சுத்தம் சொல்லிக் கொடுங்க!

சுத்தம் சோறு போடும்!

“ அப்ப குழம்பு எது ஊத்தும்?”னு வேடிக்கையா கேட்குறது நம்மில் பல ஆளுங்க வழக்கம். ஆனால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 29 லட்சம் குழந்தைகள் சுகாதாரமின்மையால் இறந்து போகின்றனர் என்று ஒரு புள்ளி விபரம் சொல்கிறது. இதில் ஐந்து லட்சம் பேர் இந்தியக் குழந்தைகளாம்!

பதினைந்து வயது வரையிலான சிறார்களுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படக் காரணம் சுகாதாரமின்மையே என்று உலக சுகாதார நிறுவனம் ஒர் அறிக்கையில் சொல்கிறது. இன்று பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அடிக்கடி உண்டாகும் தொண்டைப்புண், அதனால் ஏற்படும் ஜலதோஷம், இருமல் மற்றும் வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம், குடல்புண் போன்ற பல நோய்களுக்கு அடிப்படைக் காரணமே, பிள்ளைகள் தங்களின் கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளாததுதான் என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள். முறையாக கைகளைக் கழுவாதபோது, நகங்களின் இடுக்குகளில் நோய் பரப்பும் கிருமிகள் ஒட்டிக்கொள்கின்றன. பின்னர் உணவருந்தும்போது அக்கிருமிகள் உட்சென்று குடலில் பல்கிப் பெருகி நோயைத் தோற்றுவிக்கின்றனவாம்.

சிறு குழந்தைக்கு உணவு ஊட்டும் பல தாய்மார்கள் தங்களின் கையைக் கழுவிய பின்னர்தான் உணவு கொடுக்கின்றனர்.அதேசமயம், குழந்தை எடுத்துச் சாப்பிடட்டும் என்று எதையாவது தட்டில் வைத்துக் கொடுக்கும்போது, குழந்தையின் கையைக் கழுவி விடுவதில்லை. கண்ட இடங்களிலும் கைவைத்து விளையாடும் குழந்தை, அதே அழுக்குக் கையோடு உணவை எடுத்து சாப்பிடும். விளைவு.. உடல்நலக் குறைவுதான்!

இங்கே பலரும் சிறுநீர் கழித்துவிட்டு வந்தால், கை கழுவும் பழக்கம் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். பல வீடுகளில் கை கழுவுவதற்கு என்று சோப்பு ஏதும் தனியாக வைப்பதில்லை. கை கழுவுகின்ற அதே சோப்பைத்தான் முகம் கழுவவும் பயன்படுத்துகிறார்கள். அடைக்கப்பட்ட பாத்ரூமை விட, குளுகுளுன்னு காத்தடிக்கும் திறந்தவெளிதான் நல்லதுன்னு நினைக்கிற மக்கள் நம்ம நாட்டுல இன்னும் அதிகம். அதிகாலை நேரங்களில் இப்படி திறந்தவெளி தேடி அலைகின்றவர்களை நம் தேசம் முழுவதும் பார்க்க முடியும்.

பல பள்ளிகளின் நிலை இன்னும் மோசம். அங்கேயும் இதே நிலைதான் என்றாலும், மாணவர்கள் கழிவறைகள் சுத்தமாக இருப்பதில்லை. அரசாங்கப் பள்ளியாக இருந்தால் கழிவறைகளே கேள்விக்குறிதான்! நன்றாகப் பாடம் சொல்லிக் கொடுப்பார்களா என்று பள்ளிகளைத் தேடித்தேடி பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர். அப்பள்ளிகளின் கழிவறை வசதிகள் எப்படி இருக்கின்றன என்று ஓர் எட்டு எட்டிப் பார்க்கலாம் அல்லது, பெற்றோர் ஆசிரியர் மீட்டிங் நடக்கும் சமயங்களில் கழிவறைப்பக்கம் போய் எட்டிப் பார்க்கலாம். பாடங்களை மனப்பாடம் செய்து மதிப்பெண் எடுக்க வைப்பதற்கு மட்டுமா பள்ளிகள் என்பதை நாம்தான் சிந்தித்துப் பார்க்கவேண்டும். சுத்தமும் சுகாதாரமும் அடிப்படைத் தேவைகள். அதை சின்ன வயதிலிருந்தே பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். அப்போதுதான் அனிச்சைச் செயலாக அது நடைபெறும். இல்லையெனில் அதுவும்கூட, பிள்ளைகளுக்குச் சுமையானதாகத் தோன்ற வாய்ப்புள்ளது.

காலை எழுந்ததும் பல் துலக்குவதையும், குளிப்பதையும் தினம் செய்யவேண்டும் என்று போதிக்கும் நாம், பிள்ளைகள் கைகளை அடிக்கடி கழுவவேண்டும் என்பதோடு, நாள் முழுக்க எப்படி சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கவேண்டும் என்பதை நாம்தான் வலியுறுத்திச் சொல்லவேண்டும். அவர்களுக்குச் சொல்லும்முன் பெற்றோராகிய நாம் அதைப் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் பிள்ளைகளும் நம்மைப் பார்த்து கற்றுக்கொள்வார்கள். இல்லையெனில் தங்களுக்குக் கொடுக்கப்படும் இன்னொரு வேலையாகவோ சுமையாகவோ பிள்ளைகள் நினைத்துவிட வாய்ப்பு உண்டு.

 

சுத்தமாக இருக்க சில டிப்ஸ்..

* வெளியில் எங்கே தெரியப்போகிறது என்ற நினைப்பில், உள்ளாடைகளை ஒரு நாளுக்கு மேல் அணிவிக்காதீர்கள்.

* கோடைக் காலத்தில் பிள்ளைகளின் ஆடைகளை (உள்ளாடைகள் உட்பட) இரண்டு முறை மாற்றுங்கள்.

* காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் அப்படியே பல் துலக்கப் போகாமல், முதலில் கையும் முகமும் கழுவியபின் பிரஷை கையில் எடுப்பது நல்லது.

* சிறுநீர், மலம் கழித்தபின் உங்கள் குழந்தை சோப்பு போட்டு கைகளைக் கண்டிப்பாகக் கழுவ வேண்டும்.

* பள்ளி முடித்தோ பணி முடித்தோ – எந்த வேலை முடித்து முதலில் வீட்டுக்கு வந்தாலும், முதலில் சுத்தமாக கை கால்களைக் கழுவுதல் வேண்டும்.

* சமைப்பதற்கு முன்பும் பின்பும்கூட, சமைப்பவர் கைகளைக் கழுவுவது நல்லது.

* பெற்றோர், வாகனம் ஓட்டி வந்த பின்பு, உடனே கை கழுவுதல் நல்லது.

* குழந்தைகளுக்கு எந்த ஒரு உணவு கொடுப்பதற்கு முன்பும், அவர்களது கைகளை நன்கு சுத்தமாகக் கழுவிய பின்பே கொடுக்க வேண்டும். இந்தப் பழக்கத்தை அவர்கள் சீராகக் கடைபிடிக்கும்படி செய்ய வேண்டும்.

* கைகளை அவசர அவசரமாக 2-3 வினாடிகளில் கழுவக் கூடாது. குறைந்தது 30 வினாடியாவது கை கழுவுவதற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

* அதிக ரசாயனம் கலந்த சோப்புகள், க்ரீம்களை குழந்தைகளுக்குத் தராதீர்கள்.

* கைகளை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். நக இடுக்குகளில் தண்ணீர் விட்டு கழுவ வேண்டும். இந்த முறைகளைக் கடைபிடித்து வந்தாலே, நோய்கள் நெருங்குவதற்கான வாய்ப்பை பாதி வழியிலேயே அடைத்து விடலாம்.

(நன்றி- செல்லமே, மே 2015)