உங்கள் வாழ்க்கையை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள். கடந்த வந்த பாதையில் குறைந்த பட்சம் ஒரு நாவலுக்கான விசயமிருக்கும். அதை நாம்மில் பலரும் கவனிக்காது தவறவிட்டு விடுகிறோம். கவனமாக நினைவுகூர்ந்தால், சம்பவங்களைக் கோர்த்து, அழகான கதைச்சரடை உருவாக்கிட முடியும் என்று அனேக நண்பர்களிடம் நான் சொல்லி இருக்கிறேன்/ சொல்லியும் வருகிறேன்.  அப்படி, தான் கடந்து வந்த அனுபவத்தை அழகாக தொகுத்து, கரும்புனல் நாவலாக கொடுத்துள்ளார் ராம்சுரேஷ்.

சம்பல் கொள்ளையர்கள், தண்டகாரண்ய மாவோயிஸ்ட்டுகள் என எங்கே மக்களிடம் வன்முறை அதிகரித்தாலும் அதற்கு பின்புலமாக ஒரு பெரிய சுரண்டல் நிச்சயம் இருக்கும். ஆனால் இந்த வன்முறைகளைப் பற்றி பேசும் ஊடகங்கள் அந்த முன்கதைச் சுருக்கத்தை எளிய, நீர்த்த ஒரிரு வார்த்தைகளோடு கடந்து போய்விடுவதைக் காணலாம். அத்தகைய ஒரு முன்கதைச் சுருக்கத்தை கரும்புனலில் ரத்தமும் சதையும் கொண்ட மனிதர்களோடு விவரிக்கிறார் ராம் சுரேஷ்.

 

வடக்கு, வடகிழக்கு மாநிலங்கள் பற்றிய செய்திகளை நாம் நாளிதழ் வழி மட்டுமே பெரியதாக அறிந்திருப்போம். புதிய களத்தில் ராக்கெட் வேகத்தில் பயணிக்கிறது கதை. நுட்பமாக சில இடங்களில் பிரீயட் பீலிங்க் கொண்டுவந்துள்ளார். 1995ம் ஆண்டு பீஹாரில் நிலக்கரி சுரங்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணியில் கதையின் நாயகன் ஈடுபடுகிறார். அதனை மையப்படுத்தி நேர்கோட்டில் கதை பயணமாகிறது.

பொதுமக்கள் அதிகம் கவனிக்கப்படாத ஏரியாவில், சின்னச்சின்ன விசயங்களில் கூட ஊழல் எப்படியெல்லாம் நடக்கிறது என்று சொல்லுமிடம் சுவாரஸ்யம். அதே போல, வடக்கில் உள்ள சர்நேம் குழப்பமும், தமிழர்களின் பெயர்களை அவர்கள் உச்சரிக்கும் விதங்களும் எப்படியானவை என்பதை அங்கே வாழ்ந்த சிலகாலம் அனுபவித்திருக்கிறேன் என்பதால், அந்த இடங்களை படிக்கும் போது மெல்லிய புன்னகை ஏற்பட்டது.

பீஹாரில் தமிழ்பேசும் பெண், கோயம்பத்தூரில் படிச்சேன் என்ற போது, ஏனோ ரோஜா படம் நினைவுக்கு வந்தது.

அப்பகுதியில் நிலவும் ஜாதிவெறி உணர்வுகளைக்கண்டு நொந்துபோகும், நாயகன் தன் வாழும் பகுதியின் (தமிழகம்) எதிரிடையான சூழலைப் பற்றி கொஞ்சமும் நினைவுகூறவில்லை என்பது நாவலை முடித்த பின் தான் தோன்றியது. படிக்கும் போது இருந்த வேகம் எதையுமே யோசிக்கவிடவில்லை. 🙂 நாவலை பாதி தாண்டுவதற்குள் என்னைச்சுற்றி எங்கும் சாம்பல் நிறம் பரவியதாக உணர்ந்தேன். பின் கொஞ்சம் கொஞ்சமாக அது மறையத்தொடங்கியது. 🙂

அக, புற விவரணைகளை கொஞ்சம் விஸ்தாரமாக்கி இருந்தால், இன்னும் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். பீரியட் நாவல் என்பதைக்காட்டிலும், அறியப்படாத புதிய சூழலை நமக்கு அறிமுகப்படுத்துவதால் இது முக்கியமான நாவல்.

கூடுதல் கவனத்துடன் கொஞ்சம் முயன்றால் ராம்சுரேஷ் சுஜாதாவின் வெற்றிடத்தை அடையமுடியும் என்றும் நம்புகிறேன்.

நூல்:- கரும்புனல்

வெளியீடு:-
வம்சி பதிப்பகம்
19, டி. எம். சரோன்
திருவண்ணாமலை – 606601


விலை:- ரூபாய் 170/-

—-