தாத்தா பயந்த கதை
கோடை விடுமுறையில் கிராமத்திற்கு வந்திருந்தான் ஆதவன். அவன் தாத்தாவும், அம்மாச்சியும் மற்ற கிராம மக்கள் போலவே விவசாயம் செய்துவந்தனர்.
பகலில் வயலுக்குச்செல்லும்போது ஆதவனையும் உடன் அழைத்துச்செல்வர். மாலையில் வீடு திரும்பியதும், முன் வாசல் பக்கம் அமர்ந்துகொண்டு, தினம் தினம் கதை கேட்பது இவனின் வழக்கம். அம்மாச்சி ரத்தினமோ, தாத்தா மாரிமுத்துவோ இருவரில் ஒருவர் சமையல் செய்யப் போய்விடுவர். மற்றொருவர் இவனுக்கு கதை சொல்வார்கள்.
அன்று மாலை திடீரென மின் வெட்டு. அகல்விளக்கை ஏற்றிவைத்தார் மாரிமுத்து தாத்தா.
“இன்னிக்கு ராஜா கதைவேணாம் தாத்தா..! வேற ஏதுனா சொல்லுங்க..” என்றான்
“ம்.. இப்ப இருக்குற மூடுக்கு ஏத்தமாதிரி, ஒரு பேய் கதை சொல்லட்டா?”
“பேய் கதையா..?”
“ஆமா.. நான் பேயைப் பார்த்த கதை!”
“ஐயோ.. ரொம்ப பயங்கரமா இருக்குமா..?”
“தைரியமாக கேட்பதாக இருந்தால் சொல்லுறேன். இல்லாடிட் வேணா..”
”பயப்பட மாட்டேன்.. நீங்க சொல்லுங்க”
“அப்ப எனக்கு பதினஞ்சு வயசு இருக்கும். வீடு வயல் வீடுன்னு தான் இருப்போம். எப்பவாச்சும் சினிமா பார்க்க, பக்கத்தூருக்கு போவோம். கைச்சிள் வச்சிருக்கிறவங்க, சைக்கிள போவாங்க. மத்தவங்க நடைதான். ஊர் எல்லையில சுடுகாடு இருக்கிறதால.. தனியாக அந்த பக்கம் யாரும் போக மாட்டோம். குறைஞ்சது ரெண்டுபேராச்சும் சேர்ந்துதான் போவோம். அப்படித்தான் ஒருநா சினிமாவுக்கு போயிட்டு திரும்பிட்டு இருந்தோம். என்னோட பிரண்டு விக்டர் தான் சைக்கிளை மிதிச்சான். நான் பின்னாடி ஒட்கார்ந்திருந்தேனா. ” என்று தாத்தா கதை சொல்லத்தொடங்க.. அது காட்சிகளாக ஆதவனின் முன் விரிந்தது.
+++++
”டேய்… மாரி, வழியில முன்னாடிப் பாருடா..!” என்று நடுங்கிய குரலில் சொன்னான் விக்டர். மிதிவண்டியும் நிறுத்திவிட்டான்.
மாரிமுத்து மெல்ல முன் பக்கம் எட்டிப் பார்த்தான். அந்த செம்மன் சாலையில் நடுவில் யாரோ அமர்ந்திருந்தது போல இருந்தது. மார்கழி மாதம் என்பதால் பனியும் நன்றகா இறங்கிக்கொண்டிருந்தது.
“யார்றா அது..?”
“என்னையக்கேட்டா…?”
”ஒருவேலை பேயாக இருக்குமாடா..”
“தெரியலயேடா.. பேய்க்கு காலுதானே இருக்காதுன்னு சொல்லுவாங்க. இதுக்கு தலையையே காணமடா..!”
அப்போதுதான் அதை கவனித்தான் மாரி. பனி மூட்டத்திலும் மங்களான தெருவிளக்கொளியிலும் அந்த உருவம் வெள்ளையாகத் தெரிந்தது.
“ஆமாண்டா.. தலயக் காணாம்டா..!”
“இப்ப என்ன செய்யுறதுடா.. திரும்பவும் வந்த வழியே ஓடிடலாமா..?”
“பின்னாடியே தொறத்திட்டு வந்துச்சுன்னா…”
“எங்கம்மா.. சொல்லிச்சு.. ராத்திரியில தேவையில்லாம சுத்தாதேன்னு..” நடுங்கும் குரலில் சொன்னான் விக்டர். அவன் சொன்ன விதத்தைப் பார்த்ததுமே மாரிமுத்துவுக்கு அந்த பனியிலும் வியர்த்துக்கொண்டியது.
“பேசாம.. இங்கேயே உட்கார்ந்துடுவோம்டா. அது எழுந்து அந்த பக்கம் போனதும். நாம ஊருக்குள்ள ஓடிடுவோம்”
முடிவுக்கு வந்தவர்களாக இருவரும் மிதிவண்டியை நிறுத்திவிட்டு, கீழிறங்கி அமர்ந்துகொண்டனர். கொஞ்ச நேரத்தில் அந்த வெள்ளை உருவம் இடதுபக்கம் அசைந்ததுபோல இருந்தது. உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தார்கள். அதன் பிறகு அசைவு ஏதும் இல்லை. ஒரு பக்கம் பனி, இன்னொரு பக்கம் பயம் எல்லாம் சேர்ந்து உடல் நடுங்கத்தொடங்கியது மாரிமுத்துவுக்கு.
“டேய் சைக்கிளை இப்படி நடுவுல நிறுத்தவேண்டாம்.. படுக்க வச்சிடுவோம்..”
உடனடியாக அதையும் செயல்படுத்தினார்கள். தோளில் கிடந்த துண்டை தலையில் முக்காடு போட்டு அமர்ந்துகொண்டான் மாரி. விக்டர் தனது லுக்கியையே முக்காடாக அணிந்துகொண்டு உடலைச் சுருக்கிக்கொண்டான். அந்த வெள்ளை உருவத்தின் அடுத்த அசைவுக்காக காத்திருந்தனர், உட்கார்ந்து உட்கார்ந்து அப்படியே உறங்கிப்போயினர். திடீரென பேச்சுக்குரல் கேட்டு இருவரும் விழித்தனர். பேச்சுக்குள் பின்னால் இருந்து கேட்டது. அச்சத்துடன் திரும்பிப்பார்த்தனர். மூன்று உருவங்கள் தெளிவற்று தெரிந்தத.
“டேய், அது நம்மைப் பார்க்குதுடா…” என்றது ஒரு குரல்.
“இப்ப, என்னாடா செய்யுறது..” என்று கேட்டாது இன்னொரு குரல்.
“கொஞ்ச.. நேரம் சு… சு… சு… சும்மா இருங்கடா.. அதுவா போயிடும்” என்ற குரல் கேட்டதுமே, விக்டரின் முகத்தில் மலர்ச்சி ஏற்பட்டது.
“டே, இது நம்மூர் தலையாரி புள்ள வரதன் குரல் மாதிரி இருக்குதேடா.. அவனுக்குத்தானே திக்குவாய் இருக்கு!”
விக்டர் சொன்னபிறகுதான் அந்த குரலுடன் வரதனின் முகத்தை மனத்தினுள் பொருத்திப் பார்த்தான். சரியாகப் பொருந்தியது.
“கூப்பிட்டுப் பார்க்கவாடா..?”
“எனக்கு பயமா இருக்குடா.. நீயே கூப்பிடு!”
மெல்லிய குரலில், “வரதாதாதா…” என்று அழைத்தான் விக்டர்.
++++
தனக்கு அருகில் இருந்த சொம்பை எடுத்து ஒருமடக்கு நீர் அருந்தினார் தாத்தா.
“என்ன தாத்தா சஸ்பென்ஸ் வச்சுட்டு இருக்கீங்க..? மொத்தமாக கதையைச் சொல்லிட்டு, அப்புறம் தண்ணீ குடிக்கக்கூடாதா?”
அவனது பரிதவிப்பைக் கண்ட மாரிமுத்து தாத்தா, சிரித்துக்கொண்டே, “சொல்றேண்டா… சொல்றேண்டா..”
”ம்…”
“விக்டர் நைஸாத்தான் கூப்பிட்டான். அவன் அப்படி கூப்பிட்டதுமே.. பின்னாடி இருந்த உருவங்கள் அசையத்தொடங்கிடுச்சு. அப்பத்தான் அங்கே இருந்து சத்தமாக ஒரு குரல் கேட்டுச்சு, ‘டேய், அந்த பேய்க்கு உன் பெயர் தெரிஞ்சிருக்குடா..’ இதைக் கேட்டதுமே எங்களுக்கு புரிஞ்சுபோச்சு.. பின்னாடி இருந்தது மனுசங்க தான்னு. பேய் இல்லைன்னு தெளிவாகிடுச்சு.”
“அப்புறம்”
“மனசை தைரியப்படுத்திட்டு, நானும் வரதனை பெயர் சொல்லிக்கூப்பிட்டேன். நாங்களும் மனுஷசங்க தான்னு சொன்னதும் அவங்க கிட்டவந்துட்டாங்க. அவங்க மூணுபேரும் எங்க ஊரு ஆட்கள் தான். வெளியூர் போயிட்டு வந்தவங்க. கடைசி பஸ்ஸை விட்டுட்டு, நடந்தே ஊருக்கு வந்திருக்காங்க. நடுவழியில எங்களைப் பார்த்த்தும் பேயின்னு பயந்து போய் நின்னுட்டாங்க.”
“அப்ப.. உங்களுக்கு முன்னாடி இருந்த அந்த வெள்ளைப்பேய்..”
“அது பேயே இல்ல. எங்க ஊர்ல சுத்திட்டு இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஆளு. வேட்டியை முக்காடு போட்டுகிட்டு, நடுவழியில உட்கார்ந்திருக்க.. நாங்க ரெண்டு பேரும் பயந்து பேய் பிசாசுன்னு பயந்துபோயிட்டோம்.. உண்மையிலேயே அப்படி ஏதுமில்லைன்னு அன்னிக்குத்தான் தெரிஞ்சுகிட்டேன்” என்று சொல்லிவிட்டு சிரித்தார் தாத்தா. அந்த சிரிப்பில் ஆதவனும் சேர்ந்துகொண்டான்.
–யெஸ்.பாலபாரதி
(தினமலர் பட்டம் இதழில் வெளியான கதை)