இந்த கொலையில் எனக்கும் பங்கு உண்டு..! :(

 

ஆம் நண்பர்களே! நான் சொல்லுவதெல்லாம் உண்மை. மேலே படத்தில் பார்க்கும் அந்த பெண் தான் கொலையானவர். இவர் பெயர் உமாராணி. இவரை எனக்கு எப்படி தெரியும்.. இவரின் கொலையில் நான் எப்படி சம்பந்தப்பட்டிருப்பேன் என்பது குறித்து அதிகம் குழம்ப வேண்டாம் நானே சொல்கிறேன்.

தற்போது செய்திப் பிரிவில் நான் வேலை பார்த்து வருவதால்.. அடிக்கடி அலுவலகத்தை விட்டு வெளியே செய்திக்காக போவது வழக்கம். அப்படி ஒர் அரசியல்வாதியின் நிகழ்ச்சிக்கு போயிருந்த போது தான்.. உமாராணியை சந்தித்தேன். (அந்த அரசியல்வாதியிடம் முறையிட வந்திருந்தார்) அந்த அரசியல்வாதியின் வருகைக்காக காத்திருந்த போது, என்னிடம் வந்து அவராகவே பேசினார்.

”சார்.. நீங்க பிரஸ்ஸா..?”

“ஆமாம்மா..”

“எந்த பிரஸ் சார்?”

நிறுவனத்தின் பெயரைச்சொன்னேன். அவரின் முகத்தில் ஒரு சந்தோசம் தெரிந்தது. அவரின் பிரச்சனைகளுக்கு விடிவுகாலம் கிடைத்து விடும் என்று நம்பி இருக்கலாம். சட்டென அழத்தொடங்கினார் அவர். கொஞ்சம் பதறிப்போனேன்.

“என்னம்மா..ஆச்சு.. என்னத்துக்கு அழுறீங்க?”

அதுவரையிலும் அவருடன் அமைதியாக நின்றிருந்த அந்த இளைஞன் தன்னை
அறிமுகப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தான், “சார்.எனக்கு சொந்த ஊரு ஆரணி சார்.
இவங்க எங்க வீட்டுக்குக்கு மாடியில குடியிருந்தவங்க.. எங்க ரெண்டு பேரையும் ஒருத்தன் ஏமாத்தி பணத்தை பிடுங்கீட்டான் சார்.. எப்படியாச்சும் நீங்க தான் வாங்கித்தரணும்..” என்று அவனும் கண்கலங்கத்தொடங்கினான்.

”மொதல்ல.. ரெண்டு பேரும் அழுகுறதை நிப்பாட்டுங்க.. இல்லைன்னா… அப்படி தூரமா போய் அழுதுட்டு, வாங்க..அப்புறம் பேசலாம்” என்று சொல்லி விட்டு, நான் கொஞ்சம் விலகிப்போய் ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டேன்.

கீழே காலில் போட்டு சிகரெட்டை நசுக்கியபோது அவர்கள் என்னருகில் வந்தார்கள். நான் அந்த பெண்மணியைப் பார்த்தேன். எப்படியும் முப்பத்தி ஐந்து வயதிற்குள் தான் இருக்கும். கருப்பாக இருந்தாலும் வசீகரமாக இருந்தார். என்ன பிரச்சனையோ.. பொது இடத்தில், அதுவும் மூன்றாவது நபர் முன்னால் ஒரு பெண் அழுகிறாள் என்றால் எவ்வளவு வேதனை இருக்கும். எவ்வளவு நம்பிக்கை இருந்தால் வெட்கம் விட்டு அழுவார்.

“ம்.. இப்பம் சொல்லுங்கம்மா..? என்ன பிரச்சனை? உங்க பேரு என்ன?”

அப்போது தான் தன் பெயர் உமாராணி என்று சொன்னார். இரண்டு பெண் குழந்தைகளுடன் சென்னையில் ஒரு ஹோமில் இருப்பதாகச் சொன்னார். “ஹோம்?” என்று நான் புருவததை வளைக்க.., ”ஆமாம் சார்.. ஹோமில் தான் இருக்கேன்” என்றவர் தன் கதையை சுருக்கமாக சொன்னார்.

நெடுஞ்சாலைத்துறையில் உயரதிகாரியாக வேலைப் பார்த்து வந்தவராம் உமாராணியின் கணவர். குடிப்பழக்கம் உடைய அவர் சில மாதங்களுக்கு முன் இறந்து போய் விட, பணியில் இறந்த கணவனின் வேலையை முன்வைத்து தனக்கு ஒரு வேலைகிடைத்து விடாதா.. என்ற நம்பிக்கையில் அரசாங்கத்தின் அத்தனை கதவுகளையும் தட்டி இருக்கிறார். கணவனுக்கு வரவேண்டிய அரசாங்க பண உதவிகளையும் கேட்டுப் பெற அலைந்த போது தான்.. கணவனை இழந்த பெண்ணை இச்சமூகம் இன்றும் எப்படி நடத்துகிறது என்பது உணர்ந்திருக்கிறார். சினிமாவுக்கு போகலாமா, ரூம் போடலாமா.. என்றெல்லாம் அழைத்துப் பார்க்கிறது அதிகாரவட்டம். சரி இது வேலைக்கு ஆவாது என்று முடிவெடுக்கிறார் உமாராணி.

தன் உறவினர் குருசீல் என்பவர் சென்னையில் கிராபிக்ஸ் நிறுவனம் வைத்துள்ளார். விளம்பரம், சினிமாக்களுக்கு கிராபிக்ஸ் செய்து கொடுக்கும் வேலையை இந்த நிறுவனம் செய்து வருகிறது. தமிழ்சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்ட “ஈ” திரைப்படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சிகளை குருசீலின் நிறுவனம் தான் செய்திருக்கிறது.

தன் கணவர் இறப்பதற்கு முன் பத்துலட்சம் ரூபாயும், தஞ்சையில் இவர்களுக்கு இருந்த நிலப்பத்திரத்தையும் கடனாக கேட்டு வாங்கி இருக்கிறார் குருசீல். தன் நிறுவனத்தில் பங்குதாரராக சேர்த்துக்கொள்ளுவதாகவும் உறுதியளித்துள்ளார். இதனை நம்பிய உமாராணியும், அவரது கணவரும்.. தாங்கள் ஆரணியில் தங்கி இருந்த வீட்டு உரிமையாளரையும் குருசீலுக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அவர்களிடமும் லட்சங்களை சுருட்டி இருக்கிறார் குருசீல். அவர்களுக்கும் அதே பங்குதாரர் வாக்குறுதி. ஆனால் அப்படி ஏதும் அவர் குருசீல் செய்யவில்லை. கணவனின் மறைவுக்குப் பின், உறவினர் குருசீலிடம் பணம் வாங்க அலையோ அலையென்று அலைந் திருக்கிறார். காவல்துறை ஆணையரிடமும் புகார் தெரிவித் திருக்கிறார். ஆனாலும் பலனில்லை.

இதற்கிடையில் உமாராணியின் அண்ணனை கைக்குள் போட்டுக் கொண்ட குருசீல், உமாராணி தன்னை அதிகமாக தொல்லை செய்வதாக சொல்லி.. உமாராணியைப் பற்றி ஏகத்துக்கும் தவறான தகவல்களையும், புரட்டுக்களையும் அள்ளிவிட்டிருக்கிறார். தன் தங்கை கணவன் இறந்த பின் வீட்டுக்குள் அடங்காமல்.. பணம்,வேலை கேட்டு அலைந்து வருவதை பொருக்க மாட்டாமல்.. அவளை வீட்டுக்குள் அடைத்து வைத்திருக்கிறார். அங்கிருந்து சென்னைக்கு ஒரு பத்திரிக்கையாளரின் மூலம் தப்பி வந்த உமாராணி, சென்னையில் ஒரு அனாதை விடுதியில் தஞ்சம் அடைந்திருக்கிறார்.

கதையை சொல்லி முடித்த போது மிகவும் சோர்ந்து போய் இருந்தார் உமாராணி. எனக்கே ஒரு மாதிரியாக இருந்தது. அவருடன் நின்று கொண்டிருந்த அந்த இளைஞன் உமாராணி தங்கி இருந்த வீட்டு உரிமையாளரின் மகன் என்பதும் அப்புறம் தெரியவந்தது. முழுக் கதையையும் கேட்ட.. நான்.. அவர்களிடமிருந்து தொலைபேசி எண்களை வாங்கிக்கொண்டேன். அன்று வெள்ளிக் கிழமையானதால்.. திங்கட்கிழமை காலை போய் செய்யுங்கள். இந்த முறை நிறைய பத்திரிக்கையாளர் களை ஏற்பாடு செய்துவிடுகிறேன். காவல்துறை ஆணையரிடம் மீண்டும் புகார் கொடுத்துவிட்டு, மீடியாக்களின் முன் பேசுங்கள். எல்லா செய்தி ஊடகங்களிலும் உங்கள் பிரச்சனை பேசப்படுமானால்.. காவல்துறைக்கு நெருக்கடியாகி, நடவடிக்கையை விரைந்து செய்வார்கள் என்று கூறினேன். அவர்களும் சம்மதித்தார்கள். அப்புறம் அந்த அரசியல்வாதி வந்துவிட.. அந்த செய்தியில் மூழ்கிப்போனேன்.

அடுத்த நாள் எனக்கு தெரிந்த ஒரு க்ரைம் ரிப்போர்ட்டரிடம் பேசி, இவர்களின் எண்களைக் கொடுத்து, விவகாரத்தை பெரிதுபடுத்தி, அவர்களுக்கு நியாயம் கிடைக்க வழி செய்யுமாறு வேண்டிக் கொண்டேன். அவரும் ஒப்புக்கொண்டார். அதன் பின் நானே அவர்களுக்கு போன் செய்து அந்த க்ரைம் ரிப்போர்ட்டரின் எண்ணை கொடுத்து இவர் பார்த்துக்கொள்ளுவார். கூட இருந்தே காரியத்தை முடித்தும் வைப்பார் என்று கூறினேன். அதற்கு உமாராணிகேட்டார், “சார்.. உங்களால வர முடியாதா..சார்.. நீங்க வந்த பிரச்சனை முடிஞ்சுடும்னு தோணுதுசார்..” , “இல்லம்மா.. என்னால வரமுடியாது. இவரும் நல்லவர் தான் பிரச்சனையை முடித்து வைப்பார்”என்று ஆறுதல் சொல்லிவிட்டாலும். உடைந்த குரலில் பேசிய உமாராணியின் முகம் கண்ணில் வந்து போனது.

அடுத்தடுத்த நாள்களில் அலுவலக வேலைகளில் உமாராணியை மறந்து போனேன். அவர்களிடமிருந்தும் எந்த போனும் வரவில்லை. அதனால் பிரச்சனை முடிந்திருக்கும் என்றும் நினைத்துக்கொண்டேன். அந்த க்ரைம் ரிப்போர்ட்டருக்கு வேறு ஒரு விசயத்துக்காக போன் செய்த போது.., உமாராணி திருச்சி கல்லணை அருகில் வெட்டிக் கொள்ளப்பட்டார் என்ற செய்தியை சொன்னார். சில நிமிடங்கள் அதிர்ச்சியில் இருந்து மீளவே இல்லை நான். திரும்பவும் உமாராணி கொடுத்த புகாரை வைத்து அந்த குருசீலை பிடிக்க முடியும் தானே.. என்று நான் கேட்டபோது சொன்னார். இன்னொரு முறை புகார் கொடுக் கவில்லை. ஏன் என்று அவரிடம் கேட்டதற்கு.. என்னென்னமோ.. கதைகள் கூறினார். ஆனால் எதுவும் எனக்கு ஏற்புடையதாக இல்லை.

 

“சார்.. உங்களால வர முடியாதா..சார்.. நீங்க வந்த பிரச்சனை முடிஞ்சுடும்னு தோணுதுசார்..” என்ற குரல் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது. திரும்பவும் புகார் கொடுக்கப்பட்டிருந்தால்.. அந்த குருசீல் உள்ளே போய் இருப்பான். நானே முன்னின்று செய்து முடித்திருக்க வேண்டிய காரியம். அடுத்தவரிடம் ஒப்படைத்தது எவ்வளவு பெரிய தவறு என்று அப்போது உணர்ந்தேன். என்னையும் மீறி எனக்கு அழுகை வந்தது. நடுங்கிய கையால் ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டேன். அந்த இரண்டு குழந்தைகளின் கதி? தாயுமில்லாமல்.. தந்தையுமில்லாமல்..? தங்களுக்கு உரிமையாக வேண்டிய சொத்துக்களை யார் யாரோ அனுபவைத்துக்கொண்டிருக்கிறார்கள்…என்ற எந்த விபரமும் தெரியாத அந்த குழந்தைகளின் முகம் மட்டுமல்ல… உமாராணியின் அழுத முகமும்.., “சார்.. உங்களால வர முடியாதா..சார்.. நீங்க வந்த பிரச்சனை முடிஞ்சுடும்னு தோணுதுசார்..” என்ற உடைந்த குரலும் இன்னும் என்னை தொடர்ந்துகொண்டிருப்பதாகவே உணர்கிறேன். உடன் சென்றிருந்தால் ஏதாவது செய்திருக்க முடியுமென்றே தோன்றுகிறது. போகாததால் என் மனம் சொல்கிறது இந்த கொலையில் எனக்கும் பங்கு உண்டு என. 🙁

—-

உமாராணி கொலைசெய்யப்பட்டு கிடக்கும் படம் சுட்டிகள் கீழே…, படம் திறக்க தாமதாமாகும்… அதற்குள் மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள்.  மெல்லிய மனதுக்காரர்கள் பார்க்க வேண்டாம்.

படம்,

படம்2

குறிப்பு:- உமாராணியின் படுகொலை சம்பந்தமாக அவரது அண்ணன் சரவணனை திருச்சி காவல் துறை கைது செய்திருக்கிறது. குடும்பப்பெயரை கெடுக்கும் விதமாக கணவன் இறந்த பின்னும் மற்ற ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாலேயே வெட்டிக்கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இவர் ஏவப்பட்ட அம்பு, ஏய்தவன் நிம்மதியாக இருக்கிறான்.

இது போன்ற மறக்கவியலா.. என் வாழ்வியல் அனுபவங்கள் சில..

சாந்தியக்கா..

துரைப்பாண்டி..

கோட்டி முத்து..

This entry was posted in அனுபவம், சமூகம்/ சலிப்பு. Bookmark the permalink.

29 Responses to இந்த கொலையில் எனக்கும் பங்கு உண்டு..! :(

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.