தங்கள் குடிசைக்கபகுதிக்கு அருகில் கட்டப்படும் கட்டுமான நிறுவனத்தில் காவலாளியாக வேலைக்குச் சேர்ந்தார் பரமசிவம். அவரது மகன் வேலன் ஏழாம்வகுப்பு படித்துவந்தான்.

திடீரென பரவிய தீக்கிருமியால், வேலனின் பள்ளி வாழ்க்கை முடிவுக்கு வந்தது. கொரோனா கால ஊரடங்கினால் மக்கள் பலவிதங்களில் பாதிக்கப்பட்டனர். அடுத்த சில மாதங்களில் கட்டடப்பணிக்கு அரசு அனுமதி அளித்ததும், வேலை மீண்டும் தொடங்கியது. ஆனாலும், பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதனால் வீட்டில் இருந்த வேலன், கட்டட வேலைகள் நடப்பதை வேடிக்கை பார்க்கப்போவான். சில நாட்கள் தன் அப்பாவுக்கு சாப்பாடும் எடுத்துச் செல்வான். அவர் சாப்பிடும்வரை, அவரின் தொப்பியை அணிந்துகொண்டு, காவல்பணிகளை கவனித்துக்கொள்வான்.

அவனை மீறி யாரும் உள்ளே வரப்போக முடியாது. அருகில் டேபிள் மீது உள்ள குறிப்பேட்டில் வருபவர் யாராக இருந்தாலும் தங்களது பெயர், பேசி எண், நேரம் போன்ற விவரங்களை எழுதி, கையெழுத்து இடாமல் யாரையும் உள்ளே விடமாட்டான்.

ஒருநாள் வழக்கம்போல, சாப்பாடு கொடுத்துவிட்டு, வேலன் காவல்பணியில் ஈடுபட்டிருந்தான். அப்போது மேஸ்திரியின் முன்னே போக, பின்னால் இரண்டு சித்தாள்கள் ஆளுக்கு இரண்டு சிமென்ட் மூட்டைகளை எடுத்துச் சென்றுகொண்டிருந்தனர்.

பொதுவாக, கட்டடத்தில் இருந்து எந்தப் பொருளை வெளியே கொண்டு போனாலும் அதற்கு, ‘அவுட் பாஸ்’வேண்டும் என்பதால், “சார், இந்த மூட்டைகளை எங்கே எடுத்துட்டுப்போறீங்க?” என்று மேஸ்திரியை வழி மறித்தான் வேலன்.

ஒரு பொடியன். அதுவும் வாசலில் நின்றுகொண்டிருக்கும் காவலாளியின் மகன், தன்னைப் பார்த்து இப்படிக் கேட்கிறானே.. என்ற மேஸ்திரிக்கு, கோபம் தலைக்குமேல் ஏறியது.

“போடா.. அந்தப் பக்கம்” என்று நடக்க முயன்றவர் முன், பாய்ந்து நின்றான் வேலன்.

“கேள்விக்கு பதில் சொல்லிட்டுப் போங்க சார்!”

“அதைக் கேட்க நீயார்டா..?”

“இப்போதைக்கு இங்கே நான் தான் வாட்ச்மேன்… அவுட்பாஸ் இல்லாம, ஒரு பொருளும் வெளியே போகக்கூடாது”

“அப்படியே… அடிச்சேன்னு வையி…” என்று கையை ஓங்கினார் மேஸ்திரி.

“சார், இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். அவுட்பாஸ் வேணும்! அதைக் காட்டுங்க.. அனுப்பிடுறேன்”என்றான் வேலன் தீர்க்கமான குரலில்!

“டேய்! அதெல்லாம் ஒண்ணும் இல்லை. யாரு சொல்லி இதைக் கொண்டுபோறோம்னு தெரியுமாடா..?”

“யார் சொன்னா என்னாசார்? மூட்டை வெளியில போகனும்னா.. அவுட்பாஸ் காட்டுங்க.. அனுப்பிடுறேன்” என்றான் வேலன்.

மேஸ்திரிக்கு கோபம் உச்சத்திற்குப் போனது.

“எங்கடா.. உங்கப்பன்.. கூப்பிடுடா..”

வாசல் பக்கம் சத்தம் கேட்டு, வேகமாக ஓடிவந்தார் பரமசிவம்.

“என்னய்யா… இது? ஒம்புள்ளைய நிக்கவச்சிட்டு… எங்கய்யா போன?”

“சாப்பிடப்போனேங்க சார்…!”

“சரி, யாருகிட்ட, எப்படி நடந்துக்கணும்னு சொல்லிக்கொடுக்கிறதில்லையா? என்னையவே வழி மறிக்கிறான்!”

பரமசிவம் குழப்பத்துடன் வேலனைப் பார்த்தார்.

“ஆமாப்பா, ‘அவுட் பாஸ்’ இல்லாமல் சிமென்ட் மூட்டையை வெளியில கொண்டு போகக்கூடாதுன்னு சென்னேப்பா..” அவன் பயந்துபோய் இருப்பது முகத்தில் தெரிந்தது.

அவன் அருகில் சென்று தலையைக் தடவிக்கொடுத்த பரமசிவம், மேஸ்திரியின் பக்கம் திரும்பி, “சார், சின்னப் பையனாக இருந்தாலும், அவன் சரியாகத்தான் கேட்டிருக்கான். அவுட் பாஸ் காட்டிட்டு, மூட்டையை நீங்க வெளியில எடுத்துட்டுப் போய் இருக்கணும்” என்றார்.

பரமசிவத்தின் பதில் மேஸ்திரியின் கோபத்தை அதிகரித்தது, “யோவ்.. முதலாளி சொல்லித்தான் இந்த மூட்டைகளை வெளியில எடுத்துப்போறேன். அதையும் தடுத்துடுவியா?” என்று கேட்டார் மேஸ்திரி.

“அதே முதலாளிதான்… என்னிடம் அவுட் பாஸ் இல்லாமல் எதுவும் வெளியில போகக்கூடாதுன்னு சொல்லி இருக்கார்!” என்றார் பரமசிவம்.

“இரு… இப்பவே உன் சீட்டைக்கிழிக்கிறேன்”என்று கோவமாகச் சொல்லிவிட்டு, உள்ளே இருந்த அலுவலகம் நோக்கிப் போனார் மேஸ்திரி.

அவர் சொன்றே சில நிமிடங்களுக்கு எல்லாம், உள்ளிருந்து ஒரு சித்தாள் வந்து, பரமசிவத்தை அழைத்துச்சென்றார். இதைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் வேலனிடம், “உனக்கும் உங்க அப்பனுக்கும் தேவையில்லாத வேலை. மேஸ்திரியை பகைச்சுட்டு இங்கே வேலை செய்யமுடியுமா..? அவர் போய் முதலாளிட்ட என்ன சொல்லி இருப்பாரோ… இன்னையோட உங்கப்பனை விரட்டிவிடப்போறாங்க”என்றார்கள்.

அதைக்கேட்டதுமே, வேலனுக்கு அழுகை வந்தது. ‘அப்பா எந்தத் தவறுமே செய்யவில்லை. மேஸ்திரியை முதலில் தடுத்தது நான் தானே.. எல்லாம் என்னால் தான். நாமே சென்று அவரிடம் மன்னிப்புக்கேட்டால் அப்பாவை மன்னிப்பார்களா?’ என்றெல்லாம் அவனது மனத்தில் என்னற்ற எண்ணங்கள் தோன்றி மறைந்தன. அப்போது அலுவலகத்தின் இருந்து வந்த இன்னொருவர், வேலனையும் முதலாளி அழைப்பதாகச் சொன்னார். அவரின் பின்னாடியே மிகுந்த தயக்கத்துடன் சென்றான் வேலன்.

அந்த அறைக்குள் நுழைந்ததுமே முதலாளி அமர்ந்திருந்தது தெரிந்தது.

“வாப்பா..” என்றார் முதலாளி.

இவனும் பவ்யமாய் ஒரு வணக்கம் வைத்தான். அவரும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்தார்.

“மேஸ்திரியை நீ தான் தடுத்தியாமே..உண்மையா?”

அமைதியாகத் தலையைக் குனிந்துகொண்டான் வேலன்.

“பதில் சொல்றா.. நீதான?”

“ஆமாங்க ஐயா… நீங்க சொல்லி அனுப்பினீங்கன்னு தெரியாதுங்க ஐயா…!”

“தெரிஞ்சிருந்தால்…”

“அவுட் பாஸ் இல்லாமல் ஒரு பொருளும் வெளியே போகக்கூடாதுன்னு எங்க அப்பா சொல்லிக்கொடுத்ததைக் கேட்டு நடந்துக்கிட்டேன். நீங்க அனுப்பினீங்கன்னு தெரிஞ்சிருந்தா…” என்று இழுத்தான் வேலன்.

“தெரிஞ்சிருந்தா..”

“உங்களிடமும் ஒரு வார்த்தை கேட்டுவிட்டுத்தான், அனுப்பி இருப்பேன் ஐயா. இங்கேயிருந்து எது வெளியில போனாலும் அதுக்கு விவரங்கள் இருக்கணும்னு எங்க அப்பா சொல்லி இருக்கார். அவுட் பாஸ் இல்லாமல் எது வெளியில போனாலும் பொருள் குறைஞ்சு.. எங்கப்பா காவல்காப்பதில் அர்த்தமில்லாமல் போயிடுங்களே!” என்று பணிவாகச்சொன்னான் வேலன்.

”வெரிகுட்.. உன்னையும் உன் அப்பாவையும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இந்த மாசத்திலே இருந்து உன் அப்பாவுக்கு ரெண்டாயிரம் ரூபாய் சம்பளம் உயர்வு..” என்றார் முதலாளி.

வேலனும் அவன் அப்பாவும் ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியாகப் பார்த்துக்கொண்டனர்.

– யெஸ்.பாலபாரதி

(தினமலர் பட்டம் இதழில் வெளியான கதை)