ஆசானுடன் படம் எடுத்துக்கொண்டேன்

தொன்னூறுகளின் தொடக்கத்தில் அறிவொளி இயக்கம் எங்கள் பகுதிகளில் மிகவும் பிரபலமாக இருந்தது. அப்போது நானும் அதில் தன்னார்வலனாக அதில் இணைந்து செயலாற்றினேன்.

அப்படியே, அதில் நடிக்கும் வீதி நாடகக்கலைஞர்களைக் கண்டு, நானும் அவர்களோடு இணைந்து பணியாற்ற விரும்பியபோது, ராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான நாடக பயிற்சி முகாம் மாவட்ட அறிவொளியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதில், கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் நானும் ஒருவன். பத்து நாட்கள் திட்டமிட்டிருந்த முகாமில் என்னால் நான்கு நாட்கள் மட்டுமே கலந்துகொள்ள முடிந்தது. எங்களுக்கு பயிற்றுவிற்பவராக இருந்தவர்களில் எழுத்தாளர் வேல ராமமூர்த்தியும் ஒருவர்.

மிக அற்புதமாக நடித்துக்காட்டுவார். வசன ஏற்ற இறக்கங்களையும் சரியாக சொல்லிக்கொடுத்து, திருத்துவார். வட்டார வழக்கு மொழி அவர் உச்சரிப்பில் கணீரென்று இருக்கும்.

வேல ராமமூர்த்தியுடன்

எப்போதும் ஒரு சிங்கம் போல இருக்கும் அவரைக்கண்டாலே எங்களுக்கெல்லாம் உள்ளுக்குள் கொஞ்சம் உதறல் எடுக்கும். எனக்கு நவீன/ வீதி நாடகத்தின் ஆரம்பப்பாடம் சொல்லி கொடுத்தவர் வேல ராமமூர்த்தி தான். ராமநாதபுரம் அரண்மனை வாசல் திடல் உட்பட பல இடங்களில் நாடகங்கள் போட்டிருக்கிறோம். மாவட்டத்தின் பல ஊர்களில் வீதிகளில் எங்கள் நாடகங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. பயிலறங்கில் பயிற்சி பெற்ற நடிகர்கள் தனித்தனியாக ஒவ்வொருவரும் ஒரு குழுவை உருவாக்க வேண்டும். எங்கள் ஊரில் இருந்து மூவர் கலந்துகொண்ட நினைவு. ஆனால்.. தனித்தனி குழுக்களை உருவாக்க முடியாமல், ஒரே குழு அமைத்து, இராமேஸ்வரம் முழுக்க நாடகங்கள் போட்டோம். எப்போதாவது வேலாவை சந்திக்க நேரும் போது கூட, ஒரு வித தயக்கத்துடன் கொஞ்சம் ஒதுங்கித்தான் இருப்பேன்.

நேரடியாக யாரிடமும் தொழில் கற்றுக்கொள்ளாத ஏகலைவன் என்பதால் கட்டைவிரலைக் கேட்காத மானசீக குருக்கள் எனக்கு அதிகம். அவர்களில் வேல ராமமூர்த்தியும் ஒருவர்.

கடந்த 2005/6 ஆண்டு சமயத்தில் வலையுலகில் பிடித்த 4/8 என தொடர் பதிவுகள் வலம் வந்தபோது, பிடித்த எழுத்தாளர்கள் வரிசையில் நான் கந்தர்வன், வேல ராமமூர்த்தி மற்றும் ச.தமிழ்ச்செல்வன்  ஆகியோரின் பெயர்களைத்தான் குறிப்பிட்டுச் சொன்னேன்.  நான் எழுதத்தொடங்கிய காலந்தொட்டு, இவர்களை அடிக்கடி சந்தித்துள்ளேன். கொஞ்சம் தள்ளி நின்று ரசித்தும் இருக்கிறேன்.

நண்பர்கள் பலருக்கும் இவர்களின் எழுத்துக்களை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். இவர்கள் பிற எழுத்தாளர்களைப் போல,  அப்போதெல்லாம் அதிகம் வெகுஜன இதழ்களில் எழுதியவர்களில்லை.

இந்த பயிற்சி முகாமுக்கு முன்னமே கதைகளின் வழியாக வேல ராமமூர்த்தியை அறிமுகம் உண்டு.  அவரது ’ஆச தோச’, ’கிறுக்கு சுப்பிரமணி’ ஆகிய கதைகளை அறிவொளி வாசிப்பு இயத்திற்கு என பெரிய எழுத்தில் அச்சிட்டு கொடுத்திருந்தார்கள். அதை பல கிராமங்களில் வாசிப்புக்கு பயன்படுத்தி இருக்கிறோம். இந்தியா டுடே இலக்கியமலரில் வந்த இருளப்பசாமியும் 21கிடாயும் இவரை இன்னொரு தளத்திற்கு கொண்டு போன கதை.

காலச்சுழலில் சிக்குண்டு சொந்த மண்ணை விட்டு ஊர் ஊராக சுற்றித்திருந்த பின், பழைய தொடர்புகள் ஏதும் இல்லாமல் போனது. கிட்டதட்ட 15 வருடங்களுக்கு மேல் ஆகிய நிலையில் சமீபத்தில் வேல ராமமூர்த்தியை சந்திக்க முடிந்தது. என்னை நினைவு படுத்திக்கொண்டு பேசினேன். ஆனால் மையமாக தலையாட்டினார். அப்புறம் பயிலரங்கு சம்பவங்களையும், உடனிருந்த நண்பர்கள் பெயரையும் சொன்னவுடன் தான் புரிந்தது.

அப்புறம், நேற்று மீண்டும் சந்தித்தேன். தோழர் உங்களோடு ஒரு படம் எடுத்துக்கொள்கிறேன் என்று சொன்னவுடன் சிரித்துக்கொண்டே தோள் தட்டினார்..

வேல ராமமூர்த்தியுடன்

திரையில் ஓடிக்கொண்டிருக்கும்  மதயானைக்கூட்டம் படம் மூலம், இப்போது நாடறிந்த முக்கியமான நடிகராகிவிட்டார். 🙂


Comments

2 responses to “ஆசானுடன் படம் எடுத்துக்கொண்டேன்”

  1. புகைப்படத்தில் இருவருமே கம்பீரமாக இருக்கிறீர்கள்.

  2. அன்போடு நினைவு கூர்ந்து பகிர்ந்து கொண்டதிலிருந்து (15 ஆண்டுகளுக்கு பின்…!) அவர் மேல் உள்ள அன்பு, மரியாதை புரிகிறது… வாழ்த்துக்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *