(கற்றல் குறைபாட்டுப் பிரச்னைக்கான தீர்வுகள்)

முந்தைய கட்டுரையில், கற்றல் குறைபாடு பற்றியும், அதன் வகைமைகளைப் பற்றியும் ஒரு அளவுக்கேனும் அறிந்திருப்பீர்கள்.

கற்றல் குறைபாடு ஒரு நோயல்ல; குறைபாடே என்பதை நான் மீண்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். எனவே, இதற்கான சிகிச்சை என்பதும், மருந்து மாத்திரைகள் சாப்பிடுவது போன்றது அல்ல. முறையான பயிற்சியின் மூலம் இதனை சமாளிப்பதுதான் அவசியம். ஒவ்வொரு குழந்தைக்கும், இக்குறைபாட்டின் தன்மையும், தீவிரமும் வேறுபடும். எனவே, முறையான, விரிவான மதிப்பீடு அவசியம்.

யாரை அணுகுவது?

சரி! குழந்தைகளுக்கு இந்தக் குறைபாடு இருப்பதாகச் சந்தேகம் வருகிறது. அல்லது பள்ளியில் இருந்து நிறைய புகார்கள் வருகின்றன. என்ன செய்வது? யாரிடம் கேட்பது என்ற குழப்பத்தில் இருக்கிறீர்களா? குழந்தையை மதிப்பீடு செய்ய, கீழ்க்காணும் இடங்களோ, நபர்களோ உங்களுக்கு உதவக்கூடும்.

  • சென்னை, முட்டுக்காட்டில் உள்ள நிப்மெட் நிறுவனம் (National Institute for Empowerment of Persons with Multiple Disabilities – NIEPMD).
  • சென்னை, தி.நகரில் உள்ள எம்.டி.ஏ. (Madras Dyslexia Association – MDA).

நீங்கள் தமிழகத்தில் எந்த ஊரில் வசிப்பவராக இருந்தாலும்..

  • உளவியல் நிபுணர்கள்
  • சிறப்புக் கல்வியாளர்கள் (சிறப்புப் பள்ளிகளை அணுகலாம்)
  • அரசுப் பள்ளிகளில், சர்வ சிக்ஷா அப்யான் (எஸ்.எஸ்.ஏ.) திட்டத்தின் கீழ் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்கள் (எல்லா ஆரம்பப் பள்ளிகளுக்கும், யாரேனும் ஒரு சிறப்பு ஆசிரியர் பொறுப்பில் இருப்பார்) போன்றவர்களை அணுகலாம்.

மதிப்பீட்டில், என்னவெல்லாம் கவனிக்கப்படும்?

  • கவனக் குவிப்புத் திறன்
  • மொழி வளர்ச்சி
  • நுண்ணறிவுத் திறன்
  • கல்வி தவிர்த்த பிற துறை ஆர்வங்கள், தனித் திறன் போன்றவை
  • வாசிக்கும் திறன்
  • வாசிப்பதைப் புரிந்துகொள்ளும் திறன்
  • கவனித்தல் திறன்

போன்ற பல்வேறு கோணத்திலும், குழந்தையைப் பற்றிய விவரங்களைச் சேகரிப்பதே மதிப்பீடு ஆகும்.

குழந்தையின் திறன்கள் மற்றும் தேவைகள் அனைத்தும் பட்டியலிடப்படும். அத்தோடு, குழந்தையின் கல்வித் திறனை மேம்படுத்த, என்னென்ன உதவிகள் தேவைப்படும் என்பதை இந்த மதிப்பீட்டு அறிக்கை தெளிவுபடுத்திவிடும். அதை அடிப்படையாகக் கொண்டு, குழந்தையின் ஆசிரியர்களோடு திட்டமிட்டு, கற்றல் முறைகளில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். மேலும், குழந்தையின் கல்வி தவிர்த்த மற்ற துறை ஆர்வங்களுக்கு முக்கியத்துவம் தந்து, அத்திறன்களை வளர்த்தெடுக்க வேண்டும்.

ஒவ்வொரு பாடத்திலும், குழந்தையின் தற்போதைய அறிதல்களை அறிந்துகொண்டு, அடுத்து என்னென்ன விஷயங்களை, எப்படி கற்பிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதே முக்கியமான விஷயம். இப்படித் திட்டமிடுவது, ‘தனி நபர் பாடத்திட்ட வரையறை’ (Individualized Education Plan) என்று அழைக்கப்படும்.

கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு, வழக்கமான முறையில்  à®•à®°à¯à®®à¯à®ªà®²à®•à¯ˆà®¯à®¿à®²à¯ எழுதிப் போட்டு, அதைப் பார்த்து நோட்டுப் புத்தகத்தில் எழுதிப் படிக்கும் கல்வி முறை ஒத்துவருவதில்லை. ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப, புலன் உணர்வு சார்ந்த பயிற்சி முறையை வடிவமைக்க வேண்டும். இதுவே, பயனுள்ள வழிமுறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வகையில் கற்பிப்பதன் மூலம், அவர்களின் குறைபாடுகளைத் தாண்டியும், ஆர்வமுடன் கற்றலில் ஈடுபடச் செய்யலாம்.

பார்ப்பதன் மூலம் கற்கும் திறன் உள்ளவர்களுக்கு (Visual Learners), வண்ணமயமான வரைபடங்கள் (Charts), படங்கள் நிறைந்த புத்தகங்கள் போன்றவற்றின் மூலம் கற்பிக்கலாம். பாடத்தின் முக்கியக் குறிப்புகளை தனித் தாளில் அச்சிட்டு வழங்கலாம்.

கேட்பதன் மூலம் கற்றல் திறன் (Auditory Learners) உடையோருக்கு, ஒலிப்பதிவுக் கருவிகளைப் பயன்படுத்த அனுமதிக்கலாம். கதைகள், பாடல்கள் மூலம் பாடத்தைக் கற்பித்தால், இவர்களால் எளிதில் கற்றுக்கொள்ள முடியும்.

தொடுதல் முறையில் கற்றல் திறன் (Tactile Learners) உடையோருக்கு, மணலிலோ அல்லது உப்புத்தாள் போன்ற சொரசொரப்பான தளங்களிலோ, விரலால் எழுதப் பழக்கலாம். அபாகஸ் மணிச்சட்டங்களைக் கொண்டு, கணிதப் பயிற்சி அளிக்கலாம்.

இயக்கத்தின் மூலம் கற்றல் திறன் (Kinesthetic Learners) உடையோருக்கு, எதையும் செயல்முறையில் கற்பித்தலே சிறந்த வழி. விளையாட்டுக்கான களிமண் (Clay) கொண்டு உருவங்களை உருவாக்கிக் கற்பிக்கலாம். குவளைகளால் நீரை மொண்டு வேறு பாத்திரத்தில் நிரப்பச் செய்து, எத்தனை குவளைகள் தேவைப்பட்டன என்று கணக்கிட வைக்கலாம். இவர்களை, நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்க வற்புறுத்தக் கூடாது.

மூளையின் செயல்பாட்டைத் தூண்டி, கற்றல் திறனை மேம்படுத்துவதற்காகப் பிரத்யேக மூளை ஒருங்கிணைவுக்கான உடற்பயிற்சிகள் (Brain Gym) கண்டறியப்பட்டுள்ளன. இணையத்தில், இத்தகைய பயிற்சிகளைத் தேடி, குழந்தைகளைச் செய்ய வைக்கலாம். இதன்மூலம், நீண்டகால நோக்கில், கற்றலில் முன்னேற்றம் ஏற்படும்.

வாழ்நாள் நிலை

கற்றல் குறைபாடு என்பது, வாழ்நாள் முழுக்கத் தொடரக்கூடிய ஒரு நிலை. இக்குறைபாடு உடையவர்களை, சிறு வயதிலேயே அடையாளம் கண்டறிந்து, அவர்களுக்கு ஏற்ற வழிமுறைகளின் மூலம் கற்றலை இலகுவாக்கிக் கொடுத்தால், அக்குழந்தைகளாலும் வாழ்வில் முன்னேற முடியும்.

(தொடரும்)