Stephen Wiltshire

 

பொதுவாகவே ஆட்டிசத்தின் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் குழந்தையின் பெற்றோரின் நிலைதான் மிகவும் சங்கடமானது. எப்போது தங்கள் குழந்தையின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டே தங்கள் உடல்நலத்தினையும் கெடுத்துக்கொள்கின்றனர்.

ஆனால், அப்படி சோர்ந்துபோய் இருந்து விடத்தேவையில்லை என்பதற்காக.. ஆட்டிசத்தின் பிடிக்குள் சிக்கிக்கொண்டாலும், உலகத்தின் பார்வையை தன் பக்கம் திருப்பிய சிலரைப் பற்றி சுருக்கமாக அடுத்தடுத்து, பார்க்கப்போகிறோம்.

ஆட்டிசத்தினால் பாதிப்புக்குள்ளான இவர்களால் சாதித்திருக்க முடியும் போது, நம் குழந்தைகளாலும் ஏதாவது சாதிக்கமுடியும் என்று பெற்றோர் நம்பிக்கைகொள்ளவேண்டியது அவசியமானது.

மேலே படத்தில் இருக்கும் நபரின் பெயர்  ஸ்டீபன் வில்ட்ஷையர் என்பது ஆகும்.

 

 

ஸ்டீபன் வில்ட்ஷையர் (Stephen Wiltshire )

 

உலக அளவில் இவரை கொண்டாடுகிறார்கள். வெறும் பதினைந்து நிமிடங்கள் பார்த்த காட்சிகளை, அதுவும் ஏரியல் வியூ என்று சொல்லப்படுகிற, பறவைப் பார்வையில் பார்த்த காட்சிகளை அப்படியே ஓவியங்களாக வரைகிறார்.

எவ்வித அவுட்லைனும் இல்லாமல்.. நேரடியாகவே பேனா மூலம் படம் வரைய ஆரம்பிக்கிறார்.

1974ல் லண்டனில் மேற்கிந்தியப் பாரம்பரியம் கொண்ட பெற்றோருக்குப் பிறந்த இவர் பொதுவான ஆட்டிசக் குழந்தைகளைப் போலவே பேச்சு, சமூகத் தொடர்பு போன்ற திறன்கள் அற்றவராகவே சிறுவயதில் இருந்தார். ஐந்து வயதாகும் போது பள்ளியில் இவரது ஓவியத் திறமை வெளிப்படத் தொடங்கிற்று.

பேசமுடியாத அவர், படங்கள் வரைவதில் மிகுந்த ஆவமுடையவராக இருந்திருக்கிறார். அந்த ஓவியப் பொருட்களை அவரிடமிருந்து பிடுங்கி வைத்துக் கொண்டுதான் அவரது ஆசிரியர்கள் வில்ட்ஷைரின் முதல் வார்த்தையை வலுக்கட்டாயமாக உச்சரிக்க வைத்தார்கள். ஐந்து வயது வரை எதுவுமே பேசாதிருந்த அவர் முதலில் சொன்ன வார்த்தை “பேப்பர்” என்பதுதான்.

இப்படி ஆரம்பித்து ஒன்பது வயதுக்குள் ஒரளவு முழுமையாகப் பேசக் கற்றுக் கொண்டார். ஆரம்பத்தில் கார்களையும், விலங்குகளையும் ஓவியமாகத் தீட்டிக் கொண்டிருந்தவரது கவனம் நகரங்களை அச்சு அசலாக வரைவதில் திரும்பியது.

ஹெலிகாப்டரின் மீதிருந்து எந்த ஒரு நகரத்தையும் ஒரு முறை முழுவதுமாகப் பார்த்துவிட்டால் பின்னர் தன் நினைவிலிருந்து அந்த நகரை தத்ரூபமாக வரைந்து விடுகிறார். ரோம், டோக்கியோ, ஹாங்காங்க் என பல நகரங்களை இவர் இப்படி ஓவியமாக்கியிருக்கிறார்.

ரோம் நகரை இவர் ஹெலிகாப்டரில் இருந்து பார்துவிட்டு இவர் வரைவதை முழுவதுமாக வீடியோவில் இங்கே பார்க்கலாம் – http://www.youtube.com/watch?feature=player_embedded&v=a8YXZTlwTAU

2006ல் ஸ்டீபன் பிரிட்டீஷ் அரசவையின் உறுப்பினராக அவரது கலைச்சேவையைப் பாராட்டி நியமனம் செய்யப்பட்டார். MBE (Member of the Order of the British Empire)  எனப்படும் இவ்விருது இங்கிலாந்தின் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாகும்.  லண்டனிலும், நியூயார்க்கிலும் தன்னுடைய சொந்த ஆர்ட் கேலரிகளை நடத்தி வருகிறார்.

இவரது வலைத்தளம் இது.  http://www.stephenwiltshire.co.uk/biography.aspx

(நம்பிக்கைகள் தொடரும்..)

=========

மேலும் ஆட்டிசம் தொடர்பான கட்டுரைகளுக்கு:-

http://216.185.103.157/~balabhar/blog/?page_id=25