விழியனின் உச்சிமுகர் நூல் குறித்து எனது எண்ணங்களைச்சொல்லும் முன் கொஞ்சம் கொசுவர்த்தி சுற்றுகிறேன். அதையும்  படித்துவிடுங்கள்.

சம்பவம் :- 1

என் சிறுவயதில் நடந்த சம்பவம் இது. அனேகமாக ஆறாம்வகுப்பு படிக்கும் போது என்று நினைக்கிறேன். படித்தது தமிழ்வழிக்கல்வி என்பதால்.. ஆங்கிலப்பாடங்கள் ஆறாவதில் தான் துவங்கின. அதுவரை ஏ, பி, சி, டி என இருபத்தியாறு எழுத்துகள் மட்டுமே தெரிந்திருந்தது.

வகுப்பு தொடங்கிய சில நாட்களில் ஒன், ட்டூ, த்ரி என்று எண்களில்  ஆரம்பித்திருந்தார்கள். அப்போது பதினைந்து வரை ஆங்கிலத்தில் சொன்னவன் நன்றாக படிகக்கூடியவன். ஒவ்வொருத்தராக எழுந்து, தனக்குத்தெரிந்தவரை எண்களை வரிசையாகச்சொல்லவேண்டும். ஒவ்வொருவராக எழுந்து நின்று, அவரவர் நிலைக்கு ஏற்ப சொல்லிக்கொண்டிருந்தோம்.

எனக்கு அருகில் இருந்த ஐயப்பன் என்ற நண்பனின் முறை வந்தது. கம்பீரமாக எழுந்து நின்றவன், சொல்லத்தொடங்கினான், ஒன், ரெண்ட், மூன், நால், ஐஞ், ஆற் (ஒன் ட்டூ, த்ரி சொல்லும் முறையில்) என்று அடுக்கிக்கொண்டே போனான். எல்லா பசங்களும் சிரிச்சுவிட்டோம்.

ஒரு நிமிடம் திகைத்த ஆசிரியர் அவனை, அடி பின்னி எடுத்துவிட்டார்.

 சம்பவம் :- 2

இதுவும் பழைய கதைதான். அப்போது எனக்கு 18 வயசிருக்கும். பட்டினத்தில்  கட்டிக்கொடுத்திருந்த அக்கா குடும்பத்துடன் எங்க வீட்டுக்கு ஊருக்கு வந்திருந்தார். அக்காவின் பையனுக்கு அப்போது ஆறுவயதிருக்கும். கழுதையைப் பார்த்துவிட்டு, வியந்து போய் நாள் முழுக்க டாங்கி டாங்கி என்று கழுதை மாதிரியே கத்திக்கொண்டு திரிந்தான். திடீரென ஒரு நாள் அவன், ஐயோ… அம்மா.. இங்கே வாயேன்.. மாமா வாயேன்.. என்று அலறிய படி ஓடிவந்தான்.

எல்லோரும் பதறிஅடித்து என்ன என்ன என்று விசாரித்தால் வாசல் பக்கம் அழைத்துச்சென்றான். அங்கே பக்கத்துவீட்டு மாடு புல்  தின்றுகொண்டிருந்தது.

என்னடா.. என்று கேட்டோம்.

அங்கே பாரு.. ’கௌ’ செடியெல்லாம் தின்னுது.. அது பேப்பை (பேப்பர்) தானே தின்னும்.. இங்கே செடி எல்லாம் தின்னுது என்று சொன்னதும் சில வினாடிகள் சிரிப்பலை எழுந்தது. அவனுக்கு புரியவைப்பதற்கு பதில் எளிமையாக கடந்து போனோம். (அவன் அறியாமையின் பின்னாடி இருக்கும் சோகம் வேற அரசியல்)

இப்படி நிறைய சம்பவங்கள் உண்டு மேற்சொன்ன இந்த சம்பவங்களையும் நான் பல சந்தர்ப்பங்களிலும் சொல்லியதுண்டு. குழந்தைகளின் உலகம் குதுகலமானது. உண்மையில் நாம் அவர்களுக்கு எல்லாவற்றையும் கற்பிக்க முனைகிறோம். அவர்களில் இயல்பில் இருந்து திருத்துகிறோம்.

குழந்தைகளை மேலும் மேலும் குழப்பி, மொன்னையாக்கி விடுகிறோம். நாம் நினைக்கும் உலகினுள் அவர்களை தள்ளிக்கொண்டோ, கைகளைப் பிடித்து இழுத்துக்கொண்டோ வந்து சேர்க்கிறோம். அவர்கள் எளிமையாக நமக்கு பல விசயங்களை கற்றுக்கொடுத்து விட்டுப் போகிறார்கள்.

அவர்கள் அப்படி கற்றுக்கொடுப்பதை பல பெற்றோர் தவறவிட்டு விடுகின்றனர். சிலர் கற்றுக்கொள்கின்றனர். அவர்களில் விழியனும் ஒருவர்.

கற்றுக்கொடுக்கப்பட்டதை விழியன் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார். அவற்றை உடக்குடன் எழுதி ஆவணப்படுத்தியதின் விளைவாக இன்று நம் கைகளில் ’உச்சி முகர்’ என்ற நல்ல நூலாக தவழ்கிறது. தகப்பனாக விழியன் செய்திருக்கும் முக்கியமான ஆவணம் இது என்பேன்.

தொடர்ந்து சிறார்களுக்காக எழுதி வரும் விழியன், இம்முறை பெற்றோருக்காக எழுதி இருக்கிறார். 63 பக்கங்களுடைய இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொரு பெற்றோரும் கொஞ்சம் கடந்த காலத்துக்கு சென்று திரும்பி வருவார்கள் என்பது திண்ணம்.

எதையுமே அதித மிகைப் படுதலின்றி அழகாக சொல்லி இருக்கிறார். சில இடங்களில் தகப்பன் இடத்திலிருந்து விலகி, நூலாசிரியகிறார் விழியன். அதனைக் கொஞ்சம் குறைத்திருந்தால் மிகவும் நன்றாக இருக்குமென்று படுகிறது. இடையிடையே வரையப்பட்டுள்ள ஓவியங்களும் அழகு. விழியனுக்கு யானைக்காது வைத்து வையப்பட்ட ஓவியத்தை பெரிதும் ரசித்தேன்.

இதுவொரு தகப்பன் பார்வையில் எழுதப்பட்ட நூல். விரைவில் தாய் பார்வையில் இருந்தும் இதுபோன்றதொரு நூல் வரட்டும். குழந்தை குழலியின் சேட்டைகளைப் பற்றி படிக்கும் போது, பதினாறடி பாயும் குட்டி என்ற சொலவடைதான் நினைவுக்கு வருகிறது. விரைவில் குழலி கதை சொல்ல, தொகுப்பாசிரியராக பெற்றோர் பெயருடன் வரட்டும் இன்னும் பெரிய நூல்! இப்போதே வாழ்த்துகிறேன்.

 

// A-Z இரண்டு முறை எழுத வேண்டும் எனக் குழலிக்கு வீட்டு வேலை (Home Work). இரண்டாவது முறை O வரும்போது தான் எனக்கு அதனை கூறினாள்.

“அப்ப இந்த Oவும், Qவும் friends பா” என அதற்கு இருக்கு ஒற்றுமையை கூறினாள். பின்னர் P,B,R மூன்று அக்கா தங்கைகள் என்றாள். களத்தில் நான் குதித்து M – W என்ன என கேட்டேன். ‘எனிமீஸ்’ என்றாள். N – Z என்ன பக்கத்துவீட்டுக்காரர்களா என்றேன். T, J, I இவங்க அண்ணன் தம்பிங்க என்றாள். எவ்வளவு சுவாரஸ்யமா சம்பந்தப்படுத்திக்கிறாங்க குழந்தைகள்.

‘யாரு குழலி உனக்கு இதைச் சொல்லி தந்தது’ என கேட்டேன்.
‘அதான்பா புது ப்ரண்டு, குளிச்சிட்டே இருப்பாளே டூடூ’ (டூடூ அந்த சமயத்தில் இருந்து ஒரு கற்பனை கதாபாத்திரம்).

பள்ளிக்குச் செல்லும் போது எல்லாம் மறந்திடுங்க எல்லாமே பிரண்ட்ஸ் எனக் கூறினாள். டூடூ ஏன் இப்படி மாத்தி மாத்தி சொல்லித்தரான்னு தெரியல. //

இது ஒரு சாம்பிள் தான். 🙂 🙂

உண்மையில் எனக்கு குழலியைக்கண்டு எந்த வியப்பும் இல்லை. அவளின் பெற்றோரான விழியன் தம்பதியினரை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. எனக்கு இப்படி ஒரு பெற்றோர் கிடைக்காமல் போனார்களே என்ற ஏக்கமாகவும் இருக்கிறது.

பெற்றோரும், பெற்றோராகப்போகிறவர்களும் நிச்சயம் படிக்கவேண்டிய நூல் என்பேன். எப்போதுமே பழைய நினைவுகளில் சுவாரஸ்யம் நிறைந்த நிகழ்வுகள் சுகமானவை; அது நினைத்துப்பார்க்கவோ, சொல்லிப் பார்க்கவோ எப்படியாகினும் சுகமானவை தான். அந்த சுகத்தினை இந்த நூல் நிச்சயம் வழங்குகிறது.

நூல்:- உச்சி முகர்
விலை: ரூபாய் 40/-

வெளியீடு:- புக் ஃபார் சில்ட்ரன்

விற்பனை உரிமை:-
பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை- 600018
தொலைபேசி:- 044- 24332424

***