வில் முன்னேற முடியும்? இலக்கு தீர்மானித்து இயங்கினால் மட்டுமே இன்றைய சூழலில் வெற்றிபெற முடியும். இதை நாம் நமது குழந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டும்.

புரிந்து படிப்பது அவசியம்

பெரியவர்கள் மட்டுமல்ல, குழந்தைகளும்கூட உழைக்கிறார்கள். படிப்பதுதான் அவர்களிடம் நாம் எதிர்பார்க்கும் உழைப்பு. அதையும் அவர்கள் இலக்கின்றி, சரியான திட்டமிடலின்றி செய்தால், அந்த உழைப்புக்கும் பயன் இருக்காது. பாடங்களை அப்படியே படம்பிடிப்பது மாதிரி, மனப்பாடம் செய்வதால் கிடைக்கும் வெற்றி பயனுள்ளதாக இருக்காது. எதையும் புரிந்து படித்தால் மட்டுமே எப்போதும் நினைவில் நிறுத்த முடியும் என்பதை, நம் குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். மனனம் செய்வதால், தேர்வில் வெற்றிபெற முடியும்தான்! ஆனால் இந்த வெற்றி, வாழ்க்கையில் தோற்கத்தான் பயன்படும் என்பதை அவர்களுக்கு தக்க எடுத்துக்காட்டுகளுடன் விளக்குங்கள்.

சிறு வயதில் நாம் பள்ளியில் படிக்கும்போது கணக்குப் பாடத்தில் கற்பிக்கப்பட்ட அல்ஜிப்ரா கணிதம் எப்போதாவது வாழ்க்கையில் பயன்பட்டிருக்கிறதா என்று சிலரிடம் கேட்டபோது, பலரும் இல்லை என்றே பதில் சொன்னார்கள். ஆனால், உண்மையில் நாம் தினம் தினம் அல்ஜிப்ராவைப் பயன்படுத்தி வருகிறோம்.

நீங்களும் உங்கள் துணையுமாக இருவர் வாழும் வீட்டில் உணவுக்கு உலை வைக்க ஒரு கிளாஸ் அரிசி வைப்பது வழக்கம் என்று வைத்துக்கொள்ளுவோம். அன்று விருந்தினர் ஒருவர் வருகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது உலைக்கு எவ்வளவு அரிசி போடுவீர்கள்? ஒன்னரை டம்ளர். இதை எப்படி முடிவு செய்தீர்கள்? ஒருவருக்கு அரை டம்ளர் வீதம், இருவருக்கு ஒரு டம்ளர் என்று அளவு எடுக்கும்போது, மூவருக்கு ஒன்றரை டம்ளர். இதைத்தான் பள்ளியில் நமக்கு அல்ஜிப்ரா என்ற பெயரில் சொல்லிக் கொடுத்தார்கள். ஆனால் இப்படி எளிமையாகச் சொல்ல முடிந்திருக்கக்கூடிய விஷயத்தை X, Y என்று சொல்லிக் கொடுக்கப்பட்டதால் நாமும், அல்ஜிப்ரா, வாழ்க்கையில் எங்குமே பயன்படவில்லை என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். எளிய முறையில் கணிதத்தை எப்படிக் கற்றுத் தருவது என்பதைச் சிந்திப்பதில் ஆசிரியர்களின் நேர்த்தியான உழைப்பும் அடங்கியிருக்கிறது.

உழைப்பைப் பார்க்கட்டும்!

உங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் விரும்பிய பொருட்களை நீங்கள் வாங்கிக் கொடுக்கிறீர்கள். அதற்குப் பணம் தேவைப்படுகிறது. அதற்காக எவ்வளவு கடுமையாக உழைக்கவும் நீங்கள் தயாராகி விடுகிறீர்கள். ஆனால், அந்தப் பணத்தைச் சம்பாதித்ததற்கு நீங்கள் எவ்வளவு பாடுபட வேண்டியிருந்தது என்று உங்கள் குழந்தைக்குத் தெரியவேண்டாமோ? அது தெரியாமல் போய்விட்டால், உழைப்பின் அருமையும் உங்களின் அருமையும் உங்கள் வாரிசுக்குத் தெரியாமலேயே போய்விடும் ஆபத்து இருக்கிறதல்லவா!

நீங்களும் உங்கள் பிள்ளைகளும் அனுபவிக்கிற எல்லா வசதிகளின் பின்னாலும் கடுமையான உழைப்பு இருக்கிறது என்று, அவர்களுக்கு நீங்கள் நிச்சயம் சொல்லித்தர வேண்டும். அதற்கு என்ன செய்வது என்கிறீர்களா? உங்கள் பணியிடத்துக்கு (அலுவலகத்துக்கு) அவர்களை அழைத்துச்சென்று காட்டலாம். ‘அப்பா / அம்மா இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு உழைத்துதான் உங்களுக்காகச் சம்பாதிக்கிறேன்’ என்று சொல்லுங்கள். உழைப்பின்மீதும் உங்களின்மீதும் அவர்களுக்கு மரியாதை வந்துவிடும். கூடவே, இப்படியெல்லாம் படாத பாடுபட்டு சம்பாதித்த பணத்தை எப்படி சிக்கனமாகச் செலவழிப்பது என்ற பாடத்தையும் நீங்கள் சொல்லித்தராமலேயே அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.

எல்லாமே உழைப்புதான்!

இன்னும் கணவர் வேலைக்குச் சென்றுவர, மனைவி குடும்பத்தைப் பார்த்துக்கொள்வது என்ற அடிப்படையில் இயங்கும் குடும்பங்கள் நம் ஊரில்அதிகம். அப்படிப்பட்ட ஒரு வீட்டுக்குச் சென்று,

“உங்க அப்பா என்ன பண்றார்?” என்று ஒரு குழந்தையிடம் கேட்டால்,

“ஆபீஸ்ல வேலை செய்றார்” என்று பதில் சொல்லும்.

அதே நேரத்தில், “உங்க அம்மா என்ன செய்றாங்க?” என்று கேட்டால்,

“வீட்ல சும்மாத்தான் இருக்காங்க” என்று பதில் சொல்லும். குடும்பத் தலைவரும் அதையே பதிலாகச் சொல்லக்கூடும். ஆனால், உண்மையில் இல்லத்தரசிகள் வீட்டில் சும்மாவா இருக்கிறார்கள்? இல்லையே!

சமையல், வீட்டைச் சுத்தமாக நிர்வகிப்பது, பொருளாதார திட்டமிடல், உறவு மேலாண்மை, குடும்ப உறுப்பினர்களைப் பேணுவது என்று அவர்கள் எவ்வளவு பணிகளைச் செய்கிறார்கள்! அதற்கு எவ்வளவு உழைப்பு தேவைப்படுகிறது? அந்த உழைப்பு, குடும்பத் தலைவரால் மதிக்கப்பட வேண்டும். தாயாகிய இல்லத்தரசி எவ்வளவு உழைப்பைச் செலுத்தி ஒரு குடும்பத்தை உருவாக்குகிறாள் என்பதை, குழந்தைகளுக்கு பெற்றோர் அவசியம் கற்றுத்தர வேண்டும். உழைப்பு வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் அதனை இனம் கண்டு அங்கீகரிக்க வேண்டும் என்கிற செய்தி, அவர்களுக்குச் சென்றாக வேண்டும்.

உழைப்பே உயர்வு தரும்!

இன்றைய காலகட்டத்தில் – குருட்டு அதிர்ஷ்டம், ஏமாற்று,  சூதாட்டத்தால் ஒருவன் உயர்ந்த நிலையை அடையலாம் என்ற கருத்து பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது. ஊடகங்களில்கூட இதுபோன்ற விஷயங்கள் நகைச்சுவையாகவும் சில நேரங்களில் சீரியஸாகவும் பரப்பப்படுகின்றன. ஆனால், உண்மையும் உழைப்பும் மட்டும்தான் நிரந்தரமானவை என்பதை பெற்றோர்தான் குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். சர்வதேச அளவில் உழைப்பைக் கொண்டாடுகிற மே தினத்திலாவது இதைத் தொடங்கிவிட வேண்டும்.

——————————————————————-

(நன்றி:- மே 2015, செல்லமே)