கோட்டி முத்து

நான் படித்த தொடக்கப்பள்ளியின் சத்துணவுக்கூடத்தில் விளிம்பு வெடித்த அந்த அலுமினிய குண்டா இன்றும் அப்படியே இருக்கிறது. அதில் கொட்டப்படும் மீதி சோற்றுக்கென.. மதிய வேளைகளில் நாய்களின் கூட்டமொன்று அலைந்தபடியே இருக்கிறது. ஆனால், அந்த குண்டா யாருக்காக வைக்கப்பட்டதோ அவனை இன்றளவும் எதிர்பார்த்தபடியே தான் இருக்கிறார்கள் பள்ளிக்குழந்தைகளும், ஆசிரியர்களும். எனக்கும் என் நண்பர்கள் சிலருக்கும் மட்டும் தான் அவன் போயே போய் விட்டதின் காரணம் தெரியும்.

கோட்டி முத்து. இந்த பெயரைச் சொன்னால் என் ஊரில் தெரியாதவரே இல்லை எனலாம். வெற்றிலைக்குச் சுண்ணாம்பு வாங்குவதிலிருந்து, ஊரில் இருக்கும் ஒரே பள்ளிக்கூடத்தின் சத்துணவுக்கு அடுத்த ஊரில் இருந்து காய்கறி வாங்கி வருவது வரை, ஊரில் எல்லோரின் தேவைக்கும் கோட்டி முத்து தேவைப்படுவான். தனியாக சம்பளம் என்று ஏதும் கொடுக்க வேண்டாம். ஒரு வேளை சோறு போட்டால் போதும். போடாவிட்டாலும் குத்தமில்லை. எதுவும் சொல்லாமல் போய் விடுவான்.

தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும், ஏன் உலகின் எல்லா ஊர்களிலும் கோட்டி பிடித்த மனிதர்கள் யாராவது இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை உதாசினப்படுத்தவோ, சிறுவர்கள் கல் கொண்டு தாக்குவதோ, அழும் குழந்தையை மேலும் பயம் கொள்ள கோட்டிக்காரனிடம் பிடித்துக்கொடுத்துவிடுவதாக சொல்லும் அம்மாக்கள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். ஆனால் எங்கள் ஊரில் எல்லாமே தலைகீழ்.

பள்ளி செல்லும் சிறுமிகளின் புத்தக மூட்டையை சுமப்பது முதல், வீதியில் அழுது அடம் பிடிக்கும் குழந்தையின் முன்னால் மண்டியிட்டு ஆனை விளையாட்டு காட்டி, சவாரி ஏற்றிக்கொள்ளுவது, குரங்கு போல பல்டி அடிப்பது என்று எல்லா சேட்டைகளும் செய்து அவர்களை சமாதானப்படுத்தி விடுவதிலும் அவன் கில்லாடி. இதனாலேயே எங்களூர் குழந்தைகளின் செல்லத் தோழனாகிப் போனான் கோட்டி முத்து.

பையன்கள் ‘தரவை’ பக்கம் கிரிக்கெட் விளையாட போகும் போது பந்து எடுத்துப்போட இவனைத்தான் அழைத்துப்போவார்கள். மளிகை கடை வைத்திருக்கும் சுரேஷ் அண்ணாச்சி தான் ‘கோட்டிமுத்து’ வென முதலில் விளித்ததாய் அப்பா சொல்லி கேட்டிருக்கிறேன். அவனது நிஜப்பெயர் குறித்து யாரும் ஆர்வப்படவில்லை. அவன் எந்த ஊரில் இருந்து வந்தவன் என்பது கூட எவருக்கும் தெரியாது. “கோட்டிமுத்தூ…” என்று சத்தம் போட்டு முடிக்கும் முன் சிட்டாய் பறந்து வந்து நிற்பான்.

அடர்ந்து கருத்திருந்த அவனது தலை மயிர்களில் காதோரம் தொடங்கி பின் கழுத்து வரை வெள்ளி மயிர்கள் தலை காட்டத்தொடங்கி இருந்தன. முகம் வட்டமாக இருந்தாலும் ஒழுங்கு செய்யப்படாத தாடியால் பொலிவை இழந்திருந்தான். ஆறடிக்கும் குறைவில்லாத உயரம். கருத்த நிறம். திடகாத்திரமான உடல்வாகு. மேல் பட்டனை கழட்டி விட்ட சாயம் போன சட்டை, காலுக்கும் முட்டிக்கும் இடைப்பட்ட உயரத்தில் பேண்ட். இவை தான் கோட்டி முத்துவின் அடையாளங்கள்.

ஊரணியில் தினம் அதிகாலையிலேயே குளித்து விடுவான். தன் ஆடைகளை தினம் கழுவி, ஈரத்துடன் போட்டுக்கொண்டு திரிவான். ஆடைகள் கிழிந்து போனால் யாரிடமும் கேட்க மாட்டான். சுடுகாட்டு மண்டபத்தில் படுத்துக்கொள்ளுவான். அவனின் தேவையை ஊரில் யாராவது நிறைவேற்றியபின் தான் ஊருக்குள் உலா வருவான். ஊருக்குள் உலாவினாலும் எந்த தொல்லையும் கிடையாது. பசிக்கிறது என்றும் எவர் வீட்டு வாசலிலும் நின்றதும் கிடையாது. உமையனன் வாத்தியார் தான் சத்துணவுக்கூடத்தில் கோட்டி முத்துவுக்கென அந்த அலுமினிய குண்டாவை வைத்தார். பள்ளிக்குழந்தைகள் சாப்பிட முடியாமல் போன சோற்றை அதில் கொட்டி விடுவார்கள். அதைத்தான் மதியம், இரவுக்கும் சாப்பிடுவதை வழக்கமாக்கிக்கொண்டான்.

கோவில் வாசலின் தான் படுத்துக்கிடப்பான் என்றாலும் அவன் உறங்கி யாரும் பார்த்தது கிடையாது. ஊரின் எல்லாத் தெருக்களிலும் போட்டிருக்கின்ற செருப்புத்தேய வலம் வருவான். அச்சமேற்படுத்தும் தோற்றம் என்ற போதிலும் தெருநாய்கள் அவனைக் கண்டு குறைத்ததில்லை. அவனைப் பழகிப் போய் இருந்தன அவை.

ஒவ்வொரு ஆடி மாதத்திலும் மாரியம்மன் கோவில் திருவிழா நடக்கும். அலங்கார விளக்கு அமைக்கவும், உட்சுவர் முதல் கோபுரம் வரை வெள்ளை அடிக்கவும் கூட இவன் பங்கு இருக்கும். பத்து நாட்கள் விழாவில், கடைசி நாளன்று திரைகட்டி சினிமா காண்பிப்பார்கள். டவுண்காரர்கள் அதனைச் செய்வதால் இவனை அண்ட விட மாட்டார்கள்.

மாரியம்மன் கோவிலின் அருகில் இருக்கும் வேப்ப மரத்தைச் சுற்றிலும் ஒன்பது நாளுக்கு இரவில் ஒயில் விளையாட்டு நடக்கும். ஓரத்தில் முளைப்பாரி கொட்டகைக்குள் இருக்கும். கடைசி நாளன்று விடியற்காலை நாலு மணிவரை கூட ஓயில் விளையாட்டு நடக்கும். அன்று மட்டும் அடுத்தடுத்த தெருவில் இருந்து எல்லாம் எங்கள் தெருவுக்கு விளையாட வருவார்கள். இரவை பகலாக்கும் முயற்சியில் பளபளப்பாக காட்சி தரும் எங்கள் ஏரியா.

விடியவிடிய ஆடி விட்டு எல்லோரும் களைத்து தூங்கினாலும் இவன் மட்டும் கண்ணசர மாட்டான். காரணம் கடைசி நாளன்று தான் மொத்த ஊரும் திரண்டு வந்து கோவிலில் சாமி கும்பிடும். அனேக வீடுகளில் அன்று கறி தான். கோவிலின் வலது பக்க சுவரோரம் இருபதிற்கும் குறையாக கிடாய் நிற்கும். ஆத்தாளுக்கு பலி போட்டு…., சிறு சிறு துண்டுகளாக்கி ப்ளாஸ்டிக் பையில் போட்டு, வரி பிரித்த எல்லா வீடுகளுக்கு கறி பிரசாதம் கொடுத்து விடுவார்கள். சொந்தமாக வாங்கி வைத்திருக்கும் கறியுடன் இந்த பிரசாதத்தையும் சேர்த்து தான் சமைக்கத் தொடங்குவார்கள். வீடுகளுக்கு கறி கொடுக்கும் வேலையையும் கோட்டி முத்து தான் செய்வான்.

கறி போட்டு வைத்திருக்கும் பிளாஸ்டிக் பைகளை இடது கையில் பிடித்துக்கொண்டு, வலது கையை விசுக்விசுக்கென அவன் வீசி நடக்கும் அழகே தனி. ஆத்தாளின் பிரதிநிதியாக வலம் வருகிறோம் என்ற நினைப்போ என்னவோ, அப்போது மட்டும் ராஜநடை போட்டுத்தான் நடப்பான்.

“வரிக்கறி..அம்மா”வென ஒவ்வொரு வீட்டின் முன்பாக நின்று குரல் கொடுப்பான். உடனடியாக வீட்டுக்காரர்வந்து வாங்கிக்கொள்ள வேண்டும். அவர்கள் வரத்தாமதமானால்.. வீட்டுத்திண்ணையிலேயே கறியை வைத்து விட்டு, அடுத்த வீடு நோக்கி நடையை கட்டி விடுவான்.

கறிப்பிரசாதம் இவன் கையில் வந்தவுடன் இவன் முதலில் கொண்டுவந்து கொடுப்பது எங்கள் வீட்டில் தான். அதற்கு காரணமும் இருந்தது. மற்ற வீடுகளுக்கு அவன் கொடுத்து விட்டு திரும்புவதற்குள் கல்யாணியக்கா சமையல் செய்து வைத்து விடுவாள். என் அம்மா போன பின் அந்த குறையே தெரியாமல் என்னை வளர்த்தெடுத்தவள் கல்யாணியக்காதான். கோட்டி முத்து திரும்பி வந்து எங்கள் வீட்டு திண்ணையில் அமர்ந்து கொண்டு, “அக்கா சோறு” என்று குரலெழுப்புவான். கல்யாணியக்கா அவனுக்கு சோறிடுவாள். என் அம்மா ஏற்படுத்திய வழக்கம். அவள் போன பின்னும் அக்காவால் தொடரப்படுகிறது. அவனுக்கு இந்த வித்தியாசங்கள் ஏதும் தெரியாது. அவனுக்கு அம்மாவும் அக்கா தான்; மகளும் அக்கா தான்.

அன்று திருவிழாவின் கடைசி நாள். எங்கள் வீட்டு திண்ணையில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தவனை எங்கள் படை சூழ்ந்தது. படை என்றால்.., என்னோடு ஒரே வகுப்பில் படித்துக்கொண்டிருந்த தெருச் சிறுவர்கள். விரல்களில் ஒட்டி இருந்த பருக்கைகளுக்காக விரல் சுப்பிக்கொண்டிருந்த போது எங்களைப் பார்த்தான்.

“கோட்டிமுத்தூ…, எங்களுக்காவ ஒரு காரியஞ்செய்வியா?” என்று கேட்டான் கோணக்குஞ்சான்.

அப்படியே சில நிமிடங்கள் எங்களைப் பார்த்து விட்டு மீண்டும் விரல்களை சுத்தப்படுத்துவதில் தீவிரமானான்.

“இல்ல.. ஒனக்குத் தா மைக் செட்டுக்காரர.. நல்லா தெரியுமே.. எங்களுக்கு ஒரு சிரியல் பல்பு வாங்கித்தாரியா..”

காலியான சாப்பாட்டு இலையை மூடிவிட்டு, கையை கழுவி, கோவிலை நோக்கிப் போனான். நாங்களும் இடைவெளி விட்டு பின் தொடர்ந்தோம். மைக் செட்டுக்காரர் அருகில் போய் இவன் நின்றதும், அவர் ஏதோ சொல்ல, இவன் ஏதோ சொல்ல…, பதிலுக்கு அவர் வேகமாய் மறுத்து தலையாட்டினார். கொஞ்ச நேரம் அவரையே பார்த்தபடி நின்றான். அவர் இவனைக் கண்டுகொள்ளவே இல்லை. அவன் திரும்பி வந்து உதட்டை பிதுக்கி விட்டு போய் விட்டான்.

இரவு எட்டரை மணிக்கெல்லாம் தெருவில் திரைகட்டி படம் தொடங்கி விட்டார்கள். மூன்று படங்களில் முதலில் போட்டது சாமிப்படம். எங்கள் வீட்டுக்கு சற்றுத்தள்ளித் தான் திரை கட்டியிருந்தார்கள் என்பதால் நாங்கள் மொட்டை மாடியில் இருந்து படம் பார்த்துக்கொண்டிருந்தோம். சிலர் அவரவர் வீட்டு வாசலியேலே பெஞ்சு,கட்டில் போன்றவற்றைப் போட்டு படம் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அப்போது தான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. கோவில் வாசலில் வைக்கப்பட்டிருந்த அலங்கார அம்மன் சாரத்திலிருந்து யாரோ கீழே விழுந்தார்கள். அவ்வளவு உயரத்திலிருந்து அலறலோடு கீழே அந்த நபர் விழும்போது சிரியல் பல்புகள் உடைந்து சிதறின.

மொத்தமக்களும் கோவில் வாசலுக்கு ஓடினார்கள். நானும் அக்காவோடு ஓடினேன். உடனடியாக மின்சாரம் தடை செய்யப்பட்டது.

அங்கே… ரத்த வெள்ளத்தில் கிடந்தான் கோட்டி முத்து. ஒரு பக்கமாய் நிலை குத்தியிருந்தன அவனது விழிகள். ‘பெட்ரோமேக்ஸ்’ வெளிச்சத்தில் அவனை அருகில் பார்த்தேன். பாதி மூடி இருந்த அவனது இடது கைக்குள் வயரோடு சில சீரியல் பல்புகள் இருந்தன.

——-


Comments

4 responses to “கோட்டி முத்து”

  1. இயல்பான கதை சொல்லல் முறை தல.. ரொம்ப நல்லாயிருக்குது!

  2. மீள்பதிவு என்பதை எப்படியோ கண்டுபிடித்துவிட்டேன். நீங்கள் சொல்லியதைப் படிக்குமுன்பே. ஏனென்றால் இது போன்ற அனுபவங்களை நீங்கள் நிச்சயம் ஏற்கெனவே எழுதியிருப்பீர்கள் என்று ஒரு நம்பிக்கை.

    எங்கள் ஊரிலும் கிட்டத்தட்ட இதேபோன்று ஒருவர் இருந்தார். அவரை எல்லோரும் ‘ஊட்டி’ என்று கூப்பிடுவோம்.

    //அவர்களை உதாசினப்படுத்தவோ, சிறுவர்கள் கல் கொண்டு தாக்குவதோ, அழும் குழந்தையை மேலும் பயம் கொள்ள கோட்டிக்காரனிடம் பிடித்துக்கொடுத்துவிடுவதாக சொல்லும் அம்மாக்கள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். //

    இந்தக் கொடுமைகளை அனுபவித்தவர் அவர். இப்போது இல்லை. ‘ஊட்டி’ இந்த கதையில் வரும் நபரைப் போல் இல்லை என்பதும் உண்மையே.

  3. வணக்கம் தல

    உங்களுக்கு பின்னூட்டமிட்டு ரோஓஓஓஓஓம்ப காலமாச்சு.

    இந்த கதை அருமை, பக்கத்துல நடப்பதை பார்பது போன்ற நடை.
    நல்லா இருந்தது

    இராஜராஜன்

  4. janarthana senapathi Avatar
    janarthana senapathi

    Ella oorilum oru kottimuthu irukkathan seygirar.. Engal ooril appadi oruvar irundhar. Avar peyer Tholpayyan.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *