(உடல் பருமன் பாதிப்புகள்)

அதிகாலைப்பொழுதில் நடை, மெல்லோட்டம், சைக்கிள் ஓட்டம் என்று ஒரு சிலர் சுறுசுறுப்பாக இருந்தாலும், நம்மில் பலருக்கும் இன்னும் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் வந்து சேரவில்லை.

விளைவு, உடலில் தேவையற்ற கொழுப்பு கூடுவதோடு, மன அழுத்தமும் அதிகரிக்கிறது. 40 வயதுக்குள்ளாகவே இதயநோய்ப் பிரச்னையில் சிக்கிக்கொண்ட பலரையும் பார்க்க முடிகிறது. 33 வயதிலே ‘ஸ்டெண்ட்’ வைத்தவர்களைக்கூட நான் அறிவேன்.

அதைவிடக் கொடுமை என்னவெனில், இன்றைய குழந்தைகளில் பலர், அதிக உடல் பருமனால் அவதிப்படுகின்றனர். நானெல்லாம் பள்ளியில் படிக்கும்போது, மொத்தப் பள்ளிக்குமே ஒன்றிரண்டு மாணவர்கள் மட்டுமே சற்று குண்டாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது. ஒவ்வொரு வகுப்பிலும், உடல் பருமன் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது.

சின்னஞ்சிறு குழந்தையாக இருக்கும்போது, கொழு கொழுவென இருந்தால், அதுவே ஒரு அழகெனக் கொண்டாடுவது நம் இயல்பு. அத்தோடு, குண்டாக இருந்தால்தான் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும் நமக்கு ஒரு நம்பிக்கை உண்டு. நம் குழந்தை எத்தனை ஆரோக்கியமாக இருந்தாலும், சும்மாவேனும் பார்க்கிறவர்கள் ‘குழந்தை துரும்பாய் இளைச்சுடுச்சே’ என்று சொல்லி, தம் அக்கறையை நிரூபிப்பதோடு, நமக்கும் குற்ற உணர்ச்சியைக் கொடுத்துச் செல்வார்கள். உடனே, இன்னும் கொஞ்சம் கூடுதலாகச் சாப்பிடவைக்க என்ன வழி என்று நாம் பரபரப்போம். இதெல்லாம், கைக்குழந்தையாக இருக்கும்வரை சரி. குழந்தை என்கிற நிலையில் இருந்து, சிறுவன்/சிறுமி என்ற நிலைக்கு வந்த பின்னரும், உடல் பருமன் தொடர்ந்தால், அது ஆரோக்கியமானதும் அல்ல; அழகு என்று கொண்டாடப்படுவதும் கிடையாது.

உடல் பருமன் காரணமாக உடல் சோர்வு ஏற்படுகிறது. உடல் சோர்வினால், எப்போதும் தூங்கி வழியவேண்டி இருக்கிறது. இதனால், பள்ளியில் பாடங்களைச் சரிவர கவனிக்கவும் குழந்தைகளால் முடிவதில்லை. பாடங்கள் மறந்துபோவதற்கும்கூட உடல் சோர்வு காரணமாகிறது. இந்தச் சோர்வினாலேயே, ஓடியாடி விளையாடவும் முடியாமல் போகும். அதனால், மீண்டும் எடை கூடியபடியே இருக்கும். இப்படியாக, வட்டம் சுற்றிச் சுற்றி ஒரே இடத்தில்தான் நிற்கும்.

இந்தியாவில், ஊட்டச்சத்து குறைபாடுகளினால் குழந்தைகள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது ஒருபுறம் என்றால், உடல் பருமனால் பாதிக்கப்படும் வளரிளம் பிள்ளைகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிப்பதாக, எம்.எஸ். சுவாமிநாதன் ஆய்வு அறக்கட்டளை, சமீபத்தில் ஓர் எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டது. இப்படியான எச்சரிக்கைகளை நாம் கண்டுகொள்ளாமல் கடந்துபோய்க் கொண்டிருக்கிறோம்.

அதுபோல, இந்தியா, இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, வடஇந்தியாவில் சமீபத்தில் நடத்திய ஆய்வில், அங்கிருக்கும் வளரிளம் பருவத்தினரின் உடல் பருமன் மற்றும் உயர் ரத்த அழுத்தம் பற்றிய ஆய்வு முடிவுகள், பிஎம்ஜெ ஓப்பன் (BMJ Open) என்னும் பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலம், லூதியானா மாவட்டத்தில் உள்ள கிராமம் மற்றும் நகர்ப்புற பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் இதற்கான தரவுகள் சேகரிக்கப்பட்டன. பதினொன்று முதல் பதினேழு வயதுக்கு உள்பட்ட சுமார் இரண்டாயிரம் வளரிளம் வயதுடையோர் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளனர். இதில், வளரிளம் பருவ மாணவர்களின் ரத்த அழுத்தம், உடல் நிறை குறியீடு (BMI Index) முதலிய தரவுகளைச் சேகரித்தனர். அவர்களின் சமூக – பொருளாதார நிலை; உணவுப் பழக்கம்; உடல் உழைப்பு, உடல்பயிற்சிகள் போன்ற செயல்பாடுகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதில், கிராமங்களில் 5.7 சதவீதம் குழந்தைகளுக்கும், நகரங்களில் 8.4 சதவீதம் குழந்தைகளுக்கும் உயர் ரத்த அழுத்தம் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதற்கு அடிப்படைக் காரணமான அதீத உடல் பருமன், கிராமப்புறங்களில் 2.7 சதவீதக் குழந்தைகளுக்கும், நகர்ப்புறங்களில் 11.2 சதவீதக் குழந்தைகளுக்கும் இருப்பதாகவும் அந்த ஆய்வு சொல்கிறது. இம்முடிவுகள், முந்தைய ஆய்வு எண்ணிக்கையைவிட அதிகரித்திருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

முறையற்ற உணவுப் பழக்கங்களினால் உடல் பருமன் ஏற்படுகிறது என்றாலும், உடலில் உடல் செயல்பாடுகள் குறைந்துபோவதும் உடல் பருமனுக்கான காரணங்களில் ஒன்றாகச் சொல்லப்படுகிறது.

நடையும் ஓட்டமும்

தினமும் உடல் பயிற்சி செய்ய வேண்டும் என்றதுமே, நூறு தண்டால், பஸ்கி எடுப்பதும், அதிகாலையில் எழுந்து, தெரு நாய்கள் துரத்தி வர, பக்கத்து ஊர் வரைக்கும் ஓடுவதுபோல எல்லாம் கற்பனை செய்துகொள்ள வேண்டாம். சின்னச் சின்ன உடல் பயிற்சிகளில் இருந்தே தொடங்கலாம். ஆனால், தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருக்க வேண்டும்.

மளிகைச் சாமான் வாங்க, காய்கறிகள் வாங்க, ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவப் பதார்த்தங்கள் வாங்க என, 2 கிலோமீட்டர் சுற்றுவட்டத்தில் இருக்கும் கடைகளுக்கு நடந்தே செல்லலாம். அப்படி நீங்கள் கால்நடையாகச் செல்லும்போது, கண்டிப்பாக குழந்தைகளையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். இதற்கு ஒருவாறு பழகியபின், வீட்டு வாசலில் இறகுப் பந்து விளையாடலாம். நீங்கள் குடியிருக்கும் வீட்டில் மொட்டை மாடியை பயன்படுத்த முடியும் என்றால், இரண்டு புத்தகம் அல்லது ஸ்டூல் அல்லது வாட்டர் பாட்டில்களை சற்றே தள்ளித் தள்ளி வைத்துவிட்டு, அவற்றுக்கு இடையே எட்டுப் போட்டு நடக்கலாம்.. ஓடலாம்.

உடல் பயிற்சி என்பதை தண்டனைபோல அல்லாமல், அவசியமான ஒன்றாக குழந்தைகளுக்குப் பழக்குங்கள். அவர்களும் ஆர்வமாகச் செய்வார்கள்.

குழந்தைகள் மொபைலுக்குள்ளேயே மூழ்கிக்கிடக்கிறார்கள் என்றாலும், பாதகம் இல்லை. யுடியூப் போன்ற தளங்களில் உடல் பயிற்சிகள், யோகாசனம் முதலியவற்றை குழந்தைகளுக்குப் பழக்கவென்றே, மாதிரி காணொலிகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை மொபைலிலோ அல்லது கணினித் திரையிலோ ஓடவிட்டு, அதைப் பார்த்து விளையாட்டாகவே குழந்தைகளையும் பயிற்சி செய்யவைக்க முடியும்.

உடல் பயிற்சி கொடுக்கும் உற்சாகத்தை, மெள்ள மெள்ளத்தான் உணர முடியும். ஒரு செடியை நட்டுவைத்த மறுநாளே அது வேர்விட்டு இருக்கிறதா என்று தோண்டிப்பார்க்கக் கூடாதில்லையா? அதுபோலவே, உடல் பயிற்சிகளும் தொடங்கிய மறுநாளே பலன் கிடைத்துவிடாது. குறைந்தது, இடைவிடாமல் 60 நாள்கள் செய்தபின்னரே, கொஞ்சமாக மாற்றங்கள் வெளியில் தெரிய ஆரம்பிக்கும். ஆனால், அதற்கு முன்னதாகவே, நமது உடலில் ஏற்படும் மாற்றங்களை நாம் உள்ளூர உணரத்தொடங்கி இருப்போம்.

உடல் பயிற்சிகளை இளம் வயதிலேயே பழக்கப்படுத்திவிடுவதால், பிள்ளைகள் வளர்ந்து பதின் பருவத்திலும், இளைஞர் பருவத்திலும்கூட இப்பழக்கம் தொடரும். ஐம்பதில் வளைய வேண்டுமென்றால், ஐந்தில் வளைந்த அனுபவமும் வேண்டுமல்லவா!