சுழல் – சிறுவர் கதை (டைம்லூப் சிறுகதை)

சுழல்

வீட்டின் வாகனம் நிறுத்துமிடத்தில், அப்பாவின் இருசக்கர வாகனத்திற்கு அருகில், காகிதங்களால் பொதியப்பட்டு நிறுத்தப்பட்டிருந்ததைப் பார்த்ததுமே தெரிந்தது, அது மிதிவண்டி என்று. அதைப்பார்த்ததும் ஏற்பட்ட சந்தோஷம் சுதாகரனை திக்குமுக்காடச் செய்தது.

அடுத்த வாரம் வரவுள்ள அவனது பிறந்தநாளுக்கு, வெளிநாட்டில் வசிக்கும் அவனது மாமாவின் அன்பு பரிசு அது. அவர் இணையம் வழியாக ஆர்டர் போட்டுவிட, நேரடியாக இவன் வீட்டுக்கு வந்து, மிதிவண்டியைக் கொடுத்துவிட்டது, தயாரிப்பு நிறுவனம். அதன் மீது சுற்றி இருந்த ஜிகு ஜிகு பிளாஸ்டிக் தாள்களை நீக்கினான். இப்போது ஓட்டுவதற்கு தயார் நிலையில் இருந்தது மிதிவண்டி.

“அம்மா.. ஒரு ரவுண்டு…” என்று அம்மாவைப் பார்த்துக்கேட்டான்.

அம்மாவும் சரியென தலையாட்டினார். இவன் மிதிவண்டியை ஓட்டத்தயார் ஆனதும், “தெருவைத் தாண்டிவிடக்கூடாது,” என்று சொன்னார். அவனும் “சரிம்மா,” என்று அதை மிதிக்கத்தொடங்கினான்.

தெருவின் கடைசி வீடு, இவன் நண்பன் ஜோசப்பின் வீடு. அவன் வீட்டு வாசலை அடைந்து, பிரேக் போட்டான். கீழிறங்கி, ஸ்டாண்டை தட்டிவிட்டு, வண்டியை சாய்த்து நிறுத்தினான். வீட்டு வாசலில் நின்றுகொண்டு, “ஜோசப்பூ… ஏ ஜோசப்பூ…” என்று குரல் எழுப்பினான்.

உள்ளே இருந்து, ஜோசப் வந்தான். இவனது மிதிவண்டியைப் பார்த்ததும் வேகமாக கிரில் கதவைத்திறந்து மிதிவண்டியின் அருகில் வந்தான்.

“டேய்.. சைக்கிள் பிரமாதமாக இருக்கேடா..!”

“ஆமாண்டா… எங்க மாமா வாங்கி அனுப்பி இருக்கார். இன்னிக்குத்தாண்டா டெலிவரி கொடுத்தாங்க. இப்பத்தான் பிரிச்சுட்டு வண்டியை எடுத்தேன். முதல் ரவுண்டே உன்னைப் பார்க்கத்தாண்டா வந்தேன்.”

“வாவ்… சூப்பர்டா…”

“ஒரு ரவுண்ட் போலாம் வர்றீயா?”

“கண்டிப்பா… ஒரு நிமிஷம் நில்லு. அம்மாகிட்ட சொல்லிட்டு வந்துடுறேன்,” என்று வீட்டுக்குள் பாய்ந்த ஜோசப், அடுத்த சில நிமிடங்களிலேயே வந்துவிட்டான்.

சுதாகரன் வண்டியை ஓட்ட, பின்னால் கேரியரில் ஜோசப் அமர்ந்துகொண்டான்.

“எங்கடா போகலாம்?”

“ம்… பேசாம, ஊர் எல்லையில் இருக்குற மாடசாமிகோயிலுக்குப் போயேன்” என்று சொன்னான் ஜோசப்.

“அதுவும் சரிதான். அங்கிருக்கும் ஆலமரத்திடலில் சைக்கிளை நல்லா ஓட்டலாம்,” என்றபடியே உற்சாகமாக மிதிவண்டியை மிதித்தான் சுதாகரன். அதன் சக்கரங்கள் வேகமாகச் சுழலத்தொடங்கின.

மாடசாமி கோயிலுக்கு எதிர்புறத்தில் இருந்த பெரிய திடலில் இருந்த, அந்த ஆலமரம், தனது விழுதுகளை மண்ணுக்குள் ஊன்றி, கிளை பரப்பி பிரமாண்டமாய் நின்றுகொண்டிருந்தது.

மரத்தைச் சுற்றிக்கொண்டு வரும்போது, அந்தப் பெரிய பள்ளத்தை முதலில் சுதாகரன் தான் பார்த்தான்.

“டேய்! அங்க பாருடா… ஏதோ பள்ளமாட்டமா… இருக்குடா!”

பின் இருக்கையில் இருந்து எட்டிப்பார்த்தான் ஜோசப், கிணற்றுக்குத் தோண்டப்பட்ட பள்ளம் போல இருந்தது.

“இன்னும் கொஞ்சம் பக்கத்துல போடா பார்க்கலாம்,” என்றான் ஜோசப்.

சுதாகரனும் தனது மிதிவண்டியை அந்தப் பள்ளத்திற்கு அருகில் கொண்டு சென்றான். இப்போது அது வெறும் பள்ளம் போல தெரியவில்லை. அதன் உள்ளே சரிவாக ஒரு பாதை செல்வது போல தெரிந்தது.

“ஏதோ கிணறு தோண்டுறாங்கன்னு நினைச்சா… இது என்னடா… பாதை மாதிரி போகுதே?”

“அதுதாண்டா எனக்கும் சர்ப்ரைஸா இருக்கு.. உள்ளே போகலாமாடா…?”

“ஐயையோ… பயமா இருக்குடா… உள்ளே இருட்டா வேற இருக்குடா…!”

“கொஞ்ச தூரம் போய் பார்த்துட்டு திரும்பிடலாம்டா!” என்று ஜோசப் சமாதானமாகப் பேச, சுதாகரனுக்கு கொஞ்சம் தைரியம் வந்தது. தனது மிதிவண்டியை அந்தப் பள்ளத்தில் இருந்த சறுக்கு சாலையில் விட்டான்.

மிதிவண்டி கீழ்நோக்கி வேகமாகப் போனது. பின்னால் இருந்து வந்துகொண்டிருந்த வெளிச்சமும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, முழு இருட்டுக்குள் ஐக்கியமானார்கள். பாதை சீராக இல்லை. வெறும் மணல் பாதையில் களிமண்ணைக் கொட்டி தயார் செய்தது போல கொஞ்சம் கரடு முரடாக இருந்தது. கொஞ்சம் குதித்து குதித்தே மிதிவண்டி ஓடியது. மிதிக்காமலேயே வண்டி வேகமாக ஓடியது.

“கண்ணும் தெரியலை, திரும்பிடலாம்டா!”

“இன்னும் கொஞ்ச தூரம் போய் பார்க்கலாம்டா!” என்றான் ஜோசப்.

“வேண்டாம்டா…” என்ற சுதாகரன் பிரேக்கைப் பிடித்தான். அது பிடிக்கவில்லை.

மிதிவண்டி இப்போது அதன் இஷ்டத்திற்கு இருவரையும் அழைத்துக்கொண்டு கீழே ஓடுவது போல இருந்தது.

“ஐயையோ… பிரேக் பிடிக்க மாட்டேங்குதுடா… தொலைஞ்சோம்!”

“நல்லா அழுத்திப் பிடிச்சுப் பாருடா…”

“இல்லடா.. அப்படியும் பிடிக்கலைடா…”

“ஐயோ… காப்பாத்துங்க…” என்று கத்தினான் சுதாகரன்.

“ஹெல்ப் மீ” என்று அலறினான் ஜோசப்.

அவர்களின் குரல் சுற்றுச்சுவர்களில் பட்டு எதிரொலித்ததே தவிர, உதவிக்கு யாரும் வரவில்லை. ஹேண்டில் பாரை இறுகப்பற்றிக்கொண்ட சுதாகரன், “காப்பாத்துங்க… ஐயோ… அம்மா… காப்பாத்துங்க… அப்பா…” என்று இடைவிடாமல் சத்தமாகக் கத்தினான்  சுதாகரன்.

*

“அடேய்ய்ய்ய்ய்… எழுந்திருடா…” சத்தம் கேட்டு கண்விழித்து சுற்றிலும் பார்த்தான். வீட்டின் ஹாலில் சோபாவில் சாய்ந்து படுத்திருப்பது தெரிந்ததும் வாரிச்சுருட்டி எழுந்து உட்கார்ந்தான்.

“என்னடா.. ஏதுனா கனா கண்டியா…?”

எதுவும் பேசாமல் மௌனமாக அமர்ந்திருந்தான்.

“கொரோனா வந்தாலும் வந்துச்சு, வெளியில போறதே இல்லை. லீவு வுட்டா, சாப்ட்டு சாப்ட்டு பகலிலேயே தூங்கவேண்டியது. கண்ட கனவும் கண்டு, கத்தவேண்டியது. போய்.. மூஞ்ச கழுவிட்டு, வாசப்பக்கம் போய் பாரு..!” என்று சொல்லிவிட்டு அடுக்களைப் பக்கம் போனார் அம்மா.

இவனும் அவரின் பின்னாடியே சென்று, வாஷ்பேஷினில் முகத்தைக் கழுவிவிட்டு, வாசலுக்கு வந்தான்.

அங்கே, வாசல் கதவுக்கு அருகில் வாகனம் நிறுத்துமிடத்தில் அப்பாவின் இருசக்கர வாகனத்திற்குப் பக்கத்தில், காகிதங்களால் சுற்றிலும் பொதியப்பட்டிருந்த புதிய மிதிவண்டி நிறுத்தப்பட்டிருந்தது.

–யெஸ். பாலபாரதி

(தினமலர் பட்டம் இதழில் வெளியான கதை)

This entry was posted in சிறுகதை, சிறுவர் இலக்கியம் and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 2 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.