இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் நாம் ஓடிக்கொண்டே இருக்கிறோம். எதற்கும் நேரமில்லை நம்மிடம். நட்பு, அன்பு, உறவுகள் என எல்லாவற்றின் இடங்களையும் மின்னனுப்பொருட்கள் பிடித்துக்கொண்டுவிட்டன.

சில ஆண்டுகளுக்கு முன்வரை உறவினரின் வீட்டுக்குப்போகிறோம் என்றால், தொலைக்காட்சியில் ஏதேனும் ஒரு நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருக்கும். விளம்பர இடைவேளையின் போதுதான் நம்மிடம் பேசுவதற்கு திரும்வார்.

இன்று பலரின் வீட்டுக்கு வரும் விருந்தினர்களோடு, பேசத்துவங்கிய சில நிமிடங்களிலேயே, வைபை பாஸ்வேர்ட் தான் கேட்கிறார்கள். இப்படி மின்னனுப்பொருட்களால் சூழப்பட்டுள்ள நம் வாழ்வில் பாதிப்புக்களை உணர்வது குழந்தைகள் தான். தொடுதலின் சுகம் அறியாமல் வளர்கிறார்கள்.

நமது பண்பாட்டில் உள்ள விளையாட்டுக்களில் பாதிக்கும் மேற்பட்டவை தொட்டு விளையாடும் விளையாட்டுக்கள் தான். தட்டாமாலை, கபடி, ஐஸ் பாய், கோ கோ, பச்சக்குதிரை, அடிச்சுப்பிடித்தல், ஒளிஞ்சு பிடித்தல் என தொடரும் பட்டியல் கொஞ்சம் நீளமானது.

அவற்றை எல்லாம் மறந்துவிட்டோம். வெளியே விளையாண்டால் எங்காவது அடிபட்டுவிடும் என்ற பயம் நமக்கு. அதனாலேயே வீட்டுக்குள்ளேயே விளையாடச்சொல்லுகிறோம். விதவிதமான வீடியோ கேம்ஸ்களும் இண்டோர் கேம்ஸுகளுமே குழந்தைகளின் உலகமாகிவிட்டது. (இன்று குழந்தைகளை படிக்கும் நேரம் தவிர, விளையாட நேரம் இருக்கிறதா? இருந்தாலும் நாம் அனுமதிக்கிறோமா என்ற சந்தேகம் என்றும் உண்டு எனக்கு.) அப்படியே அனுமதித்தாலும் அதிகபட்சமாக நமது குடியிருப்பு பகுதிக்குள் விளையாட அனுமதிக்கிறோம். அதுவும் கூட ஆனால் இன்று தொட்டு விளையாடுதல் என்பது குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையையும், சக வயதுடையவர்களிடம் நெருக்கத்தையும் ஏற்படுத்துவதாக மேலைநாட்டினர் ஆய்வறிக்கை வெளியிடுகின்றனர்.

அமெரிக்கா, ஜெர்மன் போன்ற பல மேலைநாடுகளில் பெரியவர்களுக்கே, ’தொட்டு விளையாட்டு’ என்ற பெயரில் விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முன்பின் அறிமுகமில்லாதவர்கள் ஒரு அரங்கில் குழுமி, கண்களைக் கட்டிக்கொண்டு, தன்னுடைய நண்பரைத்தேடவேண்டும். அவரும் கண்ணைக்கட்டிக்கொண்டுதான் இருப்பார். மன்னிப்புக்கோரலும், சிரிப்புச்சத்தமுமாக அந்த அரங்கமே கலகலக்கிறது. இதன்மூலம் மன அழுத்தங்கள் குறைவதாகவும், அலுவலகப்பணியில் மாதம் முழுக்க, ஈடுபாட்டுடன் வேலை செய்ய முடிவதாகவும் சொல்கிறார்கள். வயதுவந்தவர்களிடமே இவ்வளவு மாற்றத்தை கொடுக்கும் போது, நம் குழந்தைகளின் வளர்ச்சியில் தொட்டுவிளையாட்டின் பங்கு எவ்வளவு என்பதை தனியாகச்சொல்லத் தேவையில்லை.

என்ன செய்வது? நமது பாரம்பரியத்தையும்கூட மேலைநாட்டவர்கள் வியந்து பார்க்கும் போதுதான் இங்கே ஒப்புக்கொள்வோம். வாருங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் நமது பாரம்பரிய விளையாட்டுக்களை மீண்டெடுப்போம். விளையாடத்தொடங்குவதற்கு முன் இந்த யோசனைகள் உங்களுக்கு பயன்படக்கூடும். அப்புறம் என்ன.. வாங்க விளையாடலாம்!

 

தொட்டுத்தொட்டு விளையாட.. 12 யோசனைகள்

 

  1. இணையத்தில் தொட்டு விளையாடுவதுபற்றிய மேலைநாட்டவரின் செய்திகள் நிறைய கொட்டிக்கிடக்கின்றன. தேவைக்கு தேடிக்கொள்ளலாம்.
  2. முதலில் வாரம் ஒரு நாள் என்றுதிட்டமிடுங்கள். அன்று தொலைக்காட்சி, கணிணி, மொபைல் போன் எல்லாவற்றிற்கும் விடுப்பு கொடுத்துவிடுங்கள்.
  3. வீட்டுக்கு அருகில் இருக்கும் பூங்கா, மைதானம், கடற்கரை ஆகிய இடங்கள் விளையாட ஏதுவாக இருக்கும்.
  4. நீங்கள் அடுக்ககத்தில் குடியிருப்பவராக இருந்தால், உங்களின் ஏரியாவுக்குள்ளேயே விளையாடுவதற்கான இடத்தை தேர்வு செய்யலாம்.
  5. கிரிக்கெட் மாதிரியான விளையாட்டுக்களில் தான் இன்றைய குழந்தைகளின் ஆர்வம் இருக்கிறது. அவர்களை வாரம் ஒருநாள் கபடி மாதிரி தொட்டுவிளையாடும் விளையாட்டின் பக்கம் திருப்பலாம்.
  6. தொலைக்காட்சியில் பெற்றோர் கிரிக்கெட், பார்ப்பதற்கு மாற்றாக புட்பால், கூடைப்பந்து, கபடி ஆகியவற்றைப் பார்ப்பது குழந்தைகளின் ஆர்வம் இந்த பக்கம் திரும்ப வழி வகுக்கும்.
  7. நம் வீட்டுக்குழந்தைகளுடன் அக்கம் பக்கத்தில் இருக்கும் குழந்தைகளையும் சேர்ந்து விளையாட ஊக்குவியுங்கள். அப்படி விளையாடும் எல்லா சிறுவர்களுக்கு வாரம் ஒரு பென்சில், பேனா போன்று பரிசுப்பொருட்கள் வழங்கி அவர்களை ஊக்குவிக்கலாம்.
  8. ஐஸ்பாய் போன்ற விளையாட்டுக்களுக்கு வெளியே ரொம்ப தூரம் எங்கும் போகவேண்டாம். வீட்டுக்குள்ளேயும் கூட, தொட்டு விளையாடும் விளையாட்டுக்களை விளையாட முடியும்.
  9. அம்மா, அப்பா, பாட்டி தாத்தா, அக்கா, அண்ணா, தம்பி தங்கை என்று வீட்டில் இருக்கும் எல்லோரையும் சேர்த்துக்கொண்டு விளையாடுங்கள். ஒவ்வொரு முறையும் நடுவராக பெரியவர்களுக்கு பதில் சிறுவர்களிடம் அந்த பொறுப்பைக்கொடுங்கள்.
  10. வாரம் ஒரு விளையாட்டு என்று விளையாட்டை மாற்றிக்கொண்டே இருங்கள்.
  11. நல்ல டீம் அமையும் வரை நீங்களும் கூட குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுங்கள். ஆனால்.. சிறுவர்களை ஏமாற்றாமல், உண்மையாக விளையாடுங்கள்.
  12. வயதில் பெரியவர்கள் தோற்றுப்போகும் போது குழந்தைகளுக்கு உற்சாகம் கொப்பளிக்கும்.

நன்றி – செல்லமே ஆகஸ்ட் 2015