சம்பவம்-1
பன்னாட்டு தனியார் வங்கி ஒன்றில் மார்கெட்டிங் பிரிவில் இருக்கும் ஓர் இளம் பெண் வாரம் ஒருமுறை வந்து இவரை சந்தித்து பேசிவிட்டுப் போகிறார். தமிழ் மீடியத்தில் படித்த அந்த பெண்ணுக்கு ஆங்கிலத்தில்.. பேசவோ, எழுதவோ பெரிய தயக்கம் இருந்து வந்துள்ளது.
அத் தயக்கத்தினை போக்கி ஆங்கிலமும் எளிமையான மொழி தான் என உணர்த்தி, ஆங்கிலம் சொல்லிக் கொடுத்திருக்கிறார் இந்த ஆங்கில ஆசிரியர். மெத்தப்படித்தவர்களிடமும் தயக்கமின்றி ஆங்கிலத்தில் உரையாட முடிந்ததால் தான் அந்த வங்கியில் வேலை கிடைத்ததாக அப்பெண் குறிப்பிட்டார் என்னிடம்!
————
சம்பவம்- 2
இவரிடம் ஆங்கிலம் பயின்ற பலரும் இன்று நல்ல நிலைக்கு வந்துவிட்டார்கள். ஆனாலும் இவரது உழைப்பு தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. பல புதிய மாணவர்கள் இவரை தேடி வந்த வண்ணம் தான் இருக்கிறார்கள். இவரைத் தேடி இவரது இல்லம் போனபோது, பழைய மாணவர்கள் சிலரையும் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் அனைவருமே ஆசிரியர் வால்டர் ஜெயபாலனை புகழ்கின்றனர். பலர் அஞ்சல் அட்டை மூலம் தங்கள் சந்தேகங்களை கேட்டபடி இருக்கிறார்கள். அவர்களுக்கு பதில் எழுதிக்கொண்டிருக்கிறார் இவர்.
————
வால்டர் ஜெயபாலன் இது தான் அவர் பெயர். 72 வயதாகும் இவரைப்பற்றி நண்பர் ஒருவர் மூலம் அறிந்துகொண்டு தொடர்பு கொண்டேன். பல ஆண்டுகளாக சென்னையில் இருந்தாலும் சென்னைத் தமிழுக்கு மாறாமல் இன்னும் தென்தமிழகத்தின் மொழிநடையில் பேசிய இவரின் பேச்சில் மனசை பறிகொடுத்தேன்.
என் வாழ்க்கையில் நடந்த ஓர் சம்பவம். நான் ஒன்பதாவது படிக்கும் போது, என் ஆங்கில ஆசிரியர் ஆங்கிலச்சொற்களுக்கு தமிழில் பொருள் கூறிக்கொண்டிருந்தார். ஆளாளுக்கு, பேனா, நோட் புக், டேபிள், சேர் என்று தமிழ்படுத்தி கேட்டுக்கொண்டிருக்க.. நான் மட்டும், “ப்ளாஸ்டிக்- என்றால் தமிழில் என்ன சார்” என்று இயல்பான சந்தேகத்தை கேட்டதும், நான் ஏதோ கிண்டல் செய்வதாக நினைத்து, என்னை குச்சியால் பின்னி எடுத்துவிட்டு, க்ளாஸ் ரூமுக்கு வெளியே முட்டி போட்டு நிற்க வைத்து விட்டார். இப்படியான ஆசிரியர்களையே சந்தித்து வந்திருக்கும் எனக்கு இவரின் இனிமையும், எளிமையாக புரியவைக்கும் மனநிலையும் கண்டு வியந்து போனேன். இவரிடம் பேசப் பேச.. அட.. இப்படி ஒரு ஆங்கில ஆசிரியர் எனக்கு கிடைக்காமல் போய் விட்டாரே என்று வருத்தம் மேலிட்டது மறுக்கவியலாத உண்மை.
வழக்கமான பாணியில் இல்லாமல் ஆங்கிலம் கற்பிப்பதற்கென்றே புதிய முறையையும் கண்டு பிடித்திருக்கிறார் வால்டர் ஜெயபாலன் அவர்கள்.
போனிக்(phonic)-என்று பெயரிடப்பட்ட அம்முறையில் – ஆங்கில உயிர் எழுத்துக்களான AEIOU என்பதை A= அ, E=எ, I=இ, O=ஒ, U=உ என்று குறித்துக்கொண்டு, மற்ற எல்லா ஆங்கில எழுத்துக்களையும் மெய்யெழுத்தாக கொள்ளச்சொல்லுகிறார் இவர்.
இப்படி எடுத்துக்கொண்டு ஆங்கிலத்தை வாசிக்கச்சொல்கிறார். இது தமிழ் வழியில் படித்தவர்களுக்கு (குறிப்பாக ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு) எளிமையான முறை என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.
இவரிடம் ஆங்கிலம் கற்றுக்கொண்ட பலர் இன்று பல்வேறு இடங்களில் பணி புரிந்து கொண்டிருந்தாலும், அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு இப்போதும் வால்டர் ஜெயபாலனைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டுக்கொள்கின்றனர். ஏதாவது சந்தேகம் இருந்தால் ஓர் அஞ்சல் அட்டையில் எழுதினால் கூட நான் பதில் போடுகிறேன் என்று சொல்கிறார்.
இவரின் இரு மகன்களும் தற்போது வெளிநாட்டில் பணி புரிந்து வருகிறார்கள். 1995ல் அரசு இவருக்கு ஓய்வைக் கொடுத்து விட்ட போதிலும், இன்றும் தன் பணிக்கு ஓய்வு கொடுக்காமல் உழைத்து வருகிறார்.
இன்னொரு முக்கியமான செய்தியைச் சொல்லியாகவேண்டும். கடந்த பதினான்கு ஆண்டுகளாக ஏழை மாணவர்களுக்கு ஆங்கில மொழியை மிகவும் எளிமையாக போதித்து வரும் இந்த முன்னாள் ஆசிரியர், பணத்திற்காக அல்லாமல் இலவசமாக தொண்டாற்றி வருகிறார். இந்த ஆசிரியரைப் பற்றிய ஓரு விஷுவல் செய்தி குறிப்பு:
—
நன்றி:- ஜி தமிழ் தொலைக்காட்சி. 🙂
(மீள் பதிவு)
10 Responses to மனிதர்கள் – ஆங்கில ஆசிரியர் வால்டர் ஜெயபாலன்